Friday 18 January 2013

ஹிந்து மதத்தின் சிரஞ்சீவித்வம் 3

பகுதி 3


தனித்தனியாக ஜாதிகள் பிரிந்திருந்தால், மொத்த ஸமூஹத்தில் கட்டுக்கோப்பு எப்படியிருக்கும்?" என்றால் அது (ஸமூஹக் கட்டுக்கோப்பு) இருக்கத்தான் செய்தது. த்வேஷத்தில் பிரிந்திருக்கிற இன்றைவிட அன்றைக்குத்தான் ஸமூஹ ஐக்கியம் இருந்தது. எப்படியிருந்தது என்றால் அத்தனை பேருக்கும் இருந்த பொதுவான மத உணர்ச்சியாலும் சாஸ்திர நம்பிக்கையாலுந்தான். ஊருக்கே பொதுவாக, ஊருக்கே மத்தியமாக இருந்த ஆலயத்தால்தான். அத்தனை ஜனங்களும் ஈச்வர ஸந்நிதானத்தில் அரன்குடி மக்களாக ஒன்று சேர்ந்திருந்தார்கள்; வழிபாடுகளில், உத்ஸவாதிகளில் அத்தனை ஜாதியாரும் கலந்து கொண்டார்கள்; அவரவரும் ஒவ்வொரு விதத்தில் கைங்கர்யம் செய்தார்கள்.

ஆசௌசம் (தீட்டு) ஏற்பட்டுவிட்ட ஒரு ச்ரௌதிகள் மேலே பட்டால்கூட ஸ்நானம் செய்தவர்களே, ரதோத்ஸவத்தில் பஞ்சமர்களோடு தோளோடு தோள் இடித்துக் கொண்டு வடம் பிடித்து இழுத்தார்கள்; திரும்பி வீட்டுக்கு வந்ததும் ஸ்நானம் செய்யாமலே சாப்பிட்டார்கள். ஏனென்றால் சாஸ்திரத்தில் அப்படியிருக்கிறது. மனஸில் த்வேஷமில்லாமல் ஐக்யமாயிருந்து தொழிலில் மட்டும் பிரிந்திருந்த காலம் அது. அப்போது ஜாதி முறையால் ஐக்கியமில்லாதிருந்ததாகக் கதை கட்டினாலும், வேத சாஸ்திர நம்பிக்கையும் கோவிலும் அன்றைக்கு ஸமூஹத்தை நன்றாக ஐக்கியப்படுத்தியது. இப்போது ஐக்கியம், ஐக்கியம் என்று சொல்லிக்கொண்டே த்வேஷப் பிரசாரத்தால் ஜனங்களைப் பரஸ்பர சத்ருக்கள் மாதிரிப் பிரித்திருக்கிறது!

இதனால்தான் அநேகமாக இப்போது 'வேதமும் வேண்டாம்; கோயிலும் வேண்டாம்' என்பது 'ஜாதி வேண்டாம்' என்பதோடு சேர்ந்திருக்கிறது.

வேதம் வேண்டாம், கோயில் வேண்டாம் என்பதுதான் ரொம்பவும் உச்சநிலையில். வேதமே சொல்வது. ஞானம் வந்த நிலையில் வேதம் வேதமில்லை;

தீண்டாதவனில்லை என்று உபநிஷத்தே சொல்கிறது. அப்படி நிஜமாகவே இல்லையாக்கிக் கொள்வதற்காகவே அப்படிப்பட்ட ஞானம் வருகிற வரையில் வேதம் வேண்டும், கோயில் வேண்டும், ஜாதி வேண்டும் என்கிறது. ஒரே அபேதமாகி விடுவதற்கே முதலில் இத்தனை பேதமும் வேண்டும் என்கிறது.

