Sunday 6 January 2013

கச்சம், பஞ்சகச்சம் - மஹா பெரியவா




ஒரு யுவாவானவன் குருகுலவாஸம் முடித்து ஸமாவர்த்தனமாகிய உடனேயே அவனுக்கு ஒற்றைப் பூணூல் போய் இரட்டைப் பூணூல் ஏற்பட்டு விடுகிறது. பிரம்மசரிய ஆச்ரமத்தில் தரித்த தண்டம், கிருஷ்ணாஜினம் (மான் தோல்) மேகலை முதலியன போய்விடுகின்றன. இப்போது அவன் ஏகவஸ்திரத்தை தட்டாடையாக உடுத்துவதும் போய், பஞ்சகச்சம் கட்டிக்கொண்டு, உத்தரீயமாக மேல் வேஷ்டி போட்டுக் கொள்ள வேண்டும். பிரம்மசரியத்தில் போக்யம் உதவாது என்று ஒதுக்கின சந்தனம், குண்டலம், புஷ்பம் (புருஷர்களும் சிகையில் புஷ்பம் தரிப்பதுண்டு) , பாதரக்ஷை முதலிய அலங்கார வஸ்துகளையும், ஸெளக்ய ஸாதனங்களையும் அணிந்து கொண்டு, மை-கூட இட்டுக்கொண்டு, குடை பிடித்துக்கொண்டு போய் அவன் ராஜாவிடமோ, ராஜப் பிரதிநிதியிடமோ தன் வித்யையையும், சுத்த பிரம்மசரியத்தையும் நிரூபித்துவிட்டு, மேற்கொண்டு கல்யாணத்துக்கு வேண்டிய திரவியத்தை தானமாகப் பெறவேண்டும்- இது சாஸ்திரத்தில் சொன்னபடியாகும். 

கல்யாணம் செய்து கொள்ள இருக்கிற ஒரு யுவா அதற்காகவே தானம் வாங்க வேண்டுமென்று சாஸ்திரத்தில் சொல்லியிருப்பதிலிருந்தே கல்யாணச் செலவு பிள்ளை வீட்டுக்காரனுடையதுதான் என்று அழுத்தமாகத் தெரிகிறதல்லவா? 

இன்னொன்றும் தெரிகிறது. ஸமாவர்த்தனம் பண்ணி ஸ்நாதகனான ஒருவன் பிற்பாடு கல்யாணம் செய்து கொள்ளாமல் ஏகாங்கியாகவே இருந்தாலுங்கூட அவனுக்கு இரட்டைப் பூணூல், பஞ்சகச்சம் இவை உண்டு என்று ஆகிறது. வேஷ்டி நுனி தெரியாமல் கொசுவிச் சொருகுவதால் ஒருவனின் சக்தி காப்பாற்றப்படுகிறது.

முஸல்மான்கள் வேஷ்டி ஒரங்களைச் சேர்த்துத் தைத்துக் கட்டிக் கொள்கிறார்களல்லவா?பஞ்சகச்சமாக இல்லாவிட்டாலும், தமிழ்நாடும் மலையாளமும் தவிர, மற்ற இடங்களில் எல்லாருமே (பூணூல் இல்லாதவர்களும்கூட) கச்சம் போட்டே கட்டுகிறார்கள். இப்போது வேஷ்டியே போய், என்னைப் பார்க்க வருகிறபோதுகூட முழு நிஜார் போட்டுக் கொள்வது என்றிருக்கிறது! இந்த ஸ்திதியில் கச்சம், தட்டாடை வித்யாஸங்களைச் சொல்வது வேடிக்கையாகத்தானிருக்கிறது!

No comments:

Post a Comment