Monday, 31 December 2012

குறளானது வேதத்துக்கு சமமானது - மஹா பெரியவர் விளக்கம்



திருக்குறளில் பல இடங்களில் வேதநெறி சிறப்பித்துப் பேசப்படுகிறது. வேதத்திற்கு கௌரவம் என்னவெனில், எந்த உயர்ந்த நூலானாலும் "இது வேதத்துக்கு சமானம்" என்பதுதான்.

தமிழில் மிகவும் பிரசித்தமான நீதி சாஸ்த்திரங்களில் குறளும்கூட "தமிழ் வேதம்" என்றுதானே சொல்லப்படுகிறது?  திருக்குறளை "தமிழ் மறை" என போற்றப்படுவதும் இதனால்தானே.

அக்காலத்தில் மதுரையில் கடைச்சங்கம் ஒன்று இருந்தது. அங்கே ஸுந்தரேச்வரரால் கொடுக்கப்பட்ட பலகை ஒன்று இருந்தது. அதன்மேல் யோக்யதை இருந்தவர் உட்காரலாம். யோக்கியதை இல்லாவிட்டால் தள்ளிவிடும். 

அது எப்படி? இதை நம்மால் நம்ப முடியவில்லை. ஆனால் ஒரு மெஷினில்  காசு போட்டால், அது டிக்கட்டை வெளியே தள்ளுகிறது என்பதை நம்புகிறோம்.

திருவள்ளுவர் தாம் செய்த குறளை எடுத்துக்கொண்டு அந்த சங்கத்திற்கு போனார். 
பொதுவாக வித்வான்கள் மற்றவர்களை அலக்ஷ்யம் பண்ணுவார்கள்.ஏகமாகப் பரீக்ஷைகள் வைப்பார்கள். அப்படிப் பண்ணுவதனால், அசடாயிருப்பவர்கள் "நானும் படித்தவன்" என்று சொல்லிக் கொள்ள முடியாது.கேட்ட சரக்கை எழுதிப் பிரசாரம் பண்ண முடியாது. ஆகையால், அப்படிப்பண்ணுவது ஒரு வகையில் நல்லதையே பண்ணுகிறது. ஆனால், அந்த அலக்ஷ்ய புத்தி அதிகமாகப் போகக் கூடாது.அது தப்பு.

திருவள்ளுவர் கொண்டு போன சுவடியை, அந்த சங்கப் பலகையில் வைக்கச் சொன்னார்கள்."இந்தச் சுவடிக்கு சங்கப் பலகை இடம் கொடுத்தால்தான், இதை இலக்கியத் தரமுள்ளது என்று ஒப்புக் கொள்ள முடியும்" என்று மற்றப் புலவர்கள் சொல்லி விட்டார்கள்.

திருவள்ளுவரும், "ஆஹா, அப்படியே" என்று அந்தச் சின்னச் சுவடியைப் பலகையில் வைத்தார். அது அந்தச் சுவடிக்கு இடம் கொடுத்து, மற்றவர்களையெல்லாம் கீழே தள்ளிவிட்டது. அப்பொழுது ஏனைய புலவர்கள் எல்லோரும் குறளின் பெருமையை உணர்ந்து, ஒவ்வொருவரும் ஒவ்வொரு செய்யுளால் புகழ்ந்தார்கள். அவர்களுக்குள்ளே ஒருவர்,

         "ஆரியாமுஞ் செந்தமிழு மாராய்ந் திதனினிது 
         சீரிய தென்றொன்றைச் செப்பரிதால் -ஆரியம் 
         வேத முடைத்து; தமிழ்த்திரு வள்ளுவனார் 
         ஓதுகுறட் பாவு டைத்து"                                        {திருவள்ளுவ மாலை)

என்று சொல்லி இருக்கிறார். "ஸம்ஸ்கிருதம் பெரியதா? தமிழ் பெரியதா? என்று கேட்டால், ஸம்ஸ்கிருதம்தான் என்று நேற்று வரையிலும் சொல்லியிருக்கலாம். இன்றிலிருந்து அப்படிச் சொல்லக் கூடாது. ஸம்ஸ்கிருதத்திற்கு உயர்வு அதில் வேதம் இருக்கிறது என்பதே..(வேதம் ஸம்ஸ்கிருதம் இல்லை) அதற்கு சமானமாகத் தமிழில் இன்றைக்குக் குறள் வந்துவிட்டதே! அது எப்படி உயர்வுடையதாகும்?" என்று அவர் சொல்லியிருக்கிறார். இதனால், குறளானது வேத சமானம் என்பது தாத்பரியம்.

வேதத்தால்தான் ஸம்ஸ்கிருதத்திற்கு பெருமை., குறளாள்தான் தமிழுக்கே பெருமை என்ற கருத்துக்களும் இங்கே வெளிப்படுகின்றன.



Monday, 17 December 2012

உபநயனம் செய்விப்பதை தள்ளிப்ப்போடக்கூடாது - காஞ்சி மஹா பெரியவாளின் ஆக்ஞை




உபநயனம் செய்யவேண்டிய காலம் பிராம்மணனுக்கு கர்ப்பத்தைக் கூட்டி எட்டாவது வயசாகும்;அதாவது பிறந்து ஏழு வயஸு இரண்டு மாஸம் ஆனவுடன் பண்ண வேண்டும். க்ஷத்ரியர்கள் பண்ணிரண்டு வயது வரை உபநயனம் செய்யலாம். யது வம்சத்தில் பிறந்த கிருஷ்ண பரமாத்மாவுக்கு அப்படித்தான் செய்திருக்கிறது. வைச்யர்கள் பதினாறு வயசு வரை உபநயனம் பண்ணலாம்.

பிராம்மணர்களுக்கும்கூட எட்டு வயசு lower limit (கீழ் வரம்பு) , பதினாறு வயசு upper limit (உச்ச வரம்பு) என்று சாஸ்திரங்கள், போனால் போகிறதென்று அவகாசம் கொடுத்திருக்கின்றன. பதினாறு வயசுக்கு அப்புறம் பூணூல் போடாமல் ஒரு பிராம்மணப் பிள்ளையை வைத்திருப்பது மஹத்தான தோஷமாகும்.

ஒருவனுக்கு இப்படி வயசுக் காலம் சொல்லியிருப்பதோடு, உபநயன ஸம்ஸ்காரம் என்பதைச் செய்வதற்கே உத்தராயணம்தான் உரிய காலம் என்றும் ஸ¨ரியன் பூமியின் வடக்குப் பாதியில் ஸஞ்சரிக்கிற ஆறுமாஸத்திலேயே உபநயனம் செய்யவேண்டும். உபநயனம் மட்டுமின்றி விவாஹமும் இந்த ஆறுமாஸத்தில்தான் செய்யலாம். இதிலும் வஸந்த காலம் (சித்திரை, வைகாசி) தான் விவாஹத்துக்கு ரொம்பவும் எடுத்தது. அதே மாதிரி 'மாசிப் பூணூல் பாசி படரும்'என்பதாக மாசி மாதத்தில் பூணூல் போடுவதை விசேஷமானதாகச் சொல்லியிருக்கிறது. தக்ஷிணாயனத்தில் (ஆடியிலிருந்து மார்கழி முடிய) இவற்றைச் செய்வது செய்வது சாஸ்திர ஸம்மதமல்ல. 

இப்போது இவற்றுக்கு எவ்வளவு காலம் கடத்தலாமோ அவ்வளவு டிலே செய்துவிட்டு கடைசியிலே மார்கழி மாஸம் ஒன்று தவிர வேறு எப்போது வேண்டுமானாலும் பண்ணலாம் என்று பண்ணுகிறார்கள். பலனும் அதற்கேற்ற மாதிரிதான் இருக்கிறது. கலியாணம் என்று ஏதோ ஒன்று பண்ணியிருக்கிறார்களே என்று திருப்திப்பட்டு அதை வேண்டுமானாலும் தக்ஷிணாயனத்தில் அநுமதிக்கலாம். (கூடாதுதான். ஆனால் தொலைகிறது என்று விடலாம்.) உபநயனத்தை ஒருகாலம் தக்ஷிணாயனத்தில் அநுமதிப்பதற்கில்லை. ஏற்கெனவே தக்ஷிணாயனத்தில் உபநயனம் பண்ணியிருந்தால்கூட மறுபடி உத்தராயணத்தில் ஒரு தரும் பண்ணுங்கள் என்றுதான் சொல்வேன். கலியாணம், பூணூல் இரண்டையுமே பணம் சம்பந்தப்பட்ட காரியங்களாக்கி விட்டு இரண்டு செலவும் ஒன்றாகப் போகட்டுமே என்பதால் தங்கள் பெண்களின் கல்யாணத்துக்காகப் பிள்ளையின் பூணூலை தள்ளிப் போடுகிற வழக்கம் அதிகமிருப்பதால் இதைச் சொல்ல நேர்ந்தது.

இதிலே ஒரு வேடிக்கை, அல்லது பெரிய கஷ்டம், தர்ம சாஸ்திரங்களில், ஸ¨த்ரங்களில் சொல்லியுள்ள ரூல்களை மனம் போனபடி மீறுகிறபோதே, அங்கங்கே எப்படியோ பழக்கத்தில் வந்துவிட்ட சில விஷயங்களைப் பெரிய சாஸ்திர ரூல் மாதிரி நினைத்துக் கொண்டு அநுஸரித்து வருகிறார்கள். உதாரணமாக அக்காள் கல்யாணத்துக்கு இருக்கும் போது தம்பிக்குப் பூணூல் போடக்கூடாது;ஒரே ஸமயத்தில் மூன்று பிரம்மச்சாரிகள் ஒரு வீட்டில் இருக்கக் கூடாது என்கிறது. போன்ற காரணங்களைச் சொல்லிக் கொண்டு, பிள்ளைகளுக்கு உரிய காலத்தில் உபநயன ஸம்ஸ்காரம் செய்விக்காமல் இருக்கிறார்கள். ஆதாரமான தர்ம சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டிருக்கிற வயசு வரம்பை இம்மாதிரி லெனகிகமான வழக்கங்களை முன்னிட்டு மீறுவது ஸரியல்ல. 

உபநயன ஸம்ஸ்காரத்தை எந்தக் காரணத்தை முன்னிட்டும் தள்ளிப் போடவே கூடாது. கல்யாணத்திலே பண ஸம்பந்தத்தைக் கொண்டு விட்டு அதற்காக கால தாமஸம் பண்ணுவது தப்பு.

 கல்யாணத்திலாவது தவிர்க்க முடியாமல் 'ஷோ'அம்சங்கள் சேர்ந்துவிட்டன என்கலாம். நாம் வேண்டாமென்றாலும் பிள்ளையகத்தார் வேண்டும் என்றால் இந்த ஆடம்பரங்களைப் பண்ணித்தான் ஆகவேண்டும். இதற்குப் பணம் சேர்க்க வேண்டும். இதற்காகக் கால தாமஸம் பண்ண வேண்டியிருக்கிறது. அதோடு கூடக் கல்யாணம் என்பதில் வரன் என்று ஒருத்தனைத் தேடிப் பிடித்து, நமக்கு அவனைப் பிடித்து, அவன் வீட்டாருக்கும் நம் ஸம்பந்தம் பிடிக்க வேண்டியதாக இருக்கிறது. வரன் வேட்டையில் காலம் செலவிட வேண்டியதாகிறது.

பூணூல் விஷயம் இப்படியில்லை. இதை ஏன் ஆடம்பரமாகப் பண்ணவில்லை என்று எந்த ஸம்பந்தியும் நம்மை நிர்பந்திக்கப் போவதில்லை. மாப்பிள்ளை தேடுகிறதுபோல் இதில் வெளியே யாரையோ தேடிப்போய் பரஸ்பர ஸம்மதத்தைப் பெறவேண்டியும் இருக்கவில்லை. ஆதலால் உரிய காலத்தில் ஒரு பிள்ளைக்குப் பூணூல் போடாமலிருப்பதற்கு எந்த ஸமானதானமும் சொல்வதற்கில்லை. அதை எந்த விதத்திலும் மன்னிப்பதற்கேயில்லை.

அதைவிடத் தப்பு உரிய வயசில் உபநயனம் பண்ணி அவனுக்கு ஆத்ம க்ஷேமமாகவும் அவன் மூலமாக லோகத்துக்கு க்ஷேமமாக இருக்கிற காயத்ரீ உபதேசத்தைக் கொடுக்காமலிருப்பது, வெறும் vanity, ஜம்பத்துக்காக இப்போது பூணூல் என்றால் அதை ஒரு குட்டிக் கல்யாணம் போலப் பண்ணுவது என்று வைத்துக் கொண்டு இந்தச் செலவை எவ்வளவு தள்ளிப்போடலாமோ அப்படிச் செய்வதற்காக காலம் கடத்துவதை எவ்வளவு கண்டித்தாலும் போதாது.

அதாவது சாஸ்திரத்தில் இருப்பனவற்றோடுகூட, அவற்றுக்கு முரணில்லாத குலாசார, தேசாசாரங்களையும் பின்பற்ற வேண்டுமே ஒழிய, சாஸ்திரப் பிரமாணத்தை விட்டுவிட்டு, அதற்கு மாறுதலாக ஏற்பட்டு விட்ட பழக்கங்களைக் கடைபிடிப்பது என்று வைத்துக் கொள்ளக் கூடாது.

ஐந்து வயஸிலேயே உபநயனம் செய்யும் ஒரு வழக்கமும் உண்டு. 'அது காம்யோபநயனம்'எனப்படும். 'காம்யம்'என்றால் ஒரு இஷ்டத்தை உத்தேசித்தது என்று அர்த்தம். குழந்தை விசேஷ அபிவிருத்தி அடைய வேண்டுமென்று ஆசைப்பட்டால் இப்படி செய்யாததால் தோஷமில்லை. ஏனென்றால் மந்திரங்கள் நன்றாக ஸ்பஷ்டமாக உச்சரிக்க வருகிற காலத்தில், ஸம்ஸ்க்ருத ஞானம் இரண்டு வருஷமாவது ஏற்பட்டானதற்கு ஏற்பட்டானதற்குப் பிறகு உபநயனம் பண்ணுவதே போதும். (இப்போது முப்பது, முப்பத்தைந்து வயசுக்குக் கல்யாணமாகிறபோது பூணூலும் போடுவது என்று வந்திருக்கும் தசையில் நான் 'ஐந்து வயசில் பண்ண வேண்டுமென்றில்லை, எட்டில் பண்ணினாலே போதும் என்று சொல்வது எனக்கே ஹாஸ்யமாகத்தான் இருக்கிறது!ஹாஸ்யம் என்று சொன்னாலும் வைதிகப் பிரக்ஞை இருந்தால் வயிறு எரியவேண்டும்!)

Saturday, 15 December 2012

இளம் பிராயத்தில் பிரம்மச்சரியமா? நாஸ்திகமா? - மஹா பெரியவா




யக்ஞோபவீதம் இளம் பிராயத்திலேயே இப்போது செய்து வைப்பதும் இல்லை. காலம் கடந்து செய்து வைக்கப்படும் உபநயனத்துக்குபின், ஸந்தியாவந்தனம், காயத்ரி இதையெல்லாம் யாரும் இப்போது ஸ்ரத்தையா செய்யக் காணோம். நம்பிக்கை அற்ற தன்மையும், நாஸ்திகமும் வளர்ந்து இருக்கின்றன.

