Wednesday, 30 January 2013

பிரம்மாவின் ஆயுள் - மஹா ஸ்வாமிகள்




"ஹிந்து சாஸ்திரங்களில் ஒரே நான்ஸென்ஸாக விஷயங்கள் இருக்கின்றன. பூமிக்கு வடக்கே மேரு சிகரம் இருக்கிறதாம். அங்கே உள்ள தேவர்களுக்கு நம்முடைய ஒரு வருஷம் ஒரு நாளாகி விடுகிறதாம். அந்த மேருவை ஸூரியன் சுற்றுகிறானாம். உப்பு ஸமுத்திரம் மட்டுமில்லாமல் இக்ஷூ(கருப்பஞ்சாற்று) ஸமுத்ரம், க்ஷீர ஸமுத்ரம் (பாற்கடல்) என்று ஏழு விதமான ஸமுத்ரங்கள் இருக்கின்றனவாம். ஐந்து கண்டங்களாகவே பிரிந்துள்ள உலகத்தை ஏழு தீவு கொண்டது ('ஸப்த த்வீபா') என்று வேறு சொல்கிறார்கள். எல்லாம் ஒரே பேத்தல்"என்று பரிஹாஸம் பண்ணுகிறார்கள்.

இருக்கட்டும். இந்த ஸமுத்ரம் ஏன் இத்தனை உப்புக் கரிக்க வேண்டும்? யார் அதிலே இவ்வளவு உப்பைக் கொட்டினது? இதே மாதிரி தித்திப்பு, பாலின் சுவை முதலி உள்ள கடல்களில் ஏன் இருந்திருக்க முடியாது?
சரி, ஸப்த த்வீபா என்றும் ஸப்த ஸாகரம் என்றும் சொல்வது தப்பு என்கிறார்களே, இவற்றைச் சொல்கிற சாஸ்திரத்தில் பூமியின் பொஸிஷனைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறது?' பூமியின் வடகோடியிலே மேரு இருக்கிறது. அதற்கு நேர் எதிரே த்ருவ நக்ஷத்திரம் இருக்கிறது' என்று சொல்லியிருக்கிறது.

வடகோடிதான் North pole (வட துருவம்) என்று வைத்துக் கொள்ளலாம். இப்போது த்ருவ (துருவ) நக்ஷத்ரம் இதற்கு நேரேயா இருக்கிறது என்று பார்த்தால், அப்படியில்லை. Pole -க்கு 'த்ருவம்' என்ற பெயரே அந்த நக்ஷத்திரத்தின் பெயரை வைத்துத்தான். ஆனாலும் இப்போது அதற்கு நேரே 'போல்' இல்லை. "ஆதியில் நேரேதான் இருந்தது. அப்புறம் பெரிய மாறுதல்கள் ஏற்பட்டுப் பூமி கொஞ்சம் சாய்ந்து விட்டது" என்று நவீன ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். நேரே சுற்றும் பம்பரமாக த்ருவ நக்ஷத்ரத்தை நேரே நோக்கிய நிலையில் பூமி சுற்றிய காலத்தைச் சொல்கிற சாஸ்திரம் அப்போது இருந்த ஏழு தீவுகளையும் ஏழு கடல்களையும் சொல்கிறது. பம்பரம் சுற்றுவதில் கோணல் ஏற்பட்ட போது, ஸப்த சமுத்ரங்களும் கலந்து உப்பாகிவிட்டது என்கிறேன். அந்த வெள்ளத்தில் ஸ்பத த்வீபங்கள் ஐந்து கண்டங்களாக மாறிவிட்டன என்கிறேன்.

நம்முடைய வட துருவத்தின் மேலே ஒரு ஸ்தானம் இருக்கிறது என்றால், அதுதான் ஸ்வர்க்கம் இருக்கிற மேரு. இந்த பூலோகம் ஒரு எலுமிச்சம் பழம் என்று வைத்துக் கொண்டால் அதன் உச்சியில் உள்ள புள்ளி மேரு சிகரம். அந்த உச்சிக்கு எந்தப்பக்கமும் தெற்குதான். உச்சியான அந்த பாயின்டிலிருந்து கிழக்கேயோ, மேற்கேயோ, வடக்கேயோ, எங்கே போவது? எங்கேயும் போகமுடியாது. கீழே தெற்கில் இறங்குகிறது தவிர வேறு திசையே இல்லை. எலுமிச்சம் பழத்தின் உச்சியில் ஒரு பாயிண்டை வைத்துப் பார்த்தால் இது தெரியும். பூமியில் உள்ள எல்லாத் தேசங்களுக்கும் (வர்ஷங்களுக்கும்) வடக்கு மேருதான். ஸர்வேஷாமபி வர்ஷாணாம் மேரு: உத்தரத ஸ்தித: என்றதன் அர்த்தம் இதுதான்.

துருவத்திலே எப்படியிருக்கிறது? அங்கே ஆறுமாஸம் முழுவதும் பகலாகவும், ஆறு மாஸம் முழுவதும் இரவாகவும் இருக்கிறது. இதை ஆரம்ப கிளாஸிலேயே படித்திருக்கிறோமே! ஒரு பகலும் ஒரு இரவும் சேர்ந்தது ஒரு நாள் என்கிறபடி, ஆறுமாஸம் பகலாகவும் ஆறு மாஸம் இரவாகவும் உள்ள துருவதற்கு நம்முடைய ஒரு வருஷம் ஒரு நாளாகிறது. இதைத்தான் தேவர்களுடைய ஒரு தினம் நமக்கு ஒரு வருஷம் என்பது.

பூமி சுற்றும்போது அதன் பக்கவாட்டிலிலுள்ள ஸகல பாகங்களும் சுற்றினாலும், உச்சிப் பாயின்டும், இதே மாதிரி அடியில் தென்துருவத்தில் உள்ள பாயின்டும் சுற்ற முடியாது. சுற்ற முடியாத அளவுக்குச் சின்னதுதானே பாயின்ட்? சுற்றுவதினாலேதான் மற்றப் பகுதிகளில் சூரிய சந்திரனோடு தினந்தினமும் பல கோணங்களில் சம்பந்தப்பட்டு ஒரிடத்தில் பதினெட்டு மணி வெய்யில் அடிக்கிறது; ஆறு மணி அளவே ராத்திரியாயிருக்கிறது. அதற்கு நேர் எதிரே ஒரிடத்தில் ஆறே மணி வெய்யிலாகவும் பதினெட்டு மணி ராத்திரியாகவும் இருக்கிறது. இரவு பகலில் பூமியின் பல பாகங்களுக்கிடையில் ஏகப்பட்ட கால வித்யாஸம் இருக்கிறது. சில நாட்களில் மட்டுமே சூரியன் நேர்கிழக்காக உதிக்கிறான்; தலைக்கு நேரே ஒரு டிகிரக் கூடத் தப்பாமல் வருகிறான்; மற்ற நாட்களில் வடகிழக்கிலிருந்து தென்கிழக்கு வரையில் பல கோணங்களில்(angle -களில்) சூரியோதயம் ஏற்படுகிறது. வட துருவத்தில இப்படியில்லை. அங்கே ஆறு மாஸம் பகலிலிருந்து ஆறு மாஸம் இரவுக்குப் போய், மறுபடி அதிலிருந்து ஆறு மாஸம் பகலுக்கு வரும்போது, சூரிய கதியைப் பார்த்தால், அந்த இடமானது சூரியனைச் சுற்றாமல், சூரியன்தான் அந்த இடத்தைச் சுற்றி வருகிறான் என்றே தோன்றும். மேரு ஸூரியனை பிரதக்ஷிணம் பண்ணுகிறான் என்பது இதைத்தான்.

வடதுருவத்தில் ஸூரிய வெளிச்சமுள்ள ஆறு மாஸங்களை உத்தராயணம் என்றும், அங்கே இரவாகித் தென்துருவத்தில் வெளிச்சமிருக்கிற ஆறு மாஸங்களை தக்ஷிணாயனம் என்றும் சொல்கிறோம். வடதுருவத்துக்கு ஸுமேரு என்றும், தென் துருவத்துக்குக் குமேரு என்றும் பெயர். (ஸுமேரியா தேசம்கூட 'ஸுமேரு'விலிருந்து வந்ததுதான். அங்கே வேகத்தில் வரும் தேவதைகளின் வழிபாடு இருந்தது எனறு சொல்கிறார்கள்) வடக்கே தேவர்கள் இருப்பது போல் தெற்கே பித்ரு லோகமும் நரகமும் இருக்கின்றன. தேவதைகளையோ, பித்ருக்களான ஆவிகளையோ, நரகவாஸிகளையோ பார்ப்பதற்கு யோக சக்தியினால் திவ்ய திருஷ்டி பெறவேண்டும். நமக்கு அந்த த்ருஷ்டி இல்லாததால் அப்படிப்பட்ட லோகங்களும் இல்லை, ஜீவர்களும் இல்லை என்று சொல்லிவிட முடியாது. ருஷ்யாவில் பிறந்து, அமெரிக்காவில் வஸித்துவிட்டு, இந்தியாவில் வந்து 'தியாஸாஃபிகல் ஸொஸைடி' ஆரம்பித்த ப்ளாவட்ஸ்கி முதலானவர்கள் ஆவி உலக, தேவதா லோக விஷயங்களைத்தான் முக்யமாகச் சொல்லியிருக்கிறார்கள். இது மட்டுமில்லை. இக்கால ஸயன்டிஸ்ட்களில் ரொம்பவும் முக்யமாக நினைக்கப்படுகிற ஆலிவர் லாட்ஜ் என்பவர்கூட, பிற்காலத்தில் ஸயன்ஸைவிட முக்யமாக இந்த ஆவிகள், தேவதைகள் இவற்றின் ஆராய்ச்சியிலேயே இறங்கி, 'இவை எல்லாம் நிச்சயமாக இருக்கின்றன; இவைகளைக் கொண்டு மனிதன் 
அநுகூலங்களை அடையலாம்ட என்று புஸ்தகங்கள் எழுதியிருக்கிறார். ஜ்யோதிஷம் முதலான சாஸ்திரங்கள் ஒருபுறம் அஸ்ட்ரானமி மாதிரியான ஸயன்ஸ்களைச் சொல்லிவிட்டு உடனே spiritualism -க்கும் போகிறதே என்று கேட்டால், இவை இரண்டுக்கும் விரோதமில்லை என்று சொல்வது போல ஒரு பெரிய விஞ்ஞானியே ஸமீபத்தில் இப்படிப் பண்ணியிருக்கிறார்.

நாம் ஒருவருக்கொருவர் பழகிக் கொள்கிறதுபோல, மநுஷ்யர்கள் தேவர்களோடு பழகி வந்த புராதன காலத்தில் ஏற்பட்டவை நம் சாஸ்திரங்கள். நம்முடைய (கர்மாக்களைத் தொடங்கு முன் செய்ய வேண்டிய) ஸங்கல்பத்தைப் பார்த்தாலே இது தெரிகிறது. இந்த ஸங்கல்பமானது எத்தனையோ யுகாந்தரங்களுக்கு முன், கோடிக்கு அப்புறம் எத்தனையோ ஸைஃபர்கள் போட வேண்டிய அத்தனை காலத்துக்கு முன் ஸ்ருஷ்டி ஏற்பட்டதிலிருந்து இன்று வரைக்கும் காலத்தை நிர்ணயம் பண்ணித்தருகிறது. யுகத்தின் ஆரம்பத்தில் க்ரஹங்கள் எப்படியிருந்தன என்பது கூட ஜ்யோதிஷக் கணக்கால் தெரிகிறது. அப்போது எல்லா க்ரஹங்களும் ஒரே வரிசையில் இருந்தனவாம்.

சில கணக்குகள் இப்போது வித்யாஸப் படுகின்றன, பிரத்யக்ஷத்தில் பார்க்கிற சில நிலவரங்கள் சாஸ்திரத்துக்கு மாறாக இருக்கின்றன என்றால், உடனே 'சாஸ்திரம் புளுகு மூட்டை' என்று ஆரம்பித்துவிடக்கூடாது. எல்லா க்ரஹங்களும் நேராக இருந்த புராதன காலம், துருவ நக்ஷத்ரத்துக்கு சரியாக நேரே பூமியின் துருவம் இருந்த ரொம்பப் பழைய காலம்- இவற்றிலிருந்தே சாஸ்திரங்கள் இருந்திருக்கின்றன. அதற்குப் பின், பல யுகங்களில் Nature -ல் (இயற்கையில்) மகத்தான மாறுதல் ஏற்பட்டு, பூமி மலையாகவும், மலை ஸமுத்ரமாகவும், ஸமுத்திரம் பாலைவனமாகவும் இப்படியெல்லாம் ஆகியிருக்கிறது. இந்த விவரங்களையெல்லாம் ஜியாலஜிஸ்ட்கள் சொல்கிறார்கள். அதோடுகூட வானமண்டலத்தில் கிரஹ ஸஞ்சாரங்களிலும் மாறுதல்கள் ஏற்பட்டிருப்பதாக அஸ்ட்ரானமிகாரர்கள் சொல்கிறார்கள். இதனாலெல்லாந்தான் சாஸ்திரத்தில் என்றைக்கோ சொன்னதற்கு வித்யாஸமாகவும் சிலவற்றை இன்றைக்கு பார்க்கிறோம்.

ஜ்யோதிஷத்தில் கணக்குப் பண்ணி சிருஷ்டி எப்போது ஆரம்பித்தது என்று சொல்கிறார்களோ, அதுவே நவீன ஆராய்ச்சியால் அநுமானிக்கிற சிருஷ்டி காலத்துக்குக் கிட்டத் தட்ட சரியாக இருக்கிறது என்று சொல்கிறார்கள்.

கலியுகத்துக்கு 4,32,000 வருஷங்கள். த்வாபரயுகத்துக்கு இதைப்போல இரண்டு மடங்கான 8,64,000 வருஷம். த்ரேதாயுகத்துக்கு மூன்று மடங்கான 12,96,000 வருஷம். க்ருதயுகத்துக்கு நாலு மடங்கான 17,28,000 வருஷம். நாலு யுகங்களும் சேர்ந்த 'சதுர்யுகம்' அல்லது 'மகாயுகம்'என்பதற்கு 43,20,000 வருஷம். இப்படி ஆயிரம் மஹா யுகங்கள் சேர்ந்தால், அதுதான் பிரம்மாவின் ஒரு பகல் வேளை. அதுவே கல்பம் என்பது. அது 14 மநுக்களின் ஆட்சிக்காலம். 
'மநு'வின் ஆட்சிக்காலம்தான் 'மன்வந்த்ரம்' என்பது. நாம் பல ராஜாக்களையும் குடியரசுகளையும் வைத்துக் கொண்டிருந்தாலும் , லோகம் பூராவுக்கும் மேலாதிக்கம் உள்ளவராக பகவான் மநு என்பவரையே வைதத்திருக்கிறார். இப்படிப்பட்ட மநுக்கள் பதினாலு பேர், மநுஷ்ய இன ஸ்ருஷ்டிலிருந்து அது முடிகிறவரை ஆட்சி நடத்துகிறார்கள். மநுவிலிருந்து தோன்றுவதால்தான் நமக்கு மநுஷ்யர், மநுஜர் முதலான பேர்கள் இருக்கின்றன. Man என்பதும் மநுவிலிருந்து வந்ததுதான். இப்போது ச்வேத வராஹ கல்பம் என்ற பிரம்மாவின் பகல் வேளையில் ஏழாமவரான வைவஸ்த மநுவின் காலத்திலே, இத்தனாம் ஆண்டில் நாம் இருக்கிறோம் என்று ஸங்கல்பத்தில் சொல்லப்படுகிறது. இதிலிருந்து கணக்கு பண்ணி முதலாமவரான ஸ்வாயம்புவ மநு எப்போது தோன்றியிருப்பார், அதாவது இந்த கல்பத்தில் ஸ்ருஷ்டி எப்போது ஆரம்பித்திருக்கும் என்று பார்த்தால், அந்தக் காலக் கணக்கும் மநுஷ்ய் இனம் (Human Species) எப்போது தோன்றிற்று என்று ஸயன்ஸில் சொல்லுகிறார்களோ அதுவும் ரொம்பக் கிட்டத்தில் இருக்கிறது என்கிறார்கள்.

'மன்' என்றால் 'நினைப்பது'.நினைக்கிற காரியத்தைச் செய்கிற அங்கம்தான் மனஸ். அதை வைத்தே மநுவுக்கு இப்படிப் பெயர் ஏற்பட்டது. சிந்தனா சக்தி வாய்ந்த மனிதகுலத்துக்கு முதல்வராக அவர் இருக்கிறார். Man is a thinking animal என்று சொல்வதற்கேற்ப, நினைக்கத் தெரிந்ததே இவனுடைய சிறப்பு என்பதால்தான், மநுவிடமிருந்து வந்தவர்களுக்கும் மநுஷ்யர் என்ற பெயர் ஏற்பட்டுவிட்டது.

பதினாலு மநுக்களின் ஆயுட்காலமும் சேர்ந்த ஆயிரம் சதுர்யுகங்கள் பிரம்மாவுக்கு ஒரு பகல் என்றால் அதற்கு 432,00,000 (432 கோடி) வருஷம்;அதே அளவு வருஷம் ஒரு ராத்திரி. அதாவது 864 கோடி வருஷம் பிரம்மாவுக்கு ஒரு முழு நாள். அதுவே கல்பம் என்பதுமுண்டு. அதிலே பகலில்தான் ஸ்ருஷ்டி நடப்பது. ராத்திரியில் ஸ்ருஷ்டி அடங்கிப் போன ப்ரளயம். இப்படி 365 நாட்கள் ஒரு பிரம்ம ஸம்வத்ஸரம் (வருஷம், ஆண்டு) . இதைப் போல் நூறு வருஷங்கள் அவருடைய ஆயுஸ். இந்த பிரபஞ்சத்தின் ஆயுஸும் அதுவே. அவரது ஆயுள் முடிகிற போது ஸகல லோகங்களும் இல்லாமல் போய்விடும். அதுதான் 'ஆத்யந்திக பிரளயம்' என்பது. அப்புறம் ஒரு பிரம்மா மட்டும் பிரபஞ்சமில்லாமல், தான் மாத்திரமாக இருக்கும். அப்புறம் மறுபடி இன்னொரு பிரம்மாவைக் கொண்டு சிருஷ்டியை ஆரம்பிக்கும். ஆஞ்சநேயர்தான் அடுத்த பிரம்மாவாக வரப்போகிறார் என்று சொல்வார்கள்.