இந்த லோக வாழ்க்கையை விட்டு விடுதலைக்கு ஒயாமல் பிரயாஸைப்படுகிறவனுக்கு முடிந்த முடிவில் எல்லாம் ஒன்றாகி விடுவதை வேதத்தில் சொல்லியிருக்கிறது; கிருஷ்ண பரமாத்மாவும் சொல்லியிருக்கிறார். முடிந்த முடிவில் காரியமே இல்லை. "தஸ்ய கார்யம் வித்யதே" (கீதை III. 17)

காரியம், தொழில் என்று ஏற்பட்டுவிட்ட இந்த நடைமுறை லோக வாழ்க்கை விஷயத்தில் அந்த அபேத தத்வத்தைச் சொல்லி, இதனால் எந்த பேதமும் காரியலோகத்தில் கூடாது என்பது தப்பான வாதம். காரிய லோகத்திலும் இந்த ஸம்பாவனையானது நம் மனஸில் அன்பு என்கிற ரூபத்தில் ஸகல ஜாதியிடமும், ஸகல பிராணிகளிடமும் கொஞ்சங்கூட ஏற்றத் தாழ்வில்லாமல் ஸமமாக நிறைந்து நிரம்பி இருக்க வேண்டும் என்றுதான் சாஸ்திரங்கள் சொல்கின்றன. அதாவது அன்பிலேதான் அபேதம். காரியத்தில் அபேதம் இல்லை. 'எல்லாம் ஒன்று என்கிற பாவனை, உள்ளுணர்ச்சி எப்போதும் இருக்க வேண்டும்; அதனால் ஏற்படுகிற நிறைந்த ப்ரேமை இருக்க வேண்டும். ஆனால் காரியத்தில் வித்யாஸம் பார்க்கத்தான் வேண்டும்' என்பதே சாஸ்திரங்களில் சொல்லியிருப்பது.

"பாவாத்வைதம் ஸதா குர்யாத்; க்ரியாத்வைதம் ந கர்ஹிசித் "
என்று சொல்லியிருக்கிறது. அதாவது 'எல்லாம் ஒன்று என்ற அத்வைதம் பாவனையில் எப்போதும் இருக்க வேண்டும்; காரியத்தில் ஒருபோதும் அல்ல' என்று அர்த்தம்.

லோக வாழ்க்கையில் இப்படி பேதப்படுத்தினால்தான் ஒழுங்கும், சீரான போக்கும் இருக்கும். அப்போதுதான் குழப்பமில்லாமல், மனக்கலக்கமில்லாமல் ஆத்ம சிந்தனையை வளர்த்துக் கொள்ள முடியும். லோக வாழ்க்கை பொய் என்பதைத் தெரிந்து கொள்வதற்காகவே, இப்படி அதை ரொம்பவும் நிஜம் மாதிரி ஒழுங்குப்படுத்தித் தர வேண்டும் என்பதுதான் ஸநாதன தர்மத்தின் ஏற்பாடு.

அதிலே நாலு வர்ணம் என்று வைத்தது இன்னம் கவடுவிட்டுப் பிரிந்து கலந்து பல ஜாதிகளாயின. ஸப்த ஸ்வரங்களே பலவகையாகச் சேர்ந்து எழுபத்திரண்டு மேளகர்த்தா ராகங்களும், மற்ற கணக்கில்லாத ஜன்ய ராகங்களும் உண்டானது போல், நாலு வர்ணத்துக்கு ஆதாரமான தத்வமே மேலும் பல ஜாதிகளாகப் பிரித்துக் கொடுத்தது. இவ்வளவு பிரிவுகளையும் அவற்றுக்குரிய தர்மங்களையும் பற்றி ஸம்பிரதாயங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

மற்ற மதங்களும் இப்படிப்பட்ட வித்யாஸங்களைப் பின்பற்றி வந்தால் நமக்கு இது குறையாகத் தோன்றாது. அவர்கள் நம்மை பரிஹஸித்து இந்த பேதத்தைக் குத்திக் காட்டுவதாலேயே நம்மவர்களுக்கும் இது தப்பாகத் தோன்ற ஆரம்பித்து விட்டது. ஆனால் நன்றாக ஆலோசித்துப் பார்த்தால் மற்ற எல்லா மதத்தையும்விட நம்முடைய மதமொன்றே ஆதிகாலத்திலிருந்து சிரஞ்சீவியாக இருந்து வருவதற்கும், நம்முடைய நாகரிகமே உலகத்தின் மற்ற நாகரிகங்களை விட மகோன்னதமாக இருந்து வருவதற்கும் காரணம் மற்ற மதங்களில் இல்லாத இந்த வர்ணதர்மம் தான் என்று தெரியும்.

மற்ற மதங்களில் ஜாதி தர்மம் என்று மூல நூல்களில் இல்லாவிட்டாலும், பிற்பாடு அவைகளிலும் ஒன்று சேர முடியாத பல பிரிவுகள் ஏற்பட்டுத்தான் இருக்கின்றன. இவர்கள் ஒருத்தருக்கொருத்தர் விவாஹ ஸம்பந்தம் செய்து கொள்ளாமல் தனித்தனி ஜாதி மாதிரிதான் இருக்கிறார்கள். இப்படி முஸ்லீம்களில் ஸியா, ஸுன்னி, அஹமதியா என்று பிரிந்திருக்கிறார்கள். அது தவிர இங்கே பட்டாணி, லப்பை என்று இருப்பவர்கள் கூட பரஸ்பர விவாஹ ஸம்பந்தம் செய்வதில்லை. கிறிஸ்துவர்களில் காதலிக், பிராடெஸ்டென்ட், கிரீக் சர்ச் என்ற பிரிவினர்களும் இப்படியே. ஆனாலும் Division of Labour (தொழில் பாகுபாடு) என்ற உன்னத தத்வத்தின் மீது ஒரு லெவலில் மட்டும் பிரிந்திருந்து இன்னொரு லெவலில் ஐக்கியமாயிருக்கிற நம் ஜாதி முறையை, இம்மாதிரியில்லாமலே பிரிந்திருக்கிற அவர்கள் நிந்தித்துப் பேசுகிறார்கள். அதற்கு பதில் சொல்லக்கூட நமக்குத் தெரியவில்லை.

மற்ற மதங்களில் எல்லோருக்கும் பொதுவாக வைத்த தர்மங்களை, அறநெறிகளை நம் மதத்திலும் எல்லோருக்கும் விதித்ததோடு அவரவர் தொழிலைப் பொறுத்து அதற்குத் தனியான விசேஷ தர்மங்களை வைத்து ஒன்றோடொன்று கலந்துவிடாமல் ஸமூஹத்தைப் பிரித்து வைத்ததுதான், நம் நாகரிகத்தின் சிரஞ்சீவித் தன்மைக்கு உயிர்நிலை.

நம்முடைய மதம் எவ்வளவோ யுகங்களாக நீடித்து வாழ்ந்து வந்திருக்கிறது. ஏதோ ஆதாரம் இருந்துதான் இந்த மதம் இவ்வளவு நாள் பிழைத்திருக்கிறது. எந்த மதமும் இவ்வளவு தீர்க்காயுஸோடு இருந்ததாகத் தெரியவில்லை. நம்முடைய மதத்தை நான் நம்முடைய கோயிலைப் போல நினைத்திருக்கிறேன். நம்முடைய கோயில்கள் மற்றவர்களுடைய சர்ச் அல்லது மசூதியைப் போல சுத்தமாக இல்லை. 

மற்ற மதஸ்தர்களுடைய கோயில்களோ வெள்ளையடித்து சுத்தமாக வைக்கப்பட்டிருக்கின்றன. நம்முடைய கோபுரங்களில் முளைத்திருக்கும் மரங்களுக்குக் கணக்கேயில்லை. அவ்வளவையும் தாங்கிக் கொண்டு நமது கோயில்கள் நிற்கின்றன. ஆனால் மற்ற மதத்தார்களின் கோயில்களில் இரண்டு மூன்று வருஷத்திற்கு ஒரு முறை ரிப்பேர் செய்யா விட்டால் தாங்காது. 

நம் கோயில்கள் அப்படியில்லை. அவை கருங்கல்லால் கட்டப்பட்டிருக்கின்றன. பல ஆயிரம் வருஷத்திற்கு முன்பாக நம்முடைய பெரியோர்களா பலமாக அஸ்திவாரம் போட்டிருக்கிறார்கள். ஆகையால் தான் அவ்வப்போது ரிப்பேர் இல்லாமலே நம் கோயில்கள் நீடித்து நிற்கின்றன. நாம் கோயில்களில் பல ஆபாஸங்களைச் செய்கிறோம்;அபசாரங்கள் செய்கிறோம்;இவ்வளவுக்கும் ஈடு கொடுத்துக் கொண்டு நம்முடைய கோயில் நிற்கிறது. லோகத்திற்குள் மிகப் புராதனமான கோயில்கள் இந்தியாவில்தான் இருக்கின்றன என்று எல்லோரும் சொல்கிறார்கள். சீமையில் இருந்து நம்முடைய கோயில்களைப் படம் பிடிப்பதற்காகவென்றே பல பேர் வருகிறார்கள். நம்முடைய அலக்ஷ்யத்தால் அழிவதற்குரிய காரணங்கள் பல இருந்தும் அவை இப்படி நெடுங்காலமாக அழியாமல் நிற்கின்றன. அவற்றை இடித்து விடலாமென்றாலோ அதுவும் சிரமமாக இருக்கிறது.

கட்டுவதற்கு எவ்வளவு சிரமப்பட்டிருக்க வேண்டுமோ அதைவிட இடிப்பதற்கும் படவேண்டும். நம்முடைய மதமும் இப்படித்தான் இருக்கிறது. நமக்குத் தெரியாமல் ஏதோ ஒன்று (மற்ற மதங்களில் இல்லாத ஏதோ ஒன்று) இதைத் தாங்கிக் கொண்டு நிற்கிறது. அதனால்தான் எவ்வளவோ வித்யாஸங்கள இருந்தாலும் இந்த மதம் அழியாமல் நிற்கிறது.

அந்த ஏதோ ஒன்று வர்ணாச்ரம தர்மந்தான். மற்ற மதங்களில் எல்லாருக்கும் ஒரே தர்மம் இருக்கிறது. அதனால் தான் அவைகள் அதிகப் பெருமை அடைந்திருக்கின்றன என்று நாம் நினைக்கலாம். ஆனால் அவை ஒரு ஸமயம் ஒரே அடியாக ஏறி நிற்கும். ஒரு ஸமயம் இருந்த இடம் தெரியாமற் போனாலும் போய்விடும். ஒரு காலத்தில் புத்த மதம் இருந்த தேசத்தில் பிற்பாடு கிறிஸ்துவ மதமும், கிறிஸ்துவ மதம் இருந்த தேசத்தில் இஸ்லாமும், இஸ்லாம் இருந்த தேசத்தில் கிறிஸ்துவமுமாக இப்படிப் பல மாறுதல்கள் ஏற்பட்டிருப்பது சரித்திர பூர்வமான உண்மை. எகிப்து, கிரீஸ், சைனா முதலிய தேசங்களில் ரொம்பவும் பூர்வத்தில் இருந்து உயர்ந்த நாகரிகங்களை உண்டு பண்ணின மதங்கள் இப்போது இல்லவேயில்லை. இத்தனை மாறுதல்களையும் பார்த்துக் கொண்டு, வெளியிலிருந்தும் உள்ளேயிருந்துமே எண்ணி முடியாத தாக்குதல்களை தாங்கிக் கொண்டு நம் ஹிந்து மதம் மட்டும் "சாக மாட்டேன்" என்று இருந்து வருகிறது.

ஒரு பனைமரம் இருந்தது. அதன்மேல் ஓர் ஓணான் கொடி கிடுகிடுடென்று படர்ந்தது. சில மாதத்திற்குள் பனை மரத்திற்கு மேல் வளர்ந்து விட்டது. அப்பொழுது அந்த ஓணாண்கொடி, "இந்தச் சில மாதமாக இந்த பனைமரம் ஒர் அங்குலம் கூட உயரவில்லையே! இது உபயோகம் இல்லாதது"என்று சொல்லி சிரித்தது. பனைமரம் சொல்லிற்று: "நான் பிறந்து பதினாயிரம் ஓணான்கொடியைப் பார்த்திருக்கிறேன்.  பதினாயிரத்து ஓராவது கொடி. ஒவ்வொரு கொடியும் இப்படித்தான் கேட்டது. எனக்கு ஒன்றும் சொல்லத் தெரியவில்லை" என்று! இந்த மாதிரிதான் நம் மதமும் பிற மதங்களும் இருக்கின்றன.

நம் மதத்தில் ஒவ்வொருவருக்கும் தனித்தனி வேறு விதமான தர்மங்கள் இருந்தாலும் இந்த தர்மாநுஷ்டாங்களில் ஸமமான பலன்தான் உண்டாகிறது. ஸமமான பலமும் உண்டாகிறது. 

ஆகையால்தான் சொல்லுகிறேன், இத்தனை மாறுதல்களையும் பார்த்துக் கொண்டு, வெளியிலிருந்தும் உள்ளேயிருந்துமே எண்ணி முடியாத தாக்குதல்களை தாங்கிக் கொண்டு நம் ஹிந்து மதம் மட்டும் "சாக மாட்டேன்" என்று சிரஞ்சீவித்வமாக இருந்து வருகிறது.

No comments:

Post a Comment