நல் கர்மாக்கள் செய்யாமல் இருக்க பயந்த காலம் போய், பாவம் செய்ய யாரும் பயப்படக் காணோம். அதனால்,  லோகக்ஷேமார்த்தமாக கடமையை செயத பிராமணர்களுக்கு இருந்த மரியாதை போய்விட்டதற்கு அவர்களே காரணம்.

அதனால் இன்று எங்கும் எதிலும் பொலிவு இழந்து, மலிந்து காணப்படுகிறது. தீமைகள் பெருகி துக்கம் அதிகமாகிவிட்டிருக்கிறது. 

உபநயனத்தோடு காயத்ரீ தீர்ந்தது, மறுநாளிலிருந்தே கிரிக்கெட்டும், ஸினிமாவும், கட்சி மீட்டிங்குந்தான் என்று ஆகிவிடாமல் உபநயனப்பிள்ளை தொடர்ந்து ஸந்தியாவந்தனம் செய்யும்படியாக மாதாபிதாக்கள் கண்டிப்புடன் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களே கிளப், ஸினிமா, மீட்டிங், ரேஸ் என்று போகிறபோது நான் சொல்வது என்ன பலன் தரும் என்று எனக்கே தெரியவில்லை. தாங்கள்தான் வீணாகப் போயாயிற்று, குழந்தைகளாவது உருப்படட்டும் என்றுதான் இதைச் செய்யவேண்டும். ஆனால், "எனக்குச் சொல்ல வருகிறாயே! நீ என்ன பண்ணுகிறாய்?"என்று பிள்ளையே மாதாபிதாக்களிடம் திருப்பிக் கொண்டு விட்டாலும் கஷ்டந்தான்! இப்படிப்பட்ட ஒரு துர்த்தசையில், நான் உங்கள் 'டய' த்தை 'வேஸ்டா'க்கி கொண்டு, "சொல்ல வேண்டியது என் கடமை" என்பதற்காகச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்!

குழந்தையாயிருந்தவனுக்கு அறிவு வந்து, தானே மந்திரங்களைச் சொல்கிற சமயத்தில் உபநயனம் நடக்கிறது. "பிக்ஷாசர்யம் சர" (பிக்ஷை எடு) என்று இந்தச் சடங்கில் சொன்னால் பூணூல்காரப் பையன் "பாடம்" ( baad `ham) (அப்படியே செய்கிறேன்) என்கிறான். அதனால் இவனுக்கு உபநயனத்துக்கு முன்பே "பிக்ஷாசர்யம் சர" என்று சொன்னால் அதைப் புரிந்துகொள்வதற்கான ஸம்ஸ்கிருத ஞானம் இருக்க வேண்டும். ஐந்து வயதில் படிக்க ஆரம்பித்தால் இரண்டு அல்லது மூன்று வருஷத்தில் இப்படிப்பட்ட பாஷா ஞானம் வந்துவிடும். ஆதலால் எட்டு வயதில் பூணூல் போடவேண்டும் என்றாகிறது.

எட்டு வயசுக் குழந்தைகள் அர்த்தம் தெரிந்து பூணூல் போட்டுக் கொண்டு ஜபம் பண்ணிவிட்டால் லோகமெல்லாம் நன்றாக ஆகிவிடும். இப்போதோ இளம் மனசுகளில் நாஸ்திகத்தைத் தான் ஏற்றியிருக்கிறோம்!

மாதா பிதா பண்ணுவது மக்களைக் காக்கும் - மஹா பெரியவர்


உபநயனம் முதல் பண்ணப்படும் ஸம்ஸ்காரங்கள் ஒரு ஜீவனுக்கு அறிவு வந்த பின்பு ஏற்படுபவை. குழந்தையாக இருந்த ஜீவன் அறிவுடன் மந்திரம் சொல்லிப் பண்ணத் தொடங்கும் முதல் ஸம்ஸ்காரம்(கர்மா) உபநயனமே.

மாதா பிதாக்களிடத்தில் ஏதாவது பாப தோஷங்களிருந்தால் அவை அவர்களிடத்திலுண்டாகிற ஜீவன் எந்த மாதாவுடைய கர்ப்பத்தில் வாஸம் பண்ணுகிறதோ, எந்தப் பிதாவால் உண்டாகிறதோ அவர்களுடைய தோஷங்கள் அந்த ஜீவனுக்கு ஏற்படாமலிருப்பதற்காக ஸம்ஸ்காரங்கள் செய்யவேண்டும். மாதா பிதாக்களிடம் துர்க்குணங்கள் உண்டு. அவை அவர்களால் ஏற்படும் ஜீவன்களுக்கு உண்டாகாமலிருக்க ஸம்ஸ்காரங்கள் செய்ய வேண்டும். அந்த தோஷங்கள் (கர்ப்ப சம்பந்தமான) கார்ப்பிகம் என்றும் (பீஜ சம்பந்தமான) பைஜிகம் என்றும் இரண்டு தந்தையால் உண்டாவது. இந்த தோஷங்களின் நிவாரணத்திற்காக அதாவது கர்பாதானம் முதற்கொண்டு, பும்ஸுவனம், ஸீமந்தம்,நாமகரணம் உள்பட மற்றும் பின்னர் உபநயனம் வரையில் உள்ள சம்ஸ்காரங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அவைகளைச் செய்ய வேண்டியவர்கள் மாதா பிதாக்கள். உபநயனம் வரையில் உள்ள ஸம்ஸ்காரங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அவைகளைச் செய்ய வேண்டியவர்கள் மாதா பிதாக்கள். 

உபநயனம் வரைக்கும் ஸம்ஸ்காரங்களைத் தானே செய்து கொள்ளப் புத்திரனுக்கு அர்ஹமான (தகுதியான) வயது வரவில்லை.

எந்த ஸம்ஸ்காரத்தையும் உரிய காலத்தில் பண்ண வேண்டும். அதனால் பாப பரிகாரம் ஏற்படுகிறது. பூர்வத்தில் வேறொரு காரியம் பண்ணிப் பாபம் ஸம்பாதித்திருக்கிறோம். அதை நீக்க மனம்-வாக்கு-காயங்களால் ஸம்ஸ்காரம் பண்ணவேண்டும்.

நாம், பாபம் அந்த மூன்று கரணங்களாலேயும் பண்ணியிருக்கிறோம். மனதால் கெட்ட எண்ணம் நினைத்திருக்கிறோம். வாக்கால் பொய் பேசியிருக்கிறோம்.தேஹத்தால் பொய் பண்ணியிருக்கிறோம். அதாவது பல தினுசாகப் பொய் பண்ணியிருக்கிறோம். அதாவது பல தினுஸாகப் பாசாங்கு பண்ணியிருக்கிறோம். மனோ-வாக்-காயங்களால் பண்ணிய பாபங்களை அவைகளாலேயே ஸத் காரியங்களைப் பண்ணிப் போக்கிக் கொள்ள வேண்டும். மனத்தினால் பரமேச்வரத் தியானம் பண்ணவேண்டும்;வாக்கினால் மந்திரம் சொல்ல வேண்டும்;காயத்தால் ஸத்காரியம் பண்ண வேண்டும். மனோ -வாக் - காயங்களால் தானாக ஒரு ஸம்ஸ்காரத்தைப் பண்ணும் பக்குவம் ஜீவனுக்கு உபநயனத்திலிருந்து ஏற்படுகிறது. இதுவரை தகப்பனார்தான் இவனுக்காக மந்திரம் சொல்லிப் பண்ணினார்.

இங்கே இன்னொரு விஷயமும் சொல்லவேண்டும். ஒரு ஜீவனை direct -ஆக (நேராக) உத்தேசித்தே அதன் பிதா பண்ணும் (கர்ப்பாதானம் முதற்கொண்டு சௌளம் [சௌளம் என்பது சத்கர்மா செய்வதற்கு வைக்கப்படும் சிகை - குடுமி] வரையிலான) கர்மாக்கள் மட்டுமின்றி, அந்தப் பிதாவாகப்பட்டவன் மற்ற எல்லா ஸம்ஸ்காரங்களையும் பண்ணி நல்ல அநுஷ்டாதாவாக இருப்பதும் indirect -ஆக (மறைமுகமாக) அவனுடைய புத்திரர்களுக்கு நல்லதை செய்கிறது. 'மாதா பிதா பண்ணுவது மக்களைக் காக்கும்'என்ற வார்த்தைப்படி இது மாதிரி நடக்கிறது. வைதிக பிராமண ஸந்ததிக்குஸமீப காலம் வரையில் புத்திப் பிரகாசம் அதிகம் இருந்து வந்ததற்கு ஒரு முக்ய காரணம், முன்னோர்கள் பண்ணிய ஸம்ஸ்காரங்களின் சக்திதான். முன்பு இருந்தவர்கள் செய்தது இரண்டு அல்லது மூன்று தலைமுறைக்கு அஸ்திவாரமாக இருக்கிறது. அந்த எல்லை தாண்டிப் போனால் அப்புறம் கஷ்டந்தான். 

இந்த ஸந்ததியில் பிறந்த குழந்தைகளே லௌகிகத்தில் பிரவேசித்தபின் அதிகமாகக் கீழே போய் விட்டார்கள். ரொம்பவும் கெட்டுப் போனார்கள். மடை அடைத்து வைத்ததைத் திறந்துவிட்டால் வெகு வேகமாக ஜலம் போகிற மாதிரி இவர்கள்தாம் கடுமையாக லௌகிகத்தில் இறங்கி விட்டார்கள்.

நம்முடைய பெற்றோர்கள் ஸம்ஸ்காரம் பண்ணவில்லை;அதனால் நமக்கு நன்மை உண்டாகவில்லை என்ற குறை நமக்கு இருக்கலாம். அதைப்போல நம்முடைய குழந்தைகள் குறை கூறாமல் நாம் நல்ல ஸம்ஸ்காரங்களைப் பண்ணவேண்டும். அவர்களுக்கும் பண்ணி வைக்க வேண்டும்.

வேதம் நிறைந்த தமிழ்நாடு - மஹா பெரியவாளின் வேதனையும், வேண்டுகோளும்


வேதம் நிறைந்த தமிழ்நாடு 


வேதமிருந்தால்தான் லோகம் நன்றாக இருக்கும், ஆத்மாவும் க்ஷேமமடையும் என்பது என் அபிப்ராயம். இந்தப் பெரிய மூலதனம் இப்போது வீணாகப் போயிருக்கிற நிலை மாறி, இதை மறுபடி தழைக்கும்படியாகப் பண்ணவேண்டுமென்பதே எனக்கு ஸதா விசாரமாக இருக்கிறது.  நிர்ப்பந்தத்துக்காக இல்லாமல், ஆசையோடு ஆர்வத்தோடு நீங்கள் எல்லோரும் சேர்ந்து இது வேத பூமி என்பதை மறுபடி நிஜமாக்கப் பிரயாஸைப் படவேண்டும். தமிழ்நாட்டுக்கு இதை நான் முக்கியமாகச் சொல்கிறேன்.

வேத விருக்ஷம் நன்றாக விழுது விட்டு வளர்ந்த மண் இந்தத் தமிழ் பூமி, "வேதம் நிறைந்த தமிழ்நாடு" என்று (பாரதி) பாடியிருப்பது கவியின் அதிசயோக்தி இல்லை. அப்படித்தான் தமிழ்தேசம் இருந்திருக்கிறது. சங்க காலத்திலிருந்து, எங்கே பார்த்தாலும் வேத வேள்விகளை வானளாவப் புகழ்ந்து சொல்லியிருக்கிறது. சங்கம் வளர்த்த பாண்டிய ராஜாக்கள் வைதிகமான யக்ஞாதிகளை நிறையச் செய்து, "பல் யாகசாலை முது குடுமிப் பெருவழுதி"என்ற மாதிரியான பட்டங்களைத் தங்களுக்குப் பெருமையோடு சூட்டிக் கொண்டிக்கிறார்கள். அவர்களுடைய ராஜதானியான மதுரையைப் பற்றி இரண்டு பெருமை. ஒன்று, 'மாடு கட்டிப் போர் அடித்தால் மாளாது என்று யானை கட்டிப் போர் அடித்தது.'இது தான்ய ஸுபிக்ஷத்தைச் சொல்வது. இன்னொன்று ஆத்ம ஸுபிக்ஷத்தையும், லோக ஸுபிக்ஷத்தோடு சேர்த்துச் சொல்வது. அதாவது, பல ஊர்க்காரர்கள் தங்கள் தங்கள் ஊர்ப் பெருமையைச் சொல்லும்போது மதுரைவாசிகள், "எங்கள் ஊரில் வேத சப்தத்தோடேயாக்கும் பொழுது விடிகிறது. சேரர்களின் தலைநகரான வஞ்சியில் இருப்பவர்களும், சோழர்களின் தலைநகரான கோழி என்ற உறையூரில் இருப்பவர்களும், தினுமும் கோழி கூவுவதைக் கேட்டு விழித்துக் கொள்கிறார்கள். அதைவிடப் பெருமைப்படத்தக்க விதத்தில் விழித்துக் கொள்பவர்கள் பாண்டிய ராஜதானியான மதுரையில் வசிக்கிற நாங்களே. வேத அத்யயனத்தை, மறையலியைக் கேட்டுக் கொண்டு தான் நாங்கள் விழித்துக் கொள்கிறோம்"என்று பெருமைப் பட்டுக் கொள்கிறார்கள்!இது சங்க இலக்கியத்திலேயே இருக்கிற விஷயம்.

திருக்குறளில் பல இடங்களில் வேதநெறி சிறப்பித்துப் பேசப்படுகிறது. வேதத்திலுள்ள பஞ்ச மஹாயக்ஞங்களைத்தான் திருவள்ளுவர் சொல்கிறார்.

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தார் ஒம்பல் தலை.

ராஜநீதி தவறினால் கோ-ப்ராம்மணர்களுக்கு க்ஷீணம் உண்டாகும் என்பது ஒரு முக்யமான வைதிகக் கொள்கை. கோ (பசு) வையும், பிராம்மணர்களையும் தனியாகக் குறிப்பிட்டுச் சொல்வதற்குக் காரணம், கோ தருகிற நெய், பால், சாணம் முதலியனதான் யக்ஞ திரவியங்களில் முக்யமானவை;யாகத்தைப் பண்ணுகிற அதிகாரம் பெற்றவர்களோ பிராம்மணர்கள்- என்பதுதான். இதே மாதிரி கோ-பிராம்மணர்களைத் திருவள்ளுவர் குறிப்பிட்டு, அரசின் நீதித் தண்டம் தவறினால், இந்த இருவராலும் கிடைக்கிற லோக உபகாரம் வீணாகிவிடும் என்கிறார்.

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.

'ஷட் கர்ம நிரதர்'என்று பிராம்மணர்களுக்கு உள்ள வைதிகமான பெயரை, அப்படியே மொழிபெயத்து "அறு தொழிலோர்"என்கிறார். அத்யயனம்-அத்யாபனம் (தான் வேதம் ஒதுவது-பிறருக்கும் ஒதுவிப்பது) ; யஜனம்-யாஜனம் (தான் வேள்வி செய்வது-பிறருக்கு வேள்வி செய்விப்பது) :தானம் - ப்ரதிக்ரஹம் (வேள்வியில் தானே தக்ஷிணை தருவது;இம்மாதிரி செலவழிப்பதற்கு வேண்டிய மூலதனத்துக்காகவே பிறத்தியாருக்கு சிக்ஷை  சொல்லி முடித்தபின் அவர்களிடமிருந்து தக்ஷிணை வாங்கிக் கொள்வது) என்ற ஆறும் தான் பிராம்மணனுக்கு உரிய ஷட்கர்மாக்கள். இது மநுஸ்மிருதியில் சொன்னது. தர்ம சாஸ்திரங்களில் இன்னொன்றான பராசர ஸ்மிருதியில் வேறு தினுசாக ஆறு கர்மாக்களை பிராம்மணனின் நித்யப்படியாக (daily routine -ஆக) சொல்லியிருக்கிறது.

