Wednesday 6 March 2013

''ஜீவகாருண்யம்'',''பரோபகாரம்'' என்று நினைப்பதே தப்பு - மஹா பெரியவா




 ''ஜீவகாருண்யம்'',''பரோபகாரம்''என்ற இரண்டு வார்த்தைகள், யோசித்துப் பார்த்தால் இந்த இரண்டு வார்த்தையுமே தப்புத்தான் ஏனென்றால்:

காருண்யம் - கருனை காட்டுவது - என்றால் இப்படிக் கருணை காட்டுகிறவர் ஒரு படி உயர நிற்கிற மாதிரியும், கருணைக்குப் பாத்திரமாகிறவர் ஒரு படி கீழே நிற்கிற மாதிரியும் தொக்கி நிற்கிறது. ''நாம் உசந்த ஸ்தானத்தில் இருக்கிறோம், நம் உதவியைப் பெறுகிறவர் நம்மைவிடத் தாழ்த்தியாக இருக்கிறார், நாம் 'கருணை'காட்டுகிறோம்''என்று நினைக்கிறபோதே நாம் செய்கிற உபகாரம் அசுத்தமாகிவிடுகிறது. உபகாரம் செய்வதன் பயனாக நமக்கு எளிமை, அடக்கம், அஹங்கார நீக்கம் ஆகியன உண்டாக வேண்டும். மாறாக நாம் உபகாரம் பண்ணும்போது, போனால் போகிறது என்றும் யாருக்கோ கருணை காட்டுகிற மாதிரி நினைத்தோமானால், இது ஆணவ அஹங்காரங்களுக்கு இடமாகிவிடுகிறது. உபகாரத்தால் நம் ஆதமாவை உயர்த்திக் கொள்வதற்கு நேர்மாறாக ஆத்மஹானியே உண்டாகிவிடும்.

கருணை, காருண்யம் என்கிற வார்த்தையைச் சொல்வதைவிட அன்பு என்று சொல்லிவிட்டால் இந்த ஏற்றத் தாழ்வு தொனிக்காமல் இருக்கும். அன்பு என்பது நம்மவர்களிடமே நாம் ஸ்வபாவமாகச் செய்கிற காரியம். இதிலே போனால் போகிறதென்று யாரோ அந்நியருக்கு இரக்கம் காட்டுகிற மாதிரியான அஹங்கார எண்ணம் இல்லை.

ஆனாலுங்கூட நடைமுறை உலகில் இப்படி நம்மவர், அசலார் என்கிற பேதமேயில்லாமல் ஸகலரையும் ஒரேபோல் பாவித்து, தாரதம்மியம் இல்லாமல் ஸ்வாபாவிகமான அன்பைச் செலுத்துவது என்றால் அது ஆரம்ப காலத்தில் ஸாத்யம் இல்லாமல்தான் இருக்கிறது. இந்தப் பொது இயற்கையை ஒப்புக் கொள்கிறது போலத்தான் திருவள்ளுவர்கூட அன்பு, அருள் (அருள் என்பதைக் கருணை என்று வைத்துக்கொள்ளலாம்) என்று பிரித்து distinction சொல்லியிருக்கிறார். அவர் என்ன சொல்கிறார்? "அருள் என்னும் அன்பீன் குழவி" என்கிறார். அன்பு ஈன்ற குழந்தையே அருள் என்று அர்த்தம்.

இப்போது நமக்கு வேண்டியவர்கள் என்று சிலரை மட்டும் நினைத்துக் கொண்டு அன்பு செலுத்துகிறோம் அல்லவா? இந்த 'வேண்டியவர்'களை நம் ஊரார், தேசத்தார், உலகத்தார் என்று மேலே விஸ்தரித்துக் கொண்டே போனால், அன்பிலிருந்தே படிப்படியாக அருள் பிறக்கிறது. அப்புறம் இப்படி அருள் பண்ணுகிறவனைப் பொருத்த மட்டும் அது 'அருள்',  'கருணை' என்றெல்லாம் உயர்வு விஷயமாக இல்லாமல், ஸ்வபாவமான, ஸஹஜமான அன்பாகவே ஆகிவிடுகிறது. ஆனாலும் இந்த அன்பைப் பெறுகிறவர்களோ அது ஸாதாரனமாக நண்பர்களிடையே பந்துக்களிடையே இருக்கிற அன்புமாதிரி இல்லாமல், நல்ல கனிவு பெற்று தெய்விகமான சக்தி பெற்றிருப்பதாக உணர்கிறார்கள். இந்த பக்குவமான, திவ்யசக்தி வாய்ந்த அன்பை 'அருள், அருள்' என்கிறார்கள்.

