Saturday 10 March 2012

மனஸை நெகிழவைக்கும் பெரியவா பேரருள்...

பெரியவா சாதாரணமாக ரொம்ப கூட்டம் இல்லாவிட்டால் கூட, இரவு பத்து மணியானாலும் பக்தர்களின் குறைகளை கேட்டு உபாயமோ ஆறுதலோ சொல்லுவது வழக்கம்.  ஒருநாள் எல்லாரும் போனதும், பெரியவா ஸயனிக்க உள்ளே போனார்.  எனவே சிப்பந்திகள் தாழ்ந்த குரலில் ஏதோ பேசிக் கொண்டிருந்தபோது.......

 "நான் பெரியவாளை தர்சனம் பண்ணனும்" குரல் கேட்டு யாரென்று பார்த்தால், ஒரு 12 வயஸ் பையன் மிகவும் பரிதாபமான கோலத்தில் நின்று கொண்டிருந்தான்.

"இப்போல்லாம் பெரியவாளை பாக்க முடியாது........சாப்டுட்டு ஒரு பக்கமா இங்கியே படுத்துக்கோ....காலேல தர்சனம் பண்ணு" பாரிஷதர் சொன்னார். இப்படி ஒரு பரிதாபமான கோலத்தில் ஒரு பையன் வந்திருக்கிறான் என்று பெரியவாளை எழுப்ப முடியாது. சிறுவன் விடுவதாயில்லை.

"எனக்கு இப்போ பசிக்கலை...பெரியவாளை மட்டும் எப்பிடியாவது தர்சனம் பண்ணனும் அண்ணா..." என்று சொல்லிவிட்டு, மிகவும் களைத்துப்போய் இருந்ததால், ஒரு பக்கமாக படுத்துக் கொண்டுவிட்டான். மறுநாள் காலை பெரியவா சிறுவனை தன்னிடம் அழைத்தார்.
 
"ஏம்பா....எங்கேர்ந்து வரே? ஓம்பேரென்ன? ஒங்கப்பா அம்மா யாரு? எங்கேயிருக்கா?........" ஸ்ரீ மாதாவின் குரலை அந்த கன்று இனம் கண்டுகொண்டது. கண்களில் நீர் பெருக அந்த குழந்தைப் பையன் சொன்னான்..........

"பெரியவா.....நான் மெட்ராஸ்ல ஒரு ஸ்கூல்ல படிச்சிண்டிருக்கேன்..எங்கப்பா, அம்மா, தங்கை மூணுபேரும் வெளியூர்ல இருந்தா. அப்பா திடீர்னு செத்துப் போய்ட்டார். அம்மாவும் தங்கையும் ரொம்ப கஷ்டப்பட்டா...பாவம்! அப்புறம் பம்பாய்ல ஒரு பெரிய பணக்கார மாமாவாத்ல சமையல் வேலை பண்ணிண்டு இருந்தா.....[சிறுவன் மேலே பேச முடியாமல் விம்மினான்]
.......திடீர்னு எங்கம்மாவும் செத்துப் போய்ட்டா பெரியவா........" இதற்கு மேல் குழந்தையால் தொடர முடியாமால், விக்கி விக்கி அழ ஆரம்பித்தான். 

"......அப்பா அம்மா ரெண்டுபேரையுமே என்னால கடைசி வரைக்கும் பாக்க முடியலை பெரியவா. அவாளுக்கு கார்யம் பண்ணக்கூட என்னால முடியாது. நேக்கு இன்னும் பூணூல் போடலை..ங்கறதால பண்ண முடியாதுன்னு சொல்லிட்டா...எனக்கு ரொம்ப அழுகையா வருது பெரியவா.....இப்போ அந்த பம்பாய்ல இருக்கற மாமா வேற, "ஒன்னோட  தங்கையை வந்து அழைச்சிண்டு போ!" ன்னு எப்போப்பாத்தாலும் ஆள் விட்டுண்டே இருக்கார்......பெரியவா. நானே கவர்ன்மென்ட் ஸ்கூல் ஹாஸ்டல்ல இருக்கேன். என் அப்பா அம்மாக்கு கர்மாக்களைப் பண்ணனும், என் தங்கையை நன்னா வெச்சுக்கணும்..ன்னு நேக்கும் ரொம்ப ஆசையாத்தான் இருக்கும் பெரியவா. ஆனா, நானே சோத்துக்கு வழி இல்லாம இருக்கேனே! அதான்.....ஒங்களை தர்சனம் பண்ணினா எனக்கு வழி சொல்லுவேள்னு மடத்துக்கு வந்தேன்....." அழுகையோடு தட்டுத் தடுமாறி சொன்னான். அவனையே சிலவினாடிகள் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். அவன் சொல்லித்தானா அவருக்கு தெரியவேண்டும்? அவனைக் காப்பாற்றத்தானே இங்கே வரவழைத்திருக்கிறார்!