ஸந்த்யா-ஸ்நானம் ஜபோ ஹோமம் தேவதானாம் ச பூஜனம்|
ஆதித்யம் வைச்வதேவம் ச ஷட்கர்மாணி தினே தினே|

ஒன்று ஸந்தியாவந்தனம்;அதை ஸ்நானத்தோடு செய்ய வேண்டும். ப்ராம்மணன் பச்சைத் தண்ணீரில் முழுகப் பயப்படவே கூடாது. எப்போது பார்த்தாலும், தினமும் இரண்டு மூன்று வேளையும் ஸ்நானம் செய்யவேண்டும். ப்ராத ஸ்நானம் (விடியற்காலை) , மாத்யான்னிக ஸ்நானம் (பகல்) ஸாயங்கால ஸ்நானம் என்று பண்ண வேண்டும். இப்படி மூன்று வேளையும் ஸ்நானம் பண்ணியே அந்தந்த வேளைக்கான ஸந்தியா வந்தனம், அப்புறம் ஸ்நானம் என்று சொன்னதால், ஸந்தியா வந்தனம் பண்ணிவிட்டுப் பிறகு ஸ்நானம் செய்யவேண்டும் என்று குயுக்தி பண்ணக் கூடாது...

ஆறு தொழில்களில் முதலாவது ஸந்த்யா-ஸ்நானம். இரண்டாவது ஜபம் - அநேக மஹாமந்திரங்களை, அவரவர் குலதேவதை இஷ்டதேவதை முதலியவற்றின் மந்திரங்களை ஜபிப்பது. மூன்றாவது ஹோமம், அதாவது யக்ஞம். நாலாவதாக தேவதா பூஜனம் - கந்த, புஷ்ப, தூப, தீப, நிவேதனங்களால் ஈச்வரனை வழிபடுவது. ஐந்தாவதாகச் சொன்ன ஆதித்யம் என்றால் அதிதியை உபசரிப்பது.. அதாவது விருந்தோம்பல். கடைசியில் வைச்வ தேவம். பஞ்சமனும், நாய் முதலான ஜந்துக்களும் உள்பட ஸகலப் பிராணிகளுக்கும் பலி போடுவது வைச்வதேவம்.

இப்படிப் பண்ணுபவர்களைத்தான் 'அறுதொழிலோர்'என்று ரொம்பவும் பெரியவரான வள்ளுவர் சொல்கிறார். கெட்ட ராஜ்யத்தில் பிராம்மணர்கள் வேத அத்யயனம் பண்ண மாட்டார்கள், வேதத்தை மறந்து விடுவார்கள் என்கிறார் - அறு தொழிலோர் நூல் மறப்பர். பிராம்மணர்கள் வேதத்தை மறக்காமல் இருக்க வேண்டும்;அப்படிப்பட்ட நல்ல ராஜ்யம் ஏற்படவேண்டும் என்பதுதான் வள்ளுவரின் ஆசை என்று இதிலிருந்து தெரிகிறது.

தமிழ்த் தெய்வம் என்று சொல்லப்படும் ஸுப்ரமண்ய ஸ்வாமியின் ஆறுமுகங்களை வர்ணிக்கும்போது, சங்க நூலான திருமுருகாற்றுப் படையில், அவருடைய முகங்களில் ஒன்று பிராம்மணர்கள் வேதவிதி தப்பாமல் செய்யும் யக்ஞங்களை ரக்ஷிக்கவே இருக்கிறது என்கிறது.

தமிழ் வார்த்தைகளும், வழக்கிலுள்ள அநேக வசனங்களுமே, இந்த நாட்டின் வைதிக ஈடுபாட்டுக்குப் பெரிய சான்றுகளாக இருக்கின்றன. 'யஜனம், யக்ஞம்' என்பனவற்றுக்கு 'வேட்டல், வேள்வி'என்ற வார்த்தைகள் பிராசீனமாக இருந்து வருகின்றன. 'சயனம்'என்ற யக்ஞ மண்டப அமைப்புக்குப் 'பரப்பு'என்ற வார்த்தை பழங்காலத்திலிருந்து இருக்கிறது. இம்மாதிரி வேறு நாகரிகத்திலிருந்து வந்த விஷயங்களுக்கு, ஒரு பாஷையில் தனிப்பெயர்கள் ஆதிகாலத்திலிருந்து இருக்க முடியாது. 

இப்போது கிறிஸ்துவ தேசத்திலிருந்து பைபிள் வந்தால், அதற்கு நாம் 'கிறிஸ்துவ வேதம்' என்று பேர் கொடுத்தாலும், வேள்வி மறை என்பவை போல் இந்தப் பேர் வேரூன்றாமல் பைபிள், பைபிள் என்றேதான் சொல்கிறோம். அதுவுமில்லாமல் அதை வேதம் என்கிறபோது, வேதம் என்று ஏற்கெனவே நம்மிடமிருக்கிற மூல சாஸ்திரத்தின் பேரைக் கொண்டுதான் அதற்குப் பேர் வைத்திருக்கிறோம். பைபிளைத் தவிர வேறு வேதம் நமக்கு உண்டு. ஆனால் வேத யக்ஞத்தைத் தவிர வேறே 'வேள்வி'என்று ஒன்று கிடையவே கிடையாது. 'வேள்வி' என்று தமிழிலே பெயர் இருந்தாலும், வைதிக தர்மத்தில் இல்லாததாகத் தமிழ் நாட்டுக்கு என்று மட்டும் வேள்வி என்ற வேறு கர்மா இருக்கவில்லை. இப்படியே 'மறை'என்றால் வேதம்தான். தமிழிலே வேறே மறை என்று ஒன்று இருந்து, அந்தப் பெயரை வேதத்துக்கு வைக்கவில்லை.

இந்த 'மறை' என்ற வார்த்தை ரொம்பவும் ஆழமான, பொருத்தமான பொருள் கொண்டதாகும். வேதங்களில் அங்கங்கே மறைவாக ரக்ஷிக்கவேண்டிய பகுதிகளுக்கு 'ரஹஸ்யம்' என்று வேதத்திலேயே பேர் கொடுத்திருக்கிறது;உபநிஷத்துக்களில் இப்படிப்பட்ட ரஹஸ்யமான பாகங்களையே தனியாக 'உபநிஷதம்'என்று குறிப்பிட்டிருக்கிறது. வேதியர்கள் தங்களுக்குள்ளயே ஜாக்ரதையுடன், கொஞ்சமும் அம்பலப் படுத்தி விடாமல் மறைவாக ரக்ஷிக்க வேண்டிய சில பாகங்களை மட்டுமே வேத, உபநிஷத்துக்கள் இப்படிச் சொல்கின்றன. தமிழ் இன்னம் ஒரு படி மேலே போய் வேதம் முழுதையும் 'மறை' என்று சொல்லிவிட்டது!

'மறை'என்றால் மறைத்து ரஹஸ்யமாகக் காப்பாற்றப்பட வேண்டியது என்று அர்த்தம். வேதம் அதிலே அதிகாரம் பெற்றவர்களிடம் மட்டும் பேசிற்று. 'இன்னின்ன பாகங்களை நீங்கள் மறைவாகப் போற்றி வாருங்கள் என்று அதிகாரிகளுக்குச் சொல்லிற்று. தமிழ் பாஷை வேதியர்களை மட்டும் எடுத்துக் கொள்ளாமல், ஸமஸ்த ஜன சமூகத்தையும் எடுத்துக் கொண்டு பேசும்போது, எப்படி வேதமானது பிராம்மணர்களுக்குள்ளேயே சில பாகங்களை ரஹஸ்யமாக ரட்சிக்க வேணடும் என்கிறதோ, அதே மாதிரி ஸகல வர்ணத்தாரையும் எடுத்துக் கொள்கிறபோது வேதம் முழுதையும் அதில் அதிகாரமுள்ளவர்கள் அதிகாரமில்லாதவர்களிடமிருந்து ரஹஸ்யமாக ரட்சிக்க வேண்டும் என்று கருதியே, முழு வேதத்துக்கும் "மறை" என்று பேர் கொடுத்து விட்டது!அதை எல்லாருக்கும் என்று democratise பண்ணிவிடக்கூடாது என்பதுதான் தமிழ் ஜனங்களின் தொன்று தொட்ட அபிப்ராயம் என்பது "மறை"என்ற இந்த வார்த்தையிலிருந்தே தெரிகிறது.

இன்னொரு விதத்திலும் 'மறை' என்று பெயர் பொருத்தமாயிருக்கிறது. வேதத்தினால் ஏற்படும் பயன் முழுவதும் உடனே தெரிந்து விடாது. ஆத்யாத்மிகமாக அதனால் அடையப்படும் பிரயோஜனங்கள் இப்போது மறைந்திருந்து பிற்பாடுதான் வெளிப்படும். இதனால் வேதமானது 'அதிருஷ்ட பலனை'ச்சொல்வது என்பார்கள். திருஷ்டியில் தெரியாதது தான் அதிருஷ்டம். தெரியாதது என்றால் மறைந்திருக்கிறது என்றுதானே அர்த்தம்?எதன் பலன் இப்படி மறைந்திருக்கிறதோ அதை "மறை" என்றே சொல்லி விட்டார்கள்.

நம் மதத்துக்கு வேதம் வேர். பக்தி, கோவில், தியானம், ஞானம் எல்லாவற்றுக்கும் மூலம் அது. மூலம் என்றால் வேர் என்றே அர்த்தம். கோவில், பக்தி, பூஜை முதலான மற்றதெல்லாம் வெளியே தெரிகிற அடிமரம், கிளை, பூ, காய், பழம் என்றால் வேதம் வேர். அதனால்தான் அடிமரம் முதலானவை இருக்கின்றன. வளர்கின்றன. ஆனால் வேர் இவற்றைப் போல் வெளியில் தெரியாமல் பூமிக்குள்ளேதான் ஒடிக்கொண்டு மறைவாக இருக்கிறது. இவ் விதத்திலும் மறை என்ற பெயர் மிகவும் பொருத்தமாயிருக்கிறது.

'ஒத்து'என்றும் வேதத்துக்கு அழகான, அர்த்த புஷ்டியுள்ள தமிழ்ப் பேர் இருக்கிறது. எது எழுதப்படாமல், வாய்மொழியாகவே, அதாவது ஒதப்பட்டே அப்யஸிக்கப் படவேண்டுமோ அதுதான் "ஒத்து". திருக்குறளில் இந்தப் பேர் இருக்கிறது. வடார்க்காடு ஜில்லாவில் திருவோத்தூர் என்று ஒரு ஊர் இருக்கிறது. ஞானஸம்பந்தர் அங்கே ஆண் பனையைப் பெண் பனையாக மாற்றினார். திருஒத்து-ஊர் என்பதே திருவோத்தூர் என்பது. வேதங்கள் பரமேச்வரனைப் பூஜை பண்ணின க்ஷேத்ரமாதலால் இப்படி பேர் ஏற்பட்டது. ஸம்ஸ்கிருதத்தில் அதற்கு 'வேதபுரி' என்று பெயர் இருக்கிறது.

மறை, ஒத்து, என்பது போல் "ஆரணம்" என்ற பெயரும் வேதத்துக்கு தமிழ் பாஷையில் இருக்கிறது. "ஆரணன்காண்"என்று அடிக்கடி திருமுறைகளில் வரும். 'வேத வாக்கோ!' என்று கேட்பது, தர்மசாலையை 'சத்திரம்' என்பது, முதலாளியை 'யஜமான்'என்பது, 'ஸாங்கோபாங்கம்'என்பது - இப்படி நடுவே நடுவே நான் சொன்ன ¢நேக விஷயங்களும், வைதிக அநுஷ்டானங்கள் தமிழ் தேசத்தில் எப்படி வேரோடியிருக்கிறது என்று காட்டுகின்றன. எழுதி வைக்காமல் குரு-சிஷ்யன் என்று தலைமுறை தத்துவமாகக் காதால் கேட்டே பாடம் பண்ணப்பட வேண்டிய வேதத்துக்கு 'ச்ருதி'என்று ஸம்ஸ்கிருதத்தில் பேர் இருக்கிறதென்றால், தமிழிலோ 'எழுதாக் கிளவி' என்று இன்னம் அழுத்தமான பேர் இருக்கிறது. 'ச்ருதி என்றால் 'கேட்கப்படுவுது'. இப்படி சொல்வதாலேயே 'எழுதப்படக்கூடாதது'என்று ஊகித்துக் கொள்ளும்படியாக விட்டு விட்டார்கள்.

ஆனால் தமிழிலோ வேதத்தை எழுதக்கூடாது என்று வெளிப்படையாக தெரியும்படியாக 'எழுதாக் கிளவி' என்று பேர் வைத்திருக்கிறது. வேதம் அதற்குள்ள நியமப் படியே ரக்ஷிக்கப்பட வேண்டும் என்பதில் தமிழ் தேசத்துக்கு அவ்வளவு உறுதியிருந்திருக்கிறது!

சங்க காலத்துக்கு அப்புறம் பார்த்தாலும், சேர சோழ, பாண்டிய, பல்லவ ராஜாக்கள், எங்கே பார்த்தாலும் பிராம்மணர்களுக்கு 'இறையிலி'யாக (வரியில்லாததாக) நிலம் கொடுத்து ரட்சித்திருக்கிறார்கள். கடிகை என்றும், பாடசாலை என்றும் நிறைய வைத்து, ஏராளமாக மான்யங்கள் தந்து வேத வித்யைகளை வளர்த்திருக்கிறார்கள். தமிழ் மறைகளாக முறையே சைவர்களும், வைஷ்ணவர்களும் கொண்டாடுகிற தேவாரத் திருமுறைகளையும் திவ்வியப் பிரபந்தங்களையும் பார்த்தாலோ, ஸ்வாமியைப் பற்றிச் சொல்கிற அளவுக்கு வேதங்களைப் பற்றியும் சொல்லியிருக்கிறது.

திவ்யப் பிரபந்தத்திலும் அநேக இடங்களில் ஒரு பெருமாள் க்ஷேத்திரத்தை வர்ணிப்பதானால், யக்ஞத்தில் எழும்புகிற ஹோமப் புகையே மேகங்கள் மாதிரி ஆகாசம் முழுதையும் அடைத்துக் கொண்டிருக்கிற ஊர் என்று அதை வர்ணித்திருக்கும். இங்கேயும் ஜாதி வித்யாஸம், ஜாதி த்வேஷங்கள் இல்லாமல், அப்ராம்மணர்களான ஆழ்வார்களும் வேதங்களின் பெருமையைப் பாடியிருக்கிறார்கள். பிராம்மணரில்லாதவரான திருமங்கையாழ்வார்தான் பெருமாளையே,

சந்தோகன், பௌழியன், ஐந்தழலோம்பு
தைத்திரீயன், சாமவேதி!

