Monday, 7 November 2016

விதவைத் தாய்க்கு கிடைத்த அமுதசுரபி

                        அடியேன் கல்கத்தாவில் பயணிகள் கப்பலில் வரும் என் நண்பரைக் காணத் துறைமுகம் சென்றேன். கப்பல் இரண்டு மணி நேரம் தாமதம் எனத் தெரிந்தது. அவருக்காக காத்திருக்க முடிவு செய்து அந்த சாலையில் இருந்த ஒரு ஹோட்டலின் முன் இருந்த பெஞ்சில் அமர்ந்தேன். அது ஒரு சிறிய ஹோட்டல்.  வருவோர் போவோர் அதிகம் இருந்த நிலையில் அந்த ஹோட்டல் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. என் பார்வை கல்லாவில் இருந்தவரின் மீது செல்ல, அவர் அமர்ந்து இருந்த இருக்கைக்குப் பின்னால் ஒரு படம் பூக்களாலும், வண்ணக் காகிதங்களாலும் அலங்கரிக்கப்பட்டு பார்வையை இழுக்கும் வகையில் இருந்தது.. அந்தப் படம் என்னை ஈர்க்க, நான் அருகே சென்று பார்க்க, அது மஹா பெரியவாளின் படம். கல்கத்தாவில் 90 சதவிகித இடங்களில் காளி மற்றும்  ராம கிருஷண பரமஹம்சர் விவேகானந்தர் படங்களைப் பார்த்த எனக்கு, என் குரு நாதரைக் கண்டவுடன்  உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கியது.

                  கல்லாவில் அமர்ந்திருந்தவரிடம். படத்தைக் காட்டி  யார் இவர் என வினவ அந்த நபர் உள்ளம் பூரித்து கண்கள் விரிய “என் தாக்குர்ஜி என் தாக்குர்ஜி” என பரவசப் பட்டார். இவரைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் என அடியேன் கேட்க அந்த கேள்விக்கு காத்திருந்தவர் போல நொடியும் தாமதிக்காது மிகுந்த உணர்ச்சி வசப்பட்டவராய் பேசத் தொடங்கினார். அவர் உள்ளத்தில் பெருகிய பக்தி – மடை திறந்த வெள்ளம் என வார்த்தைகளாக பெருக்கெடுத்தது. பக்தியில் நனைந்து நனைந்து வந்து விழுந்த குரு நாதரைப் பற்றிய ஒவ்வொரு சொல்லும் தேனாக என் காதில் பாய்ந்தது. பக்தியில் பொங்கி பொங்கி கொப்பளித்த அவர் உள்ளம் சற்று சம நிலை அடைய, அடியேன் அவர் பேச்சின் இடை இடையே மஹாபெரியவாளைப் பற்றி ஒரிரு வரிகள் சொல்ல, தன் பேச்சை நிறுத்தியவர் கண்களில் வியப்புடன் தாக்குர்ஜி பற்றி தெரிந்தும் என்னிடம் தெரியாதது போல் கேட்டீர்களா என வாய் விட்டு சிரிக்க அந்த சிரிப்பில் கள்ளம் கபடம் இல்லா அவரின் குழந்தை உள்ளம் தெரிந்தது.

                           அருகே இருந்த பணியாளரிடம் கல்லாவைப் பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு, என் கைகளைப் பிடித்து அழைத்து ஒரு இருக்கையில் அமர்த்தினார். இருவரும் மஹாபெரியவாளைப் பற்றி பேசி பேசி  களிப்படைய,  நேரம் போனதே தெரியவில்லை. கப்பல் வந்துவிட்ட அறிவிப்பு வர அவரிடம் விடை பெற்றுக் கொண்டேன். என் கைகளை அழுத்திப் பிடித்தவர் உங்களைப் பிரிய ஏனோ மனம் வரவில்லை, இன்று மாலை என் இல்லம் வாருங்கள். தாக்குர்ஜி என் குடும்பத்துக்கு செய்த ஒரு உன்னதமான அதிசயத்தை சொல்லுகிறேன், வருவீர்களா என ஏக்கத்துடன் கேட்க - அவரிடம் , ஐயா அதை விட பெரும் பாக்கியம் என்ன இருக்க முடியும் கட்டாயம் வருகிறேன் என சொல்லி அவர் முகவரியைப் பெற்றுக் கொண்டு விடை பெற்றேன். 

