Friday 30 March 2012

அருள் மழை - 34 - மஹா பெரியவாள் - மகாப்பெரியவரின் தேசப்பற்று - மனித நேயம்


ஒருமுறை ‘திருவாடனை’ என்னும் ஊரிலிருந்து பக்தர்கள் கூட்டம் பெரியவாளைத் தரிசிக்க வந்தது. பெரியவர்கள் அன்று காஷ்ட மௌனம் இருந்தார். அதாவது, ஒரு சிறு சப்தம் கூட எழுப்பாமல், முழுமையான மௌனத்தில் இருப்பார். வருடத்தில் ஒருநாள் அவர் இப்படி காஷ்ட மௌனம் இருப்பது வழக்கம். முப்பது வருடங்களுக்கும் மேலாக அவர் கடைப்பிடித்து வந்த வழக்கம் இது.
ஒருமுறை, அன்றைய பாரதப் பிரதமர் திருமதி இந்திராகாந்தி வந்த சமயத்தில்கூடப் ...பெரியவர் தம் மௌன விரதத்தை விட்டுக் கொடுக்கவில்லை.

அன்றைக்குத் திருவாடனை ஊரிலிருந்து வந்திருந்த பக்தர் கூட்டத்தில் சங்கரன் என்பவரும் இருந்தார். அவர் பிரிட்டிஷ் ஆட்சியின்போது தேச விடுதலைக்காகப் போராடி, ஆங்கிலேயர்களிடம் தடியடி பட்டு, இரு கண் பார்வையையும் இழந்தவர்.

மடத்துச் சிப்பந்தி ஒருவர், வந்திருந்த பக்தர் ஒவ்வொருவரையும் பெரியவாளுக்கு அறிமுகம் செய்துவைக்க, பெரியவர் மௌனமாகவே ஆசி வழங்கிக்கொண்டு இருந்தார்.

சங்கரன் முறை வந்தபோது, அவரையும் பெரியவருக்கு அறிமுகம் செய்தார் மடத்துச் சிப்பந்தி. சங்கரனை பெரியவருக்கு ஏற்கெனவே தெரியும். சங்கரனைப் பார்த்ததும் பெரியவர் உரத்த குரலில், “என்ன சங்கரா? எப்படி இருக்கே? சௌக்கியமா? உன் மனைவியும் குழந்தைகளும் நன்னா இருக்காளா? இன்னும்கூட உன்னால முடிஞ்ச வரைக்கும் தேசத் தொண்டு செஞ்சுண்டு இருக்கே போலிருக்கே?” என்று கேட்டு, ஆசீர்வதித்தார்.

சங்கரனுக்கு ரொம்ப சந்தோஷம். அதே நேரம், மடத்து சிப்பந்திகளுக்கும் மற்றவர்களுக்கும் பெரிய ஆச்சரியம்… முப்பது வருஷமாகக் கடைப்பிடித்து வரும் மௌன விரதத்தை முறித்து விட்டாரே பெரியவர் என்று! எல்லோரும் பிரசாதம் வாங்கிக்கொண்டு அங்கிருந்து அகன்ற பின்பு, சிப்பந்திகள் தயங்கித் தயங்கிப் பெரியவரிடம் சென்று, “பெரியவா எதுக்காக மௌன விரதத்தை முறிச்சுட்டீங்க? எல்லாருக்கும் மௌனமா ஆசி வழங்கினது போலவே இந்தச் சங்கரனுக்கும் ஆசி வழங்கியிருக்கலாமே? இவர் என்ன அவ்வளவு பெரிய ஆளா?” என்று கேட்டனர்.

பெரியவர் புன்னகைத்தபடியே, “எல்லாரையும் போல சங்கரனை நடத்தக் கூடாது. இவனுக்குப் பாவம் கண் தெரியாது. என்னைப் பார்த்து ஆசி வாங்கணும்னு அவ்வளவு தூரத்திலேர்ந்து வந்திருக்கான். அவனால் என்னைப் பார்க்க முடியாது. நானும் மௌனமா ஆசீர்வாதம் பண்ணினேன்னா, அது அவனுக்குப் போய்ச் சேராது. நான் அவனைப் பார்த்தேனா, ஆசீர்வாதம் பண்ணினேனான்னு அவனுக்குத் தெரியாது. மனசுக்குக் குறையா இருக்கும். வருத்தப்படுவான். இந்தத் தேசத்துக்காகத் தன் கண்களை தானம் செஞ்சவன் அவன். அவனுக்காக நான் என் ஆசாரத்தை விட்டுக் கொடுத்தேன்னா ஒண்ணும் குடிமுழுகிப் போயிடாது. அதனால எதுவும் குறைஞ்சுடாது. அவனோட தியாகத்துக்கு முன்னாடி என்னோட ஆசாரம் ஒண்ணுமே இல்லே!” என்றார் நிதானமாக.

பெரியவர் வெறும் சாஸ்திர சம்பிரதாயங்களை மட்டும் வறட்டுப் பிடிவாதமாகப் பிடித்துக்கொண்டு இருப்பவர் அல்ல; அதற்கும் மேலாக மனிதாபிமானத்தை, மனித நேயத்தையே விரும்பியவர்; இந்த விஷயத்தில் மற்றவர்களுக்குத் தாமே ஒரு வழிகாட்டியாகவும் திகழ்ந்தார் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஓர் உதாரணம்!

No comments:

Post a Comment