என்று வேத சாகைகளைச் சொல்லி அவற்றால் துதிக்கிறார். அப்பர் 'முக்தீ'யைச் சொன்னார் என்றால், இவர் இன்னும் சூக்ஷ்மமாக வைதிக ஆசரணைகளைத் தெரிந்து கொண்டு, பிராம்மணர்களிலேயே ரொம்பவும் விஷயம் தெரிந்தவர்கள் அந்த மூன்றோடு ஸப்யம், ஆவஸத்யம் என்ற வேறு இரண்டு அக்னிகளைச் சேர்த்துப் பஞ்சாக்னி வளர்ப்பதை 'ஐந்தழல் ஒம்புவது' என்கிறார். ஒமாம்புலியூரைத் தேவாரத்தில் சொன்ன மாதிரியே திருநாங்கூர், திருநறையூர் முதலான க்ஷேத்திரங்களை இவர் வேத விதி வழுவாத பிராம்மணர்களின் ஊர் என்பதற்காகவே திரும்பத்திரும்பப் போற்றிப் பாடியிருக்கிறார்.

தொல்காப்பியர், வேத சப்தங்கள் பரா என்கிற மூலத்தில் தோன்றியதால் முக்கியத்துவம் பெற்றவையாகும் என்று சொல்லி, "இப்படிப்பட்ட அக்ஷரங்களைப் பற்றிஆலயங்களில் மந்திர சப்தங்களை மாற்றாமல் ரக்ஷிப்பதற்குத் தொல்காப்பியமே ஆதரவாகத்தான் இருக்கிறது.

'நம் பாஷையில் ஒன்று இருந்தால்தான் உசந்தது;வேறெந்தப் பாஷையில் இருந்தாலும் மட்டம்; அது வேண்டாம்'என்று நினைப்பது கொஞ்சம்கூடப் பகுத்தறிவாகத் தோன்றவில்லை. உலகத்திலிருக்கிற அத்தனை புத்திசாலித்தனமும், நல்லதும் நம் பாஷையில்தான் இருக்க வேண்டும் என்று நாம் நினைத்தால், அவரவர்களும் இப்படித்தானே தங்கள் தங்கள் தாய் பாஷையைப் பற்றி நினைப்பார்கள்?அதனால் இநதப் பாஷைதான், அந்தப் பாஷைதான் என்றால் - அதில் துளிகூடப் பகுத்தறிவும் இல்லை;யதார்த்த ஞானமும் இல்லை. 

ஒரு பக்கத்தில் நம்பிக்கையின் மீதே அநேக விஷயங்களை ஏற்கவேண்டிய ஆஸ்திக்யத்தை பரிஹாஸம் செய்து, "பகுத்தறிவு, பகுத்தறிவு"என்கிறார்கள். இன்னொரு பக்கத்தில், இப்படி பிரத்யக்ஷத்திலேயே பகுத்தறிவு இல்லாமல் இருக்கிறது!ஒரு பக்கத்தில்  'யாதும் ஊரே யாவரும் கேளிர்'என்பதுதான் தமிழ்நாட்டின் தேசாசாரம் என்று சொல்கிறோம். இன்னொரு பக்கம், ஆதிகாலத்திலிருந்து இங்கு உறைந்து போய்விட்ட ஸநாதனமான ஸமாசாரங்களைக்கூட எப்படியாவது இல்லாமல் பண்ணிவிட்டால் தேவலை என்று நினைக்கிறோம்!

மந்திரங்களை நாம் விடுவதால் மந்திரங்களுக்கு ஒரு நஷ்டமும் இல்லை. நமக்குத்தான் நஷ்டம். மைசூரிலிருந்து காவேரி வருகிறது, வெளிதேசத்திலிருந்து உயிரைக் காப்பாற்றக்கூடிய ஒரு மருந்து வருகிறது என்றால், அதெல்லாம் வேண்டாம்; உள்ளூர் ஜலம் கிடைத்தால்தான் குடிப்போம்;உள்ளூர் மருந்தானால்தான் சாப்பிடுவோம்'என்று உயிரை விடுவார்களா?நமக்குப் பெரிய ரக்ஷையாக இருக்கிற மந்திரங்களில் பாஷையைக் கொண்டுவந்து, அந்நியம் எனறு ஒதுக்குவது இப்படித்தான். வாஸ்தவத்தில் அது அந்நியமும் இல்லை. நம்மோடு அந்நியோந்நியமாக ஆதிகாலத்திலிருந்து கரைந்ததுதான்.

இன்றைக்கு கேரளாவில் ஜாஸ்தி வேதாத்யயனம் இருப்பதற்குக் காரணம், ஆதியில் அது தமிழ் நாடாக இருந்ததுதான். அதே மாதிரி, ஸமீபத்தில் தமிழ் நாட்டைவிட ஆந்திராவில் வேதாத்யயனம் அதிகம் இருந்தாலும்கூட, ஆதியில் ஆந்திரர்களுக்கும் சோழர்களுக்கும் கல்யாண சம்பந்தம் ஏற்பட்டபோது, அந்தத் தெலுங்கு ராஜாக்கள் தமிழ் நாட்டிலிருந்தே ஏராளமான வேத வித்துக்களை அழைத்துக் கொண்டு போய்த்தான் தங்கள் தேசத்தில் வைதிகஸ்ரீயை விருத்தி பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அதாவது, ஏதோ துர்பாக்கியவசமாகத்தான் இப்போது மற்ற திராவிட மாகாணங்களைவிடத் தமிழ்நாட்டிலேயே வைதிக த்வேஷம் தலை தூக்கியிருந்தாலும், பூர்வத்தில் அந்தச் சீமைகளுக்கும் வேத வித்யை இங்கிருந்துதான் போயிருக்கிறது. ஆந்திராவில் 'த்ராவிடலு'என்று பேர் போட்டுக் கொள்கிற பிராம்மணர்கள், ஆதியில் தமிழ்நாட்டிலிருந்து போன குடியினர்கள்தான்.

தமிழ்நாட்டில் ஆதிகாலத்திலிருந்து இருந்து வந்திருக்கிற மதம் உள்பட , சைவம், வைஷ்ணவம், சாக்தம் முதலிய ஷண்மதங்கள்; ஸாங்கியம், யோகம், நியாயம், வைசேஷிகம் முதலிய ஸித்தாந்தங்கள்;மந்திர தந்திர ஆகமங்கள் எல்லாமே வேதத்தை ஆதாரமாகக் கொண்டவைதான்;வேதப் பிராமாண்யத்தை ஒப்புக் கொள்கிறவைதான். நவீன ஆராய்ச்சிக்காரர்கள் வேதம் வடக்கிலிருந்து வந்ததாகவும், தென்னாட்டில் வேறு மதமும் வேறு முதல் நூல்களும் இருந்தததாகவும் சொல்லி, அவர்கள் ஆரியர்கள், இவர்கள் திராவிடர்கள் என்று பெயர் கட்டிவிட்டுச் சண்டையைக் கிளப்பிவிட்டிருப்பதற்கெல்லாம் உண்மையாக ஸம்ஸ்கிருத சாஸ்திரங்களையும், தமிழின் பழ நூல்களையும் ஆராய்ந்து பார்த்தால் ஆதாரமேயில்லை. சாஸ்திரங்களை மூடநம்பிக்கையுடன் ஏற்றுக்கொண்டு ஏமாந்து போகக்கூடாது என்று இந்த நவீன ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

கடைசியில், இப்போது ஏற்பட்டிருக்கிற நிலைமை என்ன என்றால், இவர்கள் தாங்களே பகுத்தறிவோடு, ஸயன்டிஃபிக்காகச் சொல்கிறோம் என்று அடித்துச் சொல்லிவிட்டதால், அநேக ஜனங்கள் இவர்கள் சொல்வதையே ஆராய்ச்சி பண்ணாமல், 'இதுதான் சரி'என்று வெறும் நம்பிக்கையின் மேலேயே ஏற்றுக்கொண்டு நிஜமென நினைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். வேத சாஸ்திரங்களில் நம்பிக்கையின் மீதே அனுஸரிக்க வேண்டிய விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. 

அவற்றை அறிவால் ஆராயக் கூடாதுதான். ஆனால் அவற்றில் நன்றாக பகுத்தறிவோடு ஆராய்ந்து பார்க்கிற பகுதிகளும் உண்டு. அதோடு சேர்த்துச் சேர்த்து நம் தாய் பாஷைகளில் உள்ள ஆதி நூல்களையும் அலசி அலசிப் பார்த்தாலோ, இந்த ஆராய்ச்சிக்காரர்கள் சொல்கிற race theory (ஆரிய திராவிட இன பேதக் கொள்கை) , தமிழ் மதம் வேறே என்பதெல்லாம் இருந்த இடம் தெரியாமல் அடிபட்டுப் போய்விடுகிறது. இப்படியெல்லாம் நம் தேசத்தில், நல்லதற்கில்லாமல் அநேக தப்பபிப்ராயங்கள், த்வேஷம், சாஸ்திரத்தில் அவநம்பிக்கை ஆகியன ஏற்பட்டுவிட்டதே என்று வருத்தமாக இருக்கிறது. இதெல்லாம் போய் இங்கே ஸமஸ்த லோகங்களுக்கும் ஸமஸ்தப் பிராணிகளுக்கும் க்ஷேமத்தைத் தரக்கூடியதான வேத மரபு மறுபடி நன்றாக தழைக்கவேண்டும். இதுதான் நாம் பரமேச்வரனிடம் எப்போதும் செய்துகொள்ள வேண்டிய பிரார்த்தனை.

இப்போதே அநேத வேதசாகைகள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. மற்றவையும் அழியும்படி விடவே கூடாது. இதைவிடப் பெரிய ட்யூட்டி, கடமை எதுவும் நமக்கில்லை. நமக்கிருக்கிற புத்தி பலம், திரவிய பலம், கூட்டுறவு சக்தி எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து நாம் பண்ணவேண்டிய காரியம், தற்போது எங்கெங்கேயோ கொஞ்சம் கொஞ்சம் உயிரை வைத்துக் கொண்டிருக்கும் வேத சாகைகள் எல்லாம் அழிந்து போய்விடாதபடி, அவைகளுக்கு ஆக்ஸிஜன் கொடுத்து உயிரூட்டுவதுதான்.

Friday, 14 December 2012

"ஸப்ஜெக்ட் - ஆப்ஜெக்ட் பற்றி"- மஹா பெரியவாளின் நயமான விளக்கம்




மரயானைப் பொம்மையைப் பார்த்தால் குழந்தை அது யானை என்றே எண்ணுகிறது. பெரியவர்களுக்கு அது யானை மாதிரி இருந்தாலும் மரம்தான் என்று தெரிகிறது. குழந்தைக்கு மரம் மறைந்து யானை தெரிகிறது. பெரியவர்களுக்கு யானை மறைந்து மரம் தெரிகிறது. இப்படியே பார் (உலகம்) முதலாக பஞ்ச பூதங்களும் பரமாத்மா என்ற மரத்தால் பண்ணின பொம்மைதான். பரமாத்மாதான் இத்தனையும் என்று நாம் பார்க்கவேண்டும்.

மரத்தை மறைத்தது மாமத யானை

மரத்தில் மறைந்தது மாமத யானை

பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்

பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம்

என்று திருமூலர் சொன்னபடி, பஞ்ச பூதங்களையே பார்த்துக்கொண்டு, அதன் காரணமான பரமாத்மாவை மறந்திருப்பதை விட்டு, இவற்றால் பரமாத்மா மறைந்துப்போகவிடாமல், இவற்றிலும் வியாபித்திருப்பது பரமாத்மாதான் என்று, அனைத்தையும் ஈச்வர வியாபகமாகப் பார்க்க வேண்டும்.

ஒரு வஸ்துவை நாம் பார்க்கிறோம் என்றால், பார்க்கப் படுகிற object என்றும், பார்க்கிறவனான subject என்றும் இரண்டு ஏற்பட்டுவிடுகின்றன. நம் உடம்பை நம்மால் object -ஆகத் தெரிந்து கொள்ள முடிகிறது. "என் உடம்பு நன்றாயிருக்கிறது;அல்லது நன்றாக இல்லை"என்று நாம் அதைப்ப பற்றித் தெரிந்து கொள்கிறோம் என்றால், அப்போது அது object - ஆகி விடுகிறது. அதிலிருந்து வேறாக, 'நாம்'என்ற ஏதோ ஒன்று Subject - ஆக இருந்து கொண்டு, அதைப் பார்க்கிறது என்று ஏற்படுகிறது. அப்படிப் பார்ப்பது எதுவோ அதுதான் ஆத்மா. இந்த Subject -ஐ எதனாலும் தெரிந்து கொள்ள முடியாது. அப்படித் தெரிந்துகொள்ள முடிந்து விட்டால் அதுவும் Object -ஆகி, அதைப்பார்க்கிற இன்னொரு subject - தான் நிஜ நாம் என்றாகிவிடும். நிஜமான நாமான ஆத்மா subject - ஆகத்தான் இருக்கமுடியுமே தவிர object ஆகாது. எனவே சரீரம் முதலான object - களைத் தள்ளவிட்டு இந்த subject -ஆக நாம் அநுபவத்தில் தனித்து இருந்து கொண்டுதான் இருக்க முடியுமே தவிர அதை அறிந்து கொண்டு இருக்க முடியாது. அறிவது என்றால், இதைவிட இன்னொன்று இதை object ஆக்கி ஆராய்ந்தால்தான் முடியும். ஆத்மாவின் விஷயத்தில் இது அஸம்பாவிதம். ஆத்மாதான் நிஜமான நாம், அதை அறியவேண்டும் என்றால், அப்படி அறிகிற வஸ்து ஆத்மாவுக்கு வேறானதாகத்தான் இருக்க வேண்டும். நம்மில் நம்முடைய நிஜமான ஸ்வரூபத்துக்கு வேறாக என்ன இருக்கமுடியும்?ஆத்மாவுக்கு அந்நியமாக அதை அறிய எது உண்டு? எதுவும் கிடையாது. அதனால், "ஆத்ம ஞானம்", "ஆத்மாவை அறிவது" என்ற வார்த்தைகளைச் சொன்னால்கூட, இங்கெல்லாம் ஞானம், அறிவது என்பதற்கு ஒரு ஸப்ஜெக்ட் இன்னொரு ஆப்ஜெக்டை அறிகிறது என்று அர்த்தமில்லை. தன்னைத்தானே அநுபவித்துக் கொள்வதைத்தான் இந்த இடங்களில் 'ஞானம்', 'அறிவது'என்ற வார்த்தைகளால் சுட்டிக் காட்டுகிறோம். இதனால் தான் கேனோபநிஷத், எவன் ஆத்மாவை அறிந்துவிட்டேன் என்கிறானோ அவன் அறியவே இல்லை;எவன் அறியவில்லை என்ற நிலையில் இருக்கிறானோ அவன்தான் அறிகிறான். தெரியும் என்று நினைக்கிறவனுக்குத் தெரியாது; தெரியாது என்ற நிலையில் இருக்கிறவனுக்கே தெரிந்தது"என்கிறது. "கண்டவர் விண்டிலர்;விண்டவர் கண்டிலர்"என்று சொல்வதும் இதைத்தான்.