'எல்லா உயிர்களும் ஒன்றே; எல்லாவற்றிலும் ஈஸ்வரன் இருக்கிறான்' என்று ஒருத்தன் உணர்கிறபோதுதான் அவனுக்கு அருள் உண்டாகிறது. இவன் தன் மநுஷ்யர்களுடன் ஸமமான நிலையில் இருந்துகொண்டு பிரியம் காட்டுவதைவிட இன்னும் ஒருபடி கீழே இறங்கி தன்னைக் குறைத்துக்கொண்டு, மற்றவனை ஈஸ்வரனாக நினைத்துதான் ஸேவை செய்கிறான். 'நைச்சியம்' என்று இதை வைஷ்ணவர்கள் விசேஷித்துச் சொல்லுவர்கள் தன்னைத் தாழ்ந்தவானக, நீசனாக நினைத்து இன்னொருத்தனுக்கு ஸேவை செய்வதுதான் 'நைச்சியம்'.

இப்படி இவன் தன்னைக் குறைத்துக் கொள்கிறபோதுதான் இவனுடைய அன்பு வெறும் பேச்சாக, எண்ணமாக மட்டுமில்லாமல் அதற்குக் காரிய ருபத்திலேயே தெய்விகமான சக்தி உண்டாகி, அது 'அருளாக' ஆகிவிடுகிறது! கொஞ்சங்கூட மமதையே இல்லாமல் ''நாம் பெரியவர், உபகாரம் பண்ணுகிறோம்'' என்ற அகந்தையே இல்லாமல் இவன் ஸமஸ்தப் பிராணிகளிடம் ஈஸ்வர ஆராதனையாக அன்பைச் செலுத்துகிறபோது, அதுவே இவனை ஸகல பிராணிகளுக்கும் மேலே உயர்த்தி விடுகிறது. இவனுடைய அன்பு வெறும் பேச்சாகவும் எண்ணமாகவும் மட்டுமில்லாமல், காரியத்திலேயே ஈஸ்வராநுக்ரஹத்தை வாங்கித் தரக்கூடிய அருட் சக்தியைப் பெற்றுவிடுகிறது.

இவனுடைய ஜீவகாருண்யத்தால் இப்படி இவனே உயர்வதுதான் பெரிய பிரயோஜனமாகிறது. ஒருத்தன் உபகாரம் என்று நினைத்து இன்னொருத்தனுக்குச் செய்வது அவனுக்கு அபகாரமாக ஆனாலும் ஆகலாம்; அல்லது இவனுடைய உபகாரத்தை அவன் விரும்பாமலும் இருக்கலாம். அதாவது பிறத்தியானைப் பொருத்தமட்டில் இவனுடைய ஸேவை வீணாகவே போனாலும் போகலாம். ஆனால் இவனையே பொருத்தமட்டில் இவனுடைய அஹங்காரத்தைக் கரைத்து, இவனை (ஆத்மிகத்தில்) உயர்த்திவிடுகிறது.

இதனால்தான் 'ஜீவகாருண்யம்' என்கிற மாதிரியே 'பரோபகாரம்'என்ற வார்த்தையும் ஒரு தினுஸில் தப்புதான் என்றேன். பரனுக்கு (பிறத்தியானுக்கு) இவனுடைய ஸேவை உபகாரமாக இல்லாவிட்டாலும்கூட, ஸ்வயமாக இவனுக்கே சித்த பரிசுத்தியை உண்டாக்குவதால், இதை 'ஸ்வய உபகாரம்' என்றுதான் சொல்லவேண்டும்.

இது வேடிக்கையாக இருக்கிறது. அதாவது நாம் கருணை பண்ணுகிறோம், அருள் காட்டுகிறோம் என்ற எண்ணமே இல்லாதபோதுதான், இவனுக்கு தெய்விகமான 'அருளுடைமை'யே உண்டாகிறது. இப்படியே இவன் ஸ்வய நலனைக் கொஞசம்கூட நினைக்காமல் பரோபகார ஸேவை செய்வதுதான் உண்மையில் ஆத்ம லாபம் என்கிற பெரிய 
'ஸ்வய உபகாரம்' இருக்கிறது.

நல்ல அத்வைத திருஷ்டி வந்துவிட்டால் ஸ்வயம்(தான்), பரம்(பிறத்தியான்) என்கிற பேதமே இல்லாமல், எல்லாம் ஈஸ்வர ஸ்வரூபமாகப் பார்த்து, பல தினுஸில் கஷ்டப்படுகிறவர்களுக்கும் ஒருத்தன் தன்னுடைய இயற்கையான தர்மமாகவே ஆனந்தமாகப் பணி செய்து கொண்டிருப்பான். இப்போதும் 'பர உபகாரம்' என்ற phrase தப்பாகி விடுகிறது!  தனக்குப் பரமாகத்தான் இவனுக்கு எதுவுமில்லையே! '