                 அன்று மாலை அவர் இல்லம் சென்றேன். அழகான எளிமையான சிறிய இல்லம். மணம் கமழும் ஒரு சிறு அறையில் மஹா பெரியவாளின் படம். மஹா பெரியவாளின் முன்னிலையில் ஒரு சிறு பெட்டி இருக்க அதிலிருந்து ஒரு பாத்திரத்தை பய பக்தியுடன் வெளியே எடுத்து வைத்தார், அந்த புனிதப் பாத்திரம்  சொல்லாமல் சொன்ன நிகழ்வு இது.

           கல்கத்தாவைச் சேர்ந்த இளம் விதவை. கணவர் குடும்பத்தினர்  பரம்பரை பரம்பரையாக செக்கு வைத்து எண்ணெய் வியாபாரம் செய்து வந்தனர். கணவர் காலத்தில் வியாபாரம் முடங்க ஆரம்பிக்க, அவள் திருமணம் முடித்த  சில வருடங்களில் வியாபாரம் முழுதுமாக நொடித்து விட்டது. வியாபாரத் தோல்வி கணவர் உள்ளத்தையும் உடலையும் உருக்க, நோய்வாய்ப்பட்டு சில வருடங்களிலேயே அவர் இறந்தும் போனார். இளம் விதவை - ஐந்து குழந்தைகளுக்குத் தாய் - கணவர் இறந்த மறு நாளே புகுந்த வீட்டினர் அவளை அண்ட விடாது ஒதுக்கியும் ஒதுங்கியும் விட்டனர். பிறந்த வீட்டில் பாதுகாப்பு கிடைக்கும் எனக் கதவைத் தட்டியவளுக்கு, பிறந்த வீட்டார் ராசியில்லாதவள் அமங்கலி என இரட்டைத் தாழ்ப்பாள் போட்டனர்.

                       தன் உடலையும் மானத்தையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு - ஒன்றும் புரியாத பிஞ்சுகளாய் இருக்கும் ஐந்து குழந்தைகளை வளர்க்க வேண்டிய பாரம் - எல்லாவற்றுக்கும் மேலாக சமுதாயம் ராசியில்லாதவள் என சூட்டிய முள் கிரீடம் - எல்லாம் அவளை அழுத்தியது. கணவர் சேமித்து வைத்து விட்டுப் போன சிறு தொகையைக் கொண்டு பசி பட்டினி இல்லாது குடும்பத்தை நடத்தினாள். அதுவும் சில காலமே. வருடங்கள் செல்ல செல்ல இரு வேளை சோறு ஒரு வேளையானது. பின்னர் அதுவும் கஞ்சியாக மாறியது. கைப் பணம் கரைய கரைய அச்சமும் கவலையும் சூழ்ந்தது. குடும்ப வருமானத்திற்கு குப்பை பொறுக்குவது என முடிவு செய்தாள். நாள் முழுதும் அலைந்து பெரிய அலுவலகங்களாக சென்று காகிதங்களை பொறுக்கி, அவற்றை விற்று அதன் மூலம் வரும் வருமானம் கொண்டு குடும்பம் நடத்தினாள். துறைமுகப் பகுதியில் வாகனங்களிலிருந்து விழும் நெல் அரிசி கோதுமை போன்ற தானியங்களை  சாலையைப் பெருக்கி  எடுத்து வந்தாள். சிதறிய தானியங்களைக் கொண்டு தன் பிள்ளைகளின் வயிற்றுக்கு கஞ்சி ஊற்றினாள். ஆனால் எப்படி ஐந்து பிள்ளைகளையும் கரை சேர்ப்பேன் என்ற கவலை அவளைத் தினமும் வாட்டியது. குடும்பம் மிகவும் பரிதாப நிலையில் இருந்தது. கணவர் இறந்து இப்படியே ஐந்து வருடங்கள் போய்விட்டது. 