ஸப்ஜெக்ட் - ஆப்ஜெக்ட் பற்றி நான் சொன்னது இந்த உபநிஷத்தின் கடைசியில் ரொம்பவும் அழுத்தமாக, உபதேசிக்கப் பட்டிருக்கிறது. பயிர்த்தண்டிலிருந்து கதிரை உருவி எடுக்கிறோம் அல்லவா?ஒரு ஈர்க்குச்சியில் மேல் தோலிலிருந்து உள்ளேயிருக்கும் ஈர்க்கை அப்படியே உருவி விடுகிறோம் அல்லவா?அந்த மாதிரி, ஆப்ஜெக்டான சரீரத்திலிருந்து ஸப்ஜெக்டான ஆத்மாவைத் தைரியமாக உருவி எடுத்துக்கொண்டு, அதுவாகவே இருக்கவேண்டும் என்று அந்த மந்திரம் (vi:17) சொல்கிறது. 'காமம்,க்ரோதம், த்வேஷம், பயம் எல்லாம் மனஸை சேரந்தனவே ஒழிய, ஆத்மாவான எனது அல்ல. பசி, தாகம் முதலியன உடம்பைச் சேர்ந்தனவே, தவிர என்னுடையன அல்ல, என்று ஆத்மாவைச் சேராத எல்லா அநாத்மவஸ்துக்களையும் object ify பண்ணி, வெளியே தள்ளுவதற்கு ஸதா பழகிக் கொண்டேயிருக்க வேண்டும். இம்மாதிரி எப்பொழுதும் அநுஸந்தானம் செய்து வந்தால், உடம்பும் மனஸும்தான்நாம் என்பதாக வேரூன்றியிருக்கும் அபிமானம் கொஞ்சம் கொஞ்சமாக நலிந்து, மறைந்தே போய்விடும். உடம்புக்கும் மனஸுக்கும் இருக்கப்பட்ட அழுக்குகள் எதுவுமில்லாத சுத்தமான ஆத்மாவாக நாம் இருக்கலாம். இப்படி, சரீரத்திலிருந்தும் மனஸிலிருந்தும் ஆத்மாவைப் பிரிப்பதற்கு, முஞ்சம் புல்லுக்குள்ளிலிருந்து ஈர்க்கு பளிச்சென்று சுத்தமாக வழவழவென்று பிரிந்து வருவதைத் திருஷ்டாந்தமாகச் சொல்லியிருக்கிறது. இதோ பக்கத்தில் இருக்கிற இந்த வாழைக்கட்டை வாடி வதங்கிப் போனால், நாம் வாடி வதங்குகிறோமா?அந்த வாழைக்கட்டையை விட, இன்னம் கொஞ்சம் கிட்டேயிருக்கும் மாம்ஸக் கட்டை என்றே இந்த சரீரத்தை எண்ணவேண்டும். அந்த வாழைக்கட்டை ஸப்ஜெக்டான நாமாக இல்லாமல் ஆப்ஜெக்டாக இருக்கிற மாதிரியே ஆத்மா என்ற ஸப்ஜெக்டுக்கு இந்த நம் உடம்பையும் வேறான ஆப்ஜெக்டாக இருக்கிற மாதிரியே ஆத்மா என்ற ஸப்ஜெக்டுக்கு இந்த நம் உடம்பையும் வேறான ஆப்ஜெக்டாகப் பார்க்கப் பழக வேண்டும்.

இந்த லோகத்தில், நாம் சரீரத்தில் இருப்பதாகத் தோன்றும் இப்போதே, இப்படி சரீரத்தை நானல்ல, என்னுடையதல்ல என்று பண்ணிக்கொள்ள வேண்டும். அப்போது, செத்துப் போனபின் தான் வேறு ஏதோ கைலாஸ வைகுண்டாதி லோகங்களுக்குப் போய் மோக்ஷம் அடையலாம் என்று இல்லாமல், இங்கேயே மோக்ஷமாகி விடும்! மோக்ஷம் என்றால், எந்த பாரமும் இல்லாமல் விடுபட்ட ஸதாநந்தம் என்றே அர்த்தம். அப்படி இந்த லோகத்திலேயே சரீரப் பிரக்ஞையை விட்டு, ஆத்மாராமனாக இருப்பவனைத்தான் ஜீவன் முக்தன் என்பது. வேத வேதாந்தங்களின் பரம தாத்பர்யம் ஒருத்தனை இப்படி ஜீவன் முக்தனாக்குவதுதான். கீதையில், பகவான் ப்ராக் சரீர விமோட்சனாத் (சரீரத்திலிருந்து உயிர் வெளியே போகிறதற்கு முந்தியே) , இந்த லோகத்தில் இருக்கும்போதே -இஹைவ - எவன் காம க்ரோத வேகங்களை அடக்கி விடுகிறானோ அவனே யோகத்தில் நிலைத்து நித்ய ஸுகத்தை அநுபவிக்கிறவன் என்று, இதே கருத்தைத்தான் சொல்லியிருக்கிறார். இஹைவ - இஹ ஏவ - அதாவது இங்கே இந்த பூலோகத்தில் இருக்கிற போதே, இப்படி ஆத்மாவைத் தெரிந்து கொண்டுவிட்டால் (அதாவது அநுபவித்து விட்டால்) , சரீரம் போனாலும் போகிறது தெரியாது. சரீரம் இருக்கிறபோதேதான் அது தன்னுடையதல்ல என்று போக்கிக் கொண்டாகி விட்டதே! ஆகையால், சாவு என்று ஒன்று வந்து சரீரத்தைப் போக்கடிக்க வேண்டுமா என்ன?

Thursday, 13 December 2012

வேடனே ராஜா; ஜீவனே பிரம்மம் - மஹா பெரியவர்




ராஜா ஒருத்தன். ராஜா என்றிருந்தால் சத்ரு ராஜா, யுத்தம் எல்லாமும் இருக்கத்தானே செய்யும்? இந்த ராஜாவை எதிர்த்து எதிரி ராஜா வந்தான். இவனுடைய துரதிருஷ்டம், யுத்தத்தில் இவன் தோற்றுப் போனான்.

'வெற்றி;இல்லாவிட்டால் வீர ஸ்வர்க்கம்!' என்று சில ராஜாக்கள் யுத்த பூமியிலேயே உயிரை விட்டு விடுவார்கள் தோற்றுப் போனால் ஒடி ஒதுங்கிப் பதுங்கிக் கொள்வார்கள். இவர்கள் எல்லோருமே வீரத்திலோ மானத்திலோ குறைந்தவர்கள் என்று அர்த்தம் இல்லை. பாய்கிற புலி பதுங்கும் என்கிற மாதிரி இவர்கள் பதுங்குவது பிற்பாடு படையெடுத்துப் பழி வாங்குவ - தற்காகத்தான். மகாசூரர்களும், மானஸ்தர்களுமான ராஜபுத்ர ராஜாக்கள் கூட, இப்படி முஸ்லீம்களின் படையெடுப்பின் போது ஒடிப்போய், பிறகு பெரிய சைனியம் திரட்டிக் கொண்டு வந்து சண்டை போட்டிருக்கிருக்கிறார்கள்.

என் 'கதை- ராஜாவும்'தோற்றுப் போனவுடன் பிராணஹத்தி பண்ணிக் கொள்ளாமல் ஒடிப்போய்விட்டான்.

அவன் மட்டுமாக ஒடவில்லை. அவனது பத்தினியையும் குதிரை மேல் வைத்துக் கொண்டு ஒடினான். அப்போது அவள் நிறை கர்ப்பிணி. இந்த நாளில் "அண்டர்க்ரவுண்ட்டாக போவது என்ற மாதிரி அப்போதும் உண்டு. இந்த ராஜாவுக்கு ரொம்பவும் அபிமான மந்திரி இப்படித்தான் தலைமறைவாகிவிட்டான். ராஜாவும் ராணியும் தப்பித்து ஒடியது அவனுக்கு மட்டும் அப்போதே தெரியும்.

ராஜாவின் குதிரை பிரதேசத்தில் போய்க் கொண்டிருந்தது. அவனைத் தேடிப் பிடித்து வர, சத்ரு ராஜா நாலாபக்கமும் குதிரைப் படையை அனுப்பியிருந்தான். அவர்களில் சிலர் இந்தக் காட்டுக்கே வந்துவிட்டார்கள். ராஜா போவதைத் தூரத்தில் பார்த்து அவனைப் பின் தொடர்ந்து துரத்தி வந்தார்கள். இவனைத் துரதிருஷ்டமும் துரத்திக் கொண்டு வந்தது. சத்ருக்கள் கிட்டே வந்து விட்டார்கள்.

பக்கத்திலே ஒரு வேடன் குடிசை இருந்தது. அதைப் பார்த்ததும் ராஜாவுக்கு ஒரு யோசனை தோன்றிற்று. குதிரையை நிறுத்தி , அதிலிருந்து இறங்கினான். ராணியையும் இறக்கினான். "சத்ருக்கள் என்னை விடமாட்டார்கள். அவர்கள் ஏராளமான பேர்கள் இருப்பதால் நான் எதிர்த்து எதுவும் பண்ணுவதற்கில்லை. என் முடிவு நிச்சயம். ஆனால் என்னோடு நீயும் போய்விடக்கூடாது. ஏன் சொல்கிறேன் என்றால், என்னால் பழி வாங்கமுடியாவிட்டாலும், இப்போது c கர்ப்பவதியாக இருக்கிறாயவல்லா?உனக்கு நம் குலம் விளங்க ஒரு புத்திரன் பிறந்தாலும் பிறக்கலாம்;பிறக்கப் போகும் பிள்ளையாவது சத்ருவை ஜயித்து ராஜ்யத்தை மறுபடியும் நம் பரம்பரையின் கைக்குக் கொண்டு வரவேண்டும். ஆகையால் c பதிவிரதை என்பதற்காக என்னோடு செத்துப் போவதை விட, என் மனோரதத்தைப் பூர்த்தி பண்ணுவதற்காகவே உயிரோடிருந்து பிள்ளையைப் பெற்று வளர்க்கவேண்டும். இந்த வேடன் குடிசையில் அடைக்கலம் புகுந்து பிழைத்துக் கொள்' என்று ராணியிடம் ராஜா சொன்னான்.

அவளுக்கு அது தாங்க முடியாத கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனாலும் ராஜதர்மம் என்ற ஒன்று, அதற்கென்றே மானம், கௌரவம் என்றெல்லாம் இருந்ததால், பதியின் வார்த்தையை அவளால் தட்டமுடியவில்லை. 'புருஷன் சொல்வதுதானே நமக்கு வேதம்?அவன் சா என்றால் செத்துப் போகத் தயாராக இருக்கிற மாதிரியே, செத்துப் போவதுதான் சந்தோஷம் என்கிற ஸ்திதியில் அவன், 'சாகாதே. c உயிரோடுதான் இருக்கவேண்டும்'என்றால் அதையும் நாம் கேட்டுத்தானாக வேண்டும்'என்று தன்னைத் தானே ஒரு மாதிரி தேற்றிக் கொண்டு குடிசைக்குள் போய் மறைந்து கொண்டு விட்டாள்.

சத்ரு வீரர்கள் வந்து ராஜாவைப் பிடித்துக் கொண்டார்கள். அவன் கதை அத்தோடு முடிந்தது. அவர்களுக்கு ராணியையும் இவன் கூட அழைத்து வந்தது தெரியாது. 'தனக்கு என்ன ஆபத்து வந்தாலும் வரட்டும்;அவளுக்கு வரக்கூடாது'என்று தான் இவன் குதிரையில் அவளை முன்னே உட்கார வைத்து மறைத்துக் கொண்டு ஒட்டினான். பின்னாலிருந்து வந்த எதிரிகளுக்குக் குதிரை மேல் இவனுக்கு முன்னால் அவள் உட்கார்ந்த்திருந்தது தெரியவில்லை.

அதனால் ராணியைத் தேடிப் பார்க்காமலே அவர்கள், வந்த காரியம் முடிந்தது என்று சந்தோஷமாகப் போய்விட்டார்கள். வேடன் குடிசையில் வேடனின் அம்மாக் கிழவி இருந்தாள். பூர்ண கர்ப்பினியாகத் தஞ்சம் என்று வந்த ராணியை மனஸார வரவேற்று வைத்துக் கொண்டாள்.

படித்தவர்கள், நாகரிகக்காரர்கள் என்கிற நம்மை விட,பாமரமான ஏழை ஜனங்களிடம் உபகாரம் செய்கிற ஸ்வபாவம் , விஸ்வாசப் பண்பு எல்லாம் எக்காலத்திலும் ஜாஸ்திதான். ராஜ ஸ்திரீயை வேட vFg தன் வயிற்றில் பிறந்த மகளைப் போல் வைத்துப் பராமரித்தாள்.

ராணி வயிற்றில் ஒரு பிள்ளை பிறந்தது அதோடு தன் கடமை ஆகிவிட்டது என்கிற மாதிரி பிரஸவத்திலேயே ராணி மரணம் அடைந்து விட்டாள். பத்துப் பன்னிரண்டு வருஷங்கள் ஆகிவிட்டது. சத்ரு ராஜாவே பரிபாலனம் பண்ணிக்கொண்டிருந்தான். ஆனாலும் ஜனங்களுக்கு அதில் திருப்தியில்லை. ஒரு ராஜ்யம் தோற்றுப் போனால்கூட ஜனங்களுக்குத் தங்கள் பழைய பாரம்பரிய ராஜா இல்லையே என்று தாபம் இருந்து கொண்டே தான் இருக்கும்.

இந்த 'கதை-ராஜ்ய'த்திலிருந்த ஜனங்களுக்கு ராஜாவோடு ராணியும் தப்பித்துப் போனதோ, காட்டிலே அவளுக்குக் குழந்தை பிறந்ததோ தெரியாது, அதனால் தங்கள் கஷ்டத்தையெல்லாம் அடக்கிக்கொண்டு பொறுமையோடு இருந்தார்கள்.

மந்திரிக்கு மட்டும் ராஜ தம்பதி இரண்டு பேருமே ஒடியது தெரியுமல்லவா?அதனால் அவன் யோசித்தான். 'ஈச்வர கிருபையில் ராணிக்குப் பிள்ளைக் குழந்தையாகவே பிறந்திருந்து, அது இப்போது எங்கேனும் வளர்ந்துவந்தால் பன்னிரண்டு வயசு இருக்கும் அல்லவா?பாரம்பரியமான யுவராஜா என்றால் சைன்யத்தை நடத்தி யுத்தம் பண்ணவும், மந்திரிகளின் ஆலோசனையோடு ராஜ்ய பாரம் பண்ணவும் பன்னிரண்டு வயசு போதுமே!அதனால், ராஜகுமாரன் கிடைக்கிறானா என்று தேடிக் கண்டுபிடித்து அவனை கொஞ்சம் தநுர்வேதத்தில் [போர்ப் பயிற்சியில்] தேற்றிவிட்டால், ஜனங்கள் ஒரு மனஸாக அவன் கீழ் சேர்ந்து சத்ரு ராஜாவை அப்புறப்படுத்துவார்களே! என்று நினைத்தான்.

ரகசியமாக கோஷ்டி சேர்த்து, அவன் பழைய ராஜாவின் சந்ததி இருக்கிறதா என்று தேடினான். வேடனின் குடிசைக்கு வந்து சேர்ந்தான். அங்கே அநேக வேடப் பசங்களோடு ராஜாவின் பிள்ளையும் ஒரு கோவணத்தைக் கட்டிக் கொண்டு, தலையை முடிந்து இறக்கை சொருகிக் கொண்டு, குந்துமணி மாலையும் புலிநகமும் போட்டுக்கொண்டு அணில் குத்தி விளையாடிக் கொண்டிருந்தான். ஆனாலும் வம்சவாரியான ராஜ களை, பழைய ராஜாவின் ஜாடையெல்லாம் அவனுக்கு இருந்ததால், புத்திசாலியான மந்திரிக்கு ஊகமாக புரிந்தது.