'ஆத்யந்திக ப்ரளயம்' என்றால் சாச்வதமான ப்ரளயம் என்று அர்த்தம். 'அத்யந்தம்' என்ற வார்த்தையிலிருந்து 'ஆத்யந்திக' என்பது உண்டாயிருக்கிறது. 'ப்ரளயம்' என்றால் ஸம்ஸாரத்திலிருந்து விடுபட்டு, உணர்ச்சியில்லாமல் லயித்திருப்பது. ஆத்யந்திக ப்ரளயத்தில் இந்த லயம் என்பது பரமாத்மாவோடேயே சாச்வதமாக ஐக்யமாகி விடுவதாகி விடுகிறது. ஸ்ருஷ்டி கர்த்தாவான ப்ரம்மா நூறு வயஸு பூர்த்தியாகிப் பரமாத்மாவோடு ஐக்யமாகி விடுகிறது. ஸ்ருஷ்டி கர்த்தாவான ப்ரம்மா நூறு வயஸு பூர்த்தியாகி பரமாத்மாவோடு ஐக்யமாகிறபோது, அவர் உண்டாக்கிய ஸ்ருஷ்டியும் சேர்ந்து ஐக்யமாகிவிடுகிறது. அப்புறம் புது ப்ரம்மா புது ஸ்ருஷ்டி ஆரம்பிக்கும் போதும் இந்த ஜீவர்கள் அதில் மறுபடி பிறப்பதில்லை. அதனால் இதை 'மஹா ப்ரளயம்'என்றும் சொல்வது.

வேறே இரண்டு ப்ரளயங்களும் உண்டு. ஒவ்வொரு சதுர்யுக முடிவிலும் ஏற்படுவது ஒன்று. இதை வெறுமே 'ப்ரளயம்'என்பார்கள். ஆயிரம் சதுர்யுகத்திற்கொருதரம் பிரம்மாவின் ஒவ்வொரு பகலின் முடிவிலும் ஏற்படும் கல்ப ப்ரளயம் இன்னொன்று. அவருடைய ஒவ்வொரு இராக்காலமும் முடிகிறவரை இது நீடித்து, அடுத்த பகல் உதிக்கும் போது முடிந்துவிடும். இரண்டு பகல்களுக்கு நடுவேயுள்ள 'இன்டர்வெல்' லில் இது நடப்பதால் இதற்கு 'அவாந்தர ப்ரளயம்' என்றும் பெயர். சதுர்யுக முடிவான ப்ரளயத்தில் அடங்கின ஜீவர்கள் அடுத்த சதுர்யுக ஸைக்கிள் ஆரம்பிக்கும் போது மறுபடி பிறக்கத்தான் செய்வார்கள். 'அவாந்தர ப்ரளயம்' அல்லது 'கல்ப ப்ரளயம்' என்பதில் அடங்கியவர்களும் அடுத்த கல்பத்தில் பிறக்கத்தான் செய்வார்கள்.

பூலோகம், புவர் வோகம், ஸுவர் லோகம், மஹர் லோகம், ஜன லோகம், தபோ லோகம், ஸத்ய லோகம் என்று ஏழு. இவற்றுக்குள்தான் மநுஷ்யர்கள், தேவர்கள் முதலான ஸகல இனங்களும் இருக்கின்றன. இவற்றில் பூலோகம், புவர்லோகம், ஸுவர்லோகம் இவை மூன்றும் ஒரு group -ஆக இருக்கின்றன. 'பூர்ப்புவஸ்ஸுவ:'என்று இவற்றைத்தான் அடிக்கடி கர்மாக்களில் குறிப்பிடுகிறோம். மற்ற நாலு லோகங்களும் இவற்றைவிட உயர்ந்தவை. பிரம்மா ஒவ்வொரு இரவிலும் தூங்கும்போது அவாந்தர ப்ரளயம் ஏற்படுகிறதல்லவா? அப்போது இந்த முதல் மூன்று லோகங்கள் மட்டும் பிரளயத்தில் அழிந்துவிடும். அவரது ஆயுஸ் முடிவான மஹாப் பிரளயத்திலோ மற்ற லோகங்களும் அழிந்துவிடும்.

ஸூரியனுடைய உஷ்ணம் நமக்குத் தெரியாத அளவுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டே வருகிறது என்று நவீன ஸயன்ஸில் கண்டு பிடித்திருக்கிறார்கள். ஸூரிய உஷ்ணம் இல்லாவிட்டால் லோக வாழ்க்கை ஸாத்யமே இல்லை. ஆஹாரத்திலிருந்து ஆரம்பித்து லோக வாழ்வுக்கு வேண்டிய மழை, பருவக்காற்று எல்லாவற்றுக்கும் ஸூரிய உஷ்ணம் குறைந்து கொண்டே போவதால், எத்தனையோ கோடி வருஷங்களுக்கு அப்புறம் நம் லோகமே இல்லாமற்போக வேண்டியதுதான் என்று ஒரு கணக்குக் கொடுத்திருக்கிறார்கள். சாஸ்திரப்படி பிரம்மாவின் அடுத்த அவாந்தரப் பிரளயம் எப்போது வரவேண்டுமோ, அதுவும் ஸயன்டிஸ்டுகள் கொடுக்கிற காலக் கெடுவும் சற்றேறக்குறைய ஒத்திருக்கின்றன.

ஸங்கல்பத்தில் சொல்கிறபடி இப்போது பிரம்மாவுக்குப் பாதிக்கு மேல் ஆயுஸ் தீர்ந்துவிட்டது. நமக்கு வாரத்தில் ஏழு நாள் பெயர்கள் மாதிரி ஏழு கல்பப் பெயர்கள் பிரம்மாவின் விஷயமாகச் சொல்கிறார்கள். அதில் இப்போது நாலாவதான ச்வேத வராஹ கல்பத்தில் பாதிக்குமேல் வந்து விட்டோம். பிரம்மாவுக்கு இன்றைக்கு வயது, இத்தனை மாஸம், தேதி, அதில் இன்ன யாமம், அப்புறம் நாம் இன்ன கல்பத்தில், இன்ன மன்வந்தரத்தில், இன்ன சகாப்த்தில், ப்ரபவ முதலான அறுபது வருஷங்களில் நம் மநுஷ்யப் பஞ்சாங்கத்தின்படி இன்ன வருஷம், மாஸம், தேதியில், லக்னத்தில் இருக்கிறோம் என்கிற வரையில் எல்லாவற்றையும் ஸங்கல்பத்தில் சொல்கிறோம்.

இந்தக் கணக்குப்படி பிரம்மா எப்போது தோன்றியிருப்பார் என்று பார்த்தால், அதுவும், பிரபஞ்சம் எப்போது தோன்றியிருக்கும் என்று ஸயன்ஸில் போட்டிருக்கிற கணக்கும், ஏறக்குறைய ஸரியாக இருக்கின்றன என்றார்கள்.

பிரம்மாவின் வயஸைச் சொல்வதில் ஒரு வேடிக்கை. 'பரார்ரத-த்வய-ஜீவி' என்று பிரம்மாவைச் சொல்கிறார்கள். அதாவது இரண்டு பரார்தங்கள் உயிர் வாழ்கிறவர் என்று அர்த்தம். பரார்தம் என்றால் 'பர' என்கிற எண்ணிக்கையில் பாதி (அர்த்தம்) என்று அர்த்தம். அதாவது 'பரார்த்த-த்வய -ஜீவி' என்றால் 'இரண்டு *அரைப் பர ஆயுஸ்காரர்' என்று அர்த்தம்.

'இரண்டு அரைப் பர' என்றால் ஒரு 'பர' தானே?அதனால் 'பரார்த்த த்வயம்' என்காமல் 'பர' என்றே சொல்லி விட்டால் போதும். ஆனாலும் பிரம்மா இப்போது பாதிப் 'பர'வைத் தாண்டி 51-வது வயதில் இருப்பதால், 'பர'வில் பாதியை முக்யமாக நினைத்து, 'பரார்த்த'த்தையே குறிப்பிடுகிறோம்.

ஆயிரம் சதுர்யுகம் கொண்டதான பிரம்மாவின் ஒரு பகலுக்குள் 14 மநுக்களின் ஆட்சி நடப்பதால் ஒரு மந்வந்தரத்திற்கு 71 சதுர்யுகங்கள். இந்த வைவஸ்வத மன்வந்தரத்தில் இப்போது நடப்பது 28-வது சதுர்யுகம். அதில் இது கலியுகம். நாம் பண்ணும் ஸங்கல்பத்தில் இவ்வளவும் இருக்கின்றன! திதி,லக்னம் வரையில் சொல்வதுண்டு. இவ்வளவும் காலக் கணக்கு.

தேசக் கணக்கு வேறு அந்த ஸங்கல்பத்தில் இருக்கிறது. பிரம்மாண்டம் முழுதையும் வர்ணித்து, அதிலே நாம் இருக்கிற ஊர் வரையில் கொண்டு வந்துவிடுகிறது. நாம் கடிதங்களில் ஊரையும் தேதியையும் எழுதுவது போல ஸங்கல்பத்தில் தேசத்தையும் காலத்தையும் சொல்லிக் கொள்கிறோம். இவ்வளவு அருமையான கணக்குகள் ஜ்யோதிஷ சாஸ்திரத்தினால் அறியப்படுகின்றன.

Monday, 28 January 2013

புராணமும், சரித்திரமும்



நம் தேசத்தில் History (சரித்திரம்) இல்லை என்று ஒரு குறை சொல்லப்படுகிறது. புராணம் சரித்திரந்தான். ஆனாலும் இக்காலப் படிப்பாளிகள் கிறிஸ்துவுக்குப் பிற்பாடு ஒரு இரண்டாயிரம் வருஷத்துக்குள் நடந்தது தவிர மற்ற எதையும் - புராணங்களில் ஏதோ கொஞ்சம் உண்மை இருக்கலாம் என்று தங்கள் ஆராய்ச்சியில் தெரிவதாகச் சொல்லிக் கொண்டு, தங்களுக்குப் பிடித்த ஆரிய திராவிட பிரிவினைக் கொள்கை மாதிரியான பொய் விஷயங்களுக்கு மட்டும் புராணங்களில் ஆதாரம் இருப்பதாகக் காட்டிவிட்டு, பாக்கி அதில் வருகிற அற்புதமான விஷயங்கள் (miracle s) , அதீந்திரியமான விஷயங்கள் (supernatural) எல்லாம் கட்டுக் கதை, புளுகு மூட்டை என்று தள்ளி விடுகிறார்கள்.

புலன்களுக்கு அகப்படுகிற விஷயங்களுக்கு அப்பாற்பட்டதாக எதுவும் யதார்த்தத்தில் நடந்திருக்க முடியாது என்கிற தீர்மானத்தில் இவர்கள் இருப்பதால், 'மிஸ்டரி' (மர்மமான அதிசயங்கள்) நிறைய வருகிற புராணங்களை 'ஹிஸ்டரி' இல்லை என்று ஒதுக்கி விடுகிறார்கள்.

இப்போது தாங்கள் எழுதி வைத்திருக்கிற சரித்திரத்தை எல்லோரும் படிக்க வேண்டும் என்று ஸ்கூலிலேயே பாடமாக வைத்துவிட்டுப் புராணத்தைக் கழித்துக் கட்டுவது குழந்தைகளுக்கு நல்லது செய்வதாகாது. புராணங்கள் குழந்தைகளுடைய உள்ளத்தை நல்ல நெறிகளில் சேர்ப்பது போல சரித்திரத்தில் எதுவும் இல்லை.

சரித்திரம் படிக்க வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. படிக்கத்தான் வேண்டும். புராணங்களும் சரித்திரம்தான். அதனால் அவற்றையும் படிக்க வேண்டும் என்கிறேன்.

ஏன் சரித்திரம் படிக்க வேண்டும் என்பதற்குச் சொல்கிற அநேக காரணங்களில் ஒன்று - " History repeats itself " என்பது. சரித்திரம் திரும்பத் திரும்ப ஒரே மாதிரி நடக்கிறது என்கிறார்கள். அதனால் பூர்வத்தில் எப்படி நடந்தது என்று தெரிந்து கொண்டால் அதிலிருந்து இனி எப்படி நடக்கும் என்று தெரிந்து கொள்ளலாம். பூர்வத்தில் நடந்ததிலிருந்து எதிர்காலத்துக்குப் படிப்பினைப் பெறலாம். இப்படியிப்படிச் சூழ்நிலை உருவாகிக் கொண்டு போனால் யுத்தம் ஏற்படும், ஜனங்களின் வாழ்வு கெட்டுப் போகும், ஒரு பெரிய நாகரிகமே விழுந்து விடும் என்பது சரித்திரத்தைப் பார்க்கும்போது தெரிகிறது. இதனால் அதே மாதிரியான சூழ்நிலைகள் இப்போது உருவானால் அவற்றை முதலிலேயே உஷாராக இருந்து தடுத்துவிட வசதியாக இருக்கும். இது சரித்திரத்தின் ஒரு பிரயோஜனம் என்கிறார்கள்.

கல்பத்துக்குக் கல்பம் ஒரே மாதிரியாக ஸம்பவங்கள் நடக்கின்றன; ஒவ்வொரு கல்பத்திலும் ராமாயணம், பாரதம், பாகவதம், தசாவதாரம் மற்றும் எல்லாப் புராணங்களும் நடக்கின்றன என்று நம் சாஸ்திரங்களில் சொல்லியிருப்பதைத்தான் History repeats itself என்று கொஞ்சம் மாறுதலான அபிப்ராயத்தோடு சொல்லுகிறார்கள்.

ஆனாலும் நடைமுறையில் ஒத்துக் கொள்ளப்பட்டிருக்கிற ஹிஸ்டரியைப் பார்த்து யாராவது எந்தப் படிப்பினையாவது பெறுகிறார்களா என்று பார்த்தால் அதுதான் இல்லை! செங்கிஸ்கான், தைமூர், கஜினி, மாலிக்காஃபூர் போலப் பலபேர் அவ்வப்போது தோன்றி தேசங்களைச் சூறையாடி ஹதாஹதம் செய்திருக்கிறார்கள் என்று சரித்திரத்திலிருந்து தெரிகிறது. தெரிந்து கொண்டால் மட்டும் இப்படிப்பட்ட வெறிப் போக்குகளை நிறுத்த முடிந்திருக்கிறதா என்ன? இவர்கள் மாதிரியே ஒரு ஹிட்லரும் முஸோலினியும் வந்து மறுபடி ஹதாஹதம் செய்கிறார்கள். 

இன்னும் கிட்டத்தில் பிரத்தியக்ஷமாகவே பார்க்கிறோம் - ஒரு லஞ்சம், 'கரப்ஷன்' வேண்டியவர்களுக்குப் பட்சபாதம் காட்டுவது, வேலை கொடுப்பது என்றெல்லாம் ஒரு ராஜாங்கத்தார் பண்ணினால் அதற்கு ஜனங்களின் ஆதரவு போய்விடுகிறது என்று எலெக்ஷ்னில் தெரிகிறது. அப்புறம் வேறே சிலர் ராஜாங்கத்தை அமைக்கிறார்கள். ஆனால் படிப்பினை ஒன்றும் பெற்றதாகத் தெரியக் காணோம்! அதே தோஷங்களை இவர்களும் செய்ததாக ஏற்பட்டு, அடுத்த எலக்ஷ்னில் அதே கதி இவர்களுக்கும் உண்டாகிறது. ஒரு குறுகிய காலத்துக்குள்ளேயே இப்படி ஏற்படுகிறது. ஆகையால் repeats itself என்று தெரிந்து கொண்டு விடுவதால் மட்டும் அதிலிருந்து நல்ல பாடம் எதையும் படிக்கமுடியவில்லை என்று தெரிகிறது. 'ரிபீட்'ஆகாமல் ஹிஸ்டரியை நிறுத்தும்படிச் செய்வதற்கு அதில் எதுவும் இல்லை.

தர்மத்தை நாம் ஏற்கும்படியாகச் சரித்திரத்தோடு குழைந்து கொடுத்தால்தான் அது நம்மை நல்வழிப்படுத்தித் தப்பான ஸமாசாரங்கள் 'ரிபீட்'ஆகாமல் செய்ய உபாயமாகும். புராணம் இதைத்தான் செய்கிறது. சரித்திரத்தில் வெறுமே காலவாரியாக ராஜாக்களின் வரலாற்றைத்தான் தந்திருக்கிறது. இதிலே கொடுங்கோலர்கள் கெடுதல் அடைந்தார்களா, உத்தமமான ராஜாக்கள் உயரந்த கதியைப் பெற்றார்களா என்பதற்கு முக்யமில்லை. கர்ம நியதிப்படி ஈச்வரன் இவர்களுக்குத்தான் இப்படிப்பட்ட பாப புண்ய பலன்களைக் கொடுத்துத்தான் இருப்பார். ஆனால் அது இந்த ஜன்மாவிலேயே கொடுக்கப்பட வேண்டும் என்பதில்லை அல்லவா? பின் ஜன்மாக்களில் இந்தப் பலன்கள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் இதை விசாரிப்பது ஹிஸ்டரியின் காரியமில்லை. விசாரித்து அறிகிற சக்தியும் சரித்திரக்காரர்களுக்குக் கிடையாது. 

ஒரு கஜினியோ, ஹிட்லரோ இந்த பூமியில் வாழ்ந்தவரை கொடி கட்டித்தான் பறந்தார்கள் என்றாலும் உயிர்போனபின் அவர்களுக்கு நரக வாஸம் கிடைத்தது; அல்லது ரொம்பவும் நீசமான மறு ஜன்மா ஏற்பட்டது என்றால் இதையும் புராணம் விசாரித்துச் சொல்லும். புராண கர்த்தாக்களுக்கு அந்த சக்தி உண்டு; இதைச் சொல்கிற லக்ஷ்யமும் உண்டு. ஹிஸ்டரி நிபுணர்களுக்கு இந்த இரண்டும் இல்லை. அதனால்தான் ஹிஸ்டரியில் பார்க்கிறவர்களில் அநேகரின் ஜீவிதத்திலிருந்து பாப புண்யங்களைப் பற்றி நாம் படிப்பினை பெற முடிவதில்லை.

புராணமும் சரித்திரந்தான் என்றாலும் அது பாப-புண்யங்களில் ஜனங்களுக்கு பாடம் கற்பித்து அவர்களை தர்மத்தில் செலுத்தும்படியான வரலாறுகளை மட்டும் 'ஸெலக்ட்' பண்ணிக் கொடுக்கிறது. தர்மசாலிகளாக இருந்ததால் அந்த ஜன்மாவிலேயே உயர்வை அடைந்தவர்கள் யாரோ, தர்மத்தை விட்டதால், அந்தப் பிறவியிலேயே கெடுதலை அடைந்தவர்கள் யாரோ, அப்படிப்பட்டவர்களின் கதைகளையே புராணங்கள் பெரும்பாலும் 'ஸெலக்ட்' பண்ணி நமக்குக் கொடுக்கின்றன. இல்லாவிட்டால் அடுத்த ஜன்மாக்களைச் சொல்லி அதில் பாத்திரங்கள் பாப-புண்ய பலன்களை அடைந்ததைச் சொல்லும். பாப-புண்ய பலன்களில் நம்மைச் சேர்க்காத புராணக் கதை எதுவுமே கிடையாது. ஆகையால், "பழைய சரித்திரங்களைப் படிப்பதனால் அந்தப் பழைய அநுபவங்கள் இனிமேல் நடக்க வேண்டியதற்கு வழிகாட்டியாக இருக்கும். நல்லவர்களாக இருந்து நல்ல காரியங்களைச் செய்து நன்மையை அடைந்தவர்களுடைய சரித்திரங்களை நாம் படித்தால் நாமும் அப்படியிருக்க ஒரு தூண்டுகோலாக இருக்கும். கெட்டவர்களாக இருந்து உலக க்ஷேமத்துக்குக் கேடு பண்ணிக்கொண்டு முடிவில் தாங்களே அதைவிடக் கஷ்டம் அடைந்தவர்களுடைய கதைகளைப் படிப்பதால் நாம் அந்த வழியில் போகாமல் லகானை இழுத்த மாதிரி இருக்கும்" என்பதாகச் சரித்திரப் படிப்புக்குப் பிரயோஜனம் சொல்வதானால்,  இந்தப் பிரயோஜனத்தை வாஸ்தவத்தில் தற்கால ஹிஸ்டரியால் அடைய முடியவில்லை. புராணத்தில்தான் அடைய முடிகிறது.

