Thursday 14 March 2013

பொதுச் ஸேவை - பூர்த்த தர்மம் " & தீர்த்த தர்மம்


பொதுச் ஸேவை - (" பூர்த்த தர்மம் " : பலர் கூடிப் பொதுப்பணி)

பூர்த்தம் காதாதி கர்ம யத் என்று ஸம்ஸ்க்ருத டிக்ஷனரியான 'அமர'த்தில் சொல்லியிருக்கிறது. 'காதம்' முதலான கர்மாக்கள் பூர்த்தம் ஆகும் என்று அர்த்தம்.

காதம் என்றால் வெட்டுவது; அதாவது குளமோ, கிணறோ, வாய்க்காலோ வெட்டி உபகாரம் பண்ணுவது. சாஸ்திரங்களில் விசேஷித்துச் சொல்லியிருக்கிற இந்தப் பூர்த்த தர்மத்தை மறந்தால்தான், ஜலக்கஷ்டம் (Water scarcity) என்று ஓயாமல் அவஸ்தைப் படுகிறோம். அந்தக் காலத்தில் இந்தக் கார்யம் ரொம்பவும் முக்யமாகக் கருதப்பட்டதால்தான் நாம் கூப்பிட்டு ஒருத்தன் வரவில்லை என்றால், ''அவன் அங்கே என்ன வெட்டிக் கொண்டிருக்கிறானோ?'' என்று கேட்கிற வழக்கம் வந்திருக்கிறது. அதாவது அவன் வெட்டிக் கொண்டிருந்தால் மட்டும் நாம் எத்தனை அவஸரத்தில் கூப்பிட்டாலும் வராமலிருக்கலாம் என்று அர்த்தமாகிறது!

இப்போது வெட்டுகிற கார்யம் போய், தூர்ப்பது தான் முக்யமான கார்யமாக இருக்கிறது! குழாயில் தண்ணீர் நின்றுவிட்டாலோ அல்லது பூச்சியும் புழுவுமாகக் குழாய் ஜலம் வரும்போதோ, ''ஏண்டா குளத்தைத் தூர்த்தோம், கிணற்றை மூடினோம்?'' என்று துக்கமாக வருகிறது.

முன்பெல்லாம் ஒரு குளம் என்றால் வாய்க்கால்கள், வடிகால்கள் என்றெல்லாம் போட்டு வெகு சுத்தமாக வைத்துக் கொள்வார்கள். கிணறு என்றால் இழுக்கத் தெரிந்த மநுஷ்யனுக்கு மட்டும்தான் அது ப்ரயோஜனமாகும். குளமானாலோ வாயில்லா ப்ராணிகளுக்கும்-காக்காய், குருவி முதற்கொண்டு ஸகல ஜீவராசிகளுக்கும், அது பயன்படும். பாதை போடுவது ஒரு தர்மம். வ்ருக்ஷம் வைப்பது இன்னொரு தர்மம். புதிதாக வைப்பதோடு, இருக்கும் வ்ருக்ஷங்களை வெட்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். புதிதாக வைக்கிற செடிக்கு தினம் ஜலம் விட்டு, அது வ்ருக்ஷமாக வளரப் பண்ண வேண்டும். ''வனமஹோத்ஸவம்''என்று இன்றைக்குப் பெரிய மநுஷர்கள் வந்து செடி நட்டுவிட்டு நாளைக்கே அதற்கு ஜலம் விட ஆள் இல்லாமல் அது பட்டுப்போனால் என்ன ப்ரயோஜனம்? இதுமாதிரி டெமான்ஸ்ட்ரேஷன், வெளிவேஷம் நமக்கும் உதவாது, லோகத்துக்கும் உதவாது. இதற்குப் பதில் யாருக்கும் தெரியாமல் ஒருத்தன் ஏதோ ஒரு ஒற்றையடிப் பாதையில் உள்ள முள்ளை, கண்ணாடியை அப்புறப்படுத்தி வந்தால், அதுவே மற்றவர்களுக்கு வழியை சுத்தி பண்ணுவதோடு இவனுக்கும் சித்த சுத்தியைக் கொடுத்துவிடும்.

