Thursday, 24 July 2014

வாழை நமக்கு காட்டும் ஞானோபதேசம் - மஹா பெரியவா


வாழ்வு' என்ற வார்த்தை ஸம்பந்தமானதே 'வாழை'.
('பீபிள்ஸ் ஃப்ரூட்!'-People Fruit)

பெரியவாள் போடும் சாப்பாட்டு விருந்தை சாப்பிட்டு முடிக்கிறோம். இலை போட்டு அதில்தானே விருந்தைப் படைப்பது? அந்த இலையைத் தரும் வாழை ஜாதி பற்றி அவர் வாய்மொழி கூறாது முடிக்கலாமா?

'மர ஜாதியில் வாழை ரொம்பச் சின்னதான ஒன்றுதான். ஆனால் பெரிய பெரிய மரங்களுக்கும் இலை துளியளவே இருக்கும்போது இதற்குத்தான் 'போட்டுக் கொண்டு சாப்பிடுகிற' அளவுக்குப் பெரிசாக இலை! அப்படி, தாய் மனஸோடு சாதம் போட்டுப் பார்க்கிறதாலேதான் வாழையை நம் ஸம்பிரதாயத்தில் உசத்தி வைத்திருக்கிறது.

'எத்தனையோ பழங்கள் நல்ல ருசியாக, தேஹாரோக்யம், புஷ்டி தருவதாக இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அதில் வாழை ஒன்றைத் தவிர எதையாவது அதையே முழுச் சாப்பாட்டுக்குப் பதிலாகச் சாப்பிட முடிகிறதோ? முப்பழங்களில் மீதி இருக்கிற மா, பலாப்பழங்களைக் கூட வயிறு ரொம்புகிற மாதிரிச் சாப்பிட முடிகிறதோ? ஒரு வேளை ஆப்பிள் அப்படி இருக்கலாம் ஆனால் அது பணம் படைத்தார்களுக்கு மட்டுந்தான் கட்டுப்படியாகும். சர்வ ஜனங்களும் காசு கொடுத்து நாலு பழம் வாங்கிச் சாப்பிட்டு வயிறு 'தம்' மென்று நிறையும்படி இருப்பது வாழைதான். அதுதான் (சிரித்து) 'பீபிள்ஸ் ஃப்ரூட்!'

வாழைப்பழம் ஆஹாரம் என்றால், வழைப் பூ மருந்து. பழமாகும்போது தித்திக்கிற அது பூவாக இருக்கும்போது துவர்க்கிறது. துவர்ப்புப் பண்டங்களே உடம்புக்கு ரொம்ப நல்லது. பூஞ்சைக் குடலுக்குக் கூட வாழைப் பூ ஏற்றது.

மற்ற பூக்கள் வாஸனை. வழைப் பூ மட்டும் அப்படியில்லை. வாஸனா ஸஹிதம், வாஸனா க்ஷயம் என்று வேதாந்தத்தில் சொல்கிறார்களே, அதைக் காட்டுவதாக இது இருக்கிறது. இன்னும் வேதாந்தமாக ஒன்று. விதை போடாமல் முளைப்பது அது. கர்மா விதையிலேதான் ஜீவன் மறுபடி, மறுபடி பிறந்து, வினையைப் பிறவி தோறும் விதைத்துப் புனர்ஜன்மங்கள் எடுத்துக் கொண்டே இருப்பது. அந்த வித்து அடிபட்டுப்போன ஞானத்தை வாழை நினைவூட்டுகிறது.

இப்படிச் சொன்னதால் அது வாழ்க்கைக்கு ஸம்பந்தப்படாதது என்று அர்த்தம் இல்லை. வாழ்கிற மட்டும் நல்லபடி வாழ்வதற்கும் அதுதான் பாடம் போதிப்பது.

