Friday 18 March 2011

காயத்ரி மந்த்ரம் எப்போது பலன் தரும்?


Thumbnail

ஒரு சிம்பிள் ராஜா. அவனுக்கு ஒரு அமைதியான வேதாந்தி மந்திரி. ஏதோ ஒரு அவரமாக சேதி ஒன்று கேட்கவேண்டுமென்று மந்திரி வீடு வரை சென்றான் இந்த ராஜா.

அப்போது மந்திரி காயத்ரி மந்த்ரத்தை கண்மூடி அமைதியாக சொல்லிக்கொண்டு த்யானத்தில் இருக்கவே,தான் ராஜா என்றும் பாராமல் அமைதி யுடன் காத்திருந்தான். 

மந்திரி சொல்லி முடித்து எழுகையில், "என்ன பண்ணிக்கொண்டு இருந்தீர் எனக் கேட்டான்." 

"காயத்ரி மந்த்ரம்" ஜபம் பண்ணிக்கொண்டு இருந்தேன் மகாராஜா.

"எனக்கும் சொல்லிகொடு" என்றான் ராஜா.

மந்திரி அமைதியாக "ராஜா, நான் காயத்ரி மந்த்ரம் தங்களுக்கு உபதேசிக்கும் அளவு தகுதியானவன் இல்லை. இதை ஒரு குருவினடமிருந்துதான் உபதேசம் பெறுவது முறை" என்றான்.

ராஜாவும் யாரோ ஒரு குருவிடமிருந்து காயத்ரி மந்திரத்தின் உச்சரிப்பை மட்டும் தெரிந்து வைத்துக்கொண்டு, ஒரு நாள் மந்திரியிடம் "நான் காயத்ரி மந்த்ரம் சொல்லவா?" என்று ஒரு ஊஞ்சலில் ஆடிக்கொண்டே கேட்டான்.

மந்திரி மௌனமாக இருக்கக்கண்டு, அதையே  சம்மதமாக நினைத்துக் கொண்டு ராஜா, உரத்த குரலில் காயத்ரி மந்திரத்தை ஒப்பித்தான்.  

"சரியா" - ராஜா கேட்டான்.

மந்திரி பொறுமையுடன்,"ராஜா, தங்கள்  உச்சரிப்பு என்னமோ சரிதான். ஆனால் இப்படி மந்திரத்தை உச்சரித்தால் பலன் கிடைக்காதே" என்றான்.

"ஏன்" - ராஜா வினவினான்.

எப்படி சொன்னால் ராஜாவுக்கு புரியும் என்று சொல்ல மந்திரிக்குப்  புரியவில்லை.

சட்டென்று ஒரு ஐடியா மந்திரியின் எண்ணத்தில் உதிக்கவே, அருகில் இருந்த சேவகனை அழைத்து, "டே ! இந்த ராஜாவை உடனே ஒரு கயிற்றால் இந்தத் தூணில் கட்டிப்போட்டு" என்றான்.

இதைக்கேட்ட ராஜாவுக்கு ஒரே அதிர்ச்சி. சேவகனோ அதை லட்சியம் செய்யவில்லை ராஜாவையும்-மந்திரியையும் மாறி மாறிப் பார்த்தான்.

"என்னடா நிற்கிறாய்? சொன்னதை செய் .." என மீண்டும் உரத்த குரலில் மந்திரி கட்டளையிட, சேவகன் சிலையாக நின்றானே தவிர, அசையவே இல்லை.

ராஜாவுக்கு மந்திரிமீது சந்தேகம் வந்துவிட்டது. உடனே, "அடே சேவகா! இப்போதே இந்த மந்திரியை கட்டி அரண்மனைக்கு இழுத்து வா, தக்க தண்டனை வழங்குகிறேன்" என்றான்.

சேவகன் உடனே புலிபோல் பாய்ந்து மந்திரியை கட்ட விரைய, அப்போது மந்திரி ராஜாவைப்பார்த்து, "ராஜாவே, இதைத்தான் நான் உங்களுக்கு விளக்கிக் கொண்டு இருந்தேன். கட்டளை ஒன்றுதான். ஆனால், நான் சொல்லி கேட்காத சேவகன், நீங்கள் சொன்ன மாத்திரத்தில் அதை நிறைவேற்ற உடன்படவில்லையா? காயத்ரி மந்திரமும் இப்படித்தான். அதற்கு என்று சொல்லும் ஒரு முறை இருக்கு. அதன் படி செய்து, உச்சரித்தால் நிச்சயம் முழு பலன் கிடைக்கும்" என்றான்.

No comments:

Post a Comment