அந்த கிழவி இப்போதும் உயிரோடு இருந்தாள். அவளிடம் கேட்டான். காட்டு ஜனங்களுக்கு சூது, வாது, பொய், புரட்டு தெரியாது. அதனால் அவள் உள்ளபடி சொன்னாள். ரொம்ப வருஷம் முந்தி ஒரு கர்ப்பிணி இங்கே வந்து அடைக்கலம் கேட்டான். அவனை நான் என் மகள் மாதிரி வளர்த்தேன். ஆனாலும் அவள், தான் யார், என்ன என்று சொல்லிக்கொள்ளாமலே இந்தப் பிள்ளையை பெற்றுப் போட்டுவிட்டுக் கண்ணை மூட்க்கொண்டு போய்விட்டாள். அதற்கப்புறம் இந்தப் பிள்ளைக்கு நானே அம்மாவாக இருந்து வளர்த்து வருகிறேன். ராஜகுடும்பம் மாதிரியான பெரிய இடத்து வாரிசு என்று ஊகிக்க முடிந்தாலும் இன்னார் என்று எங்களுக்கு நிச்சயமாகத் தெரியாது. எங்களில் ஒருத்தனாக எங்களோடேயே வைத்துப் பராமரித்துக் கொண்டிருக்கிறோம்"மந்திரிக்கு உடனே இரண்டும் இரண்டும் நாலு என்கிற மாதிரி 'நம் ராஜகுமாரன்தான் இங்கே வளர்வது' என்று புரிந்து விட்டது. அதை அவன் சொல்லி , பிள்ளையை அழைத்துப் போக முன்வந்தவுடன், கிழவி, வேடன் எல்லோருக்கும் ரொம்பவும் கஷ்டமாகி விட்டது. வளர்த்த பாசம்! ஆனானப்பட்ட கண்வ மஹரிஷி, ஜட பரதர் மாதிரியானவர்களையே வளர்த்த பாசம் ஆட்டி வைத்திருக்கிறதே!ஆனாலும் ராஜ்யகாரியம் என்பதால், இந்த வேடர்கள் தியாக புத்தியோடு ஏற்றுக் கொண்டார்கள்.

ஆனால் வேடப்பிள்ளைகளோடு விளையாடிக் கொண்டிருந்த ராஜகுமாரனை மந்திரி கூப்பிட்டதும், அவன் விழுந்தடித்துக் கொண்டு ஒடப்பார்த்தான். அவனுக்கு வேட சகவாசம்தான் பிடித்ததே தவிர, இந்தப் பெரிய மநுஷ சம்பந்தம் பிடிக்கவேயில்லை.

வேடப்பிள்ளை மாதிரியே, "இவங்கள்ளாந்தான் என் ஜாதி, ஜனங்க, இவங்களைவிட்டு வரமாட்டேன்"என்று ஒடினான். அப்புறம் அவனைப் பிடித்து வந்து மந்திரி அவனுக்கு வாஸ்தவத்தையெல்லாம் விளக்கிச் சொன்னான். "c ராஜகுமாரன். c பிறக்கும் முன்பே, சத்ருக்களிடமிருந்து தப்பி இங்கே ஒடிவந்த உன் தகப்பனார் கொல்லப் பட்டார்.அதற்கப்புறம் வேடர் குடிசையில் உன்னைப் பிரஸவித்து விட்டு உன் அம்மாவும் போய்விட்டாள். அதிலிருந்து c இங்கே வளர்ந்து வருகிறாய். ஆனாலும் c ராஜ்யத்தையெல்லாம் ஆள வேண்டியவன். உன்னைத் தலைவனாக வைத்துக் கொண்டு தான் நாங்கள் அதை சத்ருக்களிடம் மீண்டும் ஜயிக்க ஆலோசனை செய்திருக்கிறோம். இப்போது c இருப்பதைவிடக் கோடி மடங்கு உயர்ந்த ஸ்திதியில் இருக்க வேண்டியவன். 'மாட்டேன்"என்று சொல்லலாமா ?என்று எடுத்துச் சொல்லி விளக்கினான். அந்த பிள்ளைக்கு வீரம், பித்ருபாசம், அதற்காக எதிர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற ஆர்வம் எல்லாவற்றையும் மூட்டி விட்டான்.தான் ராஜகுமாரன் என்று தெரிந்தவுடனேயே, அந்தப் பிள்ளைக்கு ரொம்ப சக்தி, தேஜஸ், காம்பீர்யம் எல்லாம் உண்டாகிவிட்டது. அப்புறம் அவனுக்கு அஸ்திர சஸ்திர அப்பியாஸம், கொஞ்சம் சொல்லிக் கொடுத்தவுடனேயே அவற்றை நன்றாகப் பிடித்துக் கொண்டான். வேட ஜனங்களை விட்டுப் போனான். மந்திரியின் சகாயத்துடன் நாட்டில் சைனியம் திரட்டினான். ராஜ விச்வாஸம் கொண்ட ஜனங்கள், தங்கள் பழைய பாரம்பரிய வாரிசு வந்திருக்கிறான் என்றவுடன் உத்ஸாகமாக அவன் கீழ் ஒன்று சேர்ந்தார்கள்.

இப்போதெல்லாம் குடியரசு யுகத்தில் ஒருத்தரைத் தலைவர் என்று ஸ்தோத்திரம் பண்ணி ஊரையெல்லாம் இரண்டு படுத்துகிற மாதிரி டெமான்ஸ்டரேஷன்கள் பண்ணிவிட்டு, கொஞ்ச காலமானால் அவரை எவரும் சீந்தாமல் தூக்கிப் போடுகிற மாதிரி இல்லை, ராஜ விஸ்வாசம் என்பது. அது நின்று நிலைத்து ஹ்ருதயபூர்வமாக இருந்து வந்த விஷயம். ராஜாக்களும் இந்த விஸ்வாசத்தைப் பெறுவதற்குப் பாத்திரர்களாகவே ரொம்பவும் ஒழுக்கத்தோடு குடிஜனங்களைத் தம் பெற்ற குழந்தைகளைப் போலப் பரிபாலனம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று அதிகாரம் வந்து, அந்த ருசியில் கண்டது காணாதது போல் ஒழுங்கு தப்பிப போகிற மாதிரி இல்லை, பாரம்பரிய ராஜயாதிகாரம் என்பது. இந்தக் கதையில் வரும் பையன் மாதிரி திடீர் அதிகாரம் வந்தால்கூட பாரம்பரியப் பண்பு அவர்கள் தலைதெறிக்கப் போகாமலே கட்டுப்படுத்தும். புராணங்களைப் பார்த்தால் வேனனையும் அஸமஞ்ஜனையும் பல் எங்கேயாவது நூற்றிலே ஒரு ராஜாவோ ராஜகுமாரனோ முறை தப்பிப் போனால் அப்போது ஜனங்களே அதனைத் தொலைத்து முழுகியிருக்கிறார்கள். மொத்தத்தில் 'யதா ராஜா ததா ப்ரஜா'[அரசன் எவ்வழி;மக்கள் அவ்வழி] என்ற மாதிரி, அப்போது இரண்டு பக்கத்திலும் தர்மத்துக்குப் பயந்தவர்களாக இருந்தார்கள். சட்டம் என்று வெறும் ராஜாங்க ரீதியில் போடுகிறபோது, முதலில் அதைப் பண்ணுகிறவர்கள் சரியாகயிருக்கிறார்களா என்ற கேள்வி வருகிறது. இந்த சட்டங்களுக்கெல்லாம் மேலான த்ரிலோக ராஜாவான பரமேச்வரனின் சட்டமான தர்மசாஸ்திரத்துக்கு அடங்கியே ஆளுகிறவர்கள், ஆளப்படுகிறவர்கள் ஆகிய இருவரும் இருந்தால்தான் லோகம் நன்றாயிருக்கும். பூர்வகாலங்களில் ஆளப்படுகிறவர்களுக்கும் ஆளுகிறவர்களே இப்படி தர்மத்துக்கு அடங்கியிருந்து வழி காட்டி - யிருக்கிறார்கள். இதனால்தான் ஜனங்களுக்கு ஸ்வபாவமாக, ரஜவிஸ்வாசம் என்ற ஆழ்ந்த, நிஜமான பற்று இருந்து வந்திருக்கின்றது.

'இவர்கள் தன் ஜனங்கள் 'என்ற பாந்தவ்யம் ராஜாவுக்கும், 'இவன் நம் ராஜா'என்ற அன்பு ஜனங்களுக்கும் இருந்து வந்தது. கதையில் சொன்ன பையன், சத்ருவை ஜயிக்க மந்திரியின் ஏற்பாட்டில் ஆயத்தம் பண்ணுகிறான் என்றவுடன் ஜனங்களெல்லாம் அவன் கட்சியில் சேர்ந்து யுத்தத்துக்கு கிளம்பிவிட்டார்கள். சுலபத்தில் சத்ருவை ஜயித்தும் விட்டார்கள். பையனுக்கு பட்டாபிஷேகம் பண்ணி ராஜா ஆக்கினார்கள். அவனுக்குத் தான் வேடனாக இருந்த எண்ணமே அடியோடு மறந்து போய்விட்டது. பூர்ண ராஜாவாகவே இருந்தான். இந்தக்கதையை நான் சொல்லவில்லை. பெரிய ஆசார்யர் ஒருத்தர், அத்வைத ஸம்பிரதாயத்தின் ஆதிகாலப் பிரவர்த்தகர்களில் ஒருத்தர் சொல்லியிருக்கிறார். குரு தத்வத்தைச் சொல்லும்போது இப்படிக் கதை சொல்லியிருக்கிறார். நான் கொஞ்சம் காது,மூக்கு வைத்தேன்.

கதையிலே வேடப்பையனாக இருந்தவன் ராஜகுமாரனாக உருமாறவா மாறினான்? Transform ஆனானா என்ன? வேடப் பையனாகவே தன்னை நினைத்துக் கொண்டிருந்த காலத்திலும் அவன் ராஜா பிள்ளைதானே? இதை முதலில் தெரிந்து கொள்ளாதிருந்தான். அதனால் வேடன் மாதிரி வாழ்க்கை நடத்தினான். உண்மையைத் தெரிந்து கொண்டு விட்டவுடன், ராஜகுமாரனாகவே எப்போதும் இருந்தவன் ராஜகுமாரனாகவே அநுபவத்தில் வாழ்ந்து காட்டினான். இரண்டுபேர் இல்லை. ஒருத்தன் இன்னொருத்தனாக மாறவில்லை. ஒரே பேர்வழிதான் முதலில் தன்னைத் தானே புரிந்து கொள்ளாமல் இருந்தான். அப்புறம் புரிந்துகொண்டு விட்டான். புரியாத நிலையில் வேடனாக எங்கேயோ கீழ்நிலையில் கிடந்தவன் புரிந்து கொண்டவுடன் ராஜகுமாரனாக உயர்வு பெற்றுவிட்டான். அப்புறம் சண்டை போட்டு ஸாம்ராஜ்யாதிபதியாகவே ஆகிவிட்டான்.

வேட வேஷத்தில் (வேட வேடத்தில்: வேஷம் என்பது தமிழில் வேடம் என்றாகும்) இருந்த ராஜகுமாரன் மாதிரித் தான் நாமெல்லாம் ஜீவாத்மா என்ற வேஷத்தில் ஸம்ஸாரிகளாகவே நம்மை நினைத்துக் கொண்டிருந்தாலும் வாஸ்தவத்தில் நாமும் பரமாத்மாவேதான். வேஷம் இப்படியானாலும் நமக்கு உள்ளே இருக்கிற வஸ்து இப்போதும் பரமாத்மாதான். இந்திரியங்கள் இழுக்கிற வழியில் ஒடி வேட்டையாடிக் கொண்டிருக்கிறோம். நாம் பிரம்மம் என்று தெரிந்து கொள்ள வேண்டும். தெரிந்து கொண்டாலும் அதை அநுபவத்தில் கொண்டுவர முடியாதபடி இந்திரியங்கள் இழுத்துக் கொண்டே இருக்கும். ராஜகுமாரனாகவே இருந்தாலும் வாஸ்தவத்தில் அரசத்தன்மையை அடைவதற்காக அவன் அஸ்திர சஸ்திர அப்பியாஸம் பண்ணி எதிரிகளை ஜயித்து ஸாம்ராஜ்யாதிபதியான மாதிரி, நாமும் பிரம்மமாகவே எப்போதும் இருந்தாலும் அதை உணராமலிருப்பதால் கர்மத்தில் ஆரம்பித்து பக்தி வழியாக, ஞான சாதனைகளைச் செய்து, உட்பகைகளையெல்லாம் ஜயித்து, ஆத்ம ஸாம்ராஜ்யத்தில் ராஜாவாக ஆகவேண்டும். 'ஸாம்ராட்'- அதாவது ராஜா - என்றே உபநிஷத்தில் ஆத்ம ஞானியைச் சொல்லியிருக்கிறது.

ஐஸும் ஸ்படிகமும் ஒரே மாதிரித்தான் வெளிப்பார்வைக்கு இருக்கின்றன. ஆனால் ஐஸ்தான் உருகி ஜலமாகுமே தவிர, ஸ்படிகம் ஜலமாகாது. ஏனென்றால் எது ஜலமாகவே இருந்து அப்புறம் உறைந்து வேறே வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறதோ அதுதான் உருகி மறுபடியும் தன் ஸ்வயமான பூர்வ ரூபத்தை அடைய முடியும். பிரம்மமே ஜீவனாக உறைந்து போயிருப்பதால்தான், இந்த ஜீவாத்மாவும் உருகிப் போனால் மறுபடியும் பிரம்மமாகவே அநுபவத்தில் ஆக முடிகிறது. ஐஸ் தானாக கரைகிறது. நாம் கரைய மட்டோம் என்கிறோம்.

கல்லேனும் ஐய ஒரு காலத்தில் உருகும்...
என் கல்நெஞ்சம் உருகவில்லையே! 

என்று தாயுமான ஸ்வாமிகள் நம் நிலைக்கு இறங்கி வந்து நமக்காகத்தான் பாடியிருக்கிறார். நம்மை உருக வைக்க ஒன்று தேவைப்படுகிறது. கதையில் ராஜகுமாரனை Practical- ஆக ராஜகுமாரனாக்குவதற்காக ஒரு மந்திரி வந்த மாதிரி, நம்மை உருக்கி நிஜ நாமாகப் பண்ண ஒருத்தர் வேண்டும். அவன் வரமாட்டேன் என்று முரண்டு செய்தாலும் வலிய இழுத்த மந்திரி மாதிரி, பாரமார்த்திகத்தின் பக்கமே போகமாட்டேன் என்ற அடம்பிடிக்கிற நம்மைக் கட்டி இழுக்க ஒருத்தர் வேண்டும். அப்படி ஒருத்தர் இருக்கிறாரா?நம்மை நம்முடைய நிஜ நாமாக ஆக்கக்கூடிய ஒருத்தர் இருக்கிறாரா?

இருக்கத்தான் செய்கிறார். வேடப்பையனுக்கு நீதானப்பா ராஜகுமாரன் என்று சொல்லிப்புரியவைத்து, அவனுக்கு அஸ்திரப் பயிற்சி தொடுத்து, அவனை ராஜாவாக்குவதற்காகஅவனை விட ஜாஸ்தி உழைத்த மந்திரி இந்த ஒருத்தருக்குத்தான் ரூபகம். (உருவகம்) . நமக்கு நம் பரமாத்மத்வத்தை எடுத்துச் சொல்லி, அதை நாம் அநுபவமாக்கி கொள்வதற்கான ஸாதனைகளைச் செய்ய வைத்து, நம் கர்மா பாக்கி தீருவதற்காக தாமே தபஸைச் செலவு செய்து உபகாரம் பண்ணும் அந்த ஒருத்தர் தான் குரு என்பவர்.

Wednesday, 12 December 2012

சடங்கின் போது, ஏன் பூணூலை இடம், வலம் தோள்களில் மாற்றிக்கொண்டே இருக்கிறோம்? - மஹா பெரியவா


தெய்வ காரியங்களுக்கு பக்தி வேண்டும். பித்ரு காரியங்களுக்கு சிரத்தை வேண்டும். பக்தியோடு செய்வது யக்ஞம் ; சிரத்தையோடு செய்வது சிராத்தம். தெய்வகாரியங்களைப் பண்ணும்போது சிகையை நன்றாக முடிந்து கொண்டு, யக்ஞோபவீதம் (பூணூல்) இடது தோளில் இருக்கும்படியாக, சிரத்தையோடு செய்ய வேண்டும்.

இதற்காகத்தான் சிகை, யக்ஞோபவீதம் இரண்டும் இருக்கின்றன. சந்நியாசிகளுக்கு இவை இரண்டும் இல்லை. பித்ரு காரியத்தையும், பல தேவதைகளின் உபாஸனையையும் விட்டுவிட்டு, நேரே பரமாத்ம உபாஸனையை எந்தவிதமான லௌகிக அபே¬க்ஷயும் இன்றிச் செய்பவர்கள் அவர்கள். நேராகவே கடவுளிடம் போகிற பிற மதஸ்தர்களுக்கும் சிகை, யக்ஞோபவீதம் இல்லை.

ஏன் இப்படித் தேவர்களுக்கு இடது தோளில் பூணூலோடும், பித்ருக்களுக்கு வலது தோளில் பூணூலோடும் காரியம் பண்ணி வேண்டும் என்று சொல்கிறேன்:

கிழக்கு முகமாக இருந்து கொண்டே காரியங்களைச் செய்ய வேண்டும். வடக்கு தேவர்களிடம் போகிற திசை, உத்தராயனம் என்பது அதுதான். உத்தரம் என்றால் வடக்கு. தெற்குதான் பித்ருக்கள் இருக்கும் பக்கம். ' தென்புலத்தார் ' என்று திருவள்ளுவர்கூடச் சொல்கிறாரல்லவா ? தக்ஷிணம் என்றால் தெற்கு. தக்ஷிணாயனம் என்பது பித்ரு லோக மார்க்கம்..... ' உத்தராயணம் ' என்பதில் மூன்று சுழி ' ண ' போட்டும், ' தக்ஷிணாயனம் ' என்னும்போது இரண்டு சுழி ' ன ' என்பது ' ண ' வாக மாறிவிடும். இது வியாகரண விதி. தற்காலத்தில் மனம் போனபடி பத்திரிகைகளில் எழுதுவதால் இதைச் சொல்ல நேர்ந்தது.

உத்தராயண தேவ மார்க்கத்தையும், தக்ஷிணாயன பித்ரு மார்க்கத்தையும் பற்றிப் பகவான் கீதையில் சொல்லியிருக்கிறார். நாம் கிழக்குமுகமாக இருந்துகொண்டு பித்ரு காரியம் பண்ணும்போது, எந்தத் தோள் தெற்குப் பக்கமாக இருக்கிறது? வலது தோள்தான். அதனால்தான் பித்ரு காரியத்தில் யக்ஞோபவீதம் அந்தத் தோளின்மேல் இருக்கும்படியாகப் போட்டுக்கொள்ள வேண்டும் என்பது.

" பிரதக்ஷணம் பண்ணுவது " என்கிறோமே, இதற்குக் கூட தக்ஷிண (தெற்கு) திசையை நோக்கி என்றுதான் அர்த்தம். முக்காலே மூன்றுவாசிக் கோயில்களில் ராஜகோபுரம் கிழக்குப் பார்த்தான் இருக்கும். அதற்குள் நுழைந்து நாம் பிரதக்ஷிணம் ஆரம்பிக்கும்போது, முதலில் தெற்குப் பார்க்கத்தான் போவோம்.

இதே மாதிரி, நாம் கிழக்குமுகமாக இருந்துகொண்டு தேவகாரியம் பண்ணும்போது, தேவர்களின் திசையான வடக்கு திசையைப் பார்க்க இருப்பது நம்முடைய இடது தோள்தான். அதனால்தான், தேவ காரியங்களில் பூணூல் இடது தோள்தான். அதனால்தான், தேவ காரியங்களில் பூணூல் இடது தோள்மேல் இருக்க வேண்டும் என்பது.

தேவகாரியம், பித்ரு காரியம் இரண்டும் செய்யாத மற்ற வேளைகளில், அதாவது உத்யோக வேளை முதலானதுகளின் போது, பூணூலை ஒரு தோளின் மேலேயும் இல்லாமல், கழுத்திலிருந்தே மாலைமாதிரித் தொங்கவிட்டுக் கொள்ள வேண்டும். இதை யாரும் அனுஸரிக்கக் காணோம். பித்ரு காரியம் தவிர மற்ற எல்லா ஸமயங்களிலும் இடது தோள் மேலேயே யக்ஞோபவீதத்தைப் போட்டுக் கொள்கிறார்கள்.

தேவ காரியத்தின் போது இடது தோளுக்கு மேல் பூணூல் இருப்பதற்கு ' யக்ஞோபவீதம் ' என்றும், பித்ரு காரியத்தின் போது வலது தோளுக்கு மேல் இருப்பதற்கு ' ப்ராசீனாவீதம் ' என்றும், மநுஷ்யர்களுக்கான லோக காரியங்கள் செய்யும் மற்ற எல்லா ஸமயத்திலும் மாலை மாதிரித் தொங்குவதற்கு ' நிவீதம் ' என்றும் பெயர். பிருஹதாரண்யக உபநிஷத்தில் ஒரு ஞானி இந்த எல்லாத் தினுஸுக் கர்மாக்களையும் விட்டு விட்டுப் பிச்சைக்கார ஸந்நியாஸியாகப் புறப்படுவதைப் பற்றி வருகிறது. ( III.5.1) . அதற்கு ஆசார்யாள் பாஷ்யம் பண்ணும் போது, தேவ-பித்ரு-மநுஷ்ய கர்மாக்களை பண்ணுவதற்காகவே க்ருஹஸ்தனுக்குப் பூணூல் இருக்கிறதென்றும், எனவே, இந்த கர்மாக்களை விட்டுவிட்ட ஸந்நியாஸிக்குப் பூணூல் கிடையாதென்றும் ச்ருதி வாக்யங்களைக் காட்டி ஸ்தாபிக்கிறார். அந்த அலசலில், " நிவீதம் மநுஷ்யாணாம் " - மநுஷ்யர்களுக்கான காரியத்தின்போது (பூணூலை) மாலையாகப் போட்டுக்கொள்ள வேண்டும். என்று ச்ருதி ப்ரமாணமே இருப்பதாகக் காட்டியிருக்கிறார். ஆனாலும் நடைமுறையில் பலகாலமாகவே அந்த வழக்கம் எடுபட்டுப் போயிருக்கிறது.

Thursday, 29 November 2012

எங்கே பிராமணன்?


நான் பிராமணன் என்று சொல்வதில் அநேகமாக அனைவருக்கும் ஏதோ ஒரு தயக்கம். மிகவும் மெதுவாக காதில் விழுந்தும் விழாத மாதிரியான குரலில் கூறும் பழக்கம் ஏன் நம்மிடம் வந்தது? ஒரு விதமான கூச்சம் ஏன் பற்றிக்கொள்கிறது. காரணம் நாம் பிராமணர்களாய் வாழ்கிறோமா? அந்தணர் என்று அடித்துக் கூறும்படி அந்தத் தகுதியை நாம் பெற்றுள்ளோமா? என்ற சந்தேகம் நமது ஆழ்மனதில் உறுத்திக்கொண்டே இருக்கிறது. “பிராமணன்” என்கிற உயர்வை உணர வேணுமானால், மற்றவர்களிடமிருந்து ஏதோ ஒரு விதத்தில் மாறுபட்டு, பளிச்சென்று தெரியும்படி குறை விலாசங்களை வளர்த்துக்கொண்டுள்ளோமா? என்றால் இல்லை என்று கூறும்படிதான் நாம் வாழ்கிறோம்.

நாம் முதலில் தெரிவித்தது, பொதுநல மனப்பான்மை, சுயநலம், நான் என் மனைவி மக்கள் குடும்பம் என்று குறுகிய சிந்தனைகளை உரமிட்டு வளர்த்துவிட்டோம். நாம் பரோப காரியாக, லோகஷேமத்தை முதலில் மனதில் நிறுத்தி வாழ்ந்த அந்த உத்தம குணங்களைத் தெரிவித்துவிட்டோம். இதுதான் நம்மை நமது உயர்நிலையிலிருந்து கீழே தள்ளிய முதல் காரணமாக நான் கருதுகிறேன். அடுத்ததாக பிராமணர் பொய் கூறமாட்டார். காயத்ரி ஜபிக்கும் நாக்கு பொய் சொல்லாது என்ற அந்த நம்பிக்கையை நாம் குலைத்துவிட்டோம். “காயத்ரி ஜபித்தால்தானே சத்யவாதியாக இருக்கணும் எதற்கு வீண் கஷ்டம்” என்று ஜபிப்பதையே விட்டுவிட்டோம்.

நம்மவர்கள் எத்தனை கோபம் வந்திடினும், இறைவனின் நாமத்தைக் குரல் ஏற்ற இறக்கத்துடன் கூறி, தனது கோபத்தை தெரிவிப்பது வழக்கமாக இருந்தது. ‘வசவு’ என்பது நம் அஹங்களில் மிகவும் கண்டிக்கப்பட்ட விஷயம் ‘வசை’ பாடாதே, போனாப் போறது போ... என்று தணிந்து செல்லக் கற்றுக் கொடுக்கப்பட்டது. மற்ற இனத்தவர்களின் வாயில் விழுந்து புரளும் சரளமான, காதைச் சுடும் வசவுகள் நம்மிடையே இருந்ததில்லை. ஆனால் இன்று நம்மவர்கள் வண்டி ஓட்டும்போது, சாலையில் தவறாகச் செல்லும் ஓட்டுனர்களை வசை பாடும் விதத்திலிருந்து அலுவலகம், வீடு என்று பல இடங்களிலும் கூச்சமின்றி வசைகள் வருகின்றன. நாவடக்கம் நம்மைவிட்டுச் செல்ல விட்டுவிட்டோம். வார்த்தைகளுக்கு சக்தி அதிகம். தவறான வார்த்தைகள் நம்மவர்களின் மரியாதையை இன்னும் ஒரு அடி அதிகமாகப் புதைத்துவிட்டது என்பது என் கருத்து.

அடுத்தபடியாக - பிராமணர்கள் வெளி இடத்தில் எதுவும் உண்ணமாட்டார்கள். மடி, ஆச்சாரமாய் இருப்பவர்கள் என்னும் எண்ணத்தை மாற்றிவிட்டோம். தற்காலத்தில் மிகவும் அதிகமாக வெளியில் சாப்பிடுவர்கள் நாம்தான்! பிராமணர்கள் மிகவும் ஜீவகாருண்ய முள்ளவர்கள். ஈ எறும்புக்குக்கூடத் துன்பம் நினைக்காதவர்கள் என்னும் எண்ணத்திலும் மண்ணை அள்ளிப் போட்ட பிராமணர்கள் ஏகம்! மிகவும் நாகரிகமாக நாங்கள் Egg-tarians., என்றும் வெளிநாட்டுக்குச் சென்றபோது, வேறு வழியின்றி மீன் மட்டும் உண்ணப் பழகிக் கொண்டோம் என்றும் கூறும் பிராமணர்களைப் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்! “I don’t mind” என்ற வாசகம் நம் வாழ்க்கையில் நுழைந்த நாள் முதல் நம்மை நாம் சீராக இழந்துகொண்டே வந்துள்ளோம்.

அடுத்தபடியாக நம்மை உயர்த்திக் காட்டிய உயரிய குணம் “எளிமை”. நமது உடுத்தும் உடையிலிருந்து, உண்ணும் உணவு, (தயிர் சாதம் என்று செல்லப் பெயர் இருந்தது)! நமது நடை உடை பாவனைகள், பேச்சு, செய்கை, மேலும் நாம் வாழும் தரம், அனைத்துமே எளிமையைப் பறைசாற்றியது. வசதி இருப்பினும், ஒரு பாயில் படுத்து உறங்கத்தான் செய்தோம், நமது வீடுகளில் புழங்கப்படும் பாத்திரங்கள், பீரோக்கள், இன்றும் இதர சாமான்கள் வழி வழியாக உபயோகப்படுத்தப்பட்டது. அதனால் குறைந்து போய்விடவில்லை. செழிப்பாகவே வாழ்ந்தனர். இன்று அதை அறவே காணாமல் போகவிட்டு, பகட்டும், பெருமையும் ப்ரதானமாய் வாழ்கிறோம். ப்ரளயத்தின்போது, இறைவன் பூமியிலுள்ள அனைத்து ஜீவன்களின் ஒரு மாதிரியைப் பத்திரப்படுத்தி அடுத்த யுகத்திற்கு எடுத்துச் செல்வாராம்! அதுபோல, கடைத்தெருவில் கிடைக்கும் அத்தனை சாமான்களிளும் ஒன்று நம் வீட்டில் உண்டு என்னும் நிலைமையில் எளிமையா? அப்படி என்றால் என்ன? என்று கேட்கும் நாம்!!

பிராமணருக்கு மகுடமாய்த் திகழ்ந்த ஆச்சாரம், மடி இரண்டையும், தெரிந்து விரும்பித் தொலைத்தோம்! இவை இரண்டும் நமது மனதில் இறையுணர்வைத் தக்கவைத்தன. ‘சந்தி’ பூஜை, ஹோமம் போன்றவற்றை வேதத்தின் பாடமாக ஏற்று ஸ்ரத்தையுடன், பக்தியுடன், கடைபிடித்ததால், பிராமணர்கள் ஒழுக்கத்தில் முதல் நிலையில் இருந்தனர். Self discipline நம்மைச் சமூகத்தில் உயர்த்திக் காட்டியது. மாயையில் சிக்கி சின்னா பின்னமாகாமல் நமது மனிதப் பிறவியின் மேன்மையை உணர்ந்து, ஆன்மீக சிந்தனை நம்மை வழி நடத்த பரம்பொருளை அடையும் சரியான பாதையில் பயணித்திருந்தோம். அதனாலேயே நம்மவர்களின் முகங்களில் “ப்ரம்ம தேஜஸ்” என்பது மிளிர்ந்தது. ‘பதி’ என்னும் உயர்ந்த ஸ்தானத்தை உணர்ந்து மரியாதையைக் காப்பாற்றிக் கொண்டு வாழ்ந்த அந்நாளைய ஆண்கள் கம்பீரமாக வாழ்ந்தனர். தவறு கண்டுபிடிக்க முடியாத நிலையில் பத்னிகள் தர்மப் பத்னிகளாக கணவர் சொல்லை மீறத் துணிவின்றி அடக்கமாய் வாழ்ந்து பெருமையைச் சேர்த்துக் கொண்டனர்.