' அனைத்து அறன்', அதாவது ஸர்வ தர்மமும் என்னவென்றால் அவரவரும் 'மனத்துக்கண் மாசிலன் ஆதல்', அதாவது, தங்கள் மனஸைத் தாங்களே துளிகூட அழுக்கில்லாமல் நிர்மலமாக சுத்தம் செய்துகொள்வதுதான் என்கிறார் திருவள்ளுவர். கர்மாநுஷ்டானத்தால் அவரவரும் சித்தசுத்தி ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிற வைதிக ஸம்பிரதாயத்தைத்தான் இங்கே திருக்குறளும் சொல்கிறது. முதலில் இவன் தன்னைத்தானே சுத்தம் பண்ணிக்கொள்ள வேண்டும். இது இல்லாமல் பரோபகாரம், ஸோஷல் ஸர்வீஸ் என்று கிளம்பினால் அது வெற்றுக் காரியம்தான்.

தான் அடங்கியிருக்க வேண்டும்; பக்தியோடு ஈஸ்வர ஸேவை என்று நினைத்து ஸமூஹ ஸேவை செய்ய வேண்டும். அப்போதுதான் அது பலனளிக்கும். அந்தரங்க சுத்தமில்லாமல் செய்கிற காரியங்கள் வெறும் படாடோபமாகவும், 'ஷோ'வாகவுமே முடிந்து போகும். இந்த படாடோபத்தால் 'ஸேவை' என்று செய்கிறவனுக்கு அஹங்காரம் மேலும் ஜாஸ்தியாகத்தான் செய்யும். அஹங்காரம் தொலைவதற்கு உதவவேண்டிய ஸேவையை அடக்குமும் பணிவும் பக்தியும் அன்பும் இல்லாமல் செய்தால் அஹங்காரத்தை அதிகமாக்கிவிடும். குளிக்க வேண்டும் என்று போய்ச் சேற்றை வாரிப் பூசிக்கொண்டதாகிவிடும்.

''தான் சுத்தமாவதுதான் ஸர்வ தர்மமும்'' என்றால் இது ஸ்வயநலம் மாதிரி அல்லவா இருக்கிறது என்று தோன்றலாம். ஆனால் இது நாம் லோக ரீதியில் நினைக்கிற மாதிரியான ஸ்வயநலம் இல்லை. பிறத்தியாரைக் கஷ்டப்படுத்தியாவது நம் இந்திரிய ஸுகங்களைப் பூர்த்தி பண்ணிக் கொள்வதுதான் தப்பான ஸ்வயநலம். மனஸை சுத்தப்படுத்திக்கொள்ளவேண்டுமானால் நாம் கஷ்டப்பட்டாவது நல்லதே பண்ண வேண்டியதாகிறது. இது இந்திய ஸெளக்கியங்களிலிருந்து நம் மனஸை மீட்டு சாச்வதமான பேரின்பத்தில் சேர்ப்பதற்கு உதவுகிறது. 'உபகாரம்' என்றால் பிறத்தியாருக்குச் செய்தால் மட்டும் போதுமா? இதோ நமக்கென்று ஈஸ்வரன் ஓர் உயிரைக் கொடுத்த மாதிரி கொஞ்சம் வெளியே அவிழ்த்து விட்டிருக்கிறானே, மனஸ் என்ற ஒன்றைக் கொடுத்து அதை நல்லது கெட்டது இரண்டிலும் ஆடுகிற மாதிரி விட்டிருக்கிறானே! இந்த நம் உயிருக்கு ஜீவாத்மா என்கிறார்களே அதற்கு, மட்டும் நாம் உபகாரம் பண்ணாமல் இருக்கலாமா? மனஸை நல்லதிலேயே செலுத்தி, பகவான் தந்திருக்கிற வாக்கு, சரீரம் எல்லாவற்றையும் நல்ல பேச்சு, நல்ல காரியங்கள் இவற்றிலேயே பிரயோஜனப்படுத்தி இந்த உயிரைப் பேரின்ப நெறியில் சேர்க்க நாம் கடமைப்பட்டிருக்கவில்லையா? சின்னதான ஸ்வயநலத்தைவிட்டு, இந்தப் பெரிய 'ஸ்வயநல'த்துக்கு எல்லோரும் பாடுபடத்தான் வேண்டும்.