ஒவ்வோர் அவயவத்தாலும் ஏற்படக்கூடிய தோஷத்தைப் போக்கிக்கொள்ள அந்த அவயவத்தாலேயே செய்யக்கூடிய புண்ய கர்மாக்கள் இருக்கின்றன. குப்பைத் தொட்டியான மனஸை சுத்தம் பண்ண அந்த மனஸாலேயே த்யானம் செய்ய முடிகிறது. கண்டதைப் பேசுகிற நாக்கை சுத்தப்படுத்திக் கொள்ள அந்த நாக்காலேயே பகவந்நாமாவைச் சொல்ல முடிகிறது. குயுக்தி எல்லாம் பண்ணும் மூளையை சுத்தமாக்கிக் கொள்ள அந்த மூளையாலேயே தத்வ ஆராய்ச்சி பண்ண முடிகிறது. இப்படியே, இந்த சரீரத்தால் - கையாலும், காலாலும், உடம்பாலும் எத்தனையோ தப்பு தண்டா பண்ணுகிறோமல்லவா? அதை இந்த சரீரத்தாலேயே தான் சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும்.

சரீரப் பிரயாஸையாலேயே பண்ணிக்கொள்ளும் இந்த சுத்திதான் பொதுக்கார்யங்களான பூர்த்த தர்மங்கள்-ஸோஷல் ஸர்வீஸ்-அத்தனையும், சரீரப் பிரயாஸையாலேயே இது சித்த சுத்தியையும் தரக்கூடியது. ஏனென்றால் சரீரத்தால் செய்கிற இந்தக் கார்யங்களுக்கு மூலமாகப் பரோபகாரம் என்ற எண்ணம் நம் சித்தத்தில் இருப்பதுதான்.

தயை என்பது ஒவ்வொருவர் மனஸிலும் இருக்க வேண்டிய உயர்ந்த குணம். அந்த தயைக்கு உருக்கொடுக்கும்படியான ஒரு கார்யத்தை சரீரத்தினாலும் அவசியம் செய்ய வேண்டும்.

விநோபா 'ச்ரம்தான்' (ச்ரம தானம்) என்று சொல்லி வருகிறாரே, இதைத்தான் பூர்த்த தர்மம் என்று நம் சாஸ்த்ரங்களில் சொல்லியிருக்கிறது. வாரத்தில் ஒரு நாளாவது இந்த சரீர கைங்கர்யத்தை ஸகல ஜனங்களும் பண்ண வேண்டும் என்பது என் ஆசை. யாராயிருந்தாலும் வாரத்துக்கு ஒரு நாள் ஹாலிடே (விடுமுறை) இருக்கிறதல்லவா?அன்றைக்கு லோகோபகாரமாக சரீரத்தால் ஒரு பொதுப்பணி செய்ய வேண்டும். மனப்பூர்த்தியுடன், அல்லது மனப் பூர்த்திக்காக பூர்த்த தர்மம் பண்ண வேண்டும்.

அவரவருக்கும் எத்தனையோ குடும்பக் கார்யங்கள் இருக்கும் என்பது வாஸ்தவம்தான். இந்தக் கார்யங்களை லீவு நாளில் பார்த்துக் கொள்ளலாம் என்றுதான் வைத்திருப்பார்கள். ஆனாலும் இதோடுகூட பார்வதீ-பரமேஸ்வராளின் பெரிய லோக குடும்பத்துக்கும் தன்னாலானதை ஒரு 'ட்யூட்டி'யாக செய்யத்தான் வேண்டும். இதற்காக அதையும் விடக்கூடாது. அதற்காக இதையும் விடக்கூடாது. கொஞ்ச நேரமாவது இந்தப் பரோபகாரப் பணி புரிய வேண்டும்.

சரீர கைங்கர்யம் உடம்புக்கே ஒரு நல்ல exercise (அப்யாஸம்) . அதோடு பரோபகாரமாகப் பண்ணுகிற போது மனஸுக்கும் அலாதியான உத்ஸாஹம் இருக்கும். முடிவில் சித்த சுத்தியைத் தரும்.

ஸங்கமாகச் செய்ய வேண்டும். உதிரி உதிரியாக அவரவர்கள் செய்வதைவிட எல்லாரும் சேர்ந்து செய்தால் ஜாஸ்தி உபகாரம் பண்ண முடியும்.