               இந் நிலையில் நமது மஹாபெரியவா கல்கத்தாவில் முகாமிட்டிருந்தார். அவரைத் தரிசித்த மக்கள் அவரைப் பற்றி பலவாறு ப்ரமிப்புடனும் பக்தியுடனும் பேச பேச அந்த பேச்சுக்கள் இவள் காதையும் எட்டியது. அவளுக்கும் அவர்கள் சொல்லும் தாக்குர்ஜியை பார்க்க வேண்டும் என ஆவல் பிறந்தது.  அவரை தரிசித்து விட்டு வந்தால் என் வாழ்வில் ஒரு விடியல் இருக்கும் என எண்ணினாள். இரவெல்லாம் அதே நினைவுடன் உறங்கியவள், மறு நாள் ஸ்நானம்  செய்து விட்டு, கையில் ஒரு காலி எண்ணெய் தூக்கை எடுத்துக் கொண்டு மஹா பெரியவா முகாமிட்டிருந்த இடம் வந்தாள். தாக்குர்ஜியை சுலபமாக சந்தித்து ஆசி பெற்றுவிடலாம் என நினைத்து வந்தவள் அங்கிருந்த கூட்டத்தைக் கண்டு திகைத்து நின்றாள். வருவோர் போவோரின் ஏளனப் பார்வையும், அவர்கள் அவளைக் கண்டு விலகிச் செல்வதையும் கண்ட பொழுது தான் - அவளுக்கு அவளின் நிலைப் புரிந்தது.  தாக்குர்ஜியை காண வந்த கூட்டத்தினரின் மீது அவள் பார்வை சென்றது. அனைவரும் நல்ல ஆடை அணிந்தவர்கள் – படித்தவர்கள் – உயர் அதிகாரிகள் – என பலதரப்பட்ட மக்கள்.  தன்னை எண்ணினாள். எண்ணெய் ஆட்டுவதைக் குலத் தொழிலாக கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவளின் தலையில் ஒரு சொட்டு எண்ணெய் இல்லை. வறண்ட கூந்தல்; எத்தனை துவைத்தும் நீங்காது அழுக்குப் படிந்து போன  சேலை; தன் வாழ்க்கை தரத்தையே வெளிச்சம் போட்டுக் காட்டும் கிழிந்த ஒட்டுப் போட்ட ஆடை. எப்படி இந்தக் கூட்டதில் நம்மை இணைத்துக் கொள்வது; கூட்டத்தில் கலக்க முயற்சித்தால் நிச்சயம் விரட்டப் படுவோம் என புரிந்துக் கொண்டாள். அந்தக் கூட்டத்தைப் பார்க்க பார்க்க உள்ளத்தில் அச்சம் சூழ்ந்தது. ஆனால் தாகுர்ஜியிடம் ஆசி பெற வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் போகவில்லை.

             கூட்டத்திலிருந்து சற்று விலகி நின்றாள். கூட்டத்தினர் பார்வையாலையே அவளை விரட்ட தள்ளி  நின்றாள். அங்கிருந்தவர்கள் மேலும் அவளை விரட்ட - மேலும் மேலும் ஒதுங்கினாள் . இப்படியே கூட்டத்தை விட்டு 60 - 70 அடி தள்ளி விரட்டப்பட்டாள். கூட்டம் கலைந்தவுடன் அவரைத் தரிசிக்கலாம் எனக் காத்திருந்தாள். ஆனால் வருவதும் போவதுமாக இருந்த மக்கள் கூட்டம் குறையவில்லை. நேரம் நகர்ந்துக் கொண்டே போனது. மனதில் தன் வாழ்க்கையில் நடந்த அத்தனை சம்பவங்களும் வந்து போயின. தன் வாழ்க்கை சம்பவங்களால் கண்களும் மனதும் பொங்கியது, தன் நிலையைப் புரிந்துக் கொண்டவள் தாகுர்ஜியை அருகில் சென்று ஆசி பெறும் எண்ணத்தைக் கைவிட்டாள். அவரை தூரத்திலிருந்தாவது தரிசித்து விட்டால் போதும் , தன் வாழ்க்கையில் மாற்றம் வரும் என பரிபூரணமாக நம்பினாள் .கூட்டத்தை விட்டு தள்ளி ஒடுங்கி நின்றவளின் பார்வை மட்டும் தாக்குர்ஜி இருந்த இடத்தை விட்டு விலகாது இருந்தது.