'நல்லது கெட்டவைகளைப் பற்றி நமக்கு ஒருவிதமான பாடமும் கற்பிக்காமல் வெறுமே காலவாரியாக பல ராஜாக்கள் ஆண்டதையும் சண்டை போட்டதையும் வளர்த்திச் சொல்லவேண்டியதில்லை. நாம் வாழ்க்கையில் எடுத்துத் கொள்ளும்படியான உபதேசம் இல்லாத சரித்திரம் நமக்கு வேண்டாம். ஆத்மலாபமான சரித்திரங்களையே சொல்வோம்' என்ற அபிப்ராயத்தோடு புராணங்கள் எழுதப்பட்டிருக்கின்றன.

சந்திர வம்சம், சூரிய வம்சம் என்பது போலப் புராணங்களிலும் ராஜாக்களின் பரம்பரை முழுக்கச் சொல்லியிருக்கும். இவனுக்குப் பின் இவன் என்று பெரிய லிஸ்ட் கொடுத்திருக்கும். ஆனால் அவர்களில் நாம் நல்வழிப்படப் பிரயோஜனப் படாதவர்களின் கதையை ஒரு வரி, இரண்டு வரியில் சொல்லி முடிந்திருக்கும்; அல்லது பேரை மட்டும் சொல்லி விட்டிருக்கும். நாம் படிப்பினை பெறும்படியானவர்களின் சரித்திரங்களையே விஸ்தாரமாகச் சொல்லியிருக்கும். 

உதாரணமாக த்ருவனின் (துருவனின்) அப்பாவான உத்தானபாதன், த்ருவனுக்கு அப்புறம் அரசாண்ட அவனுடைய பிள்ளை இவர்களைப் பற்றியும் பாகவத புராணத்தில் சொல்லியிருக்கிறது. ஆனால் ஏதோ இரண்டு வரி, நாலு வரிதான் இருக்கும். பக்தி, விடாமுயற்சி, மனவுறுதி முதலியவற்றுக்குப் பாடமாக உள்ள த்ருவ சரித்திரத்தை மட்டும்  ஸவிஸ்தாரமாகச் சொல்லியிருக்கிறது.

புராணம் பொய்யென்று இங்கிலீஷ்காரர்கள் சொல்லி நம்முடைய தேசத்தின் ஹிஸ்டரியை எழுதினார்கள். அதிலே தங்களுக்குப் பிடித்த divide-and-rule (பிரித்து ஆளும்) கொள்கைகக்கு ஸாதகமான ரேஸ் தியரி முதலான அநேக விஷயங்களை ரொம்பவும் நடுநிலையிலிருந்து ஆராய்ச்சி பண்ணினது போலவே காட்டிச் சேர்த்துவிட்டார்கள். புராணம் பொய்யென்று இவர்கள் சொன்னார்கள் என்றால், இப்போது இவர்கள் எழுதிய சரித்திரத்திலும் பொய் இருக்கிறது என்று சொல்லிக் கொண்டு உள்ளது உள்ளபடி இந்திய சரித்திரத்தை எழுதுவதற்கு (reconstruct செய்வதற்கு) முயற்சிகள் நடக்கின்றன. இப்படிச் செய்கிறவர்களுக்கும் அநேக கொள்கைகளில் வேண்டியது-வேண்டாததுகள் ( prejudice -கள்) இருக்கலாம். அதனால் என்னதான் நடுநிலையிலிருந்து எழுதுவதாகச் சொன்னாலும், எவ்வளவு தூரத்துக்கு முழுக்க நிஜமான சரித்திரம் உருவாகும் என்று சொல்வதற்கில்லை.

பதினெட்டுப் புராணங்களை எழுதிய வியாஸாசாரியாள், அநேக ஸ்தல புராணங்களை எழுதிய பெரியவர்கள், பக்தர்களின் சரித்ரங்களை எழுதிய சேக்கிழார் முதலியவர்கள்தான் வாஸ்தவத்தில் விருப்பு வெறுப்பில்லாமல் எழுதினவர்கள்.

ஸாம்ராஜ்யங்கள், சண்டை, படையெடுப்புக்கள், ராஜவம்சங்கள் இவைதான் சரித்திரம் என்று நினைப்பது ஸரியில்லை. எல்லா விஷயங்களுக்கும் சரித்திரம் உண்டு. அரசியல் சரித்திரத்தை மட்டும் ஹிஸ்டரியில் பிரதானமாக வைத்து விட்டார்கள். தர்ம விஷயங்களைப் பிரதானமாக வைத்து அதற்கு ராஜவம்சத்தை மட்டுமின்றி மற்ற புண்ய புருஷர்கள், ரிஷிகள், ஸாமானிய ஜனங்கள் முதலியோரின் கதைகளையும், மற்ற எல்லா விஷயங்களின் சரித்திரத்தையும் துணையாக சேர்த்துத் தருவனவாகப் புராணங்களில் இருக்கின்றன. புராணங்களைப் பார்த்தால் அந்தக் கால அரசியல் மட்டுமின்றி cultural life (கலாச்சார வாழ்வு) , அக்கால வித்தைகள், ஸயன்ஸ்கள் எல்லாவற்றையும் பற்றித் தெரிந்து கொள்ள முடிகிறது. அவற்றில் முக்யமாக சொல்லப்படுவதோ தர்மங்களும் ஆத்யாத்மிக க்ஷேமமாகும்.

கற்பனையேயானாலும் கருத்துள்ளதே புராணம் !


புராணங்களில் வெறும் கற்பனையும் எங்காவது இருக்கலாம்தான். பிற்காலத்தவர்கள் இடைச் செருகலாக (Interpolation என்பதாக) சிலதை நுழைத்து விட்டும் இருக்கலாம். ஆனால் எது வெறும் கற்பனை, எது இடைச் செருகல், எது மூல ரூபம் என்று யார் நிர்ணயிப்பது?அவரவரும் தங்களுக்கு இடைச் செருகலாகத் தோன்றுவதை நீக்கி விடுவது என்று ஆரம்பித்ததால் அத்தனை கதைகளும் போய் விடும். மூலக் கதையென்றே ஒன்று நிற்காது. அதனால் சில தப்புக்கள், கோளாறுகள் இருப்பதாகத் தோன்றினாலுங்கூட இன்றைக்கு நம் கைக்கு எந்த ரூபத்தில் புராணங்கள் வந்திருக்கின்றனவோ அதை அப்படியே வைத்து ரக்ஷிக்கத்தான் வேண்டும்.

அதிலே ஏதாவது கட்டுக்கதை இருந்தாலும் இருந்து விட்டு போகட்டும். அது நம் மனஸை பகவானிடம் கொண்டு போய் விட்டு சாந்தப்படுத்துகிறதோ இல்லையோ? கடைக்கு ஒரு பண்டம் வாங்கப் போகிறோம். நல்ல சரக்காகக் கிடைக்கிறது. நம் உத்தேசம் பூர்த்தியாகிவிட்டது என்று ஸந்தோஷப்படுவதா, அல்லது கடையில் இன்ன குறை இருந்தது, கடைக்காரனிடம் இன்ன தோஷம் இருந்தது என்று சொல்லி அதிருப்தி படுவதா? பூகோள - ககோள (வான் இயல்) வர்ணனைகள், மன்வந்த்ரம் முதலான கால வர்ணனைகள் எங்கேயாவது தப்பிப் போனால்தான் போகட்டுமே! இதெல்லாம் தெரிந்து கொள்ளத்தான் ஜாகரஃபியும், அஸ்ட்ரானமியும், ஹிஸ்டரியும் இருக்கிறதே! ஜாகரஃபியிலும், ஹிஸ்டரியிலும், அஸ்ட்ரானமியிலும் கொடுக்க முடியாத பரமாத்ம தத்வத்தை, பக்தியை, தர்மத்தைச் சொல்கிற லக்ஷ்யத்தைப் புராணம் பூர்த்தி பண்ணுகிறதோ இல்லையோ?


'த்ரேதாயுகம் என்று அத்தனை லட்சம் வருஷம் முன்னாடி ராமர் இருந்திருக்க முடியாது. அப்போது ராமாயணத்தில் சொல்லப்பட்டிருக்கிற நாகரிக வாழ்வு ஏற்பட்டே இராது' என்கிறது போலப் பல வாதங்கள் செய்கிறார்கள். இதை நான் ஒப்புக் கொள்ளவில்லை. இருந்தாலும் ஒரு பேச்சுக்குச் சொல்கிறேன்: ராமர் த்ரேதாயுகத்தில் இல்லாமலே இருந்திருக்கட்டும். இப்படியே அதற்கு முந்தி க்ருதயுகத்தில் நடந்ததாக சொல்லப்படும் கதைகள் அவ்வளவு பூர்வ காலத்தில் நடந்திருக்காமே இருக்கட்டும். எல்லாம் ஒரு ஏழாயிரம் எட்டாயிரம் வருஷத்துக்குள் நடந்தது என்றே வைத்துக் கொள்ளலாம். அதனால் ஸ்ரீ ராம சரித்திரமோ, மற்ற கதைகளோ மதிப்பிலே குறைந்து விடுமா? அவற்றால் நாம் பெறுகிற படிப்பினை கெட்டுப் போய்விடுமா?


புராணத்தில் சொல்லியுள்ள கதைகளின் காலம் தப்பு என்பது போலவே, இந்த புராணங்கள் ஏற்பட்ட காலத்தைப் பற்றியே சொல்வதெல்லாமும் தப்பு என்கிறார்கள். ஐயாயிரம் வருஷத்துக்கு முந்திக் கலியுக ஆரம்பத்தில் வியாஸர் புராணங்களைக் கொடுத்தார் என்பது சாஸ்திரங்களில் சொல்லியுள்ள விஷயம். அவருக்கு முன்பே புராணம் உண்டு. சாந்தோக்ய உபநிஷத்தில் நாரதர், தாம் அத்தியயனம் பண்ணின வித்தைகளின் பேரைச் சொல்லும்போது அவைகளில் ஒன்றாகப் புராணத்தை குறிப்பிடுகிறார். அதனால் வேத- உபநிஷத காலத்திலேயே புராணம் இருந்ததாகத் தெரிகிறது. பிற்கால ஜனங்களின் குறைந்த சக்திக்கு ஏற்ற மாதிரி, ஏற்கெனவே இருந்த வேதங்களை வியாஸர் பல சாகைகளாகப் பிரித்துக் கொடுத்தது போலவே, இந்தப் புராணங்களையும் தாமே விரிவாக எழுதிக் கொடுத்திருக்கிறார் போலிருக்கிறது.


ஆனால் இங்கிலீஷ் படிப்பாளிகள் புராணங்கள் அவ்வளவு பழையவை இல்லை என்கிறார்கள். இருந்து விட்டுப் போகட்டுமே! (சென்னை டவுனில் உள்ள) கந்த ஸ்வாமி கோயிலில் ஜே ஜே என்று கூட்டம் சேருகிறது, நல்ல ஸாந்நித்தியம் இருக்கிறது, அங்கே நல்ல பக்தி ஏற்படுகிறது, ஸந்நிதானம் நம் துக்கத்தைப் போக்கி அருள் சுரக்கிறது என்றால் அதுதான் கோவிலின் பிரயோஜனம். இதிலே திருப்திப் படாமல், 'இந்தக் கோவில் எப்போது கட்டியது?அருணகிரிநாதர் காலத்தில் இது இருந்ததா? அவர் திருப்புகழ் பாடியிருக்கிறாரா?' என்று கேட்டுக் கொண்டு போவதில் என்ன அர்த்தம்? இம்மாதிரியானதுதான் புராண காலத்தைப் பற்றிய ஆராய்ச்சிகளும்! நம் மன அழுக்கை, சித்த மலத்தைப் போக்குவதுதான் புராணங்களின் லட்சியம் என்பதை நினைவில் வைத்து, பயபக்தியோடு படித்தால் இப்போது எழுகிற அநேக ஆக்ஷேபங்களுக்கு இடமிராது.


ஆராய்ச்சி, கீராய்ச்சி, research என்று சொல்லிவிட்டால் உடனே நாம் நம்பிவிடுவது என்பதுதான் எல்லாவற்றையும் விடப் பெரிய ஸூபர்ஸ்டிஷனாக (மூட நம்பிக்கையாக) இருக்கிறது! இப்போதையை ஆராய்ச்சிகளிலும் நிறையப் பொத்தல்கள், குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. இது ஸரியாக இருந்து, புராணம் கற்பனையாக இருக்கிற இடத்திலுங்கூட, 'நல்லதைச் செய்தவன் வாழ்ந்தான்; தப்பைச் செய்தவன் கெட்டான்; இப்படிக் கெட்டவர்களையும் அநேக ஸந்தர்ப்பங்களில் பகவான் கை தூக்கிவிட்டிருக்கிறான்' என்பதைப் புராணம் நம் மனஸில் அழுத்தமாகப் பதிப்பிக்கிறதால் அதன் உத்தேசம் பூர்த்தியாயிற்று என்றுதான் அர்த்தம்.


நவீன மனப்பான்மைக்காரர்கள் மட்டுமின்றி சாஸ்திரஜ்ஞர்கள், சிஷ்டர்கள் கூடப் புராணத்தை இரண்டாம் பட்சமாக நினைத்து வருவதாக எதனாலோ ஏற்பட்டுவிட்டது. மற்ற சாஸ்திரங்களில் வாக்யார்த்தம், உபந்நியாஸம் பண்ணுகிறவர்களைவிடப் புராணப் பிரவசனம் செய்யும் பௌராணிகர்கள் தாழ்த்தி என்ற அபிப்ராயமும் இருக்கிறது. ஆனால் மஹாமஹோபாத்யாய பட்டம் பெற்ற மஹா பண்டிதர்களான யக்ஞஸ்வாமி சாஸ்திரிகள், காபே ராமசந்திராச்சார் முதலியவர்கள் புராணப் பிரவசனம் நிறைய பண்ணி வந்திருக்கிறார்கள். இப்போது ஸ்ரீவத்ஸ ஸோமதேவ சர்மா பதினெண் புராணங்களைக் கண்டுபிடித்துத் தமிழில் (சுருக்கியாவது) அச்சுப் போடுவதே காரியமாக இருக்கிறார். (1958 வாக்கில் சொல்லப்பட்டது). 


நல்வழிப்படுத்த, நல்லதை சொல்லத்தான் புராணம். இதைப்புரிந்து கொண்டால், எவ்வித ஆக்ஷேபங்களுக்கும் இடமிராது.


புராணங்கள் பொய்யா, உருவகமா ?


புராணத்தை நம்ப முடியாது என்று சொல்லி அதற்குக் காரணம், 'அதிலே இப்பொழுது நாம் பார்க்கிற யதார்த்த நிலவரங்களுக்கு வேறான விஷயங்கள் இருக்கின்றன' என்கிறார்கள். தேவர்கள் வந்தார்கள், போனார்கள், வரம் கொடுத்தார்கள் என்றால், அதெல்லாம் இந்தக் காலத்தில் நடக்காததால், புரளி என்று தோன்றுகிறது. பெண்ணைக் கல்லாகச் சபித்தார்கள், கல்லைப் பெண்ணாகும்படி வரம் கொடுத்தார்கள், சூரியன் உதிக்காமல் நிறுத்தி வைத்தார்கள் என்றெல்லாம் பார்த்தால் - இதெல்லாம் நம் சக்தியில் இல்லாத காரியங்களாக இருப்பதால் 'வெறும் புரட்டு' என்று நினைக்கத் தோன்றுகிறது.

இந்தக் காலத்தில் முடியவில்லை, இந்தக் காலத்தில் நடக்கவில்லை என்பதற்காக எந்தக் காலத்திலும் நடக்கவில்லை, நடக்கமுடியாது என்று எப்படிச் சொல்லலாம்? வேத மந்திர சக்தியும், உயர்ந்த தபஸும், யோகாநுஷ்டானமும் பூர்வத்தில் நிறைய இருந்தன என்பதற்கு எந்தப் பழைய புஸ்தகத்தைப் பார்த்தாலும் நிறைய ஆதாரம் இருக்கிறது. இவை இருந்த மட்டும் தேவசக்திகளெல்லாம் இந்த லோகத்திலனராலேயே ஸுலபமாக கிரஹிக்கும்படி இருந்திருக்கின்றன. வெளிச்சம் இருந்தால் கூடவே நிழலும் இருக்கும் என்கிற ரீதிப்படி தேவசக்திகளைப் போலவே அஸுர ராக்ஷஸ சக்திகளும் ஸ்தூலமாகத் தெரிகற மாதிரி லோகத்தில் இருந்திருக்கிறார்கள். இப்போதும் தேவாஸுர யுத்தம் முதலானவை மநுஷ்யனின் கண்ணுக்குத் தெரியாமல் (நல்லது கெட்டதுகளின் மோதலாக) நடந்த கொண்டேதான் இருக்கிறது. அந்தக் காலத்தவர்களுக்கு இந்த நல்ல சக்திகளையும் கெட்ட சக்திகளையும் தபோ சக்தியால் கண்கொண்டு பார்க்க முடிந்தது. எல்லா விதமான light wave களும் (ஒளி, ஒலி அலைகளும்) மநுஷ்யக் கண்ணின் லென்ஸுக்கு அகப்பட்டு விடாது என்று விஞ்ஞானிகளே சொல்கிறார்கள். அதில் சில விஞ்ஞானிகள் இன்னும் ஒரு படி மேலே போய் occult என்கிற இயற்கைக்கு அதீதமான மர்ம சக்திகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து, 'தேவதைகள் இருக்கின்றன; நல்ல தேவதைகள், துர்த்தேவதைகள் எல்லாம் இருக்கின்றன' என்றுகூட எழுதி வைத்திருக்கின்றார்கள்.