அதுவும் இந்தக் கலிகாலத்தில் பலர் கூடிப் பண்ணுவதுதான் பலன் தரும்- கலௌ ஸங்கே சக்தி: என்றே வசனமிருக்கிறது. முன் யுகங்களில் individual -ஆக ஒவ்வொருத்தனுக்கும் தேஹ, மனோ சக்திகள் அதிகமிருந்தன. இப்போது அது போய்விட்டது. அதனால்தான் நாமும் பார்க்கிறோம், எல்லா mass movement -களாகவே (வெகுஜன இயக்கங்களாகவே) இருப்பதை அநேகமாக, 'கலி' என்றாலே சண்டை, சச்சரவு என்று அர்த்தமிருப்பதற்குப் பொருத்தமாக இந்த ஸங்க சக்தி மறியல், 'ஒழிக' ஊர்வலம் நடத்துவது, ரயிலைக் கொளுத்துவது முதலான காரியங்களுக்குத்தான் பிரயோஜனப்படுகிறது!

இந்த ஸங்க சக்தியை இனிமேலாவது நாம் நல்லதற்கு channelise பண்ணி ஸமூஹப் பணிகளை விருத்தி செய்ய வேண்டும்.

ஸங்கமாகச் சேர்ந்து தொண்டு செய்கிறவர்களுக்கு அத்யாவசியமாயிருக்க வேண்டிய யோக்யதாம்சங்கள்: அவர்களுக்குக் கட்டுப்பாடு (நியமம்) ரொம்பவும் தேவை. எடுத்துக்கொண்ட வேலையில் கொஞ்சம்கூடப் பொறுப்பு குறையக்கூடாது. ஸத்தியமும், அந்தரங்க சுத்தமும் இதுபோலத் தேவை. அன்போடு மதுரமாகப் பேசவும் பழகவும் வேண்டும். பணத்தைக் கையாளுவதில் அப்பழுக்கில்லாதவர்கள் என்ற நம்பிக்கையை உண்டு பண்ணக்கூடியவர்களாக இருக்கணும். நியாயமாக ஸந்தேஹப்படுபவர்களிடம் பொறுப்பில்லாமலோ, பொறுமையிழந்தோ பதில் சொல்லக்கூடாது.

அதே ஸமயத்தில் அநேக ஸந்தேஹப் பிராணிகள் ஏதாவது ரூமர் கிளப்பிக் கொண்டிருக்கிறார்களே என்பதற்காக ''நமக்கென்னத்துக்கு ஊரான் பாடு?'' என்று பொதுத் தொண்டை விட்டு விடவும் கூடாது. அதாவது ஸ்வயமான அவமானங்களை பாராட்டிக் கொண்டிராத மனப்பான்மை வேண்டும். நகரமானால் ஒரு பேட்டையில் இருப்பவர்களெல்லாம் சேர்ந்து செய்யலாம். க்ராமமானால், நாலு க்ராமத்து ஜனங்கள் ஒன்றுகூடிப் பண்ணலாம்.

ந ஹி ஜானபதம் து:கம் ஏக: சோசிதும் அர்ஹதி - என்று ஒரு வசனம் இருக்கிறது. ''ஊர்க் கஷ்டத்தைப் பற்றி ஒருத்தன் விசாரப்பட்டுப் பிரயோஜனமில்லை'' என்று இதற்கு அர்த்தம் பண்ணிக்கொண்டு, நம் மதத்தில் ஸமூஹ ஸேவா உணர்ச்சியை இல்லை என்று சொல்கிறார்கள். இது ஸரியில்லை. வாஸ்தவத்தில் இதன் அர்த்தம் இப்படியில்லை. ''ஏக: - ஒருத்தன்'' என்ற வார்த்தைதான் இங்கே முக்யமானது. தனி ஒருத்தனாக இருந்துகொண்டு ஊர்க் கஷ்டத்தைப் பார்த்துவிட்டு இவனும் அவர்களோடு சேர்ந்து அழுவதில் ப்ரயோஜனம் இல்லை; பல பேராகச் சேர்ந்து அந்தக் கஷ்டத்தை நிவ்ருத்தி பண்ணக் கார்ய ரூபத்தில் முயற்சி செய்ய வேண்டும் என்பதே இதன் அர்த்தம். ஒன்று, வெறுமே விசாரம் மட்டும் படக்கூடாது; கார்யத்தில் இறங்க வேண்டும். இரண்டாவது, தனியாகப் பண்ணினால் எடுபடாது. பலர் ஸங்கமாகச் சேர வேண்டும்.