               சுமார் ஐந்து மணி நேரம் காத்திருந்தவளுக்கு இன்னும் மஹா பெரியவாளின் தூர தரிசனம் கிடைக்கவில்லை. ஆனால் மஹா பெரியவா அவளைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தார் – உள் முகமாக. அருகே இருந்த தன் உதவியாளரை அழைத்தார். சில குறிப்புகள் சொல்லி அவளிடம் இருக்கும் பாத்திரத்தை வாங்கி வரும் படி சொன்னார். உதவியாளரிடம் பாத்திரத்தை தந்தவளின் கண்கள் தாக்குர்ஜியை காணத் துடித்தது. தாக்குர்ஜி என்னை உள்முகமாக பார்த்துவிட்டார். எனக்கு அவரின் தரிசின பாக்கியம் கிடைக்குமா என உள்ளம் ஏங்கியது. உதவியாளார் சென்ற பாதையிலேயே தன் கண் பார்வையை செலுத்தினாள். உதவியாளர் சென்ற பொழுது ஒரு இடைவெளி கிடைக்க அந்த  இடைவெளியில் தாக்குர்ஜியைப் பார்த்தாள். பரவசப்பட்டாள். கை தொழுது நின்றவளின் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது. தாகுர்ஜியின் முன் பாத்திரம் வைக்கப் பட அதில் மஹாபெரியவா தன் கமண்டத்திலிருந்து  நீரை ஊற்றுவதைக் கண்டாள். கூட்டம் மறைக்க இந்த தரிசினமே போதுமானது என திருப்தி அடைந்தாள். உதவியாளர் கொண்டு வந்து தந்த பாத்திரத்தைத் தன் சேலைத் தலைப்பில் மடிப் பிச்சையாக வாங்கிக் கொண்டாள். அதை பவித்திரமாக பாவித்து தன்னுடன் அணைத்துக் கொண்டு கண்ணீர் மல்க நன்றி சொன்னாள். அவள் உடலும் உள்ளமும் ஆனந்தப் பரவசப் பட கால்கள் சிறிது தள்ளாட அருகே இருந்த சுவரில் சாய்ந்தாள்.