இப்போதும் அநேக யோகிகள், ஸித்த புருஷர்கள் இருக்கிறார்கள். ஐஸில் கிடந்தாலும் நெருப்பில் கிடந்தாலும் அது அவர்களுடைய சரீரத்தை பாதிப்பதில்லை. மழையை வரப்பண்ணுகிறார்கள்; பெய்கிற மழையை நிறுத்தவும் செய்கிறார்கள். இப்படிப் பலர் அதீந்திரயமான சக்தியோடு இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். நமக்குத்தான் எதிலும் நம்பிக்கையில்லை; எல்லாவற்றிலும் ஸம்சயம்! பூர்வ காலத்தில் இப்படிப்பட்ட விசேஷ சக்திகளை இன்றைவிட ஏராளமானவர்கள் பெற்றிருந்தபடியால்தான் புராணங்களைப் பார்த்தால் ஏகப்பட்ட 'மிராகிள்'களை சொல்வதாக இருக்கிறது.

மிராகிள் வந்தால் ஹிஸ்டரி இல்லை என்று ஒதுக்கி விடுகிறார்கள். கூன் பாண்டியனுக்குப் பஞ்சாக்ஷர பஸ்மாவின் மகிமையால் ஞான ஸம்பந்தர் வெப்பு நோயை நீக்கினார், கூனை நீக்கி 'நின்றசீர் நெடுமாறன்' ஆக்கினார் என்றால் அதை ஹிஸ்டரியாகச் சேர்ப்பதற்கில்லை என்கிறார்கள். ஆனாலும் இப்படியொரு பல்லவ ராஜாவும், பாண்டிய ராஜாவும் நாற்பது ஐம்பது வருஷங்களுக்குள் ஜைனமதத்தை விட்டு வைதிகத்திற்கு மாறினான் என்றால் அதை ஹிஸ்டரியாக எடுத்துக் கொள்ள முடியாது என்கிறார்கள். ஆனாலும் இப்படியரு பல்லவ ராஜாவும், பாண்டிய ராஜாவும் நாற்பது ஐம்பது வருஷங்களுக்குள் ஜைனமதத்தை விட்டு சைவத்துக்கு வந்திருக்க வேண்டுமென்பது மட்டும் மற்ற circumstantial evidence (ஸந்தர்ப்ப ஸாக்ஷியம்) எல்லாவற்றையும் பார்த்தால் உறுதியாகத் தெரிகிறது. ஆறு ஏழாம் நூற்றாண்டுகளில், தமிழ்நாட்டில் சமண மதம் வெகுவாக நலிவடைந்து வைதிக மதம் (குறிப்பாக சைவம்) பிரகாசமாக ஜொலிக்க ஆரம்பித்திருக்கிறது என்று சரித்திர நிபுணர்களே ஒப்புக்கொள்ளும்படித் தெரிகிறது. 
இப்படி ஒரு பெரிய மாறுதல் நடக்க வேண்டுமானால் அதற்குக் காரணமாக அப்பர் ஸ்வாமிகளின் கதையிலும் ஞானஸம்பந்தர் கதையிலும் வருகிற மாதிரியான அற்புதங்கள் நடந்திருக்கக்கூடும்தான் என்பதை எப்படி ஆக்ஷேபிக்கலாம்? இந்த விஷயங்களை அந்த ராஜாக்கள் கல்வெட்டிலோ செப்பேட்டிலோ எழுதி வைக்கவில்லை என்பதால் அவை நடக்கவில்லையென்று சொல்லி விடலாமா?

ராமாநுஜாசாரியார் கன்னட தேசத்தை ஆண்டு கொண்டிருந்த ஜைனனான பிட்டி தேவன் என்ற ஹொய்ஸள வம்ச ராஜாவுடைய பெண்ணுக்குப் பிடித்திருந்த பேயை ஒட்டினதாலேயே அவன் ஜைனத்தை விட்டு வைஷ்ணவனானான் என்று குரு பரம்பரைக் கதையிலிருந்து சொல்கிறார்கள். சரித்திரக்காரர்கள், 'பேய் ஒட்டுகிற ஸமாசாரத்தையெல்லாம் எடுத்துக் கொள்ள மாட்டோம்' என்கிறார்கள். ஆனாலும் ராமாநுஜர் ஜீவித்த பதினொன்றாம் நூற்றாண்டில் கன்னட ராஜ்யத்தில் ஜைனம் மங்கி வைஷ்ணவ வழிபாடு, கோவில் முதலியன அதிகமானதையும், பிட்டி தேவனே பிற்பாடு விஷ்ணுவர்த்தன தேவன் என்று பெயர் பெற்றதையும் சரித்திரத்தில் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். இது குரு பரம்பரைக் கதையில் சொன்னதன் விளைவாகவே இருக்கலாம் என்பதை எப்படி ஆக்ஷேபிக்க முடியும்?

இங்கிலீஷ் படிப்புப் படித்து விட்டதால், ஸயன்ஸில் நிரூபிக்க முடியாததெல்லாம் புரளியென்று சொல்லிப் புராணங்களைத் தள்ளுவது கொஞ்சங்கூட சரியான மனப்பான்மையாகாது.

இப்போதுங்கூட அங்கங்கே பத்துப் பன்னிரண்டு அடி நீளமுள்ள மனித எலும்பக் கூடுகள், புராண வர்ணனைப்படியான - தற்போது இல்லாத - பெரிய பெரிய மிருகங்களின் எலும்புக் கூடுகள் அகப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. இதைப் பார்த்தால் பனை மர, தென்னை மர உயரமுள்ள ராக்ஷஸர்கள், சிங்கம் மாதிரியான உடம்பும் யானை மாதிரியான தும்பிக்கையும் கொண்ட யாளி போன்ற மிருகங்கள் பூர்வத்தில் இருந்திருக்கக் கூடுமென்றே ஏற்படுகிறது. காலெலும்பு மாத்திரம் பதினாறு அடி நீளமுள்ள ஒரு மநுஷ்ய எலும்புக்கூடு, யானையைப் போல பத்து மடங்குகள் உள்ள ஒரு மிருகத்தின் எலும்புக்கூடு முதலானதுகளை ஐஸ்பெர்க்கில் ஆர்க்டிக் ரீஜனில் பனிக்கட்டிக்குள்ளிருந்து கண்டுபிடித்திருக்கிறார்கள். இதைப் பெரிய archelogical find (புதைபொருள் கண்டுபிடிப்பு) என்று கூத்தாடினார்கள். ஆர்க்கியாலஜியோடு, ஜியாலஜி (பூ-இயல்) யையும் சேர்த்து, இவை இத்தனை லட்சம் வருஷத்திற்கு முன் இருந்தவை என்கிறார்கள். இதோடு 'மைதாலஜி' (புராண இயல்) யையும் சேர்த்தால் நம்முடைய பழைய கதைகள் நிஜந்தான் என்றாகிவிடும்.

ஒரு காலத்தில் பனை மர உயர ஆள், இப்போது ஆறடி உயர ஆசாமி, வேறொரு காலத்தில் அங்குஷ்டப் பிரமாண (கட்டை விரல் அளவேயான) ஆள் என்றிப்படி கால வித்யாஸத்தில் பல தினுஸாக ஆகிறது. ஜீவராசிகள், படைப்பினங்களும் மாறுகின்றன. இந்த வித்யாஸங்களையும் புராணங்கள் சொல்லுகின்றன.

"வானரர்கள் என்று குரங்கு மநுஷ்யர்களாம்! மிருகத்தின் உடம்பும் மநுஷ்ய முகமுமாம்! இரண்டு தலை, பத்துத் தலைக்காரர்களாம்! எல்லாம் வெறும் பொய்" என்று புராணங்களைப் பார்த்துச் சொல்லுகிறார்கள். அல்லது இப்படித் திட்டாதவர்களும். "இதெல்லாம் ஒவ்வொரு symbol (தத்வ ரூபகம்) . தத்துவங்களைத்தான் பாத்திரங்களைக் கொண்டு விளக்கியிருக்கிறது; allegorical representation " என்கிறார்கள்.

கதாத்வாரா (கதை மூலமாக) தத்வமும் போதிக்கப்படுவது வாஸ்தவம்தான். அதற்காகக் கதையைப் பொய்யென்று சொல்ல முடியாது. இப்போது கூட எப்போதேனும் நியூஸ் பேப்பரில் பார்க்கிறோம் - இரண்டு தலையும் நாலு கையுமாக ஒரு குழந்தைப் பிறந்தது; மிருகத்திலும் சேராமல் மநுஷ்ய இனத்திலும் சேராமல் நடுவாந்தரமாக ஒரு விசித்திரக் குழந்தை பிறந்தது - என்றிப்படி! freak என்று இதைச் சொல்கிறார்கள். தப்பவே முடியாத இயற்கையும் கொஞ்சம் தப்பிப் போவதைத்தான் freak என்கிறார்கள். இப்பொழுது freak ஆகச் சொல்லப்படுவதே பூர்வகாலங்களில் ஒரு உத்தேசத்தோடு இப்போதை விட அதிகமாகவும் ஸ்ருஷ்டிக்கப் பட்டிருக்கலாம். 

இக் காலத்தில் நமக்கிருப்பதைவிட அதிகமாக அவர்களுக்கு இயற்கைக்கு அதீதமான சக்திகள் இருந்ததால் இயற்கையிலும் இப்படிப்பட்ட அதிசயப் பிறப்புக்கள் அதிகம் நேர்ந்திருக்கலாம். அதனால் இப்போதுள்ள நமக்குத் தெரிவதுதான் ஸகலமும், இதற்கு வித்யாஸமாக எதுவும் இருந்திருக்க முடியாது' என்று நாம் ஆக்ஷேபிப்பதற்கே இல்லை.

நமக்குத் தெரியாதது, தெரிய முடியாதது எல்லாவற்றுக்கும் பொய்யென்று பெயர் வைத்து விடுவது நியாயமில்லை. புராணத்திலே நம்பமுடியாதது என்று நாம் தள்ளிவிடுகிற ஒன்றே அவ்வப்போது நம் காலத்தில் நடந்துவிடுகிறது. பூர்வ ஜன்மத்தைச் சொல்வது முதலான அதிசயங்கள் இப்போதும் நியூஸ் பேப்பர்களில் வந்து கொண்டேதான் இருக்கின்றன. அதுவும் ஸமீப காலமாக இம்மாதிரி அதிசயச் செய்திகள் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றன. ஒன்று சொல்கிறேன்.

புராணத்தில், 'காச்யபருக்கு கத்ரு என்று ஒரு பத்தினி இருந்தாள். அவளுக்குப் பாம்புகள் குழந்தையாகப் பிறந்தன என்று பார்த்தால் உடனே இதனெல்லாம் ஒரே அஸம்பாவிதம் என்று தள்ளிவிடுகிறோம். ஆனால் போன வருஷம் (1958) பேப்பரிலேயே (செய்தித்தாள்) வந்ததை ரொம்பப் பேர் பார்த்திருப்பீர்கள். ஒரு மார்வாடிப் பொண்ணுக்கு பாம்பு பிறந்தது என்று அந்த 'ந்யூஸ்' இருந்தது. அதைப் பார்த்த போதுதான், எனக்கே இந்த மாதிரி இன்னொரு விஷயம் உறுதிப்பட்டது .

நான் ஸ்வாமிகளாக ஆகிறதற்கு முந்தி ஒரு குடும்பத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த வீட்டில் பிறந்த பெண்களும் ஸரி, அந்த வீட்டுப் பிள்ளைகளுக்கு வாழ்க்கைப்படுகிற பெண்களும் ஸரி, தாழம்பூ வைத்துக் கொள்ளப்பட்டார்கள். பின்னாளில் நான் ஸ்வாமிகளான அப்புறம் அவர்களிடம் ஏனென்று கேட்டபோது அவர்கள் ஒரு கதை சொன்னார்கள். கதையென்றால் இட்டுக் கட்டினது இல்லை.

"பத்துப் பதினைந்து தலைமுறைகளுக்கு முன்னாடி எங்கள் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு பாம்பு குழந்தையாகப் பிறந்து விட்டது. இதை வெளியில் சொல்லிக் கொள்ள வெட்கம். ஆனாலும் வீட்டோடு வளர்த்து வந்தார்கள். பாம்புக்குப் பால் போட்டி (புகட்டி) குழந்தை மாதிரியே வளர்த்தார்கள். அதுவும் யாருக்கும் ஹிம்ஸை பண்ணாமல் தன்பாட்டுக்கு வீட்டோடு விளையாடிக் கொண்டிருந்ததாம். இந்த விசித்திர குழந்தையை எங்கேயும் எடுத்துக் கொண்டு போக முடியவில்லை, விட்டு விட்டும் போக முடியவில்லையென்பதால் அம்மாக்காரி ரொம்ப அவசியமானால் ஒழிய எங்கேயும் வெளியே போகவே மாட்டாள். 'கல்லானாலும் கணவன்'என்கிற மாதிரி 'பாம்பானாலும் குழந்தை'தானே?அந்த வாத்ஸல்யம்!எங்கேயும் போக மாட்டாளாம். ஆனால் ரொம்பவும் நெருங்கின பந்துக்களின் கல்யாணமொன்று வந்தபோது அவளால் போகாமல் இருக்க முடியவில்லை.

"அப்போது வீட்டில் ஒரு வயசான கிழவி இருந்தாள். (அவள் பாம்புக் குழந்தையின் பாட்டியின் பாட்டியா என்பது தெரியவில்லை. அந்தக் காலத்தில் தூர பந்துக்களில்கூட நாதியற்றவர்களை வைத்துப் பராமரிக்கிற நல்ல பழக்கம் இருந்து வந்தது. இப்போதுதான் தாயார் தகப்பனாரோடேயே சேர்ந்தில்லாமல் தனிக்குடித்தனம் போகவேண்டுமென்று நவீன நாகரீகத்தில் பறக்கிறார்கள். முன்னெல்லாம் அவிபக்த குடும்பம்தான் (joint family ) . அதிலே யாராவது ஒரு அத்தை பாட்டி, ஒன்று விட்ட சின்ன தாத்தா என்று வைத்துக் கொண்டு ரக்ஷிப்பார்கள். இந்த கதை நடந்த அகத்தில் ஒரு கிழவி இருந்தாள்) அவளுக்குக் கண் தெரியாது.

"அந்தக் கிழவியின் பாதுகாப்பில் பாம்புக் குழந்தையை விட்டுவிட்டு அதன் தாயார் தவிர்க்க முடியாத நிலைமையில் வெளியூருக்குப் போனாள்.

"பாம்புக்கு விசேஷமாக என்ன செய்ய வேண்டும்? குளிப்பாட்ட வேண்டுமா? தலை வார வேண்டுமா? சட்டை போட வேண்டுமா? இல்லாவிட்டால், தூக்கி வைத்துக் கொள்ள வேண்டுமா? இதெல்லாம் இல்லை. வேளைக்கு அதற்குப் பால் விட்டால் மட்டும் போதும். அதனால் அம்மாக்காரி அந்தக் கிழவியிடம், "காய்ச்சின பாலை, கை நிதானத்திலேயே கல்லுரலைத் தடவிப் பார்த்து அதன் குழியிலே விட்டு வைத்து விடுங்கள். நேரத்தில் குழந்தை (பாம்பு) வந்து அதைக் குடித்து விடும்" என்று சொல்லிவிட்டு ஊருக்குப் போனாள். அந்தப் பாம்பை இப்படிப் பழக்கியிருந்திருப்பாள் போலிருக்கிறது.

"கிழவி அப்படியே செய்தாள். பாம்பும் தாயார் சொன்னபடியே வந்து குடித்துவிட்டுப் போயிற்று. அப்புறம் ஒரு வேளை நாழி தப்பிப் போயிற்று. கிழவி அசந்து விட்டாளோ என்னவோ? கல்லுரலில் பார்த்த பாம்புக்குப் பாலில்லை. அது ரொம்ப ஸாது. கொஞ்ச நேரம் காத்துப் பார்த்தது. அப்புறம் அதுவும் அசந்துபோய் அந்தக் கல்லுரல் குழியிலேயே சுருட்டிக் கொண்டு படுத்துக் கொண்டு விட்டது.

கிழவி அதற்கப்புறந்தான், கொதிக்க கொதிக்கப் பாலைக் காய்ச்சி எடுத்துக் கொண்டு கல்லுரலுக்கு வந்தாள். அதிலே பாம்புக்குட்டி படுத்துக் கொண்டிருப்பது அவளுக்குத் தெரியவில்லை;வழக்கம்போலவே கொதிக்க கொதிக்க இருந்த பாலை அப்படியே ஒரு நிதானத்தில் குழிக்குள்ளே விட்டாள்.

பாம்பின் மேலேயேதான் விட்டுவிட்டாள். பாவம்! அந்தக் குட்டி பாம்பு அப்படியே செத்துப்போய் விட்டது.

அங்கே ஊருக்குப் போயிருந்த அம்மாக்காரிக்கு ஸொப்பனமாச்சு. ஸொப்பனத்திலே அந்தப் பாம்புக்குட்டி வந்து, 'நான் செத்துப் போய் விட்டேன்.  போய் என்னை எடுத்து தாழங்காட்டிலே தஹனம் பண்ணிவிடு. இனிமேல் உங்கள் அகத்தில் பிறக்கிற பெண்களும், வாழ்க்கைப் படுகிற பெண்களும் தாழம்பூ வைத்துக் கொள்ள வேண்டாம்" என்று சொல்லிற்று. (தாழம்பதர்தான் பாம்புக்கு ரொம்ப ப்ரீதி)

"அதிலிருந்து எங்கள் குடும்பத்தில் யாரும் தாழம்பூ வைத்துக் கொள்வதில்லை"என்று அந்த அகத்துப் பெண்கள் சொன்னார்கள்.

இந்தக் கதையைப் பற்றி எனக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது, இப்படிக்கூட நடந்திருக்குமா என்று.

நான் ஸ்வாமிகளாகிவிட்ட பிற்பாடு, அந்த வீட்டைச் சேர்ந்தவர்கள் என்னைப் பார்க்க வந்ததற்கு முக்யமாக ஒரு காரணம் இருந்தது. அது பாம்பு பூர்விகத்தை சொல்வது இல்லை. அவர்கள் குடும்பத்தில் ஒரு பழைய செப்பேடு இருந்தது. எனக்கு இதில் 'இன்டரஸ்ட்' உண்டு என்பதால் அதைக் கொண்டு வந்து காண்பித்தார்கள்.

அது கிருஷ்ண தேவராயருக்குப் பிறகு ஆட்சி பண்ணிய அச்சுத தேவராயர் காலத்து தாம்ர சாஸனம் (செப்பேடு) . அதில் எழுதியிருந்ததிலிருந்து, பிராமணன் ஒருத்தன் வேறே 108 பிராமணர்களுக்கு தானம் கொடுத்த விவரம் தெரிந்தது.  ராஜாவுக்காகவே இந்த ஒரு பிராமணன் இப்படி 108 பேருக்கு தானம் பண்ணியிருக்கிறான்.

