Saturday, 10 March 2012

எந்தப் பொருளையும் வீணாக்கக்கூடாது-காஞ்சிப்பெரியவர்


 
காஞ்சிப்பெரியவர் புனே அருகில், ஒரு மலையடிவார கிராமத்தில் முகாமிட்டிருந்தார். அங்கு திருவெண்காட்டைச் சேர்ந்த ஜெயராமன் வந்தார். அவரிடம் பரிவுடன், “”இந்த சின்ன கிராமத்திற்கு கூட வந்திருக்கியே. பரம சந்தோஷம்! ஒவ்வொரு நாள் காலை பூஜையின்போது நீ தீட்சிதர் கீர்த்தனைகளைப் பாடு. நாங்கள் எல்லோரும் கேட்கவேண்டும்,” என்றார்.
ஜெயராமனுக்கு பூரிப்பு. ஒருநாள் வெள்ளிக் கிழமை பூஜை… பூஜை முடிந்ததும் சுக்கிரவார கீர்த்தனையைப் பாடத்தொடங்கினார் ஜெயராமன். அன்று யாருக்கும் பெரியவர் பிரசாதம் கொடுக்கவில்லை. ஜெயராமனுக்கு மட்டும் பிரசாதம் கொடுத்து சென்னைக்கு கிளம்பிச் செல்ல உத்தரவிட்டார்.
பெரியவர் கண்டிப்பாக சொன்னதும் ஜெயராமனுக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் பெரியவர் சொல்வதில் ஏதோ உள்ளர்த்தம் இருக்கும் என்று மனதிற்கு தோன்றியது. மறுவார்த்தை பேசாமல் சென்னை சென்றுவிட்டார். வீட்டுக்கு வந்ததும் அவரது குருநாதர் மதுரை மணிஐயர் வீட்டிலிருந்து உடனே வரும்படி அழைப்பு வந்தது. குருநாதருக்கு ஏதோ அவசரம் என்பதை உணர்ந்த ஜெயராமன் அவரது வீட்டுக்குக்குச் சென்றார். இரண்டு நாட்கள் இரவும் பகலும் குருநாதர் அருகில் இருந்து சேவை செய்தார். மதுரை மணி ஐயர் இறைவனடி சேர்ந்தார். தன் குருநாதரின் இறுதிக்காலத்தில், அவருக்கு சேவை செய்யும் பாக்கியத்தை அளிப் பதற்காகவே பெரியவர் தன்னை சென்னை அனுப்பினார் என்பதை அறிந்த ஜெயராமனின் உள்ளம் உருகியது.
இன்னொரு அற்புதத்தையும் பெரியவர் செய்தார்.
மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் அவர் முகாமிட்டிருந்தார். சுவாமிகளைத் தரிசிக்க ஆயிரக்கணக்கில் மக்கள் கூடியிருந்தனர். பெரியவர் தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்த இடத்தில் தரையில் சில வெற்றிலைகள் கிடந்தன. அதைப் பார்த்த சுவாமிகள் சிஷ்யனை அழைத்து, அதனை எடுத்து வைக்கும் படி சொன்னார். தரையில் கிடக்கும் வெற்றிலையை ஏன் எடுக்கச் சொல்கிறார் என்ற குழம்பிய சிஷ்யர் வெற்றிலையை எடுத்து பத்திரப்படுத்தி வைத்தார். அந்த சமயத்தில், எப்படியாவது பெரியவரை தரிசித்து ஆசிர்வாதம் பெற வேண்டும் என்ற வைராக்கியத்துடன் முண்டியடித்து கூட்டத்தின் நடுவே கர்ப்பிணி பெண் ஒருவர் வந்து கொண்டிருந்தார். கூட்டநெரிசலில் சிக்கி முன்னேறிய அந்தப் பெண்ணுக்கு தலைசுற்றல் ஏற்பட்டது. அவளது நிலையைப் புரிந்துகொண்ட பெரியவர் சிஷ்யரை அழைத்து, அந்த வெற்றிலைகளை அந்தப் பெண்ணுக்கு கொடுக்கச் சொன்னார்.
அந்தப் பெண் வெற்றிலையை வாயில் போட்டுக் கொண்டதும் அவளின் தலைசுற்றல் தீர்ந்து போனது. அப்பெண் வேறு யாருமல்ல. அமரர் ரசிகமணி டி.கே.சி. பரம்பரையைச் சேர்ந்தவர். அவரது பெயர் ஞானஒளி.
“”உடலை உறுத்தும் நோயை
உள்ளன்போடு போக்கும் தெய்வம்!
சாந்த சொரூபமான
சந்திரசேகரேந்திர சரஸ்வதியாக
அருள் தரும் தெய்வம்!
தாயாகி தந்தையுமாகி
எனை தாங்குகின்ற தெய்வம்!
துன்பம் துயர் போக்கும் நண்பனாகி
துணை நின்ற தெய்வம்!”
என்று பெரியவர் மீது ஒரு அருமையான கவிதையும் பாடிச் சென்றார். எந்தப் பொருளையும் வீணாக்கக்கூடாது என்பதில் பெரியவர் கொண்டிருந்த அக்கறையை இந்த சம்பவம் எடுத்துக் காட்டியது.

No comments:

Post a Comment