                 கண்கள் மூடிய பரவச நிலையில் இருந்தவளுக்கு மஹாபெரியவாளின் வார்த்தைகள் இடி முழக்கமாக கேட்டது. “பரவாயில்லை இத்தனை நேரம் காத்திருந்தாயே. உண்மையில் நீ மிகவும் பொறுமைசாலி” என சொல்ல, அந்தப் பெண், “ தாக்குர்ஜி நான் பொறுமைசாலியல்ல. எத்தனையோ மக்கள் தங்களிடம் ஆசி பெறவும் அனுக்ரஹம் பெறவும் காத்திருக்க, வந்த அனைவருக்கும் பல மணி நேரமாக இடை விடாது ஆசி தந்து கருணை மழை பொழிந்துக் கொண்டிருப்பதோடு எங்கோ நின்று கொண்டிருந்த இந்த விதவைக்கும் அல்லவா அனுக்ரஹம்  காட்டினீர். என் காத்திருப்பில் சுய நலம் இருக்கிறது. ஆனால்  தங்களை நாடி வந்த பக்தர்களின் நலம் கருதிய தங்களின் பொறுமையிலோ அன்பும் கருணையும் அல்லவா வழிந்துக் கொண்டிருக்கிறது. நான் பொறுமைசாலி அல்ல. தாங்கள் தான் பொறுமையின் பிறப்பிடமும் அதிபதியும்” என்றாள். “அம்மா உன் நிலை அறிவேன். இதைக் கொண்டு 17 ஆண்டுக் காலம் உன் குடும்பத்தை நடத்தி நீயும் ஜீவித்து வா. இதுவே உன் வாழ்வாதாரம். துளிர்த்து தழைக்கும்” என ஆசி வழங்கினார். பரவச நிலையிலிருந்து வெளி வந்து சம நிலை அடைந்தாள். தாகுர்ஜியின் திசை  நோக்கி மீண்டும் நன்றியோடு வணங்கினாள். பாத்திரத்தை இறுக்கி பிடித்தபடி தன் வீடு  நோக்கி நடக்க ஆரம்பித்தாள். 
                        மனதில் தாக்குர்ஜியின் தரிசனமும் அவரின் வார்த்தைகளுமே வியாபித்திருந்தது. ஐந்து கிலோமீட்டருக்கும் மேலான நடை பயணம் களைப்பைத் தரவில்லை. பரவச நிலைக்குப் பின் உலகமே அவளுக்கு புதிதாகத் தோன்றியது. மனதை அழுத்திக் கொண்டிருந்த பாராமும் - பிறர் சூட்டிய பட்டங்களும் - கவலையும் போன இடம் தெரியவில்லை. தாகுர்ஜியின் தரிசனம் கிடைத்துவிட்டது. அவரின் ஆசி வார்தைகளையும் கேட்டு விட்டேன் . இனி தாக்குர்ஜியின் ஆசியே என் குடும்பத்தை வழி நடத்தும் என திடம் கொண்டாள். ஒரு வழியாக தாக்குர்ஜியை தரிசித்த மகிழ்வுடன் வீடு வந்து சேர்ந்தாள். தான் கொண்டு சென்ற பாத்திரத்தில் தாக்குர்ஜி ப்ரசாதமாக கொடுத்த  நீர் , பாத்திரம் முழுதுமாக சுமார் ஒன்றரை லிட்டர் நிரம்பி இருக்க, அதை வேறு பாத்திரத்தில் நிரப்ப நினைத்து மற்றொரு பாத்திரத்தில் ஊற்றினாள். ஊற்றிய பொழுது நடந்த அதிசயத்தை அவள் கண்களால் நம்ப முடியவில்லை.

                   அவள் கொண்டு சென்ற பாத்திரத்திலிருந்தது ப்ரசாத நீர். ஆனால் அதை மற்றொரு பாத்திரத்தில் நிரப்பிய பொழுது அது எண்ணெய்யாக வழிந்தது. வழிந்துக் கொண்டே இருந்தது.  நடக்கும் ஆச்சர்யத்தை அவளால் நம்ப முடியவில்லை. தாக்குர்ஜி ப்ரசாதமாக தந்தது நீர் தானா என பார்த்தாள் . நீர் தான் இருந்தது. அது எப்படி வழியும் பொழுது எண்ணெய் ஆயிற்று? தாக்குர்ஜி தாகுர்ஜி என வாய் முணுமுணுத்தது. உள்ளம் ஆச்சர்யத்திலும் சந்தோஷத்திலும் திளைத்திருக்க , மஹா பெரியவாளின் ஆசி வார்த்தைகள் அவள் மனதில் மோதின. “இதைக் கொண்டு 17 ஆண்டுக் காலம் உன் குடும்பத்தை நடத்தி நீயும் ஜீவித்து வா. இதுவே உன் வாழ்வாதாரம். துளிர்த்து தழைக்கும்” ஆசி வார்த்தைகளின் அர்த்தம் இப்பொழுது புரிய ஆரம்பித்தது. பட்டுப் போன குலத்தொழிலான எண்ணெய் வியாபாரத்தை தாக்குர்ஜி மீண்டும் துளிர்க்க வைத்துவிட்டார் எனப் புரிந்துக் கொண்டாள். இனி இந்த எண்ணெய்யை விற்று குடும்பத்தை நடத்துவது என முடிவு செய்தாள்.  

                       ‘தாக்குர்ஜியை நான் அருகில் சென்று கூட வணங்கவில்லை. அவர் முன் என் நிலையை எடுத்தும் சொல்லவில்லை. எங்கோ ஒதுக்கப்பட்டு ஓரமாக நின்ற இந்த விதவையின் மீது தன் உள்ளக் கருத்தைப் பதித்து எத்தனை பெரிய அதிசயத்தையும் அற்புதத்தையும் நிகழ்த்தி ஆசியும் அளித்தார். இதுவரை ஒரு முறை கூட இந்த தாக்குர்ஜியைப் பற்றி நான் அறிந்ததும் இல்லை. நாளும் தொழுததும் இல்லை. ஆனால் எத்தனை பெரிய கருணையைப் பொழிந்திருக்கிறார்’ என எண்ணி எண்ணி அவள் உள்ளம் கசிந்தது. என் தாகுர்ஜிக்கு எப்படி நன்றி செலுத்துவேன் என கலங்கினாள்.  அவள் துக்கம் சந்தோஷம் ஆச்சர்யம் என அனைத்தும்  அழுகையிலேயே கலந்து கரைந்தது. மனதில் தாகுர்ஜியின் ஆசிகளும் அவருக்கான நன்றிகளுமே பதிந்து இருந்தது. தெளிவுக் கொண்டு எழுந்தவள் அந்த பாத்திரத்தை ஒரு பெட்டியில் வைத்துப் பூட்டினாள். பாத்திரத்தோடு ரகசியத்தைக் காக்க தன் வாயையும் மனதையும் சேர்த்து அந்தப் பெட்டியில் பூட்டினாள்.

                              மறு நாள் ஸ்நானம் செய்து விட்டு பெட்டியிலிருந்த தாக்குர்ஜி ஆசிர்வதித்து தந்த பாத்திரத்தை தொட்டு வணங்கினாள்.  மனதில் தாகுர்ஜியை நினைத்தாள். வார்த்தைகள் உள்ளத்திலிருந்த வெடித்துக் கிளம்பின.

        நான் விழுந்துப் போன நேரத்தில் என் மக்கள் 
                              எல்லோரும் நகைத்தனர்
         வியாதியஸ்தி (ராசியில்லாதவள்) என சொல்லி என்  
                           ஜனமே என்னை வெறுத்தது
          என்னை சுகப்படுத்தி புது வாழ்வு தந்த தாக்குருவே!

என்று மனம் உருகிப் பிரார்த்தித்தாள்.  (இதுவே அவளின் குரு மந்திரம் ஆனது. ஒவ்வொரு நாளும் இதை சொல்லியப் பின்னே எண்ணெய் எடுத்தாள்)

மஹா பெரியவா ஆசிக் கொடுத்தப் பாத்திரத்தை சாய்த்தாள். ஒரு குடம் நிறைய நிரப்பினாள். பாத்திரத்தைப் பூட்டினாள். எண்ணெய்யை எடுத்துக் கொண்டு அக்கம் பக்கத்தினர் அறியா வண்ணம் மூன்று நான்கு மைல்களுக்கு அப்பால் சென்று வியாபாரம் செய்தாள். கையில் குரு நாதரின் கருணையால் கிடைத்தப் பணம் அவளுக்கு திடனைத் தந்தது. அந்த வருவாய் அவளின் குடும்ப ஜீவனத்திற்குப் போதுமானதாக இருந்தது. தாகுர்ஜிக்கு மறவாது நன்றி செலுத்தினாள்.

                     மறு நாள் பாத்திரத்திலிருந்து ஒரு குடம் நிறைய எண்ணெய்  எடுத்தாள். வியாபாரம் செய்தாள். ஒவ்வொரு நாளும் ஒரு குடம் என்பதை அளவாக வைத்துக் கொண்டாள். அவள் அதற்கு மேல் என்றுமே எடுக்கவில்லை. அந்தக் கட்டுப்பாட்டை அவள் தனக்குத் தானே  விதித்துக் கொண்டாள். இப்படியே காஞ்சி மாமுனியின் வாக்குப்படி அவள் தன் குடும்பத்தை நடத்தினாள்.

          வருடங்கள் கடந்தன. பரிதாப நிலையில் இருந்த குடும்பம் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறியது. மூத்த மகன் டீக் கடை வைத்து வியாபாரம் செய்தான்.  நான்கு பெண் குழந்தைகளுக்கும் உரிய வயதில் கடன் இல்லாது திருமணமும் முடித்தார் அந்தத் தாய். ஒரு சிறு வீடும் அவர்களுக்கு சொந்தமானது. தாகுர்ஜியின் ஆசியில் மகனின் வியாபாரம் சிறக்க அவன் சிறு ஹோட்டல் வைக்கும் அளவு உயர்ந்தான். மகனின் திருமணமும் நடந்தது. பாரத்தை எப்படி சுமப்பேன் என போராடித் தவித்த அந்த விதவைத் தாய் மாமுனியின் கருணையால் இப்பொழுது பெரும் நிம்மதி அடைந்தாள். 17 ஆண்டுக் காலம் அவரின் கருணையால் ஜீவிதம் நடந்தது. இனி தனக்கு வாழ்க்கையில் என்ன வேண்டும் என உள்ளம்  நிறைவுக் கொள்ள நினைவெல்லாம் தாக்குர்ஜியாகிப் போனார்.

                    ஒரு நாள் இரவு தாக்குர்ஜியின் கருணையை நினைத்து நினைத்து கண்ணீர் பெருக தொழுது நின்றாள். இரவு தாக்குருஜியின் தரிசினம் கிடைத்தது.

மஹரிஷியே மாமுனியே
சித்தனே சுத்தனே 
சர்வனே சத்தியனே
நீர் செய்த உபகாரங்கள் 
கணக்காலே எண்ண முடியுமா 
என தொழ

தாக்குருஜியின் வார்த்தைகள் இடியாய் அவளுள் ஒலித்தன. 
ஆதி அன்பு என்றும் குன்றிடாமல்
பேரின்பம் என்றும் பொங்கிட
நீடித்த ஆசிகள் இருக்கும்.

என்றார் மாமுனி கருணை நாதர்.

                                   17 ஆண்டுக் காலம் முடியும் தருவாயில் அவள் சிறு நோய்வாய்ப் பட தாக்குர்ஜி குறிப்பிட்டக் காலம் முடிந்து விட்டதை அறிந்தாள். தன் ஜீவிதம் முடியப் போவதையும் அறிந்தவள் தன் மகனிடம் பாத்திரத்தை ஒப்படைத்து அனைத்து ரகசியத்தையும் கூறினாள். இனி இதிலிருந்து எண்ணெய் வராது. அதன் பலன் முடிந்தது. தாகுர்ஜியின் கருணையால் நாமும் நன்றாக இருக்கிறோம் என்றாள். ஒரிரு நாளில் தாக்குர்ஜியின் நினைவாலேயே அவள் உயிரும் பிரிந்தது. 

                          “ என் தாய் இத்தனை ஆண்டுக் காலம் எங்கள் குடும்பத்துக்குக் கூடத் தெரியாது ரகசியத்தைக் காத்து வந்தது எனக்கு பிரமிப்பைத் தந்தது. என் தாய் சிறு வயது முதல்   எங்களுக்கு யார் மூலமோ  கிடைக்கப் பட்ட தாக்குர்ஜியின் படத்தைக் காட்டி காட்டி பக்தியை ஊட்டி வளர்த்திந்தார். எங்களுக்கு நினைவு தெரிந்தது முதல் தாக்குர்ஜியைத் தவிர வேறு தெய்வம் தெரியாது. என் தாய் மூலம் எப்பொழுது அந்த ரகசியத்தை அறிந்துக் கொண்டேனோ அன்று முதல் என் தாக்குர்ஜியின் மீது எனக்கு இருந்த பக்தி பன்மடங்காகியது. என் தாய் மூலம் ஆறு ஜீவன்களின் வாழ்வைக் காத்து உயர்த்திய  அவரின் கருணையை நினைத்து நினைத்து கண்ணீர் வந்தது. அவரை காஞ்சி சென்று சந்தித்த பின் தான் என் மனம் அமைதி அடைந்தது. என் தாய் அந்த பவித்ர பாத்திரத்தை என்னிடம் தந்து இதை பாதுகாத்து போற்று – என்றும்  நம் தாகுர்ஜிக்கு நன்றி சொல்ல மறக்காதே என்றார். என் தாக்குருஜியின் கருணையாலும் கொடையாலும் ஆசியாலும் ஒவ்வொரு நாளும் எனக்கு மூவாயிரம் ரூபாய்க்கு குறையாமல் வியாபாரம் நடந்துக் கொண்டிருக்கிறது” எனக் கண்கள் கலங்க பக்தியோடு கூறினார் அந்த ஹோட்டல் உரிமையாளர்.   

                                  இந்த நிகழ்வைக் கேட்ட அடியேன் என் குரு நாதர் மஹா பெரியவாளின் சூட்சும வார்த்தைகளைக் கண்டு வியந்தேன். பட்டுப் போன தொழில் துளிர்த்து தழைக்கும் அதாவது பெருகும் என்ற ஆசி வார்த்தைகள். தன் சிறு கமண்டத்திலிருந்து வார்த்த நீர் எப்படி ஒன்றரை லிட்டர் பாத்திரத்தை நிரப்பியது. அங்கேயே குரு நாதர் அமுதசுரபியின் தத்துவத்தைக் காட்டி விட்டாரே. குரு நாதர் இப்படி ஒரு அமுத சுரபியை அப் பெண்ணுக்கு வழங்கினார் என்றால் அந்தத் தாய் எப்படிப்பட்ட குணவதியாக இருந்திருக்க வேண்டும். குரு நாதர் அவரைப் பொறுமைசாலி என்ற பொழுது அவள் பெருமைக் கொள்ளவில்லை. தன்னைத் தாழ்த்தி குருவை வாழ்த்தி வணங்கினாள். அவரின் அடக்கமும் நன்றியுமே அவரின் தூய மனதைக் காட்டுகிறது. ராசியில்லாதவள் என தூற்றிய மக்களின் வார்த்தைகளை பொய்ப்பிக்கும் விதமாக மஹா பெரியவா ஆசி கொடுத்த அமுத சுரபி ஒவ்வொரு நாளும் அவள் ஊற்ற ஊற்ற பொங்கிப் பெருகும் படி அல்லவா ஆசிக் கொடுத்தார். அந்தத் தாயோ கிடைத்த அமுத சுரபியை அந்த வறுமை நிலையிலும் துஷ்பிரயோகம் செய்யாது இது போதும் என்று கட்டுப்பாட்டுடன் வாழ்ந்தாள் என்றாள், மஹா பெரியவா அவளின் குணத்தைப் புரிந்து அல்லவா இப்படிபட்ட அமுத சுரபியை வழங்கியுள்ளார்.  அவள் தன் குடும்பப் பொறுப்பை முடிக்கவும் மற்றும் அவள் ஜீவிதக் காலத்தையும் தன் தீர்க்க தரிசனத்தில் அறிந்து  17 ஆண்டுகள் அந்த அமுதசுரபிக்கு பலன் தந்தார். மஹா பெரியவா கொடுக்கும் ஆசியில் தான் எத்தனை  நுணுக்கங்கள்! பரிதாப நிலையிலிருந்த அந்தத் தாயின் நிலையை உயர்த்தி பல ஜீவன்களை தழைக்கச் செய்த மஹா பெரியவாளின் கருணை மனதில் கசிய கண்களில் கண்ணீர் துளிர்க்க விடை பெற்றேன்

பக்தர் குறைக் கேட்டு அச்சத்தை  நீக்கி அருள காத்திருக்கின்றீரே அக் கருணை எங்களைக் காத்தருளட்டும் !
  (ஸ்ரீ மும்பை விஜயம் ஸ்வாமிகள் அருளிய காஞ்சி 6-10-8 ம் பீடாதிபதியின் ஸ்தோத்ரமாலா விலிருந்து..) 

மாமுனியே சரணமையா !

No comments:

Post a Comment