பிறத்தியானைக் கஷ்டப்படுத்தியாவது ஸ்வயகார்யத்தை ஸாதித்துக் கொள்வதென்பதே பொதுத் குணமாக உள்ள நாம், இப்படிப் பலருக்குமான கார்யத்தைப் பலரோடு சேர்ந்து ஸ்வய ச்ரமத்தைப் பாராமல் அன்பினால் ஒன்றுபட்டுச் செய்கிறபோது அடைகிற தூய ஆனந்தம் தனியானது. கார்யம் நிற்கிறதும் நிற்காததும் ஒரு பக்கம் இருக்கட்டும். அதைச் செய்யும் போது பலர் ப்ரேமையில் ஒன்று கூடும் இன்பம் இருக்கிறதே, அதுவே ஒரு பெரிய பயன்.


தீர்த்த தர்மம்

பூர்த்த தர்மத்தில் தீர்த்த தர்மத்தை விசேஷமாகச் சொன்னேன். ரொம்ப ஜலக் கஷ்டமுள்ள இடத்தில் கிணறு, குளம் வெட்டுவதை ரொம்பவும் பெரிய தர்மமாக ஆதிநாளிலிருந்து ஸ்லாகித்துச் சொல்லியிருக்கிறது. இப்போது ராஜஸ்தான் ஸ்டேட்டில் சேர்ந்துவிட்ட ராஜபுதனம் ஒரே பாலைவனப் பிரதேசம் அல்லவா? அங்கே ஏழெட்டு மைலுக்கு ஒரு இடத்தில்தான் எவனாவது ராஜாவோ பிரபுவோ கிணறு வெட்டியிருப்பான். ரொம்ப ஆழத்தில், 'ஆதிசேஷன் தலைவரைக்கும்'என்பார்களே, அப்படிப் பாதாளம் வரைக்கும் தோண்டிக்கொண்டே போய்தான் இப்படி அபூர்வமாக எங்கேயாவது கிணறு வெட்டியிருக்கும். அந்தக் கிணற்றுக் கட்டைகளில் இந்த மஹா பெரிய தர்மத்தை இன்னான், இன்ன ராஜா காலத்தில் பண்ணினான் என்கிற details எல்லாம் ஸம்ஸ்க்ருதத்தில் கல்வெட்டுகளாகப் பொறித்திருக்கும். நம்முடைய ஹிஸ்டரி, கல்ச்சர் இவற்றை 'ஷேப்' பண்ணுவதற்கு ரொம்பவும் உதவியாயுள்ள இந்தக் கல்வெட்டுக்களுக்கு 'வாபீ ப்ரசஸ்தி' என்று பேர். 'வாபீ'என்றால் கிணறு; 'ப்ரசஸ்தி' என்றால் புகழ்மொழி. இப்போதும் ராஜஸ்தானியர்களான மார்வாரிகள் - அவர்களுக்கு ஜலக்கஷ்டம் நன்றாகத் தெரியுமாதலால் - கிணறு வெட்டும் தர்மத்தில் விசேஷமாக ஈடுபட்டிருக்கிறார்கள்.

க்ராமப் புறங்களில் எல்லாரும் சேர்ந்து குளம் வெட்டலாம். இருக்கிற குளங்களைத் தூர் வாரி சுத்தம் பண்ணலாம். பெரியவன் சிறியவன் என்றில்லாமல் எல்லோரும் சேர்ந்து பண்ணுவது முக்யம். கோடீஸ்வரனானாலும், பெரிய பண்ணையாரானாலும் அவனும் மண் வெட்டிக் கொண்டு வந்து போட வேண்டும். சாஸ்த்ரங்களில் அப்படித்தான் எழுதியிருக்கிறது. அஸ்திவாரக் கல் நாட்டுவது, டேப் முதலானதுகள் சாஸ்த்ரத்தில் இல்லை. எத்தனை பெரியவனானாலும் அவனும் வாஸ்தவமாகவே உடம்பு வேர்க்க மற்றவர்களோடு ஸரி ஸமமாகப் பூர்த்த தர்மம் பண்ணவேண்டும். ரதோத்ஸவத்தில் எல்லா ஜாதிக்காரர்களும் ஒன்றாகச் சேர்ந்து வடம் பிடித்து இழுக்கிற மாதிரிதான் இதுவும்.

No comments:

Post a Comment