இப்படிச் செய்வதற்குப் பரநலப் பணிகளே(பரோபகாரம்) ரொம்பவும் ஸஹாயம் செய்கிறது. இதிலே ஒரு வேடிக்கை - இவன் மனஸ் சுத்தமாக இருந்தால்தான் பரோபகாரம் நிஜமாக நடக்கிறது, பலன் தருகிறது; பரோபகாரத்தால்தான் இவன் மனஸே சுத்தமாகத் தொடங்குகிறது என்றால் contradiction (முரண்) மாதிரித்தானே இருக்கிறது? ஆனால் முரண்பாடு இல்லை. முதலில் இவனுக்கு மனஸ் சுத்தமாக இருக்க வேண்டும் என்ற தாபம் இருந்தாலே போதும். மனஸ் லேசில் கட்டுப்பட்டு வரத்தான் வராது. இந்திரிய ஸெளக்யத்தையே நினைத்து அது திரும்பத் திரும்ப ஓடிக்கொண்டுதான் இருக்கும். அப்போது, 'ஐயோ, இது திருந்த வேண்டுமே!'என்ற உண்மையான கவலை இருந்தால் இந்த விசாரத்துக்கே ஒரு நல்ல சக்தி ( effect ) உண்டு. இப்படி ஒரு தாபத்தோடு பரோபகார காரியங்கள் என்ற லகானைப் போட்டு அப்போதப்போதும் ஓடுகிற மனஸை இழுத்து ஒரு பொதுத் தொண்டில் செலுத்த வேண்டும். ஒன்றுக்கொன்று போஷித்து இட்டு நிரப்புவது, complementary என்கிறார்களே, அப்படிப், பரோபகாரப் பணி மனஸைக் கொஞ்சம் கொஞ்சமாக சுத்தம் பண்ணப் பணண, அந்தச் சித்த சுத்தியால் நாம் செய்கிற தொண்டும் கொஞ்சம் கொஞ்சமாக சுத்தமாகிக் கொண்டு சக்தியோடு பலன் தர ஆரம்பிக்கிறது. இப்படிப் பரோபகாரமும் ஆத்மாபிவிருத்தியும் ஒன்றுக்கொன்று கைகோத்துக் கொண்டு, பரஸ்பரம் பலம் தந்து கொண்டு வளர்கின்றன.

என்ன சொன்னாலும் வெளி உலகத்தை நாம் முழுக்க ஸரி பண்ணுவது நம் கையில் இல்லை. பல பேர் பல தினுஸான கர்மாவால் கஷ்டப்படும்போது நாம் எத்தனை ஸேவை செய்தாலும், அவர்கள் கர்மா குறுக்கே நின்று வெளியிலே பலன் இல்லாமலும் போகலாம். ஆனால் பிடிவாதமாக நாம் இந்தக் காரியத்தைச் செய்து கொண்டே வந்தால், அது நிச்சயமாக நம் கர்மாவைக் கழுவத்தான் செய்யும்; கர்ம வாஸனையால் ஏற்ப்பட்ட நம் உள் அழுக்குகளை அலம்பத்தான் செய்யும். இதனால்தான் திருவள்ளுவர், ''வெளியில் உன் தொண்டு பலன் தந்ததா" என்று proof (நிரூபணம்) தேடாதே! உன் மனஸிலே அழுக்கு போச்சா, மனத்துக்கண் மாசிலன் ஆனாயா என்று பார்த்துக்கொள். இந்த உள் proof - இதை யாரும் உன்னிடமிருந்து ஒளிக்க முடியாது - கிடைத்துவிட்டால் நீ பண்ணின தர்மம், அறன் பலித்துவிட்டது என்று அர்த்தம்'' என்று சொல்கிற மாதிரி குறளைப் பண்ணியிருக்கிறார். 

தீபத்தின் ஒளி எப்படி வித்யாஸம் பார்க்காமல், பிராம்மணன், பஞ்சமன், புழு, பக்ஷி, கொசு, மரம், மற்ற நீர்வாழ் ப்ராணிகள், நிலம் வாழ் விலங்கினங்கள் இவற்றின் மீது படுகிறதோ அப்படியே நம் மனஸிலிருந்து அன்பு ஒரு தீபமாக, எல்லோரையும் தழுவுவதாகப் பிராகாசிக்க வேண்டும்.

அதனாலேயே சொன்னேன்  ''ஜீவகாருண்யம்'',''பரோபகாரம்''  என்று நினைத்து செயலாற்றினால்,அதில் செய்கிற "நாம் உயர்வு " என்றும், பெறுபவர் "நம்மைவிட  தாழ்த்தி" என்றும் நினைப்பு வந்து, அஹங்காரம் ஏற்பட்டு, மன அசுத்தம் உண்டாகிவிடும்.கர்வம் வந்துவிட்டாலோ, அவ்வளவுதான், தர்மமும் ஸ்வாஹா ஆகிவிட வேண்டியதுதான்.

ஆதலால், இவ்வாறு   ''ஜீவகாருண்யம்'',''பரோபகாரம்''  செய்கிறோம் என்று எண்ணாமல்,அன்போடும்,ஈஸ்வர ஸேவையோடும் காரியமாற்றுவதே சரியாகும்.சித்த சுத்திக்கு அதுவே வழியாகும்.

No comments:

Post a Comment