"சரி. கொழந்தே! நீ கொஞ்ச நாள் இங்கியே இரு. என்ன?"  

"சரி" என்று சந்தோஷமாக தலையாட்டியது அந்த குழந்தை.  நாலைந்து நாட்களுக்குப் பிறகு, நெய்வேலியிலிருந்து சில உயர் அதிகாரிகள் பெரியவா தர்சனத்துக்கு வந்தார்கள். அவர்கள் கிளம்பும்போது, எதேச்சையாக அந்த பையன் அந்தப் பக்கம் வர, பெரியவா அவனிடம் " சட்னு போய், அந்த நெய்வேலிலேர்ந்து வந்தவா போய்ட்டாளான்னு பாரு! போகலைனா, நான் கூப்டேன்னு சொல்லு"..........அவருடைய திருவிளையாடலை யாரறிவார்?

அவர்கள் கிளம்பவில்லை. ஒவ்வொருவராக பெரியவா முன்னால் வர வர, "நீ இல்லை, நீ இல்லை" என்று திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தார். கடைசியாக வந்தவரைப் பார்த்ததும் பெரியவா முகத்தில் ஒரு புன்சிரிப்பு. "ம்ம்ம்ம்..இவரைத்தான் கூப்ட்டேன். இந்தாடா! கொழந்தே! ஒன்னோட கதையை இவர்கிட்ட சொல்லு" என்று சொன்னார். பையன் சொல்ல சொல்ல அதிகாரியின் முகத்தில் ஒரே ப்ரகாசம்!

"பெரியவா........என்னோட அக்கா பம்பாய்ல இருக்கா.அவாத்துலதான் இந்த பையனோட அம்மா சமையல் வேலை பாத்துண்டு இருந்தா. அந்த அம்மா செத்துப் போனதும், என் மூலமாத்தான் இந்த பையனுக்கு தகவல் போச்சு! இவன் தங்கையை அழைச்சிண்டு போகணும்..ன்னு என் மூலமாத்தான் அவா சொல்லிண்டு இருந்தா......." என்று மனஸார ஒப்புக்கொண்டார்.
i
"ரொம்ப நல்லதாப் போச்சு! இங்க பாரு. இந்த கொழந்தை பெத்தவாளை பறிகுடுத்துட்டு தவிக்கறான்.....இவனோட, இவன் தங்கையையும் ஒன்னோட அழைச்சிண்டு போய், அவாளை படிக்கவெச்சு, ஆளாக்கறது ஒன்னோட பொறுப்பு! மொதல்ல இவனுக்கு உபநயனம் பண்ணி வை. அவனைப் பெத்தவாளுக்கு கர்மாக்களை அவன் கையால பண்ண வை. ஆகக்கூடி, இவா ரெண்டு பேரோட எதிர்காலத்துக்கு நீதான் எல்லாம் பண்ணனும். என்ன செய்வியா?"

அதிகாரிக்கோ சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை! பிரமிப்போ அதை விட பன்மடங்கு ! என்ன ஒரு லீலை! எப்படி கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்! எல்லாரையும் விட்டுவிட்டு தன்னிடம் அவர் கட்டளை இட்டது, தனக்கு கிடைத்த பெரும் பாக்யம் என்று பூரித்துப் போனார்.

அக்ஷணமே பெரியவா பாதத்தில் விழுந்து அந்த பையனையும், அவன் தங்கையையும் தன் சொந்தக் குழந்தைகள் போல் பாதுகாப்பதாக உறுதி மொழி குடுத்தார்.  பெரியவாளை நம்பினார் கெடுவதில்லை என்று அந்த குட்டிப் பையனுக்குக் கூட தெரிந்திருக்கிறது.

No comments:

Post a Comment