Saturday, 10 March 2012

பெரியவாளின் பெரும் கருணை ....!!!!

சிவாஸ்தானத்தில் பெரியவா தங்கியிருந்தபோது, காட்டுப்புத்தூரை சேர்ந்த ஒரு பெரிய பணக்காரர் தர்சனம் பண்ண வந்தார். அவர் கொண்டு வந்த காணிக்கை என்ன தெரியுமா?  ரெண்டு ரஸ்தாளி வாழைப்பழத்தார்கள். ஒவ்வொன்றிலும் பத்து,பன்னெண்டு சீப்புகள் இருக்கும். ஒரு தாரையே ரெண்டு பேர் சுமக்க வேண்டியிருந்தது. அத்தனை பெரிய பழங்கள்! சீப்பு...... கனம் என்பதால் மட்டும் இல்லை, பெரியவாளுக்கு சமர்ப்பிக்கும்போது, பழங்கள் நசுங்காமல் இருக்கவே ரெண்டு பேர் தூக்கிக் கொண்டு வந்தனர்.

அன்போடு தன்னைக் காண வந்த பக்தருக்கு பிரசாதம் கொடுத்து அனுப்பிவிட்டு, சிஷ்யரைக் கூப்பிட்டார். 

"டேய்! அந்த ரெண்டு தார்களையும் ஜாக்ரதையா எடுத்து உள்ள வை ! பழத்த பாத்தியோ ! எவ்வளவு மொழு மொழுன்னு இருக்கு!........ஒரு பழம் சாப்ட்டாலே போறும் போலருக்கு. சாப்பாடே தேவையில்லே!....நாலு நாளைக்கு ஒங்களுக்கெல்லாம் கவலையே இல்லே!"

ம்ஹும் ! இது வெறும் சிஷ்யாளோட கல்பனை. ஏனென்றால்  பெரியவா இந்த மாதிரி உத்தரவிடவில்லை..........மாறாக, 

"டேய்! இந்தா.......இந்த ரெண்டு தாரையும் கொண்டு போய், வாசல்ல ஒரு பெரிய புளியமரம் இருக்கோல்லியோ?........அதோட கெளைல [கிளை] கைக்கு எட்டறா...ப்ல கட்டி தொங்க விடுங்கோடா !" என்று சொன்னார்.

அந்யாயம்! அக்ரமம்!...பெரியவா இப்பிடி எல்லாம் எங்களுக்கு அநீதி இழைக்கக் கூடாது! நாங்கள் இதை பலமாக கண்டிக்கிறோம்......என்றெல்லாம் வாயால் சொல்லவே முடியாது என்பது மட்டுமில்லை...........மனசால் கூட நினைக்க முடியாது.  

சிவாஸ்தானம்-தேனம்பாக்கம் பகுதியை சேர்ந்த மக்கள் வறுமைக் கோட்டுக்கும் கீழே வாடுபவர்கள். பொறுப்பில்லாத ஆண் 'குடி' மக்கள் நன்றாக குடித்து விட்டு, பசியோடு வீட்டுக்கு போய் அங்குள்ள பெண்கள், குழந்தைகளை அடித்து நொறுக்குவார்கள். இது அன்றாடம் வாடிக்கையாக நடப்பது! நம்முடைய கருணைக் கடலுக்கு இது தெரியாதா? ஏழை பங்காளன் இல்லையா?

வாழைத்தார் கட்டின அன்று இரவு அவ்வழியாக குடித்துவிட்டு வீட்டுக்கு போனவர்கள், வாழைதாரிலிருந்து பழத்தை பிய்த்து சாப்பிட்டுவிட்டு போனார்கள். பெரியவா 'ப்ளான்' படி, பசி வெகுவாக அடங்கியதால், வீட்டில் உள்ள பெண்களும், குழந்தைகளும் அடியிலிருந்து தப்பித்தனர். [பெரியவாளுக்கு தெரியாத சூக்ஷ்மமா?]

மறுநாள், நிரந்தர உத்தரவு வந்தது............."மடத்துக்கு வர்றவா குடுக்கற பழத்தையெல்லாம் புளியமரத்ல தொங்க விடுங்கோ !" அதிலிருந்து புளிய மரத்தில் தினமும் வாழைப்பழம் !!

சுமார் பதினைந்து நாட்களுக்குப்பின், அந்த கிராமத்தை சேர்ந்த பெரியவர் ஒருவர் வந்தார்........."ஸாமி, இப்போ ரொம்ப ஆளுங்க திருந்திட்டாங்க. 'தண்ணி' போடறதையே நிறுத்திட்டாங்க ஸாமி! குடிசைல பொம்பளைங்க, கொளந்தைங்க எல்லாம்  இப்போ சந்தோஷமா இருக்காங்க ஸாமி!..." வணங்கினார்.

மாற்றத்துக்கு காரணம்............வாழைப்பழமா? இல்லை. ஞானப்பழமாக பூமியில் உதித்த பெரியவாளின் பெரும் கருணை மட்டுமே இது!

பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்த பெரியவா, பழங்களில் [பழம்+கள்] உள்ள 'கள்ளை' ஒழித்து, பழத்தை மட்டும் தன் குழந்தைகளுக்கு ஊட்டினார்.

No comments:

Post a Comment