பெரியவா கர்நாடகாவில் 1979 ம் வருடம் பாதயாத்திரை மேற்கொண்டு
இருந்தார். நாளெல்லாம் பயணித்த பிறகு மாலை நேரத்தில் ஓர் இடத்தில் தங்குவது வழக்கம்.
அன்றும் வழக்கம் போல் ஒரு குளத்தின் கரையில் அமர்ந்து பக்தர்களுக்குத்
தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது மகானைப் பார்க்க இரு அந்தண இளைஞர்கள் வந்தனர்.
குளிக்காத தோற்றத்தோடும், அழுக்கான ஆடைகளுடனும், காட்சியளித்த
அவர்களைப் பார்த்த டாக்டர் ராமமூர்த்தி என்பவர் ‘மகானைப் பார்க்க வரும் போது குளித்து
விட்டு சுத்தமான ஆடைகளை அணிந்து கொண்டு வரவேண்டாமோ’ என மனதுக்குள் நினைத்தார்.
இளைஞர்கள் இருவரும் மகானை சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தனர், மகான்
கேட்டார் “அத்யயனம் முடிந்தாகி விட்டதா?” அவர்கள் ‘ஆம்’ என தலையை ஆட்டினர்.
“ரிக் வேதம் சொல்லுங்கள்!” என மகான் கட்டளை இட்டவுடன், அருவியிலிருந்து
நீர் பெருக்கெடுத்து வந்தது போல், அவர்கள் வேதத்தைச் சொல்லத் தொடங்கினார்கள்.
கண்களை மூடியவாறு கேட்டுக் கொண்டிருந்த பெரியவா அவராக கையமர்த்திய
பின் தான் அவர்கள் வேதம் சொல்வதை நிறுத்தினர். “எங்கிருந்து வருகிறீர்கள்?” மகான் கேட்டார்.
இருபது மைல்களுக்கு அப்பால் இருந்த ஓர் இடத்தைச் சொன்னார்கள் இளைஞர்கள்.
“ அங்கிருந்து எப்படி வந்தீர்கள்” மகான் கேட்டார்.
“நடந்து தான்
வந்தோம்” இளைஞர்களின் பதில். பெரியவா திரும்பக் கேட்டார், “திரும்பிப் போகும் போது” “நடந்து தான் போக வேண்டும்” மகானைப் பார்க்க இருபது மைல் தூரத்தை
நடந்தே, கடந்து வந்து இருக்கிறார்கள். உடம்பில் ஏன் அழுக்கு சேராது…?
மடத்தின் மூலமாக அவர்களுக்கு புதிய ஆடைகளைக் கொடுத்து, உண்ண
உணவு கொடுத்து அனுப்பினார் மகான். அவர்களைப் பற்றித் தவறாக நினைத்துக் கொண்டிருந்த
டாக்டரின் பக்கம் திரும்பினார் மகா பெரியவா.
“மனிதனின் வெளிப்படையான தோற்றத்தை வைத்து, அவனது உண்மையான யோக்கியதை
அறியாது மனதைக் குழப்பிக் கொள்ளக் கூடாது” என்றார்.
டாக்டர் கண்ணீர் சொரிய மெய்சிலிர்த்தார்.