ஆனால் இன்று, ஆண்கள் (90%) நமது குலாச்சார வழியை அறவே மறந்து, அனைத்துத் தீய வழக்கங்களையும் கற்றுக் கொண்டு Company demands என்று குடிப்பதையும் justify பண்ணிக் கொண்டு, மற்ற வர்ணத்தார்களின் அதீத உறவால், நமது பிராமண பாஷைகூட மறந்து, மேலே குறிப்பிட்ட உன்னத குணங்கள் அனைத்தையும் இழந்து வலம் வருவதால் தர்மப் பத்னிகள் உருவாக சாத்யமே இல்லாமல் போனது. இத்தகைய சூழலில் வளரும் சந்ததியர்கள் பிராமணரை என்னும் Identificationஆக Surnameஇல் மட்டுமே இருப்பர். காலம் மாறிவிட்டது!

அதெல்லாம் அந்தக் காலம்! இந்தக் காலத்தில் சாத்யமா என்ன! என்று சாக்கு போக்கு கூறாமல், ஒரே ஒரு நிமிடம் நின்று நிதானித்து யோசிப்போமேயானால் புரியும்! ஒவ்வொரு பிராமணரும், தனிமனித உரிமையின் வட்டத்துக்குள் வந்துவிடும் “இந்த” விஷயங்களை மனம் உவந்து பின்பற்றினால் போதும். நமது பெருமைகள் தானாகவே நம்மை அடையும். இந்தக் காலப் படிப்பு, உத்யோகம், சம்பாத்யம், அனைத்தும் அப்படியே இருக்கட்டும். ஆனால் கண்ணுக்குத் தெரியாத அந்த “நாலு பேருக்காக” நமது குலாசாரங்களை நமக்கே நமக்குச் சொந்தமானவற்றை விட்டுவிட்டு இன்று நாமே நம்மைப் பார்த்து வெட்கப்படவேண்டா மோல்லியோ?

சற்றே சிந்தித்து உணர்ந்து செயல்பட்டு பழைய காலப் பெருமைகளை மீண்டும் பெற்றுச் சமூகமும் சமுதாயமும், அய்யர் வர்றாருப்பா...! நமஸ்காரம் ஐயா என்று மனதில் மரியாதையோடு கூறவைப்பது நம் கையில்தானே இருக்கிறது...!

Sunday, 25 November 2012

உண்மையைச் சொன்னாள் கோபம் கோபம் வருகிறது., பொய் சொன்னால் சந்தோஷப்படுகிறோம் - மஹா பெரியவா



ஸரஸ்வதி கடாக்ஷம், லக்ஷ்மி கடாக்ஷம் இந்த இரண்டையும் பற்றி மநுஷ்ய சுபாவம் ரொம்பவும் விசித்திரமாக இருக்கிறது. எல்லோருக்கும் தங்களுக்கு ரொம்பவும் ஸரஸ்வதி கடாக்ஷம், அதாவது புத்திசாலித்தனம் இருப்பதாகவே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களை மஹா புத்திசாலிகளாகலவே வெளியில் காட்டிக் கொள்ளப் பிரியப்படுகிறார்கள். ஆனால் நல்ல புத்தி வேண்டும் என்று அதற்காகத் தாபத்தோடு யாரும் பிரார்த்திப்பதாகத் தெரியவில்லை. பொதுவாகப் புத்திசாலித்தனம் என்பது சாமர்த்தியம் என்றுதான் நினைக்கப்படுகிறது. ஞானமும் ¢விவேகமும்தான் உண்மையான புத்திமானின் லக்ஷணங்கள். இவற்றுக்கு யாரும் ஆசைப்படுவதில்லை. நமக்கு மிகவும் சாமர்த்தியமும் சாதூர்யமும் இருக்கின்றன. அதாவது யாரையும் ஏமாற்றிவிடலாம் என்று அவரவரும் சந்தோஷப்பட்டுக்கொண்டு, இந்த புத்திசாலித்தனத்தோடு நின்றுவிடுகிறோம். ஆனால் லக்ஷ்மி கடாக்ஷம் மட்டும் எவ்வளவு இருந்தாலும் நமக்குப் போதமாட்டேன் என்கிறது. மண்டுவாக இருந்தாலும்கூட தன்னைப் புத்திசாலியாகக் காட்டிக்கொள்வதற்கு நேர் மாறாக, நமக்கு எத்தனை சம்பத்து இருந்தாலும் அது வெளியில் தெரியக்கூடாது என்று ஏழை வேஷம்தான் போடுகிறோம். ஒருவனைப்பற்றி யாராவது எத்தனை புத்திசாலி என்று பேசினால் எத்தனை சந்தோஷப்படுகிறோம். ஆனால் ஒருத்தன் பாங்கில் லட்ட லட்சமாகப் பணம் போட்டிருக்கிறான் என்றால், அவனுக்குக் கோபம்தான் வருகிறது. தங்களுக்கு இருக்கிற செல்வம் போதாது என்று நினைப்பதால்தான் இவர்களுக்கு அதைப்பற்றிச் சொன்னாலே கோபம் வருகிறது.அதிருப்திதான் தரித்திரம். திருப்திதான் சம்பத்து. ஆகையால், நாம் நிஜமான புத்திசாலிகளா தரித்திரர்களாக இருந்தாலும்கூட, அப்படிச் சொல்லிக் கொள்ளாமல், மனஸால் நிறைந்து, திருப்தியால் பணக்காரர்களாக இருந்துகொண்டிருக்கலாம். தரித்திரம் என்று சொல்லிக் கொண்டால்தான் நமக்கு யார் பணம் கொடுக்கிறார்கள். சொல்லிக்கொள்ளாமலேதான் பணக்காரரை விடத் திருப்தியாக இருப்போமே.

புத்தி, செல்வம் - இவற்றோடு ஒவ்வொருத்தருக்கும் அழகாக இருக்கவேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. தான் புத்திசாலி என்பதைப்போல, எல்லோரையும்விடத் தானே அழகு என்கிற எண்ணம் நம் ஒவ்வொருத்தருக்கும் இருக்கிறது. இதற்குத்தான் அலங்காரம் எல்லாம் பிரமாதமாகச் செய்துகொள்கிறோம். தினத்துக்குத் தினம் ஃபாஷன்கள் மாறிக்கொண்டே இருப்பதெல்லாம் நம் அழகைப் பிரகடணம் பண்ணிக் கொள்ளத்தான். பரம கருணாமூர்த்தியான அம்பாள், கேவலம் ரக்த - மாம்ஸ சம்பந்தமான இந்தச் சரீர அழகை விரும்புகிறவளுக்கு அதைக்கூடப் பூரணமாகத் கொடுத்து அநுக்கிரஹிக்கிறாள். 

இத்தனையும் இருந்து தீர்காயுசு இல்லை என்றால் என்ன பிரயோஜனம்? அம்பாள் சிரஞ்ஜீவித்துவமும் தருவாள் என்கிறார். இதற்குமேல் வேறென்ன வேண்டும்?என்று தோன்றலாம். 
ஆனால், இதற்குமேல்தான் அம்பாளின் பரமாநுக்கிரஹத்தை தேடச் செய்யும் கேள்வியே பிறக்கும். இத்தனை பணம், அழகு, புத்தி எல்லாவற்றையும் வைத்துக்கொண்டு இத்தனை காலம் ஒட்டியாச்சு. இதிலெல்லாம் வாஸ்தவத்தில் என்ன மனநிறைவைக் கண்டோம்?இதையெல்லாம் வைத்துக்கொண்டு எப்போது பார்த்தாலும் சஞ்சலப்பட்டுக்கொண்டே, ஒன்றை விட்டால் இன்னொன்று என்று தாவிக்கொண்டே இருந்துவிட்டோம். நிரந்தர சௌக்கியத்தை, சாந்தத்தை இவை எதையும் பெற்றதாகத் தெரியவில்லையே. 

இதை எப்படிப் பெற்றுக்கொள்வது?என்கிற கோள்வி பிறக்கும். நடுநடுவே நமக்கு இந்தக் கேள்வி தோன்றினாலும், அடுத்த க்ஷணமே மாயை நம்மை இழுத்துக் கொண்டு போகிறது. ஆனால் நாமாக இப்படி நினைக்காமல் அம்பாளை உபாஸிப்பதன் பலனாக, அவள் இப்படி நினைக்காமல் அம்பாளை உபாஸிப்பதன் பலனாக, அவள் நம்மை இப்படி நினைக்கப் பண்ணுகிறபோது, அந்த நினைப்பு நாளுக்குநாள் மேலும் மேலும் தீவிரமாக ஆகும். பணம் வேணும், படிப்பு வேணும், அழகு வேண்டும், ஆயுசு வேண்டும் என்பதெல்லாம் நம்மை மேலும் மேலும் நம்மைப் பாசத்தில் கட்டிப் பிரம்மையில்தான் தள்ளிக் கொண்டிருந்தது என்கிற அறிவு உண்டாகும். 

பாசம் என்றால் கயிறு. பாசத்தில் கட்டப்படுவது பசு. கயிற்றைப் போட்டுத் தறியில் கட்டின பசு மாதிரி, ஒரு குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் போக முடியாமல், அதற்குள் கிடக்கிற தாற்காலிக இன்பங்களையே மேய்த்துக்கொண்டு, அசட்டுத் தனமாக இதுவே எல்லாம் என்று திருப்திப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்தக் கட்டை அறுத்துக் கொள்ள வேண்டும். அப்புறம் பரம சுதந்திரம். இந்த இந்திரியங்களின் சின்ன சௌகரியங்களுக்கு அப்புறம் அகண்டமான, சாசுவதமான ஆத்ம ஆனந்தம். பாசம் போய், நாம் பசுவாகக் கட்டுப்பட்டுக் கொண்டிருந்த நிலையும் போய்விட்டால், அப்புறம் பரம்பிரம்மம்தான். பணம், புத்தி, ஆயுள், அழகு ஆகிய சிற்றின்பங்களுக்குத் தவித்த மனஸில் இவற்றின் கட்டுக்களே வேண்டாம் என்கிற வைராக்கியம் உண்டானால், அப்புறம் பேரின்ப மயமாவதற்கான ஸாதனைகளில் இறங்கி, முடிவில் அம்பாள் அருளாள் பேரின்பமாகவே ஆகலாம். அதைவிடப் பெரிய பலன் வேறில்லை.

Friday, 23 November 2012

யார் பகவான் கிருஷ்ணன் மேல் அதீத பக்தி கொண்டவர்கள்?




கோகுலத்தில் ஒரு முறை பகவான் கிருஷ்ணனுக்கே தலைவலி ஏற்பட்டதாம். யாராலும் குணப்படுத்த முடியவில்லையாம். சத்யபாமா, ருக்மணி உள்பட அனைவரும் அரண்மனையில் கவலையுற்று இருந்தார்கள்.அவ்வமயம் நாரத மகரிஷி அங்கு வந்தார். அவர்களின் கவலைக்கு காரணம் கேட்க, அவர்கள் காரணம் சொல்ல, நாரத மகரிஷி பகவான் கிருஷ்ணனிடம் சென்றார்.

"என்ன இது விளையாட்டு? எதற்காக இந்த நாடகம்" என்று நாரத மகரிஷி கேட்டார். 

பகவான் கிருஷ்ணன், "இல்லை, எனக்கு உண்மையிலேயே தலைவலி" என்றார். 

நாரத மகரிஷி இதை நாடகம் என்று புரிந்து கொண்டாலும், காட்டிக்கொள்ளவில்லை. "சரி அப்படியானால், இந்த தலைவலிக்கு மருந்து என்னவோ? அதையும் தாங்களே கூறலாமே" என்று கிருஷ்ணனிடம் கேட்டார் நாரத மகரிஷி.

"யார் என்னிடம் மிக மிக பக்தி கொண்டவர்களோ, அவர்களின் பாத தூசியை என் நெற்றியில் பூசிகொண்டால், குணமாகும்" என்று பகவான் கிருஷ்ணன் கூறினார். 

நாரத மகரிஷி நேரே ருக்மணியிடம் சென்று, பகவான் கிருஷ்ணன் சொன்ன விவரம் கூறி, "அவரின் பத்தினியான நீங்கள் அவரது ஹிருதயத்திலேயே இருப்பவர்., உங்களைவிட அவரிடம் மிகுந்த பக்தி கொண்டவர் வேறு யார் இருக்க முடியும் என்று சொல்லி, தங்களின் பாத தூசியை அவரின் நெற்றியில் பூசி விடவும்" என்று கேட்டுக்கொண்டார். 

ருக்மணி அதை கேட்டதும், பதறி அடித்துக்கொண்டு, "ஐயோ, என் பாத தூசியா? அதை அவரின் நெற்றியில் இடவா? அவரின் பத்தினியான நான் இதைச் செய்து பெரும் பாபம் வந்து என்னை பற்றிக்கொள்ளவா ? என்னால் முடியாது " என்று உள்ளே சென்று விட்டாள். 

சத்யபாமா இருக்கும் இடம் சென்று, அவரிடமும் நாரத கேட்க, "ஐயையோ, இது மிகப் பெரும் பாபம். இதை என்னால் எப்படிச் செய்ய முடியும்" என்று சத்யாபாமாவும் நழுவிகொண்டார்.

இப்படியே எல்லோரும் சொல்ல, இறுதியில் நாரத மகரிஷி, கோபிகா ஸ்திரீயிடம் சென்றார். அவர்களிடம், நாரதர், பகவான் கிருஷ்ணனின் தலைவலி பற்றிச் சொல்லி, "உங்களில் யார் அவருக்கு உங்கள் பாத தூசியை தர தயாராக இருக்கறீர்கள்" என்று கேட்டார். 

கோபிகா ஸ்திரீகள், பகவான் கிருஷ்ணனின் பக்தைகள் என்பதால் அவர்களும் இதற்கு உடன்பட மாட்டார்கள் என்று எண்ணினார்.

ஆனால், கோபிகா ஸ்திரீகளோ, "இதோ நான் தருகிறேன்., நான் தருகிறேன்" என்று எல்லோருமே முண்டியடித்துகொண்டார்கள். 

வியப்புற்ற நாரதர், "என்ன, நீங்கள் எல்லோருமே தர தயாராக இருக்கிறீர்களா? அவர் சாக்ஷாத் பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் அவதாரம். உங்கள் பாத தூசி அவர் நெற்றியில் படுவதால், உங்களுக்கு தாங்கவொண்ணாத பாபம் வந்து சேருமே ! பரவாயில்லையா?" என்று கேட்டார்.

அதற்கு கோபிகா ஸ்திரீகள், "பகவான் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு தலைவலி சரியாகும் என்றால், நாங்கள் எத்தகைய பாபத்தையும் செய்யத் தயாராக இருக்கிறோம்" என்று கோரஸாக ஒரு சேர சொன்னார்கள்.அவர்களின் பதிலைக்கேட்டு, புல்லரித்துப்போன நாரதர், கோபிகா ஸ்திரீகளை பகவான் ஸ்ரீ கிருஷ்ணனிடம் அழைத்துச் சென்றார்.

பகவான் கிருஷ்ணன் தலைவலியும்,கோபிகா ஸ்திரீகள் அங்கு வந்ததுமே சென்று விட்டது. 

"என்ன நாரதா? இப்போது புரிகிறதா? யார் என் மேல் அதீத பக்தி கொண்டவர்கள் என்று?" என்று கிருஷ்ணன் கேட்க, நாரத மகரிஷியும், பகவான் கிருஷ்ணன் மேல் கொண்ட கோபிகா ஸ்திரீகளின் அதீத பக்தியைப் புரிந்து கொண்டார்.