'வாழ்வு' என்ற வார்த்தை ஸம்பந்தமானதே 'வாழை'. நம்முடைய வாழ்க்கையில் கொஞ்சமும் வீண், வ்ருதா இல்லாமல் முழுக்கப் பிரயோஜனமாக இருக்க வேண்டுமென்பதுதானே 'ஐடியல்'? அந்த 'ஐடிய'லை ரூபித்துக் காட்டுவதாக இருப்பது வாழை. தண்டு, பட்டை, தார் உள்பட, இலை, பூ, காய், பழம் என்று அதன் ஸர்வாங்கமும் பிரயோஜனமுள்ளதாக இருக்கிறதல்லவா? ஆனபடியால், 'வாழ்க்கை' 'வாழ்வு' என்று அதற்கே பெயர் வைக்கிற அபிப்பிராயத்தில்தான், 'வாழை' என்று பெயர் வைத்தது.
அதை வாழை மரம் என்கிறோம். மரம் என்றால் அது சொர சொரவாக இருப்பதுதானே வழக்கம்? இது ஒன்று மாத்திரம் வழவழாவாக இருக்கிறது! கரட்டு முரட்டுத்தனமில்லாமல் மழமழவென்று எல்லாவித மனுஷ்யர்களுக்கும் ஸந்தர்ப்பங்களுக்கும் அநுகூலமாக நம்மைப் பண்ணிக்கொள்ள வேண்டும் என்பதை உபதேசிக்கிறதே அந்த வழவழ. வழவழப்பை வைத்தும் அதற்கு 'வாழை' என்று பெயர் கொடுத்திருக்கலாம்.

விதையாகி வம்ச விருத்தி ஏற்படுத்திக் கொள்ளும் மா, ஆல், இன்னும் அநேக வ்ருக்ஷங்களில் கணக்கு வழக்கில்லாமல் விதைகள் தோன்றுகின்றன. அது ஒவ்வொன்றும் முளைத்தால், இந்த பூமியே ஒரு வ்ருக்ஷ ஜாதிக்குக்கூடப் போதாது. அப்படி நடக்காததால் அந்த விதைகளில் பெரும்பாலானவை முளைப்பதில்லை என்று தீர்மானமாகிறது. முளைத்திருப்பதிலும், எந்தக் கன்று எந்தத் தாய் மரத்தின் விதையிலிருந்து முளைத்திருப்பது என்பது எவருக்கும் சொல்லத் தெரியாததாக இருக்கிறது. வாழையில்தான் தாய் மரத்தைச் சுற்றியே அதன் கன்றுகள் முளைப்பதால் இதிலிருந்து இது பிறந்தது என்று தீர்மானமாகத் தெரிகிறது. கன்று பிறந்ததோடு தாய் வாழ்க்கையை முடித்துக் கொண்டு விடுகிறது. ஸத்பிரஜை உண்டான அப்புறம் தாம்பத்யம் இல்லாமலிருந்து ஸந்நியாஸம் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று நமக்கு தர்ம சாஸ்திரம் சொல்கிறதென்றால், வாழையோ அதைவிட ஞானத்துடன் பெரிய ஸந்நியாஸமாகப் போயே போய் விடுகிறது. இங்கே வேதாந்தம். இதிலேயே வாழ்க்கைத் தத்துவமும்! நல்ல ப்ரயோஜனமுள்ள ஒரு வாழை, அதே ப்ரயோஜனத்திற்காக லோகத்திற்குத் தரும் ப்ரஜைகளான கன்றுகளை, இந்தப் ப்ரஜை இந்த அம்மாவுக்குப் பிறந்தது என்று நமக்கெல்லாம் காட்டும்படி இருக்கிறதல்லவா? வேறே எந்த மரத்தின் விஷயமாகவும் அப்படி இல்லையே! அதனால்தான் ?வாழையடி வாழையாக வாழ்? என்று வாழ்த்துவதாக இருக்கிறது! அந்த வாழ்த்துக்கு அடையாளமாகவே கல்யாணங்களிலும் மற்ற மங்கள வைபவம் எதிலுமே வாழை கட்டுவதாக ஏற்பட்டிருக்கிறது. வாழை மரம் மங்களச் சின்னம்.

No comments:

Post a Comment