அது ஏன், எதற்காக என்று சொல்கிறேன். பிராமணன் ஸதாஸர்வகாலமும் வேத அத்தியயனமும், கர்மாநுஷ்டானமும் பண்ணிக் கொண்டேயிருக்க வேண்டுமென்பதால் அவன் உத்தியோகத்தில் போய் ஸம்பாதிக்கக் கூடாது. ஆனால் அவன் குடும்பம் நடக்கவேண்டுமே! அவன் பெரிய யக்ஞங்களும் பண்ண வேண்டுமே! இவற்றுக்காக அவன் தானம் வாங்கலாம் என்று சாஸ்திரம் அநுமதித்தது. ராஜாக்களும் மற்றப் பிரபுக்களும் இப்படியே அவர்களுக்குக் கொடுத்து ஆதரித்து வந்தார்கள். ஆனால் தானம் வாங்குகிற ரைட் இருக்கிறது என்பதற்காக, இந்தக் காலத்தில் சிலர் தப்பாக நினைப்பது போல, பிராமணர்கள் மற்றவர்களைச் சுரண்டவில்லை. ரொம்பவும் மானஸ்தர்களாக இருந்து கொண்டு அவசியமானால்தான் அதுவும் தங்களுக்கு வேண்டிய அளவுக்கே, தானத்தை அங்கீகரித்தார்கள். ஒரு ராஜாவின் பரம்பரை உத்தமமானதாக இருந்தால்தான், அவன் நல்ல க்ஷத்ரியனாக இருந்தால்தான் அவனுடைய மான்யத்தை ஏற்றுக்கொள்வார்கள். இவர்கள் பிடுங்கித் தின்பதால் ராஜாக்கள் கஷ்டப்படாமல், 'நாம் கொடுப்பதை வாங்கிக்கொள்ள மாட்டேன் என்கிறார்களே! ஸத்பாத்திரத்துக்கு தானம் செய்கிற புண்ணியம் நமக்குக் கிடைக்காமல் போகிறதே! என்றுதான் கஷ்டப்பட்டிருக்கிறார்கள். இம்மாதிரி ஸந்தர்ப்பங்களில் ராஜாக்களும் பிரபுக்களும் ஒரு யுக்தி பண்ணியிருக்கிறார்கள். அதாவது, தீன தசையில் உள்ள ஒரு பிராமணனை 'மசிய'வைத்து அவனுக்கு ஏகப் பட்டதாக தானம் செய்துவிடுவார்கள். ஆனால அது முழுவதும் அவன் ஒருத்தனை உத்தேசித்ததேயில்லை. அவன் வழியாக மற்ற பிராம்மணர்களுக்கும் தானம் பண்ணி விடவேண்டுமென்பதே உத்தேசம். அதாவது இந்த ஒரு பிராம்மணன் 'பேருக்கு' அவ்வளவு தானத்தையும் வாங்கிக் கொள்வதுபோல வாங்கிக் கொள்வதால் அவர்களுக்கு 'ப்ரதிக்ரஹ தோஷம்'  ('ஏற்பது இகழ்ச்சி' என்ற குறை) ஏற்படாது. எனவே மற்ற பிராம்மணர்கள் இவன் செய்கிற தானத்தை ஏற்பார்கள். பிரபுவின் உத்தேசம் இப்படியாக நிறைவேறிவிடும்.

இப்படித் தந்திரம் பண்ணினது நடுவிலே வருகிற அந்த ஒரு பிராம்மணனுக்கு தோஷமாகாதா? பிரபு நல்ல எண்ணத்தில் எப்படியாவாது வேதவித்துக்களை ஆதரிக்க வேண்டுமென்று இப்படி யுக்தி செய்வதில் தப்பில்லைதான். ஆனால் இப்படி ஒரு தந்திரத்துக்கு உடன்பட்ட பிராமணனுக்கு பாபமில்லையா என்றால், இல்லை. எப்படியென்றால், பிரபு கொடுத்த தானம் சட்டப்படி இவனுடைய சொத்தாகத்தான் ஆகிறது. இவன் பேரிலேதான் அவன் தத்தம் செய்திருக்கிறான். அதனால் அப்புறம் இவன் அதற்கு உரிமை கொண்டாடாமல் அதிலே முக்கால்வாசிக்கு மேல் மற்றவர்களுக்குக் கொடுத்துவிட்டுத் தான் ஸ்வல்ப பாகமே வைத்துக் கொள்வதால் இவனுக்கும் தோஷம் போய்விடுகிறது.

ராஜப் பிரதிக்ரஹமே தோஷமானது - அரசனிடமிருந்து வாங்குவதே தப்பு- என்றுதான் தியாகையர் மாதிரியானவர்கள், சரபோஜி போன்றவர்கள் "கொடுத்தே தீருவேன்" என்று வலுக்கட்டாயப் படுத்தினால்கூட அதை உதறித்தள்ளிவிட்டு, "நிதி சால ஸுகமா?" (பணமா சௌக்கியம் தருவது?) என்று சீறியிருக்கிறார்கள்.

நாட்டுக்கோட்டை செட்டிப்பிள்ளைகள் (நகரத்தார்) அநேக சத்திரங்களைக் கட்டினபோது, பிராம்மணர்கள் அவற்றில் போய் சாப்பாட்டுக்கு உட்காருவதற்குத் தயங்கிய போது, இதே போலத்தான் ஒரு பிராம்மணனைத் தேடிப் பிடித்து அவன் பேரில் சத்திரத்தின் கட்டளைகளை எழுதி, அவன் மற்றவர்களுக்குப் போடுகிற மாதிரிப் பண்ணியிருக்கிறார்கள்.

நான் மேலே சொன்ன செப்பேட்டில் இப்படித்தான் ஒரு பிராம்மணன், ராயரிடமிருந்து வடார்க்காட்டிலுள்ள மாம்பாக்கம் என்ற கிராமத்தை பூதானம் வாங்கிக் கொண்டு அதை 108 பிராம்மணர்களுக்கு விநியோகம் செய்திருக்கிறான். அந்த 108 பிராமணர்களுடைய பேரையும் சொல்லி, அவர்கள் இன்ன வேத சாஸ்திரம் படித்தவர்கள், அவர்களுக்கு இத்தனை நிலம் கொடுக்கப்படுகிறது என்ற விவரங்கள் அந்த ஸாஸனத்தில் எழுதியிருந்தது.

அப்படி நூற்றெட்டுப் பேரை உத்தேசித்து கிராம தானம் வாங்கிக் கொண்ட பிராமணர் பாம்புக் குழந்தைக் குடும்பத்தில் வந்தவர்தான். அவரிடமிருந்து தானம் பெற்ற மற்றவர்களின் வம்சம் எதுவும் இப்பொழுது தெரியவில்லை. இவர்கள் குடும்பத்தில் மட்டும் இந்தச் செப்பேடு தலைமுறை தலைமுறையாக வந்திருக்கிறது.

இதிலே குறிப்பிட்டு சொல்லவேண்டியது, செப்பேட்டில் சொல்லியிருக்கிற மூதாதையின் பெயர் 'நாகேச்வரன்'என்று இருப்பதுதான். இப்போது இந்தத் தலைமுறையில் இதை என்னிடம் கொண்டு வந்த குடும்பத் தலைவர் பெயரும் நாகேச்வரன். விசாரித்துப் பார்த்ததில் அவர்கள் குடும்பத்தில் ஒவ்வொரு தலைமுறையிலும் நாகேச்வரன் என்ற பெயரை வைத்துக் கொண்டு வருகிறார்களென்று தெரிந்தது.

உடனே ஊகிக்க முடிந்தது - பாம்புக் குழந்தையின் ஸம்பந்தத்தால்தான் இந்த நாகப் பெயர் ஏற்பட்டிருக்கிறதென்று. அதோடுகூட அச்சுத தேவராயர் காலத்திலேயே அவர்கள் சொன்ன கதைக்கு ஆதாரம் இருக்கும்படியாக இந்தப் பெயர் இருந்திருப்பதும் தெரிந்தது.

'இப்படியும் இருக்குமா?'என்று நான் முன்பு நினைத்ததற்கு இது பதில் சொல்கிறார்போல் இருந்தது. அப்புறம் போன வருஷம் ஒரு பெண்ணுக்குப் பாம்பு பிறந்த ந்யூஸைப் பார்த்தபின் இதைப் பற்றி ஸந்தேஹப்பட வேண்டாம் என்று மேலும் உறுதியாயிற்று.

உங்களுக்கு புராண நம்பிக்கைப் போதவில்லை என்று நான் கண்டிப்பது தப்புத்தான். எனக்கே ந்யூஸ் பேப்பரில் வருவது நிஜம் என்று தோன்றின மாதிரி, ஐதிஹ்யமாக ஒரு குடும்பத்தில் சொன்னதில் நம்பிக்கை போதாமல் ந்யூஸைக் கொண்டுதானே ஐதிஹ்யத்தை confirm செய்து கொள்ள வேண்டியிருந்தது?

இதுதான் இப்போது நாம் இருக்கிற ஸ்திதி: பேப்பரில் வந்து விட்டால் எத்தனை நம்பத் தகாததானாலும் பொய் என்று தோன்றவில்லை ஆனால் புராணம் என்றாலே கட்டுக் கதை என்று அலக்ஷ்யம். "அவர்களுக்கு வேலையில்லை. ஏடு இருந்தது, கதை கதையாகக் கட்டி வைத்து விட்டார்கள். இதில் சிலதில் கெட்டிக்காரத்தனமாவது இருக்கிறது. பாக்கியெல்லாம் அபத்தம்"என்று நினைக்கிறோம்.

Sunday, 27 January 2013

பெற்றோர் செய்யும் ஸம்ஸ்காரங்கள்




கர்ப்பாதானம் முதற்கொண்டு ஸம்ஸ்காரங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. தாயார் வயிற்றில் தேஹம் ஏற்படுகிற க்ஷணம் முதல் ஸம்ஸ்காரங்கள் ஆரம்பமாகின்றன. சரீர பிண்டமானது மந்திர பூர்வமாக உற்பத்தியாக வேண்டும். கர்ப்பாதானம், பும்ஸ்வனம், ஸீமந்தம் என்பவை தாயார் தேஹத்துக்கு ஏற்பட்ட ஸம்ஸ்காரமென்று நினைக்கிறார்கள். அது தப்பு. அவை உள்ளே உண்டாகிற ஜீவனைக் குறித்தவை. அந்த ஜீவனுடைய பரிசுத்திக்காக ஏற்பட்டவை. கர்ப்பத்திலுள்ள வேறொரு ஜீவனை உத்தேசித்துப் பண்ணப்படுபவைகளாதலினால் அந்த ஸம்ஸ்காரங்களின் விஷயத்தில் பெரியவர்களுக்குப் பொறுப்பு அதிகம். தங்களுக்காக என்றால் வேண்டாம் என்று எண்ணலாம். வேறொரு ஜீவனுக்காக இருப்பதால், இவர்கள் அதை அநாதரவு பண்ணித் தடுப்பது பெரிய பாபமாகிறது. 

இக்காலத்தில் சாந்தி கல்யாணம் (கர்ப்பாதானம்) , ஸீமந்தம் முதலியவை ஃபாஷனாக இல்லை என்று அநேகர் விட்டு வருவது பெரிய பாபமாகும். ஸ்திரீ-புருஷ உறவிலே நிஜமாக வெட்கப்பட வேண்டிய விஷயங்களில் லஜ்ஜை இல்லாமல் வெள்ளைக்கார ஃபாஷனில் விவஸ்தை கெட்டு நடந்துகொண்டே, இதைப் பரிசுத்தி பண்ணி நல்லதாக ஒரு புது ஜீவனை உண்டாக்குவதற்காக ஏற்பட்ட வைதிக கர்மாக்களை லஜ்ஜைக்குரியவை என்று விட்டுவிடுவது கிரமமே இல்லை.

தேஹம் வெளியில் வருவதற்கு முன்பு பண்ணப்படுபவை கர்ப்பாதானம், பும்ஸுவனம், ஸீமந்தம் என்னும் மூன்று ஸம்ஸ்காரங்களும். மந்திர பூர்வமாக ஸ்திரீ-புருஷ ஸங்கம் ஏற்பட வேண்டும். மிருகப் பிராயமான வேகமாக இல்லாமல் இதையும் ஒரு ஸம்ஸ்காரமாக மந்திரத்தின் மூலம் உயர்த்தி கருவாக உண்டாகக் கூடிய ஜீவனுக்கும் அதனால் க்ஷேமத்தை ஏற்படுத்த வேண்டும். இந்த உயர்ந்த தத்துவத்தை விட்டு விட்டு, இதனால் நாம் ஏதோ ஒரு அநாகரிகமான சடங்கை விட்டுவிட்டோம் என்று பெருமைப்பட்டுக் கொள்வது பைத்தியக்காரத்தனம்தான். 

லஜ்ஜை இருந்தால், சாந்தி கல்யாணத்துக்கு ஊர் கூட்ட வேண்டாம். ஆனால் அகத்து மட்டோடாவது அவசியம் இந்த கர்மா பண்ணத்தான் வேண்டும். நித்ய ஒளபாஸனம், நாலு நாள் கலியாணம் என்பவையெல்லாம் போய், கல்யாணத்துக்கு மறுநாள் சேஷஹோமம் கூட இல்லாமல், (கல்யாணம் நடக்கும்) அன்றே ஒரு விதமான மந்திர பூர்வ ஸம்ஸ்காரமும் இல்லாமல் இப்போது இதை (ஸ்திரீ-புருஷ ஸங்கத்தை) செய்து வருவது ரொம்பவும் துராசாரம்; ரொம்பவும் பாபமும் ஆகும். மிருகப் பிராயமாகப் பண்ணுவதால் ஸந்ததியும் அப்படியே (மிருகம் மாதிரியே) அமைகிறது. பும்ஸுவனம் கர்ப்பத்தின் மூன்றாவது மாதம் செய்ய வேண்டும். ஆறு அல்லது எட்டாவது மாதத்தில் ஸீமந்தம் பண்ணவேண்டும். இப்போது இரண்டையும் சேர்த்து ஏதோ பண்ணுகிறார்கள்.

குழந்தை பிறந்தவுடன் ஜாதகர்மா என்ற ஸம்ஸ்காரம் செய்யவேண்டும். தானங்கள் கொடுக்கவேண்டும். பதினோராவது நாள் நாமகரணம். பெயர் வைப்பதுகூட ஜீவனைப் பரிசுத்தி பண்ணுகிற ஸம்ஸ்காரமாகத்தான் சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இன்ன நக்ஷத்திரத்தில் பிறந்தால் இன்ன மாதிரிப் பெயர் வைக்க வேண்டும் என்று இருக்கிறது. பகவந் நாமாக்களாகப் பேர் வைக்க வேண்டும் என்று இருக்கிறது. அந்தப் பேரைச் சொல்லிக் கூப்பிடுவதே நம்மையும் சுத்தப்படுத்தும் ஸம்ஸ்காரமாகிறது!

லாங்ஃபெல்லோ (நீள ஆள்) , ஸ்டோன் (கல்) என்றெல்லாம் கண்ட பெயர்களை வைத்துக் கொள்கிற மாதிரி நம் மதத்தில் இல்லை. இப்போது இப்படிப்பட்ட அசட்டுப் பெயர்கள் இங்கேயும் வந்து விட்டன. ஸ்வாமி பெயராகவே வைத்தாலும் அதைக் கன்னாபின்னா என்று சிதைத்துக் கூப்பிடும் வழக்கமும் நீண்டகாலமாக இருந்திருக்கிறது. இதெல்லாம் ரொம்பத் தப்பு. வைதிக ஸம்ஸ்காரமாக வைத்த பெயர் என்பதற்கான கௌரவத்தை அதற்குக் கொடுக்கவேண்டும்.

குழந்தையின் ஆறாம் மாஸம் உணவூட்டுவதான 'அன்னப்ராசன' ஸம்ஸ்காரம்.

கர்ப்பாதானம் முதல் நாமகரணம் வரை குழந்தையை முன்னிட்டு (on behalf ) பெற்றோரே பண்ணுவது. அன்ன ப்ராசனத்தில் தகப்பன் மந்திரம் சொன்னாலும் குழந்தையே சாப்பிடுகிறது.

தாயார் மருந்து சாப்பிட்டால் பால் குடிக்கிற குழந்தைக்கு தேஹபுஷ்டி ஏற்படுகிறதோ இல்லையோ? அதைப் போலவே மாதா பிதாக்களுடைய சித்தவிருத்தி எப்படி இருக்கிறதோ அப்படியே உள்ளே இருக்கும் ஜீவனும்
ஸாத்விக ஸ்வபாவமோ, பாப பிரவிருத்தியோ உண்டாகும். 

மனது சாந்தமாக இருந்து ஒரு ஸமாசாரம் எழுதி அதைப் படித்துப் பார்த்தால் நன்றாயிருக்கும். கோபமாக இருக்கும் பொழுது எழுதி அப்புறம் பார்த்தால் நன்றாக இருப்பதில்லை. சரீரத்திலும் அப்படியே குணதோஷங்கள் ஏற்படுகின்றன. ஒரு தம்பதி உத்தம குணங்களோடு ஸங்கமித்தால்தான் நல்ல பிண்டம் ஏற்பட்டு உள்ளே இருக்கும் ஜீவனுக்கும் நல்ல சுபாவம் உண்டாகும். மந்திர பூர்வமாகப் பண்ணுவது இதற்காகத்தான்.

இத்தகைய கர்மாக்களை அடியோடு தள்ளாதவர்களும் உரிய காலத்தில் பண்ணாமல் சேர்த்துப் பண்ணி விடுகிறார்கள். இப்படியன்றி, அந்த அந்தக் காலத்தில் அந்த அந்த மந்திரத்தைச் சொல்லி அந்த அந்த மந்திரத்தைச் சொல்லி அந்த அந்த திரவியங்களைக் கொண்டு அந்த அந்த ஸம்ஸ்காரத்தைச் செய்யவேண்டும்.

அன்னப் பிராசனத்துக்கப்புறம் 'சௌளம்' செய்ய வேண்டும். அதாவது சிகை (குடுமி) வைக்கிறது. ஸத் கர்மாவுக்கு உபயோகமாக இருக்க அது பண்ணவேண்டும். ஸந்நியாஸிக்கு சிகை இல்லை. மொட்டைத் தலையாக இருக்க வேண்டும். ஸந்நியாஸிகள் மந்திரபூர்வமாகத்தான் சிகையை எடுத்துக் கொள்ளவேண்டும். மந்திரபூர்வமாக வைத்துக் கொண்ட சிகையைப் பரமேச்வரனுக்கு முன்பு பண்ணின பிரதிக்ஞைக்கு விரோதமாக இஷ்டப்படி எடுத்து விடுவது தப்பு. சிகையை எடுப்பது ஒரு பெரிதா என்று கேட்கலாம். பொய் சொல்லுகிறது தப்பு அல்லவா? அது எவ்வளவு தப்போ அவ்வளவு தப்பு இதுவும். 'பரமேசவர ப்ரீதியாக'என்று ஸங்கல்பம் பண்ணியே, சௌள ஸம்ஸ்காரத்தில் சிகை வைக்கப்படுகிறது. அப்படி வைத்துக் கொண்டதைக் கிள்ளுக்கீரையாக எண்ணி மனம் போனபடி எடுத்தால் அந்தப் பரமேச்வரனிடமே பொய் சொன்னதாக ஆகவில்லையா? சிவலிங்கப் பிரதிஷ்டை செய்கிறார்கள். வேல், ஸாளக்கிராமம் வைத்து பூஜை செய்கிறார்கள். பின்பு, கோபித்துக் கொண்டு எடுத்து எறிந்து விடலாமா? அகஸ்மாத்தாகப் போனால் - திருடன் கொண்டு போனால் பாதகம் இல்லை. நாமாக வைத்ததை நாமாக வேண்டுமென்று மாற்றுவது பெரிய தப்பு.

சௌளத்தை மட்டும் ஸங்கல்பத்தோடு பண்ணிக் கொண்டு அப்புறம் இஷ்டப்படி அதை எடுத்து விட்டு 'க்ராப்'பண்ணிக் கொள்வது தப்பு.

'.......ஏ போச்சு'என்று பேச்சு வழக்கிலே ரொம்ப அலக்ஷ்யமான ஸமாசாரமாகச் சொன்னாலும், வாஸ்தவத்தில் இது பெரிய ஸமாச்சாரம்தான். வேத அத்யயனம், வைதிக கர்மாநுஷ்டானம், தர்மப்படி இல்லறத்திலிருந்து கொண்டு பண்ணும் தாம்பத்தியம் இவற்றிலே சரீரத்துக்கும், சரீரத்தின் நாடி சலனங்கள் மூலம் சித்தத்துக்கும் ஏற்படவேண்டிய பலத்துக்குத் தலையில் பிரம்மரந்திரத்தில் சிகை என்ற ரக்ஷை இருப்பது பெரிய காப்பாகும். கூரைக்கு ஒடு போடுகிற மாதிரி அது!வேத கர்மாவும், தாம்பத்தியமும் நின்றுபோன ஸந்நியாஸ ஆச்ரமத்தில் தான் இந்த ரக்ஷை தேவையில்லாமல் போகிறது. ஆகையால் கிருஹஸ்தன் ஸந்நியாஸியாக ஆனாலன்றிக் குடுமியை எடுக்கக் கூடாது. தற்காலத்தில் பிரம்மச்சரிய, கிருஹஸ்தாச்ரம காலங்களிலும் வேத ஸம்பந்ததத்துக்கு முழுக்குப் போட்டு விட்டதால், சிகையும் இல்லாமலிருக்கிறோம்!

பாபம் பண்ணி நரகவாஸம் பண்ணுகிற ஜீவர்களின் பிரீதிக்காக, ஒரு கிருஹஸ்தன் ஸ்நானம் செய்யும்போது மந்திர பூர்வாக சிகோதகம் தரவேண்டும் ( குடுமியிலிருந்து ஜலத்தைப் பிழிந்து கொடுக்க வேண்டும்) என்று இருக்கிறது. சிகை இல்லாவிட்டால் இதை எப்படிப் பண்ணுவது?

சௌளத்துக்கு அப்புறம் வருவது உபநயனம். பிரம்மோபதேசம், பூணூல் கல்யாணம் என்பதெல்லாம் இதுவே.

உபநயனம் முதல் பண்ணப்படும் ஸம்ஸ்காரங்கள் ஒரு ஜீவனுக்கு அறிவு வந்த பின்பு ஏற்படுபவை. குழந்தையாக இருந்த ஜீவன் அறிவுடன் மந்திரம் சொல்லிப் பண்ணத் தொடங்கும் முதல் ஸம்ஸ்காரம் உபநயனமே.

மாதா பிதாக்களிடத்தில் ஏதாவது பாப தோஷங்களிருந்தால் அவை அவர்களிடத்திலுண்டாகிற ஜீவன் எந்த மாதாவுடைய கர்ப்பத்தில் வாஸம் பண்ணுகிறதோ, எந்தப் பிதாவால் உண்டாகிறதோ அவர்களுடைய தோஷங்கள் அந்த ஜீவனுக்கு ஏற்படாமலிருப்பதற்காக ஸம்ஸ்காரங்கள் செய்யவேண்டும். மாதா பிதாக்களிடம் துர்க்குணங்கள் உண்டு. அவை அவர்களால் ஏற்படும் ஜீவன்களுக்கு உண்டாகாமலிருக்க ஸம்ஸ்காரங்கள் செய்ய வேண்டும். அந்த தோஷங்கள் (கர்ப்ப சம்பந்தமான) கார்ப்பிகம் என்றும் (பீஜ சம்பந்தமான) பைஜிகம் என்றும் இரண்டு தந்தையால் உண்டாவது. இந்த தோஷங்களின் நிவாரணத்திற்காக உபநயனம் வரையில் உள்ள சம்ஸ்காரங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அவைகளைச் செய்ய வேண்டியவர்கள் மாதா பிதாக்கள். உபநயனம் வரையில் உள்ள ஸம்ஸ்காரங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அவைகளைச் செய்ய வேண்டியவர்கள் மாதா பிதாக்கள். உபநயனம் வரைக்கும் ஸம்ஸ்காரங்களைத் தானே செய்து கொள்ளப் புத்திரனுக்கு அர்ஹமான (தகுதியான) வயது வரவில்லை.

எந்த ஸம்ஸ்காரத்தையும் உரிய காலத்தில் பண்ண வேண்டும். அதனால் பாப பரிகாரம் ஏற்படுகிறது. பூர்வத்தில் வேறொரு காரியம் பண்ணிப் பாபம் ஸம்பாதித்திருக்கிறோம். அதை நீக்க மனம்-வாக்கு-காயங்களால் ஸம்ஸ்காரம் பண்ணவேண்டும்.

நாம், பாபம் அந்த மூன்று கரணங்களாலேயும் பண்ணியிருக்கிறோம். மனதால் கெட்ட எண்ணம் நினைத்திருக்கிறோம். வாக்கால் பொய் பேசியிருக்கிறோம்.தேஹத்தால் பொய் பண்ணியிருக்கிறோம். அதாவது பல தினுசாகப் பொய் பண்ணியிருக்கிறோம். அதாவது பல தினுஸாகப் பாசாங்கு பண்ணியிருக்கிறோம். மனோ-வாக்-காயங்களால் பண்ணிய பாபங்களை அவைகளாலேயே ஸத் காரியங்களைப் பண்ணிப் போக்கிக் கொள்ள வேண்டும். மனத்தினால் பரமேச்வரத் தியானம் பண்ணவேண்டும்; வாக்கினால் மந்திரம் சொல்ல வேண்டும்;காயத்தால் ஸத்காரியம் பண்ண வேண்டும். மனோ -வாக் - காயங்களால் தானாக ஒரு ஸம்ஸ்காரத்தைப் பண்ணும் பக்குவம் ஜீவனுக்கு உபநயனத்திலிருந்து ஏற்படுகிறது. இதுவரை தகப்பனார்தான் இவனுக்காக மந்திரம் சொல்லிப் பண்ணினார்.

இங்கே இன்னொரு விஷயமும் சொல்லவேண்டும். ஒரு ஜீவனை direct -ஆக (நேராக) உத்தேசித்தே அதன் பிதா பண்ணும் (கர்ப்பாதானம் முதற்கொண்டு சௌளம் வரையிலான) கர்மாக்கள் மட்டுமின்றி, அந்தப் பிதாவாகப்பட்டவன் மற்ற எல்லா ஸம்ஸ்காரங்களையும் பண்ணி நல்ல அநுஷ்டாதாவாக இருப்பதும் indirect -ஆக (மறைமுகமாக) அவனுடைய புத்திரர்களுக்கு நல்லதை செய்கிறது. 'மாதா பிதா பண்ணுவது மக்களைக் காக்கும்'என்ற வார்த்தைப்படி இது மாதிரி நடக்கிறது. வைதிக பிராமண ஸந்ததிக்குஸமீப காலம் வரையில் புத்திப் பிரகாசம் அதிகம் இருந்து வந்ததற்கு ஒரு முக்ய காரணம், முன்னோர்கள் பண்ணிய ஸம்ஸ்காரங்களின் சக்திதான். முன்பு இருந்தவர்கள் செய்தது இரண்டு அல்லது மூன்று தலைமுறைக்கு அஸ்திவாரமாக இருக்கிறது. அந்த எல்லை தாண்டிப் போனால் அப்புறம் கஷ்டந்தான். இந்த ஸந்ததியில் பிறந்த

குழந்தைகளே லௌகிகத்தில் பிரவேசித்தபின் அதிகமாகக் கீழே போய் விட்டார்கள். ரொம்பவும் கெட்டுப் போனார்கள். மடை அடைத்து வைத்ததைத் திறந்துவிட்டால் வெகு வேகமாக ஜலம் போகிற மாதிரி இவர்கள்தாம் கடுமையாக லௌகிகத்தில் இறங்கி விட்டார்கள்.

நம்முடைய பெற்றோர்கள் ஸம்ஸ்காரம் பண்ணவில்லை;அதனால் நமக்கு நன்மை உண்டாகவில்லை என்ற குறை நமக்கு இருக்கலாம். அதைப்போல நம்முடைய குழந்தைகள் குறை கூறாமல் நாம் நல்ல ஸம்ஸ்காரங்களைப் பண்ணவேண்டும். அவர்களுக்கும் பண்ணி வைக்க வேண்டும்.

அஷ்ட குணங்கள்





தயை, க்ஷாந்தி, அநஸூயை, சௌசம், அநாயசம், மங்களம், அகார்ப்பண்யம், அஸ்ப்ருஹா என்பவை அஷ்ட (எட்டு) குணங்கள்.

(1) 'தயை' என்பது ஸர்வபூதங்களிடமும் அன்பு, அருளுடைமை. மநுஷ்ய வாழ்க்கையின் நிறைந்த பலன், பெரிய ஆனந்தம் அன்பு செய்வதுதான். அதுதான் அஸ்திவாரம், back-bone (முதுகெலும்பு) .

(2) 'க்ஷாந்தி' என்றால் பொறுத்துக் கொள்வது. நமக்கு வியாதி, விபத்து,தாரித்ரியம் முதலானவற்றால் உண்டாகிற கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்வது ஒன்று. நமக்கு ஒருத்தர் கஷ்டத்தைக் கொடுக்கிறபோது அவரையும் மன்னித்து அன்பைக் காட்டுவது இன்னொருவிதப் பொறுமை.

(3) 'அநஸூயை' என்பது அத்ரி மஹரிஷியின் பத்னியான மஹாபதிவிரதையின் பேர் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அஸுயை இல்லாதவள் அநஸூயை. (அநுஸூயை என்று 'நு' போட்டுச் சொல்வது தப்பு.) நம்மைவிட ஒருத்தன் நல்ல நிலையில் இருந்தால் வயிற்றெரிச்சல் படக்கூடாது. பொறைமையின்மைதான் அநஸூயை.

முதலில் சொன்ன அன்பு எல்லாரிடமும்; இரண்டாவதாகச் சொன்ன பொறுமை தப்புப் பண்ணுகிறவனிடம்;
பொறாமையின்மை நம்மைவிட மேல் ஸ்தானத்திலிருக்கிறவனிடம். அவன் நம்மைக் காட்டிலும் யோக்யதையில் குறைந்தவனாக இருந்தாலும்கூட, நமக்குமேல் ஸ்தானத்துக்குப் போய்விட்டான் என்றால் அஸூ¨யைப்படக் கூடாது. 'பூர்வ ஜன்மாவில் நம்மைவிடப் புண்ணியம் பண்ணியிருப்பான். அதனால்தான் பகவான் அவனை உயர்த்தி வைத்திருக்கிறான்'. என்று மனஸைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.

(4) சௌசம் என்பது 'சுசி' என்பதை வைத்து வைத்து ஏற்பட்டது. 'சுசி' என்றால் சுத்தம். ஸ்நானம், மடி வஸ்திரம், ஆஹார நிர்ணயம் முதலான ஆசாரங்கள் எல்லாம் 'சௌசம்' என்பதில் வரும். 'சுத்தம் சுகம் தரும். சுத்தம் சோறு போடும்' என்று பாமர ஜனங்களும் சொல்வார்கள். வெளியிலே நன்றாக சுத்தமாக இருக்கிறவனைப் பார்த்தாலே நம் மனஸுக்கும் சுத்தமாயிருக்கிறது.

ஸகல ஜனங்களுக்குமான ஐந்து தர்மங்களை மநு சொல்கிறபோதும் முதலில் அஹிம்ஸை, அப்புறம் ஸத்யம், அப்புறம் பிறர் பொருளில் ஆசையின்மை (அஸ்தேயம் - திருடாமலிருப்பது என்பது நேர் அர்த்தம்) என்ற மூன்றைச் சொல்லி, நாலாவதாக இந்த 'சௌசம்' என்பதையே சொல்கிறார். கடைசியாக இந்திரிய நிக்ரஹம் (புலனடக்கம்) என்பதைச் சொல்கிறார்.

(5) 'அநாயாஸம்' என்பது ஆத்ம குணங்களில் அடுத்தது. ஆயாஸத்துக்கு எதிர்ப்பதம் அநாயாஸம். 'லைட்'டாக இருப்பது என்கிறார்களே அதுதான் அநாயாஸம். ஆயாஸம் இல்லாமல், அதாவது எதையுமே ஒரு சுமையாக எடுத்துக் கொண்டு கஷ்டப்படாமல், லைட்டாக லேசாக இருப்பது அநாயாஸம். எப்போது பார்த்தாலும் 'உர்'ரென்று இருந்துகொண்டு, வாழ்க்கையில் தனக்கு எல்லாம் கஷ்டம் என்று புலம்பிக் கொண்டு, நொந்து கொண்டு இல்லாமல், எதிலும் கடுமையாகச் செய்யாமல், நிம்மதியோடு லேசாகச் செய்யவேண்டும். இப்படிச் செய்வதாலேயே ஆயாஸப் பட்டுக்கொண்டு செய்வதைவிடப் பலமடங்கு வேலைசெய்து விடலாம். பதட்டமில்லாமல் பண்ணுவது அநாயாஸம். "பட பட" என்று செய்தால் நம்மையும் நெரித்துக் கொண்டு மற்றவர்களையும் நெரிப்பதுதான் மிஞ்சுமே தவிரக் காரியம் ஸரியாக ஆகாது. 

அநாயாஸம் ஒரு பெரிய Virtue (குணசீலம்) . அலட்டிக் கொள்ளாமல் இருக்கிற குணம் அநாயாஸம். தானும் சிரமப்படாமல், மற்றவர்களையும் சிரமப்படுத்திக் கொண்டிராமல் இருப்பது அநாயாஸம். 

அநேக கர்மாநுஷ்டானங்களில் உடம்பால் சிரமப்படத்தான் வேண்டியிருக்கும். சிராத்தம் செய்வதென்றால் மத்யான்னம் இரண்டு மணி, மூன்று மணி வரை பட்டினி கிடக்கத்தான் வேண்டும். ஒரு யாகம் என்றால் அதில் இருக்கிற சரீர சிரமம் கொஞ்ச நஞ்சமில்லை; 

ஆகையால், இங்கே சிரமப்படக்கூடாது என்பது மனஸினால் சிரமப்படாமலிருப்பதைத்தான் குறிக்கும். எந்தக் காரியமானாலும் விக்கினங்கள் ஏதாவது வரத்தான் செய்யும். இதைப் பார்த்து மனஸை strain பண்ணிக் கொள்ளக்கூடாது. எல்லாம் பகவான் திட்டப்படி நடக்கிறது என்று, மனஸிலே பாரமில்லாமல் இருக்கவேண்டும். ஸங்கீத வித்வான் அநாயஸாமாக தாரஸ்தாயி பிடித்தார் என்றால் என்ன அர்த்தம்? சிரம ஸாத்யமானதையே ஸுலபமாக்கிக் கொண்டு விட்டார் என்றுதானே அர்த்தம்? சிரமமான வாழ்க்கையை அப்படிப் பண்ணிக்கொள்வதுதான் 'அநாயாஸம்'.

(6) 'மங்களம்' என்றால் மங்களந்தான்! ஆனந்தமாக - அதிலேயே ஒரு கம்பீரத்தோடு தூய்மையோடு ஆனந்தமாக இருந்து கொண்டிருப்பதுதான் மங்களம். எதற்கெடுத்தாலும் எரிந்து விழுந்து கொண்டோ, மூக்கைச் சிந்திப் போட்டுக்கொண்டே இல்லாமல், 'ஆஹா' என்று எப்போதும் ஸந்தோஷமாக இருக்கவேண்டும். இதுதான் லோகத்துக்கு நாம் செய்கிற பெரிய ஒத்தாசை, பெரிய தொண்டு. பணத்தை வாரிக் கொடுப்பதை விட, வேறு ஸர்வீஸ்கள் பண்ணுவதை விட, நாம் போகிற இடமெல்லாம் நம் மங்களத்தாலேயே ஆனந்தத்தை உண்டாக்கிக் கொண்டிருப்பதுதான் மற்ற ஜீவர்களுக்குப் பெரிய தொண்டு. 'லைட்'டாக, லேசாக எதையும் ஸாதிப்பது அநாயாஸம். போகிற இடமெல்லாம் நாமே ஒரு 'லைட்' (தீபம்) மாதிரி ஒளியை, ஆனந்தத்தைக் கொடுப்பது 'மங்களம்'. நாம் ஒரு இடத்துக்குப் போனால் அங்கேயிருப்பவர்கள் 'குற்றம் கண்டு பிடிக்க வந்துவிட்டான்' என்று முகத்தைச் சுளிக்கும்படியாக இருக்கக் கூடாது. எங்கே நாம் போனாலும் அங்கே நல்ல தினுஸான ஸந்தோஷத்தை விருத்தி பண்ண வேண்டும். நாமும் மங்களமாக இருந்து கொண்டு, பொங்கும் மங்களம் எங்கும் தங்குமாறும் செய்ய வேண்டும்.

(7) 'அகார்ப்பண்யம்' என்று அடுத்தது சொன்னேன். கிருபனின் குணம் கார்ப்பண்யம். அப்படி இல்லாமலிருப்பது அகார்ப்பண்யம். கிருபணன் என்றால் லோபி. லோபித்தனம், கருமித்தனம் இல்லாமல் தான தர்ம சிந்தையோடு இருப்பது அகார்ப்பண்யம். மனஸார வாரிக் கொடுக்கிற குணம் வேண்டும்.

அர்ஜுனன் ரொம்பவும் dejected -ஆக, depressed -ஆகமனம் தளர்ந்து தேர்த்தட்டிலே உட்கார்ந்து, 'யுத்தம் பண்ண மாட்டேன்' என்று அழுதபோது அவனுக்கு 'கார்ப்பண்ய தோஷம்' ஏற்பட்டதாக கீதையில் சொல்லியிருக்கிறது. அந்த இடத்தில் 'தன்னையே ரொம்பவும் தாழ்த்திக் கொண்டு தீனமாகப் போய்விட்டவன்' என்று அர்த்தம். தன் விஷயத்திலேயே தான் லோபியாகி விட்டான் என்று அர்த்தம். 

"அகார்ப்பண்யம்" என்றால் இப்படி தீனனாக, நோஞ்சானாக, கையாலாகாதவனுக்கு இல்லாமல் தீரனாக, நல்ல உத்ஸாஹ புருஷனாக, மனஸ்வியாக இருப்பது என்றாகும்.

(8) 'அஸ்ப்ருஹா' என்பது அஷ்டகுணத்தில் கடைசி. 'ஸ்ப்ருஹா' என்றால் பற்றின்மை, ஆசையின்மை. அத்தனை அனர்த்த பரம்பரைக்கும் ஆணி வேராக இருப்பது ஆசைதான். ஆனால் அதை அடியோடு வெட்டுவதுதான் ரொம்பவும் அஸாத்தியமாயிருக்கிறது. ஸம்ஸ்காரங்களைப் பண்ணி பண்ணி, அவற்றோடு அஷ்ட குணங்களையும் சேர்த்துச் சேர்த்து அப்பியாஸம் பண்ணிக் கொண்டு போகும்போது கடைசியில் இந்த ஆசையின்மை, பற்றின்மை, 'அஸ்ப்ருஹா'என்பது பூர்த்தியாக அநுபவத்தில் வருகிறது.

"பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு"  - என்று வள்ளுவர் சொன்னார்.

'இப்படி ஈச்வரன் என்ற பற்றற்றானைப் பற்றிக் கொண்டு மற்றப் பற்றுகளை விட்டுவிட்டால் மட்டும் போதாது. அப்புறம் அந்த ஈச்வரனுடனும் பற்றைக் கத்தரித்து விடவேண்டும்' என்று இன்னும் ஒருபடி மேலே போய்விட்டார் திருமூலர்:

"ஆசை அறுமின்கள், ஆசை அறுமின்கள்
ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள்"

ஆசையைத்தான் தாகம் (வேட்கை) என்று புத்தர் சொன்னார். "ஜலம் வேணும் வேணும்" என்று தாகத்தில் பறக்கிற மாதிரி ஆசை வாய்ப்பட்டுப் பறப்பதை 'திருஷ்ணா' என்பார்கள். பிராகிருதத்தில் இதையே 'தன்ஹா' என்று புத்தர் சொன்னார். ஆசையைப் போக்கடித்துக் கொள்வதுதான் புத்தருடைய முக்கியமான உபதேசம். இது அஷ்ட குணங்களில் கடைசி. முதலில் சொன்ன தயை(love) தான் கிறிஸ்து மதத்துக்கு ஜீவநாடி.

இப்படி ஒவ்வொன்றை ஒவ்வொரு மதத்தில் ரொம்பவும் அழுத்தம் கொடுத்துச் சொன்னாலும் இந்த அஷ்ட குணங்களையுமேதான் கிறிஸ்து, புத்தர், நபி நபி, நானக், ஜொராஸ்த்ரர், கன்ஃபூஷியஸ், இன்னும் என்னென்ன மதங்கள் இருக்குமோ அவை எல்லாவற்றின் ஸ்தாபகர்களும் சொல்லியிருக்கறார்கள். நேராக அவர்கள் இந்த எட்டைச் சொல்லாமலிருந்தாலுங்கூட மநுஷ்யனானவன் இந்த குணங்கள் இல்லாமலிருப்பதை எந்த மதஸ்தாபகரும் ஆதரித்திருக்க மாட்டார் என்பது நிச்சயம்.

ஏன் கர்மானுஷ்டானங்களை அனுஷ்டிக்கவேண்டும்?




மற்ற மதங்களில் அன்பு, ஆசையின்மை முதலான குணங்களை முக்யமாகச் சொல்லியிருக்க, ஹிந்து மதத்தில் நல்ல குணங்களுக்கு முக்யத்வம் தராமல், ஒயாமல் கர்மாநுஷ்டானம்தான் சொல்லியிருக்கிறது, ஒரே ritual-ridden (சடங்கு மயமானது) என்று சிலபேர் தப்பாக நினைக்கிறார்கள். அஷ்ட குணங்கள், அப்புறம் குணம் கடந்த குணாதீத ஸ்திதி முதலானவைகளை நம் மதத்தில் விசேஷமாகச் சொல்லியிருக்கறது. 

குணங்களைப் பற்றி வெறுமே பிரஸங்கம் பண்ணி விட்டால் போதாது. நல்லவனாக இருக்க வேண்டும், ஸத்யமாய் இருக்கவேண்டும். பிரேமையோடு இருக்கவேண்டும், தியாகமாய் இருக்கவேண்டும் என்பதெல்லாம் நமக்கே தெரிந்ததுதானே?

தெரிந்துதானே வாழ்க்கையில் கொண்டுவர முடியாமல் கஷ்டப்படுகிறோம்! இதையே திருப்பித் திருப்பி சாஸ்திரத்திலும் உபதேசம் பண்ணினால் மட்டும் என்ன பிரயோஜனம் வந்துவிடும்? 

அதனால்தான் மற்ற மதங்களில் நல்ல குணங்கள், நன்னெறிகள் (ethics, morality) இவை பற்றியே நிறைய உபதேசமிருக்கிற மாதிரி இல்லாமல், இந்த உபதேசத்தையும் பண்ண வேண்டிய அளவுக்குப் பண்ணிவிட்டு, அதோடு நின்ற விடாமல், அதிலே நாம் வாஸ்தவமாகவே ஈடுபட்டு, அப்பியஸிப்பதற்கு உத்ஸாஹ மூட்டும் விதத்தில் நல்ல குணசாலிகள் அடைந்த அபகீர்த்தியையும் சொல்கிற ஏராளமான புராண புருஷர்களின் கதைகளை நம் மதத்தில் கொடுத்திருக்கிறது. 

இந்த உத்ஸாஹமும் நம்மைப் பிரத்யக்ஷத்தில் அப்படிப்பட்ட குணசாலிகளாக்குவதற்குப் போதாது. அதனால்தான் நிறைய கர்மாக்களை, ஸம்ஸ்காரங்களைக் கொடுத்து அவற்றால் சித்தத்தை சுத்தி பண்ணிக் கொள்ளச் செய்கிறது. குணசாலிகளாவதற்கே கர்மாநுஷ்டானம் என்ற practical training (நடைமுறைப் பயிற்சி) யைத் தருகிற மதம் நம்முடையதே என்று புரிந்து கொண்டு பெருமைப் படுவதற்குப் பதில், இதை மற்ற மதங்கள் போல இல்லை என்று குறை சொல்வது சரியில்லை. அஷ்ட குணங்கள் [தயை, க்ஷாந்தி, அநஸூயை, சௌசம், அநாயசம், மங்களம், அகார்ப்பண்யம், அஸ்ப்ருஹா என்பவை அஷ்ட குணங்கள்.] இயேசு சொன்ன அன்பில் ஆரம்பித்து, புத்தர் சொன்ன ஆசையின்மையில் முடிந்திருக்கிறது.

குணங்களைப் பற்றி உபதேசம் பண்ணிவிட்டால் போதுமா? காரியம் பண்ணுவதுதானே மநுஷ்ய ஸ்வபாவம்? அதை வைத்துக் கொண்டு, அதன் மூலந்தானே எதையும் ஸாதித்துத் தரவேண்டியதாக இருக்கிறது? 

காந்தி அஹிம்ஸை, ஸத்யம் என்று நிறையச் சொல்லிக் கொண்டிருந்தார் என்றாலும் அவருடைய ஆச்ரமத்தில் போய்ப் பார்த்தால் அவர் எப்போது பார்த்தாலும் சுருசுருவென்று ஏதாவது காரியம் பண்ணிக் கொண்டிருந்தார். மற்றவர்களையும் உட்கார விடாமல் வேலை வாங்கிக் கொண்டேதான் இருந்தார். ரொம்பவும் கடுமையான task-master என்று அவரைச் சேர்ந்தவர்கள் சொல்கிறார்கள். ராட்டையை சுற்றிக்கொண்டு நூற்கவேண்டும், கக்கூஸை அலம்ப வேண்டும்- இப்படி ஏதாவது காரியம் பண்ணிக் கொண்டேயிருக்கும்படி செய்தார்.

இந்த நாற்பது ஸம்ஸ்காரங்கள் கை கால் முதலியவைகளை ஆட்டிச் செய்யவேண்டும். ஒர் உத்தியோகம் செய்ய வேண்டுமானால், கையைக் காலை ஆட்டியும் வாயை அசைத்துப் பேசியும் செய்கிறோமல்லவா?அப்படித்தான் இதுவும். யார் இந்த நாற்பத்தெட்டையும் அநுஷ்டிக்கிறானோ அவன் நேராக பிரம்மலோகத்துக்குப் போகிறான்; கஷ்டம் ஸுகம் என்பவை இல்லாத ஊருக்குப் போகிறான். கஷ்டமும் ஸுகமும் இல்லாமல் எப்பொழுது இருக்கும்? இந்த இரண்டையும் ஏற்படுத்தினவனிடம் போனால்தான் அப்படியிருக்கலாம்.

இவற்றில் கௌதமரும் எல்லாருக்கும் பொதுவானவைகளை எழுதியிருக்கிறார்கள். ஆபஸ்தம்பர் தனியாகவும் ஒவ்வொரு பிரிவினருக்குள் தனித்தனி தர்மங்களையும், ஸம்ஸ்காரங்களையும் எழுதியிருக்கிறார். கௌதமர் நாற்பது ஸம்ஸ்காரங்களையும் எட்டு ஆத்ம குணங்களையும் சொல்லியிருக்கிறார். ஜீவன் உடம்பை விட்டுப் பிரிந்தவுடன் நேரே பிரம்மலோகத்திற்குப் போய்ச் சேர இந்த நாற்பத்தெட்டும் காரணங்களாக இருக்கின்றன. இவைகளால் ஈச்வர ஸந்நிதானத்தில் போய் இருக்கலாம். அது பரமஞானியின் ஸந்நிதானத்தில் இருப்பதுபோல் இருக்கும். அசையாமல் ஆனந்தமாக இருக்கலாம். லோகத்தை நடத்தும் ஈச்வரன், லோகாதீதமாக அரூபமாகிற பொழுது நாமும் அதோடு அதாகக் கலந்துவிடலாம். அத்வைதமாகி விடலாம். அதுவரை அவனுடைய லோகத்தில் (ஸாலோக்யமாக) வாழலாம். "யஸ்யைதே சத்வாரிம்சத் ஸம்ஸ்காரா:அஷ்டாவாத்மகுணா:ஸ ப்ரம்மண:ஸாயுஜ்யம் ஸாலோகதாம் ஜயதி"என்று சொல்லியிருக்கிறது.

இப்படிப்பட்ட கர்மாநுஷ்டானங்களை முக்யமாகச் சொல்லி அவற்றோடு கூடவும், அவற்றைச் செய்வதால் ஏற்படுகிற சித்தத் தெளிவின் மூலமும் கடைபிடிக்க வேண்டிய அஷ்ட குணங்களையும் தர்ம சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறது.

பூணூல் ஏன் சிலருக்கு இல்லை?




ஜாதகர்மா, நாமகர்மா, அன்னப் பிராசனம், சௌளம் முதலியன எல்லா ஜாதியாருக்கும் பொதுவானவை. உபநயனம் என்பது பிராம்மணர், க்ஷத்ரியர், வைசியருக்கே உரியது. மற்றவர்களுக்கு அது வேண்டியதில்லை என்று வைத்திருக்கிறது.

இப்படிச் சொன்னவுடன் பாரபட்சம், வித்யாஸம் (partiality) என்று சண்டைக்குக் கிளம்பக்கூடாது. லோகத்துக்கு உபகாரமாக சரீரத்தால் தொண்டு செய்வதை வாழ்க்கைத் தொழிலாகக் கொண்ட நான்காம் வர்ணத்தவர்களுக்கு அந்தத் தொழிலாலேயே சித்த சுத்தி ஏற்படுகிறது. அவர்கள் வித்யாப்பியாஸ காலத்திலிருந்து தங்களுக்கேற்பட்ட தொழிலை அப்பன் பாட்டனிடமிருந்து கற்றுக் கொண்டால்தான் அதில் செய்நேர்த்தி உண்டாகும். அவர்களுக்குப் பன்னிரண்டு வருஷ வேதாத்யயனமும் குருகுலவாஸமும் வேண்டியதில்லை. இதைச் செய்யப் போனால் அவர்கள் செய்ய வேண்டிய தொழில் அல்லவா கெட்டுப் போகும்?

உபநயனம் என்பது குருகுவாஸத்துக்கு முதல் படிதான். 'உபநயனம்'என்றாலே குருவுக்கு கிட்டே கொண்டு போய்விடுவது என்றுதான் அர்த்தம். புத்தி சம்பந்தமான வேத வித்யையை அப்பியஸிக்கும்போது அஹங்காரம் வந்து விடாமல் இருக்கவேண்டும் என்பதாலேயே ஸ்வாதீனமாகப் பழகுகிற தகப்பனாரை விட்டுக் கண்டிப்பிலே ஒழுங்குக்குக் கொண்டு வருகிற குருவிடம் கொண்டுபோய்விடச் சொல்லியிருக்கிறது. சரீர உழைப்பாக ஒரு தொழிலைக் கற்றுக் கொள்கிறபோது அதிலே புத்தித் திமிர், அஹங்காரம் வராது. தகப்பனாரிடமிருந்தே கற்றுக் கொள்ளலாம். சரீர சேவை செய்கிறவர்களுக்கு உபநயனமும், குருகுலவாஸமும் அவசியமில்லை.

வம்சாவளியாக வீட்டிலேயே கற்றுக்கொள்வதை விட அதிகமாக சில நுணுக்கங்கள் தெரிய வேண்டுமானால் அதை பிராம்மணனிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும். வீட்டில் கற்றுக் கொள்வதற்கு முடியாமற் போகிறவர்களும் இப்படிச் செய்யலாம். பிராம்மணன் 'களவும் கற்றுமற' என்பதுபோல எல்லாத் தொழிலையும் தெரிந்து கொண்டு, பிறருக்கு மட்டுமே அவற்றைச் சொல்லிக் கொடுத்துவிட்டு - அதாவது அவற்றை ஜீவனோபாயமாகக் கொள்ளாமல் மற்றவர்களுக்கு சிக்ஷை பண்ணுவித்து - தன்னளவில் அத்யயனம், யக்ஞம் முதவான வைதிக காரியங்களை மட்டுமே பண்ணிவர வேண்டும்.

தொழில், மனோபாவம் இவற்றுக்கு அநுகூலமாகவே ஸம்ஸ்காரங்கள் இருக்கின்றன. அதனால் சிலருக்குச் சில ஸம்ஸ்காரம் இல்லாததால் மட்டம் என்றோ, மட்டம் தட்டுகிறார்கள் என்றெல்லாம் நினைப்பதோ தப்பு. என்னைக் கேட்டால் , வேடிக்கையாக, எவனுக்கு ஜாஸ்தி ஸம்ஸ்காரம் சொல்லியிருக்கிறதோ அவனைத்தான் மட்டமாக நினைத்திருக்கிறார்கள் என்றுகூடச் சொல்வேன்.

இத்தனை நிறைய ஸம்ஸ்காரம் பண்ணினால்தான் இவன் சுத்தமாவான்; மற்றவனுக்கு இவ்வளவு இல்லாமலே சுத்தமாவான் என்று நினைத்து அதிகப்படி ஸம்ஸ்காரங்களை வைத்ததாகச் சொல்லலாம் அல்லவா? ஜாஸ்தி மருந்து சாப்பிட வேண்டியவனுக்குத்தானே அதிக வியாதி இருப்பதாக அர்த்தம்?

ரிஷிகளைவிடப் பாரபட்சமில்லாதவர்கள் எவருமில்லை. அவர்கள் நம் மாதிரி வாய்ச் சவடாலுக்காக ஸமத்வம் பேசுகிறவர்களல்ல. வாஸ்தவமாகவே எல்லாரையும் ஈச்வரனாகப் பார்த்த நிமான ஸமத்வக்காரர்கள் அவர்கள் தான். லோகத்தில் பல தினுஸான காரியங்கள் நடக்க வேண்டியிருப்பதால், அதற்கேற்றபடியும், இந்தக் காரியங்களுக்கு ஏற்றவாறு மனோபாவங்கள் இருப்பதால் அவற்றை அநுஸரித்தும் வெவ்வேறு விதமான ஸம்ஸ்காரங்களை அவர்கள் வைத்தார்கள். அதனால்தான், இவர்களுக்கு பூணூல் மற்றும் அதிகப்படி ஸம்ஸ்காரங்களை வைக்கவில்லை. இதிலே உசத்தி- தாழ்த்தி அபிப்ராயங்களுக்கு இடமேயில்லை.

நாற்பது ஸம்ஸ்காரங்களின் பெயர்கள்




ஜீவாத்மாவுக்குப் பரிசுத்தி ஏற்படுவதற்காக நாற்பது ஸம்ஸ்காரங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. அவை கர்ப்பாதானம், பும்ஸுவனம், ஸீமந்தம், ஜாதகர்மா, நாமகரணம், அன்னப்ரச்னம், சௌளம், உபநயனம், குருகுலவாஸத்தில் செய்ய வேண்டிய பிராஜாப்ததியம் முதலிய நாலு வேத விரதங்கள், அது முடிந்ததும் செய்கிற 'ஸ்நானம்', பிறகு விவாஹம், அதன்பின் கிருஹஸ்தன் செய்யவேண்டிய ஐந்து நித்ய கர்மாக்களாகிய பஞ்ச மஹா யக்ஞங்கள் ஆக, இதுவரை மொத்தம் பத்தொன்பது; இதோ கிருஹஸ்தன் செய்ய வேண்டிய பாக யக்ஞங்கள் ஏழும், ஹவிர் யக்ஞங்கள் ஏழும், ஸோம யக்ஞங்கள் ஏழும் ஆக யக்ஞங்கள் இருபத்தொன்றும் ஸம்ஸ்காரங்களே ஆகும். 19+21=40 ஸம்ஸ்காரம்.

அஷ்டகை (அன்வஷ்டகை) , ஸ்தாலீபாகம், பார்வணம், ச்ராவணி, ஆக்ரஹாயணி, சைத்ரி ஆச்வயுஜி என்ற ஏழும் பாக யக்ஞங்கள். அக்னியாதானம், அக்னிஹோத்ரம், தர்சபூர்ண மாஸம், ஆக்ரயணம், சாதுர்மாஸ்யம், நிரூடபசுபந்தம், ஸெளத்ராமணி என்ற ஏழும் ஹவிர் யக்ஞங்கள். அக்னிஷ்டோமம், அத்யக்னிஷ்டோமம், உக்த்யம், ஷோடசி, வாஜபேயம், அதிராத்ரம், அப்தோர்யாமம் என்னும் ஏழும் ஸோம யக்ஞங்கள்.

நாற்பது ஸம்ஸ்காரங்களில் தினந்தோறும் பண்ண வேண்டியவை சில இருக்கின்றன. சில சில காலங்களில் பண்ணவேண்டியவை சில. ஆயுளில் ஒரு தரம் பண்ண வேண்டியவை சில. இவைகளுக்குள் ஒவ்வொரு கிருஹஸ்தரனும் நன்றாகத் தெரிந்துகொண்டு தினுமும் செய்யவேண்டிய முக்கியமான ஸம்ஸ்காரங்கள் பஞ்ச மஹா யக்ஞங்கள் என்று ஐந்து.

மந்திரமில்லாமல் வெறுமே செய்யும் காரியத்தைவிட மந்திரத்தைச் சொல்லிச் செய்வதே அதிக நன்மைதர வல்லது. இப்படி மந்திரபூர்வமாகக் காரியம் பண்ணுவதே ஸம்ஸ்காரமாகிறது. கிருஹஸ்தன் தினந்தோறும் செய்யவேண்டிய பஞ்சமஹா யக்ஞத்தில் ஸோஷியல் சர்வீஸ் (சமூக ஸேவை) என்பது மந்திர பூர்வ ஸம்ஸ்காரமாகிறது.

பஞ்ச மஹா யக்ஞங்கள் - பிரம்ம யக்ஞம், தேவ யக்ஞம், பித்ரு யக்ஞம், மநுஷ்ய யக்ஞம், பூத யக்ஞம் என்பவை. வேதம் ஒதுவது என்ற அத்யயனமே பிரம்ம யக்ஞம், யாகமும் பூஜையும் தேவ யக்ஞம். தர்ப்பணம் பித்ரு யக்ஞம்.

விருந்தோம்பல் மநுஷ்ய யக்ஞம். ஜீவ ஜந்துக்களுக்கெல்லாம் பலி போடுவது பூத யக்ஞம்.

இவை போலவே ஒளபாஸனம், அக்னி ஹோத்ரம் இரண்டும் தினசரி செய்வது. ஒளபாஸனம் என்பது நாற்பது ஸம்ஸ்காரத்திலுள்ள ஏழு பாக யக்ஞங்களில் சேராத ஒரு பாகயக்ஞம். அக்னிஹோத்ரம் என்பது ஏழு ஹவிர் யக்ஞங்களில் ஒன்று. தர்ச பூர்ண மாஸம் என்ற இன்னோர் ஹவிர் யக்ஞம் பதினைந்து நாளுக்கு ஒருமுறை செய்வது. மற்ற ஹவிர் யக்ஞங்களையும் ஏழு ஸோம யக்ஞங்களையும் வருஷத்துக்கொரு முறையோ, அல்லது ஆயுஸில் ஒரே ஒரு தடவையாவது செய்யவேண்டும். கஷ்டமான ஸோம யாகங்களை ஜன்மாவில் ஒருமுறை பண்ணினால் போதும் என்று கருணையோடு வைத்திருக்கிறார்கள்.

மாஸம்தோறும் பண்ணவேண்டிய பார்வணீ சிராத்தமும், பிரதமைகளில் செய்யும் ஸ்தாலீபாகமும் தவிர மற்ற ஐந்து பாக யக்ஞங்களும் வருஷத்துக்கு ஒரு முறைதான்.

இதையே வேறு விதமாக வகுத்துச் சொன்னால்: பஞ்ச மஹா யக்ஞம் என்ற ஐந்தும், அக்னி ஹோத்ரமும், ஒளபாஸனமும் ஆக ஏழு தினஸரி செய்வது. தர்ச பூர்ண மாஸம் பக்ஷமொருமுறை;ஸ்தாலீபாகமும் பக்ஷமொரு முறை; பார்வணீ மாஸாந்தரம்; நாற்பதில் உள்ள மற்ற யக்ஞங்கள் ஸம்வத்ஸரத்துக்கும் (ஆண்டுக்கு) ஒரு தரமோ, ஜன்மத்தில் ஒரு முறையோ பண்ண வேண்டியவை.

ஒரு போகம் விளையும் நிலங்களில் அறுப்பறுக்கிறது வருஷத்துக்கு ஒரு தரம். முப்போகம் விளைந்தால் நாலு மாதத்திற்கொரு அறுப்பு. சில பயிருக்கு ஜலம் தினந்தோறும் பாய்ச்சவேண்டும். சிலவற்றுக்கு ஒன்றுவிட்டு ஒரு நாள் பாய்ச்ச வேண்டும். இவைகளெல்லாமே ஸம்ஸ்காரங்கள் தான். ஆனாலும் இவைகளுக்குள் வித்தியாஸம் இருக்கிறது. அவைகளைப் போன்றவைதான் மநுஷ்யனுக்கான ஸம்ஸ்காரங்களும்.

Monday, 21 January 2013

தர்க்காஸ்து நிலம் மாதிரி ஹிந்து மதம் ஆகி விட்டிருக்கிறது - மஹா பெரியவா வேதனை



மிளகாய்க்கு நெய்விட்டுக் காரத்தை சமனம் பண்ணுகிறாற்போல், பிரகிருதி வேகங்களுக்கு விவாஹாதி ஸம்ஸ்காரங்களால் சமனம் உண்டாக்கப்படுகிறது. மிளகாயே இல்லாமல் இல்லை. அது இருக்கிறது. ஆனால் அதன் காரம் குடலை எரிக்காதபடி நெய் விட்டிருக்கிறது. 

லௌகிகமான, சரீர சம்பந்தமான ஸெளக்யம் கிருஹஸ்தாச்ரமத்தில் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அது கொழுந்து விட்டெரியாமல் ஏகப்பட்ட ஸம்ஸ்காரங்களால் புருஷனை ஒர் அளவில் கட்டுப்படுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. 

ஸ்திரீக்கோ பாதி வ்ரத்யத்தோடு (கற்போடு) கூடின கிருஹரக்ஷணை என்ற ஒன்றே இத்தனை ஸம்ஸ்காரத்துக்கும் ஸமமாயிருக்கிறது. 

இது நமக்கு மனஸில் பட்டுவிட்டால் போதும். நாம் இந்த தேசத்தில் ஆத்ம சிரேயா லட்சியம் எந்த நாளும் வீணாகி விடக் கூடாது என்று ஹ்ருதய சுத்தத்தோடு நினைத்து பகவானைப் பிரார்த்தனை பண்ணிக் கொண்டு, அருள் துணையை நம்பி, எடுத்துச் சொல்லிக் கொண்டேயிருந்தால் என்றைக்காவது ஒரு நாள் வழி பிறக்கும். இப்போது போகிற போக்கிலே முடிவான ஒரு நிலையில் போய் முட்டிக் கொண்டு கடைசியில் இது அத்தனையும் அனர்த்தம்தான் என்று என்றைக்காவது ஜனங்கள் விழித்துக் கொள்கிறபோது, மீள்கிற வழி எது என்று தெரிவதற்காக நாம் சாஸ்திரத்திலுள்ளதைச் சொல்லிக் கொண்டேதான் இருக்க வேண்டும். 'வர்ணாச்ரமம், பால்ய விவாஹம் முதலானதுகளைப் பற்றிச் சொல்லி என்ன பிரயோஜனம்? அநேகமாக இவற்றில் முக்காலே மூணுவீசம் போயே போய்விட்டதே! 

பல விஷயங்களில் ராஜாங்கச் சட்டமே சாஸ்திரத்துக்கு மாறாக வந்துவிட்டதே! என்று கேட்கலாம். வாஸ்தவம்தான். அநேக விஷயங்களில் சட்டமே வந்து கையைக் கட்டித்தான் போடுகிறது. Secular State என்று நம் ராஜாங்கத்துக்குப் பேர் சொல்கிறார்கள். 'மதச்சார்பில்லாதது' என்று இதற்கு அதர்த்தம் சொல்கிறார்கள். அதாவது ஸமூஹ (social) விஷயங்களில் ஸர்க்கார் தலையிடலாமே தவிர, மத (religious) விஷயங்களில் தலையிடக் கூடாது என்று சொல்கிறார்கள். 

ஆனால் நம்முடைய மதத்திலே இப்படி மதம்-சமூகம் -வீடு-தனி மனுஷ்யன் என்று தனித்தனியாகப் பிரிக்காமல், எல்லாவற்றையும் சேர்த்துப் பின்னி integrate பண்ணி (ஒருங்கிணைத்து) அல்லவா வைத்திருக்கிறது?அதனால் சமூக விஷயம் என்று ஸர்க்கார் போடுகிற சட்டமும் மதத்தையே அல்லவா பாதிக்கிறது? இதை ஒப்புக்கொள்ளாமல் 'இன்னின்ன விஷயங்களோடு மதம் முடிந்துவிடுகிறது; மற்றதெல்லாம் ராஜாங்கம் ஸம்பந்தப்பட்ட ஸமூஹ விஷயம்' என்கிறார்கள். 

சரி, எல்லா மதத்திலுமே சில அம்சங்களிலாவது ஸமூஹ ஸமாசாரங்களும் வந்து விடுகிறதே, அவற்றின் விஷயத்திலும் இந்தக் கொள்கையைக் கடைபிடிக்கிறார்களா என்று பார்த்தால்- இங்கே தான் ரொம்ப வேதனையாயிருக்கிறது. 'ஸெக்யூலர் ஸ்டேட்'டில் எல்லா மதமும் ஸமம் என்று சொன்னாலும், சிறுபான்மை மதஸ்தர்கள் social reform சட்டங்களை ஆக்ஷேபித்து, "இது எங்கள் மதத்தில் சொன்னதற்கு விரோதமாயிருக்கிறது. இது குரானுக்கு விரோதம்;கிறிஸ்துவக் கோட்பாட்டுக்கு முரணாணது" என்று சொன்னால் உடனே அந்த மதஸ்தர்கள் விஷயத்தில் இந்தச் சட்டங்களுக்கு விலக்கு தந்துவிடுகிறார்கள். இம்மாதிரிச் சிறுபான்மை மதஸ்தருக்கு மட்டும் குடும்பக் கட்டுப்பாடு போன்ற ஒன்றில் விலக்குத் தந்துவிடுகிறார்கள். இம்மாதிரிச் சிறுபான்மை மதஸ்தருக்கு மட்டும் குடும்பக்கட்டுப்பாடு போன்ற ஒன்றில் விலக்குத் தந்தால் எதிர்காலத்தில் அவர்களே பெரும்பான்மையாகி விடவும் இடமேற்படுகிறது. ஆனால் 'ஸெக்யூலர்ஸ்டேட்' டாக இருந்தும் ஹிந்து மத விஷயமாக மட்டும் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற தீர்மானம் ஏற்பட்டிருக்கிறது. 

'மைனாரிட்டி ரிலிஜன்'காரர்கள் போல் நம்மிலே ஒரு சூடு பிறந்து ஆட்சேபிக்கிறவர்களே இல்லை. அப்படியே நாலு, பேர் எதிர்ப்புத் தெரிவித்தாலும், பிற்போக்குக்காரர்கள், பத்தாம் பசலிகள் ( obscurantist ) என்று அவர்களுக்குப் பெயர் கொடுத்துவிட்டுச் சட்டத்தைக் கொண்டு வந்துவிடுகிறார்கள். 'ஸெக்யூலர் ஸ்டேட்என்றால் மதச் சார்பில்லாத ஸர்க்கார் என்றே அர்த்தம். மத விரோதமான என்று அர்த்தமில்லை. ஒரு மதம் மட்டுமின்றி எல்லா மதமுமே அபிவிருத்தியாவது ஸெக்யூலர் ஸ்டேட்டுக்கு ஸம்மதமானதுதான்' என்றெல்லாம் பெரிசாகப் பிரஸங்கம் பண்ணுபவர்கள் பண்ணினாலும், பிரத்யக்ஷத்தில் ஹிந்து மதத்தைத் தவிர மற்ற மதங்களுக்கு விரோதமில்லாத காரியங்களைப் பண்ணுவதுதான் இங்கே ஸெக்யூலர் ஸ்டேட் எனறு நடந்து வருகிறது!

தர்க்காஸ்து நிலம் மாதிரி ஹிந்து மதம் இருந்து வருகிறது. "இது தெரிந்தும் ஏன் ஸாத்தியமில்லாத சாஸ்திர விஷயங்களை நச்சு நச்சு என்று சொல்கிறாய்?" என்றால் - இப்போது இப்படி இருந்தாலும் இன்னும் எப்படி எப்படி போகும் என்று சொல்ல முடியாது. 'அமெரிக்காவில் டாலரே விளைகிறது; அங்கே ஜனங்களுக்கு ஒரு குறையும் இல்லை' என்றுதானே போன தலைமுறையில் நினைத்தோம். ஆனால் இப்போது எப்படியிருக்கிறது? அந்த தேசத்து ஜனங்களுக்கு இருக்கிற குறை மாதிரி, சூன்ய உணர்ச்சி மாதிரி, வேறு யாருக்குமே இல்லை என்று தெரிய வருகிறது. டாலரினாலேயே இத்தனை குறையும் என்றும் தெரிகிறது! 

லௌகிக ஸெளக்கியத்தின் உச்சாணிக்குப் போன பிறகுதான் அவர்கள் இதிலே ஆத்மாவை எப்படி சூன்யமாக்கிக் கொண்டு விட்டோம் என்று விழித்துக் கொண்டிருக்கிறார்கள். டாலரில் மிதந்ததால் எத்தனை குடி, கொள்ளை, கொலை, விபசாரம் முதலிய தப்புகளில் போய் விழுந்து விட்டோம் என்று உணர ஆரம்பித்திருக்கிறார்கள். . கடைசியில் மனஸில் நிம்மதியில்லையே, சாந்தி இல்லையே என்று நம்முடைய யோகம், ஞான விசாரம், பஜனை முதலானவற்றுக்கு கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருக்கிறார்கள். இதிலிருந்து, இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு நல்லதாகவே தோன்றி வந்த ஒன்று, அப்புறம் தலைதெறிக்கப் போன பிறகு அனர்த்தமானது என்று தெளிவாகிறது; அப்போது ஜனங்கள் விமோசனத்துக்கு ஒடுகிறார்கள் என்று தெரிகிறதல்லவா? இப்படியே இந்த இரண்டு தலைமுறைகளாக நல்லது என்று நினைத்து, பெரும்பாலும் நல்ல எண்ணத்துடனேயே, நம் தேசத்தில் பண்ணப்பட்டிருக்கிற சாஸ்திரத்துக்கு முரணான விஷயங்களாலும் எத்தனை ஹானி ஏற்பட்டிருக்கிறது என்பதை என்பதை இன்னொரு தலைமுறை உணரக்கூடும். 

இப்போதுகூட ஆங்காங்கே இந்த உணர்ச்சி கொஞ்சம் தலை தூக்கிக் கொண்டுதான் இருக்கிறது. ஆரம்பத்தில் நன்றாகியிருந்து குதிரைக்குட்டி மாதிரியாயிருந்து போகப் போக ஸ்வயரூபத்தை காட்டுகிற மாதிரிதான் சீர்திருத்தக் காரியங்கள் நடந்திருக்கின்றன என்று முடிவிலே முட்டிக்கொள்கிற ஸ்திதியில் தெரிய வரலாம். கீதையில் பகவான் இரண்டு வித ஸெளக்கியங்களைச் சொன்னார். 'யதக்ரே விஷமிவ, பரிணாமே அம்ருதோபமம்' என்பது ஒன்று. ஆரம்பத்தில் விஷம் போல இருந்துவிட்டு முடிவிலே எது அமிருதமாகிறதோ அதுதான் உயர்ந்த ஸாத்விக ஸெளக்யம். முதலில் ஆலஹாலம் வந்து விட்டுப் பிறகு அமிருதம் வந்தது இப்படித்தான். சாஸ்திரம், தனி மநுஷ்யன், குடும்பம், ஸமூஹம் எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகிறதே என்று ஆரம்பத்தில் விஷம் மாதிரிக் கசந்தாலும், போகப் போக இதுதான் எல்லாக் கட்டுகளும் தெறித்துப் போகிற ஆத்ம ஸ்வதந்திரம் என்கிற பேரானந்தத்தைத் தருகிற அமிருதம் என்று தெரியும். 

இதிலே விஷம் தற்காலிகம்; அமிருதம் சாச்வதம். இன்னொரு ஸெளக்யம், 'யதக்ரே அம்ருதோபமம், பரிணாமே விஷமிவ' என்பது. முதலில் அமிருதமாகத் தித்தித்து விட்டுப் போகப்போக விஷமாகிவிடுவது. இங்கே அம்ருதம் தாற்காலிகம்;விஷம் சாச்வதம். அமெரிக்காவில் டாலர் இப்படித்தான் முதலில் அம்ருதமாயிருந்துவிட்டு இப்போது விஷமாகியிருப்பதை அவர்களே தெரிந்து கொண்டிருக்கிறார்கள். இப்படியே இங்கும் எதிர்காலத்தில் தனி மனித நிறைவு, ஸமூஹக் கட்டுக்கோப்பு இரண்டும் ஹானியடைந்து, சாஸ்திர விரோதமாகப் பண்ணினதெல்லாம் முதலில் அம்ருதமாயிருந்தாலும் பிறகு இப்படி விஷமாகி விட்டதே என்று புரிந்து கொண்டு அழுகிற காலம் வரக்கூடும். அப்போது அமிருதத்தைத் தேடுகிறவர்களுக்கு அது எங்கேயிருக்கிறது என்று தெரியவேண்டும் அல்லவா?இப்போது நாம் பண்ணுகிற மாறுதல்கள்தான் முற்றி அவர்களுக்கு விஷம் தலைக்கேறிய ஸ்திதி ஏற்படப் போகிறபடியால் இதை (அமிருதம் எங்கேயிருக்கிறது என்பதை) அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டியது நம் கடமை. 

அதற்காகத்தான், இப்போது நாமே இந்த சாஸ்திரோக்தமான ஸமாசாரங்கள் என்ற அமிருதத்தைக் குடிக்காவிட்டாலும், பின்தலைமுறைகளில் நம்மைவிட க்ஷீண தசைக்குப் போய் விஷம் தலைக்கேறி விமோசனம் தேடுகிறவர்கள் தேடும்போது அவர்களுக்கு உதவுவதற்காகவது இந்த ஸமாசாரங்கள் என்ற அமிருதத்தைக் குடிக்காவிட்டாலும், பின்தலைமுறைகளில் அவர்களுக்கு உதவுவதற்காகவாவது இந்த ஸமாசாரங்களை (குழி தோண்டிப் புதைத்து விடாமல்) சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். இந்த தீபம் வருங்காலத்திலாவது வழிகாட்ட விடவேண்டும். இந்த எண்ணத்தில்தான், காரியத்தில் செய்ய முடியாமல் கையைக் கட்டிப் போட்டிருந்தாலும் இன்னம் வாயைக் கட்டவில்லையே என்பதால் சாஸ்திர விதிகளை ஓயாமல் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.