Saturday 5 January 2013

விவாஹமே பெண்டிருக்கு உபநயனம் ! - மஹா பெரியவர்




பிரம்மச்சரியம் ஒருத்தனைத் தயார் பண்ணுகிறது என்றால் பெண்ணின் கதி என்ன? அவளுக்கு உபநயனமோ, பிரம்மச்சரிய ஆச்ரமமோ இல்லையே! புருஷன் மனசு கட்டுப்பட்டிருக்கிற மாதிரி அவளையும் கட்டுப்பாட்டில் கொண்டு வராமல் இருக்கலாமா? சீர்திருக்காரர்கள் சொல்கிற மாதிரி ஸ்திரீகளுக்கு உபநயனமும் பிரம்மச்சரிய ஆச்ரமமும் இல்லாமல் அநீதிதான் இழைத்திருக்கிறது என்றால் - இல்லை.

புருஷனுக்கு உபநயன-பிரம்மச்சரியங்களுக்கு அப்புறம் ஏற்படுகிற விவாஹ ஸம்ஸ்காரமேதான் ஒரு பெண்ணுக்கு உபநயன ஸ்தானத்தில் அமைகிறது. அந்தக் குழந்தை பிராயத்திலிருந்து இவளுக்கு வயது வந்து தாம்பத்தியம் ஆரம்பிக்கிற வரையில், குருவிடம் பிரம்மச்சாரி மனஸை அர்ப்பணம் பண்ணின மாதிரி இவள் பதியிடம் பண்ண வேண்டும்.

"ஸ்த்ரீணாம் உபநயன ஸ்தானே விவாஹம் மநுரப்ரவீத்"என்பது மநுஸ்மிருதி. இதற்கு ஒரு வெளி அடையாளம் காட்டு என்றால் சட்டென்று, 'உபநயனத்திலே ஒரு பையனுக்குப் பூணூல் போடுகிற மாதிரி விவாஹத்திலே பெண்ணுக்கு மங்கள் ஸ¨த்திரம் கட்டப்படுகிறது என்று சொல்லிவிடலாம்.

உப-நயனம் என்றால் 'கிட்டே அழைத்துப் போவது', அதாவது 'குருவினடம் அழைத்துப் போய் குருகுல வாஸத்தில் பிரம்மசரியம் அநுஷ்டிக்கும்படிப் பண்ணுவது'என்று அர்த்தம் சொன்னேன். ஸ்திரீகளுக்குப் பதியே குரு. அவனிடம்
கொண்டு சேர்க்கிற விவாஹம்தான் அவளுக்கு உபநயனம்.

அதாவது சாஸ்திரப் பிரகாரம், ஒரு பிள்ளைக்கு உபநயனம் செய்கிற ஏழாவது வயசில் பெண்ணுக்கு விவாஹம் செய்துவிட வேண்டும். காமம் தெரிகிற முன்பே இவள் பதியை குருவாக வரித்துவிடும்படி செய்ய வேண்டும். காமம் தெரியாவிட்டால்தான் இப்படி குருவாக வரிக்கவும் முடியும்! குருவை ஒருத்தன் தெய்வமாகவே மதிக்க வேண்டும் என்பதும் சாஸ்திரம் அல்லவா? அப்படியே இந்தப் பெண் குழந்தை சின்ன வயசில் பதியை குரு-தெய்வமாக பாவித்து ஹ்ருதயத்தை அவனுக்கு ஸமர்ப்பணம் பண்ணிவிட வேண்டும். அந்த இள வயசில்தான் இது ஸாத்தியமும் ஆகும். பிற்பாடு புத்தியால் எதிர்க்கேள்வி கேட்பது, அஹம்பாவத் தடிப்பு எல்லாம் உண்டாகிவிடும்.

ஹ்ருதய-ஸமர்ப்பணம் - சரணாகதி - தான் ஜன்மாவைக் கடைத்தேற்றுகிற பெரிய ஸாதனம். கீதையின் சரம ச்லோகத்தில் சொன்ன இந்த சரணாகதியை தெய்வமோ, குருவோ, பதியோ, யாரிடமோ பண்ணிவிட்டால் போதும். அப்புறம் தனக்கென்று ஒன்றும் இல்லை. நாம் யாரிடம் சரணாகதி பண்ணினோமோ அவர்கள் மூலம் ஈச்வரன் அநுக்ரஹம் பண்ணிவிடுவான்.

இம்மாதிரியாகப் பிள்ளையாகப் பிறந்த ஒருத்தனை குருவிடம் சரணாகதி பண்ணும்படியாக உபநயனத்தையும், அவன் கல்யாணம் செய்துகொள்ளும் போது அந்தக் கல்யாணத்தையே பெண்ணாய்ப் பிறந்தவள் பதியிடம் சரணாகதி பண்ணும்படியாக விவாஹ ஸம்ஸ்காரத்தையும் ரிஷிகள் ஏற்பாடு செய்து தந்திருக்கிறார்கள்.

