Tuesday 12 March 2013

யமனும் அஞ்சினான் & தமிழ் நாட்டு வள்ளல்கள்



யமனும் அஞ்சினான் !

அதிதியை தெய்வமாக நினைப்பது, அவனைக் கவனிக்காவிட்டால் தெய்வக் குற்றம் செய்த மாதிரி பயப்படுவது, இதெல்லாம் நம் மதத்தின் முக்யமான அம்சங்களாகும். யமன் என்றால் நாம் எல்லோரும் கதி கலங்குகிறோம். அப்படிப்பட்ட யமனே கதிகலங்கி விட்டதாகக் கடோபநிஷத்தில் ஒரு கதையில் வருகிறது. அவன் யாரிடம் பயப்பட்டான்? ஒரு சின்ன பிராம்மணப் பிள்ளையிடம் தான் பயப்பட்டான்! ஏன் பயப்பட்டான்? இந்தப் பையன் யமனுடைய க்ருஹத்துக்கு வந்து மூன்று நாட்கள் எதுவும் சாப்பிடாமல் பட்டினி கிடந்துவிட்டான்! (அவன் ஏன் வந்தான் என்பது வேறு கதை) அதிதியருவனின வயிற்றுக்குப் போடாவிட்டால் அது மஹா அபசாரமாகுமே என்றுதான் ஸாக்ஷாத் யமனே பயந்து விட்டான். ஸர்வ லோகத்தையும் நடுங்கச் செய்கிறவன் இந்த வாண்டுப் பயலிடம் நடுங்கிக் கொண்டு வந்து, ''என் க்ருஹத்தில் நீ மூன்று ராத்திரி சாப்பிடாமல் இருந்து விட்டாய். இதனால் எனக்கு தோஷம் உண்டாகமல் இருக்க உனக்கு நமஸ்காரம் பண்ணுகிறேன் அப்பா. ஒவ்வொரு நாள் பட்டினி இருந்ததற்கும் ஈடாக ஒவ்வொரு வரம் வீதம் என்னிடம் நீ மூன்று வரம் வாங்கிக் கொள்'' என்று ப்ரார்த்தித்ததாக உபநிஷத் சொல்கிறது.

இங்கெல்லாம் 'பரோபகாரம்' என்று செய்கிறபோது இருக்கக்கூடிய 'ஸுபீரியாரிடி' மனப்பான்மை இல்லாமல், உபகாரத்துக்குப் பாத்திரனாகிறவனிடம் பயந்து பயந்து தாழ்ந்து, தெய்வத்துக்குப் பூஜை செய்கிற மாதிரி அவனுக்கானதைச் செய்வதையே பார்க்கிறோம். பரோபகாரத்தில் ஒரு முக்யமான அங்கமான ஈகையில் சிறந்தவர்களை நம் தர்மத்தில் தலைக்குமேல் வைத்துக் கொண்டு கொண்டாடுகிறோம். எத்தனையோ துர்குணங்கள் இருந்தால்கூட கர்ணன் போன்றவர்களைக் கொடைக்காகவே போற்றுகிறோம்.



தமிழ் நாட்டு வள்ளல்கள்

தமிழ் தேசத்திலும் வள்ளல்கள் என்று இவர்களை தெய்வத்துக்கு ஸமானமாகக் கொண்டாடுகிற வழக்கம் தொன்று தொட்டு இருந்து வந்திருக்கிறது.'' முதலெழு-இடையெழு-கடையெழு வள்ளல்கள்'' என்று குமணன், அதியமான் முதலான 21பேரை ஸ்லோகித்துச் சொல்லியிருக்கிறது. காரி, பாரி ஓரி என்றெல்லாம் ஏழு பேரைக் கடையெழு வள்ளல்கள் என்பார்கள். பாரி வள்ளல் முல்லைக் கொடி படருவதற்காகத் தன் தேரையே கொடுத்த கதை எல்லோருக்கும் தெரியும். இன்னொருத்தன் (பேகன்) மயில் குளிரில் நடுங்குகிறதே என்று தன் உத்தரீயத்தையே எடுத்து அதற்குப் போர்த்தினானாம்.

அதியமானுக்கு சிரஞ்ஜீவித்வத்தைத் தரக்கூடிய நெல்லிக்கனி கிடைத்தது. 'நாம் சிரஞ்ஜீவியாக இருந்து என்ன ஸாதிக்கப் போகிறோம்? அவ்வைப் பாட்டி இருக்கிறாளே, ஸதாவும் லோக க்ஷேமத்தைப் பண்ணிக் கொண்டு, ஊர் ஊராக ஓடி குழந்தைகளுக்கு உபதேசம் செய்து வருகிறாளே, அவள் திடகாத்திரத்தோடு எத்தனை ஆயசு இருந்தாலும் அதுதான் லோகத்துக்கு நல்லது' என்று அவன் நினைத்து அவளுக்கே அந்த நெல்லிக்கனியை தானம் பண்ணிவிட்டான்.

'அதியமான் பண்ணியது புத்திசாலித்தனமாக இருக்கிறது. ஆனால் முல்லைக்குத் தேராவது? மயிலுக்கு எங்கேயாவது குளிருமா?அதற்குப் பட்டுப் பீதாம்பரத்தைப் போர்த்தவாவது? இதெல்லாம் புத்தி இல்லாத கார்யமாக அல்லவா இருக்கிறது?' என்று கேட்கலாம். என்னைக் கேட்டால், இப்படி புத்திக்கு வேலையே இல்லாமல் முட்டாள்தனம் மாதிரி கூடத் தோன்றுகிற கார்யங்களைச் செய்வதுதான் நிஜமான அன்பை, நிஜமான த்யாகத்தைக் காட்டுகிறது என்பேன். அன்பு பீறிக்கொண்டு வருகிறபோது மூளையினால் அதற்கு நியாய அநியாயங்கள் பார்க்க முடியாது. இப்படித்தான், நாயன்மார்களைப் பார்த்தால் பெண்டாட்டியையே ஒருத்தர் தானம் பண்ணினார், இன்னொருத்தர் பிள்ளையையே கறி பண்ணிப் போட்டார் என்கிறபோது, இதெல்லாம் மூடத்தனம், உணர்ச்சிக் கட்டுப்பாடில்லாத கார்யம் என்று சொல்லக்கூடாது. அவர்களுக்கு எப்படிப்பட்ட த்யாக சிந்தனை இருந்தது என்பதுதான் முக்யம். மூளையால் ஸமாதானம் சொல்ல வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் உருட்டிப் புரட்டிக் கொண்டு வந்துவிட்ட த்யாகம்தான் நிஜமான த்யாகம் என்று என் அபிப்ராயம்.

இம்மாதிரி ஆவேசமாகப் பரோபகாரம் பண்ணின பெரியவர்கள் நம் தேசத்தில் ஆதிகாலத்திலிருந்து அவிச்சின்னமாக (தொடர் முறியாமல்) வந்து கொண்டே இருந்திருக்கிறார்கள்.

No comments:

Post a Comment