அதாவது, பெண்ணை மட்டும் மட்டம் தட்டி அவளைப் புருஷனுக்கு சரணாகதி பண்ணச் சொல்லவில்லை. அந்தப் புருஷனையும் விவாஹத்துக்கு முந்தியே குருவுக்கு சரணாகதி பண்ணச் சொல்லியிருக்கிறது. அவன் எந்த வயசில் இந்த சரணாகதியைச் செய்கிறானோ அநத வயசில் இவள் அவனைக் கல்யாணம் பண்ணிக் கொண்டு சரணாகதி பண்ணவேண்டும் என்பது சாஸ்திரத்தின் அபிப்ராயம்.

உபநயனம் மாதிரிப் பெண்ணின் ஏழாவது வயசில் கல்யாணம் பண்ண வேண்டும்; அப்போதுதான் சரணாகதி புத்தி வரும் - என்று சொன்னால், ' இது இந்த காலத்தில் ஸாத்தியமா? சட்ட விரோதமல்லவா? என்று கேட்பீர்கள்.

'ராஜாங்கத்தின் சட்டத்தை மீறு' என்று சொல்லக் கூடாதுதான். அப்படிச் சொல்லவில்லை. சட்ட மறுப்பு (civil disobedience) என்று இப்போது ஆட்சி நடத்துகிறவர்களே ஒரு காலத்தில் பண்ணிக் காட்டித்தான் இருக்கிறார்கள். 'சட்டம் என்று யாரோ எழுதினதற்காக எங்கள் ஸ்வாதந்தரியத்தை விட மாட்டோம்'என்று அப்போது சொன்னார்கள். அதே மாதிரி, "ஜெயிலில் போட்டாலும் பரவாயில்லை;பிராணன் போனாலும் பரவாயில்லை; ஆத்ம க்ஷேமத்துக்காக ஏற்பட்ட விவாஹ ஸம்ஸ்காரத்தை வெறும் லௌகிக விஷயமாக்கிச் சட்டம் பண்ணினால் ஏற்கமுடியாது" என்று கிளம்புகிற வேகம் நம் ஜனங்களுக்கு இல்லை. அப்படி இல்லையே என்பது மட்டும் நான் 'சட்டத்தை மீற வேண்டாம்' என்று சொல்வதற்குக் காரணமில்லை. 

ஒரு விஷயத்தில் மீறினால், மற்றவற்றிலும் மீறுகிற எண்ணம் உண்டாகி, கட்டுப்பாடே போய்விடும். அதனால்தான் (சட்டத்தை மீறும்படிச்) சொல்லவில்லை. ஆனாலும் சட்டத்தை மீறாமலே ராஜாங்கத்துக்கு சாஸ்திர அபிப்ராயத்தை விடாமல் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். ராஜாங்கத்துக்கு மட்டுமில்லை; ஜனங்களிலும் நூற்றுக்குத் தொண்ணூறு பேருக்கு மேல் சாஸ்திர அபிப்ராயத்தை விட்டு விட்டார்களே! அவர்களுக்கும் பாக்கியிருக்கிற ஸ்வல்ப சாஸ்திரக்ஞர்கள் எடுத்துச் சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும். 

சட்டத்தை மீறாமலே, முன்னேற்றம் எத்தனை நிதானமாக ஏற்பட்டாலும் அதனால் மனம் தளராமல் நூறு வருஷம் ஆனாலும் ஆகட்டும்! இன்னம் அதிகமானாலும் ஆகட்டும்! உன்னதமான இந்த தேசாதாரம் மறுபடி பழக்கத்தில் வரப் பண்ணுவதற்கு நம்மாலானதை சாந்தமான வழியிலேயே செய்வோம் என்று செய்ய வேண்டும். பலனை பார்க்க நாம் (உயிரோடு) இருக்க வேண்டும் என்பதில்லை. ஆயிரம் வருஷத்துக்கு அப்புறம்தான் பலன் உண்டாகும் என்றாலும், அதற்கு இப்போதே நம்மாலான விதையைப் போட்டுவிட வேண்டும். யத்தனத்தை இப்போது ஆரம்பித்தால்தான், என்றைக்கோ ஒரு நாளாவது பலன் கிடைக்கும். பிரயத்தனமே இல்லாவிட்டால் என்றைக்கும் பலன் ஏற்பட முடியாதல்லவா?விதையே போடாவிட்டால் எப்படி மரம் உண்டாகும்?

தர்மசாஸ்திரமே பெரிய சட்டம் என்று ராஜாங்கத்தாருக்கும், பொது ஜனங்களுக்கும் புரியும்படியாக, ஹிதமான முறையில் (by persuasion) வற்புறுத்திக் கொண்டேயிருக்க வேண்டும்.

பால்ய விவாஹம் பௌதிகமாகக் கெடுதல் என்பது வெறும் பேச்சு. குழந்தையாகக் கல்யாணம் பண்ணிக் கொண்டாலும், அப்புறம் அவள் சரீர ரீதியில் பக்குவமான பிறகுதான் தாம்பத்தியம் பண்ண அழைத்துக் கொள்ளப்படுவாள்.

உசத்தி-தாழ்த்தி, உரிமை (right) , ஸ்தானம் (position) முதலான விஷயங்களைவிட சித்த சுத்தியைப் பெரிதாக நினைத்தால், அப்போது சரணாகதிதான் முக்கியமாகிறது. அதற்கு வழியாகத்தான் புருஷனுக்கு உபநயனமும் பெண்ணுக்கு விவாஹமும் விதிக்கப்பட்டிருக்கின்றன என்று புரிந்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment