Monday 7 January 2013

ஒளபாஸனம் - ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்




பிராம்மணர்களுடைய வீட்டுக்கு வீடு அக்னி ஜ்வலித்து அதில் சாஸ்திரப்படி சேர்க்க வேண்டிய நெய், பால், ஹவிஸ் மணந்து கொண்டிருந்தால் அரோக திடகாத்திரமும் உத்தமமான மனோவிருத்திகளும் ஸகல ஜாதி ஜனங்களுக்கும் ஏற்படும். எந்த தேவதைக்கான யஜ்ஞம் செய்தாலும் அக்னியில்தான் ஹோமம் செய்ய வேண்டும் 

இந்த நூற்றாண்டு தொடக்கத்திலிருந்து அக்கினியின் முக்கியத்வம் (அக்னி காரியம்) குறைந்து விட்டது. வாழ்க்கை மாறிவிட்டது. சிரத்தை இருந்தால் இந்த உத்தம ஸம்பத்தைக் காத்து வைத்துக் கொண்டிருக்கலாம். சிரத்தை இல்லாததற்கு இந்தக் காலப் படிப்பு ஒரு முக்கியமான காரணம்.

'நிஷேகாதி ச்மசானாந்தம்' நாற்பது ஸம்ஸ்காரங்கள் சொல்லப்படுகின்றன. அதாவது, தாயார் வயிற்றில் எந்தத் தினத்தில் தேஹகாரணமான கரு இருக்க ஆரம்பித்ததோ, அந்த நிஷேகம் முதல் தேஹம் அக்கினிக்கு ச்மசானத்தில் (மயானம்) ஆஹ§தியாகிற வரைக்கும் நாற்பது கர்மாக்கள் செய்யப்பட வேண்டும். நிஷேகம் அக்கினி ஸாக்ஷியாகச் செய்யப்படுகிறது. கடைசியில் ச்மசான கர்மாவும் அக்னியிலேயே செய்யப்படுகிறது.

வாழ்நாள் பூராவும் அக்னியை அணையாமல் காத்து வரவேண்டும். பிரம்மச்சாரி தினந்தோறும் ஸமிதாதானம் பண்ணி அக்னி காரியம் செய்யவேண்டும். அக்னி ஸாக்ஷியாக விவாஹமான பின், கிருஹஸ்தர்கள் ஒளபாஸனம் என்பதை அக்னியில் செய்யவேண்டும். வானப்பிரஸ்தனுக்கு கக்ஷாக்னி என்று ஒரு அக்னி சொல்லப்பட்டிருக்கிறது. அது காட்டில் செய்வது. ஸந்நியாஸாசிரமத்தில் மட்டும் அக்னியில்லை. ஸந்நியாசியிடம் ஞானாக்கினி இருக்கிறது. அவனுடைய பிரேதத்துக்கும் அக்னி ஸம்ஸ்காரம் கிடையாது. புதைப்பது மரியாதைக்காகச் செய்வது. நியாயமாக அவனுடைய சரீரத்தை நாலாக வெட்டிக் காட்டில் நாலு திக்கிலும் போட்டு விட வேண்டும். ஜனங்களுக்கு உபத்திரவம் இல்லாமல் இருப்பதற்காகக் காட்டில் போடவேண்டுமென்று சொல்லப்பட்டிருக்கிறது. அப்படிச் செய்யாவிட்டால் புதைத்து அதன்மேல் மரம் செடிகளை வைக்க வேண்டும். காட்டில் போட்டால் பிராணிகளுக்கு ஆஹாரம் ஆகிறது. புதைத்தால் மரங்களுக்கு எருவாக ஆகிறது. இப்பொழுது பிருந்தாவனம் கட்டுவது முதலியவை மரியாதையால் செய்பவை. பில்வம், அச்வத்தம் முதலிய பெரிய மரங்களை ஸந்நியாஸியைப் புதைத்த இடத்தில் வைக்க வேண்டும் என்று தான் சொல்லப் பட்டிருக்கிறது.

இந்த தேஹத்தையும் கடைசியில் ஆஹூதியாக தேவதைகளுக்கு ஹோமம் செய்துவிட வேண்டும். அதற்காகத்தான் பிரேதத்துக்கு நெய்யைத் தடவி அதையும் ஒரு திரவ்யமாக ஹோமம் பண்ணுகிறார்கள். அதுதான் கஹன ஸம்ஸ்காரம்.

எல்லா ஜாதியாருக்கும் அக்னி காரியம் உண்டு. விவாஹ காலத்தில் எல்லா வர்ணத்தாரும் ஒளபாஸனம் பண்ண வேண்டும். பிறகு எல்லாரும் அந்த அக்கினியைக் காப்பாற்ற வேண்டும். இப்பொழுது பார்ஸி என்கிற பாரசீகர்கள்தாம் அக்னியைக் காப்பாற்றி வருகிறார்கள். அவர்களுடைய மத கிரந்தத்திற்கு 'ஜெண்டவஸ்தா'என்று பெயர். 'சந்தோவஸ்தை'என்ற வேத பாகம் அப்படி வந்திருக்கிறது. ஜொராஸ்த்ரர் என்பவர் அவர்களுடைய ஆசார்யர். அந்தப் பெயர் ஸெளராஷ்டரர் என்பதன் சிதைவுதான். இரான் தேசம் அவர்களுடையது. ஆர்யன் என்பது இரான் என்று மாறிவிட்டது. அவர்கள் அக்னி அணைந்துபோனால் அதிகச் செலவு செய்து பெரிய பிராயசித்தம் பண்ணிக் கொள்ளுகிறார்கள்.

கிருஹஸ்தன் செய்ய வேண்டிய ஏராளமான அக்னி காரியங்களுக்கு ஆரம்பம்தான் ஒளபாஸனம். வேத மதத்துக்கு அக்னி ரொம்ப முக்கியம். அக்னி நாராயணன் என்றே அவரைச் சொல்கிறார்கள். ருத்ர ஸ¨க்தங்களைப் பார்த்தாலும் அக்னி சம்பந்தமே தெரிகிறது. திருவண்ணாமலையில் இப்படி அக்னி மலையாகவே ஈச்வரன் பூர்வத்தில் இருந்திருக்கிறார். அம்பாளையும் விளக்கிலே ஜோதி ஸ்வரூபிணியாக ஆராதிக்கிற வழக்கம் விசேஷமாய் இருக்கிறது. மலையாளத்தில் பகவதி பூஜைகளில் மூர்த்தி, யந்திரம் இவை முக்கியமில்லை;தீபத்தில்தான் தேவியை ஆவாஹனம் செய்கிறார்கள். ஈச்வரனின் அக்னி நேத்திரத்திலிருந்து உத்பவித்த ஸுப்ரமண்ய ஸ்வாமியையும் ஜோதி ஸ்வரூபமாகவே சொல்கிறோம். "ஆரியர்கள் என்றாலே Fire-worshippers தான்" என்று ஆராய்ச்சிக்காரர்கள் சொல்கிறார்கள். வேத மதத்தில் ஒரு பிரிவாகவே இருக்கப்பட்ட பார்ஸிகளைப் பார்த்தாலும் அவர்கள் அக்னியை ரக்ஷிப்பதுதான் பிரதானமான வழிபாடு என்று என்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஏறக்குறைய நானூறு யஜ்ஞங்கள் வேதத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள். இவற்றில் ஒளபாஸனம் மட்டும் நாலு வர்ணத்தாரும் செய்யலாம் என்றாலும் பிரம்ம க்ஷத்ரியர்களே அதிகம் செய்ததாகவும் வைச்யர்கள் நடைமுறையில் அவ்வளவாகச் செய்து வரவில்லையென்றும், பிற்பாடு க்ஷத்ரியர் பண்ணுவதும் குறைந்து பிராம்மணர் மட்டுமே பண்ண ஆரம்பித்ததாகவும் சொல்கிறார்கள். க்ஷத்ரியர்களுக்கென்று மட்டுமே புஜபலம், வீர்ய விஜயம் முதலியவற்றைத் தருகிற யஜ்ஞங்கள் இருக்கின்றன. ராஜஸ¨யம், அச்வமேதம் முதலியவற்றைச் சக்கரவர்த்திகளே பண்ணியிருக்கிறார்கள். இப்படியே தன தானிய ஸம்ருத்தி (செழிப்பு) க்காக வைச்யர்களுக்கென்றேசில யஜ்ஞங்கள் உள்ளன. யாகத்தை நடத்திக் கொடுக்கும் ஹோதா, உக்தாதா, அத்வர்யு, பிரம்மா எல்லாரையும் பிராம்மணர்களாக வைத்துக் கொண்டு, யஜமானனாக க்ஷத்ரியனோ வைசியனோ இருந்து யாகம் செய்யவேண்டும். (அந்தக் காரியங்களையும் இந்த இரு ஜாதிகள் செய்வது என்றால் இவர்கள் செய்ய வேண்டிய ரக்ஷணை, வியாபாரம், விவசாயம் முதலியன பாழாகி விடுமே!) எல்லா யாகங்களையும் எல்லா பிராம்மணர்களும் செய்யவேண்டும் என்றில்லை. இவற்றில் அநேகம் குறிப்பிட்ட ஒவ்வொரு பலனுக்காக இருக்கும். பிள்ளை பிறக்கவேண்டுமென்பதற்காகப் புத்ரகாமேஷ்டி செய்வது என்று ராமாயணத்தில் கேள்வி பட்டிருக்கிறோமல்லவா?அப்படி. இவ்வாறு ஒரு இஷ்டத்தை உத்தேசித்துப் பண்ணுவது காம்ய கர்மா எனப்படும்.

அது ஒருவர் பிரியப்பட்டால் செய்கிற optional காரியந்தான். இஷ்டமிருந்தாலும் இல்லாவிட்டாலும் ஆத்ம சுத்திக்காகவும், லோக க்ஷேமத்துக்காகவும் செய்தே தீர வேண்டிய obligatory கர்மாக்களும் உண்டு. அவற்றுக்கு நித்யகர்மா என்று பெயர். 'நித்ய' என்றால் இங்கே தினந்தோறும் பண்ணுவது என்ற அர்த்தமில்லை. இப்படிப்பட்ட நித்ய கர்மாக்களாகப் பண்ண வேண்டியவை இருபத்தியோரு யக்ஞங்கள். நானூற்றில் மீதமுள்ளதைப் பண்ணினால் பண்ணலாம். பண்ணாவிட்டாலும் தோஷமில்லை. ஆனால் நாற்பது ஸம்ஸ்காரங்களிலேயே சேர்க்கப்பட்டு விட்ட இந்த இருபத்தியன்றை ஜன்மாவில் ஒரு தரமாவது செய்யவேண்டும். இந்த இருபத்தியன்றும் ஏழு பாக யக்ஞங்கள், ஏழு ஹவிர் யக்ஞங்கள், ஏழு ஸோம யக்ஞங்கள் என்று பிரியும் 

சரி... ஒளபாஸனத்திற்கு வருகிறேன்.

ஒளபாஸனம் எல்லா ஜாதியாருக்கும் உண்டு என்றேன். அதே போல் ஒளபாஸனம் ஆண்-பெண் இருவருக்கும், பதி-பத்தினி இரண்டு பேருக்கும் சேர்ந்த பொதுக் காரியமாய் இருக்கிறது. பதி கிருஹத்திலிருக்கும் போது அவனோடு கூடச் சேர்ந்து பத்தினியும் ஒளபாஸனம் பண்ணுகிறாள். அவன் ஊரிலில்லா விட்டாலும் ஒளபாஸனாக்னியில் ஹோமம் பண்ண வேண்டிய அக்ஷதைகளை அதில் பத்தினியே போட வேண்டும். அந்த ரைட் அவளுக்கு வேதத்திலேயே கொடுக்கப்பட்டிருக்கிறது. பிற்பாடு வந்த பௌராணிகமான விரதங்கள், பூஜைகள் இவைகளைச் சேர்க்காமல் சுத்த வைதிகமாகப் பார்த்தால், ஒளபாஸனத்தைத் தவிர ஸ்திரீக்குச் சொந்தமாக எந்த வேத கர்மாவும் இல்லை. 

புருஷன் பண்ணுகிறதிலெல்லாம் automatic -ஆக இவளுக்கு share கிடைத்து விடுகிறது. ஆகவே, 'இவள் கிருஹரக்ஷணை தவிர தனியாக எந்த தர்மமும், கர்மமும் பண்ண வேண்டாம். பண்ணினாலும் ஒட்டாது என்று தான் வைதிகமான தர்ம சாஸ்திரத்தில் இருக்கிறது. ஒரே exception (விதி விலக்கு) ஒளபாஸனம். ஆகையால் 'ரைட்' 'ரைட்'என்று கேட்கிற ஸ்திரீகளை இந்த விஷயத்தில் கிளப்பிவிட்டாவது வீட்டுக்கு வீடு ஒளபாஸனாக்னி ஜ்வலிக்கும்படிச் செய்யலாமோ என்று எனக்கு ஆசை. 

ஒளபாஸனம் செய்யாத புருஷனிடம் பத்தினியானவள், "உங்களுக்குக் கொஞ்சமாவது வேத ஸம்பந்தம் இருக்கும்படியாக, (நீங்கள் வைதிகமான பாக்கியெல்லாவற்றையும் விட்டுவிட்டாலும்) வேத மந்திரமான காயத்ரீயாவது பண்ணுகிறீர்கள். இப்போது பண்ணாவிட்டாலும், மந்திரமே மறந்து போயிருந்தாலும்கூட, பின்னாலாவது என்றைக்காவது பச்சாதாபம் ஏற்பட்டால் காயத்ரீ பண்ணுவதற்கு அநுகூலமாக உங்களுக்கு உபநயன ஸம்ஸ்காரமாவது ஆகியிருக்கிறது. எனக்கோ உபநயனமும் இல்லை, காயத்ரீயும் இல்லை. நம் மதத்துக்கே, லோகத்துக்கே, ஸ்ருஷ்டிக்கே ஆதாரமாக இருக்கப்பட்ட வேதத்தில் ஸ்திரீயான எனக்கு ஏதாவது 'ரைட்'இருக்குமானால் அது இந்த ஒளபாஸனம்தான். 

நீங்கள் இதுவும் செய்யாவிட்டால் எனக்கு வேத ஸம்பந்தம் அடியோடு போய் விடுகிறதல்லவா?என்று சண்டை போட்டு அவனை ஒளபாஸனம் ண்ண வைக்க வேண்டும்.இந்த மஹா பெரிய சொத்துரிமைக்குத்தான் பெண்கள் சண்டை போட வேண்டும். ஸ்திரீகளுக்காவது ஒளபாஸனம், அக்னி ஹோத்ரம் (ஒளபாஸனத்தைப் போலவே நித்யம் இரண்டு வேளை செய்கிற அக்னி ஹோத்ரம் என்று ஒன்று உண்டு. இதைப் பற்றி அப்புறம் சொல்கிறேன்) முதலிய வைதிக சொத்துக்களில் சிரத்தையிருக்க வேண்டும் என்பதே நான் சொல்வதன் தாத்பர்யம். 
ஸ்திரீகள் யோசித்துப் பார்க்க வேண்டும், "அகத்தில் எத்தனையோ அக்னி இருக்கிறதே! காப்பி போட, சமைக்க, ஸ்நானத்துக்கு வெந்நீர் வைக்க இதற்கெல்லாம் அகக்னியிருக்கிறதே! எதை சாட்சியாக வைத்துக் கொண்டு விவாஹம் பண்ணிக் கொண்டோமோ அது ஒளபாஸனமில்லாமல் அணைந்துபோக விடலாமா? என்றுய அக்னி எப்போதும் அணையாமலிருக்க உமி போட்டு வரவேண்டும். இதற்காக நெல்லை வீட்டில் குத்தினால் அதில் பல பிரயோஜனங்கள் ஏற்படுகின்றன. உமி கிடைப்பதோடு, நாம் சாப்பிட ஆரோக்யமுள்ள கைக்குத்தல் அரிசி கிடைப்பது;

நெல்லைக் குத்துகிற ஏழைக்கு ஏதோ கொஞ்சம் ஜீவனோபாயம் கிடைப்பது, என்றிப்படி. ஹோமம் செய்ய வேண்டிய அட்சதை மட்டும் பத்தினியே குத்தியதாக இருக்க வேண்டும். இது மந்திர பூர்வமான காரியம். ஒளபாஸனத்துக்கு அதிகச் செலவு இல்லை. அதைச் செய்ய ரொம்ப நேரமும் பிடிக்காது. ஆகவே மனஸ் மட்டும் இருந்து விட்டால் எல்லாரும் செய்யலாம். இதிலே உமிக்காகப் பிறருக்குக் கூலி கொடுத்துச் குத்துச் செய்வதன் வழியாகப் பரோபகாரம்; மெஷின் உஷ்ணம் சேராமல் போஜனத்துக்கு ஆரோக்யமான வஸ்து என்கிறவையும், கைக்குத்தலரிசி சேர்ப்பதில் காந்தீயமும்கூட வந்து விடுகிறது. 

ஒளபாஸன அக்னியைக் காப்பாற்றி வந்தால் பூதப் பிரேத பிசாசாதிகளால் வரும் கஷ்டங்கள், வியாதிகள் கிட்டவே வராது. இப்பொழுது எவ்வளவோ பிராம்மணர்கள் வீட்டில் கூட வேப்பிலை போடுவது, பிரம்பால் அடிப்பது, மசூதிக்குப் போய் ஊதுவது, என்னிடம் வந்து பிரார்த்திப்பது என்றெல்லாம் செய்யும்படியாகியிருப்பது ஒளபாஸன அக்னி இல்லாததன் கோளாறுதான். புருஷப் பிரஜைகளும் ஸ்திரீ ப்ரஜைகளும் எந்த விகிதத்தில் பிறக்க வேண்டுமோ அப்படிப் பிறப்பதற்கும் ஒளபாஸனம் ஸஹாயம் பண்ணும் என்று முன்னமே சொல்லியிருக்கிறேன். ஒளபாஸன பஸ்மா (சாம்பல்) இட்டுக்கொள்வது பெரிய ரக்ஷை.

விவாஹம் அக்னி ஸாட்சியாக அக்னியில் ஹோமத்துடன் தானே நடக்கிறது? அந்த அக்னியிலேயே விவாஹத்தின் போதே ஒளபாஸனம் ஆரம்பிக்கப்படுகிறது. பிறகு வாழ்நாள் பரியந்தம் அந்த ஒளபாஸனாக்னி அணையாமல் அதை உபாஸிக்க வேண்டும். பாக யஜ்ஞங்கள் என்று ஏழு சொன்னேனே, அவற்றையும், கிருஹத்தில் நடக்கும் உபநயனம் முதலான காரியங்களையும் சிராத்தம் முதலியவைகளையும் ஒளபாஸனம் அக்னியைக் கொண்டேதான் செய்யவேண்டும். தகப்பனாருடைய ஒளபாஸனாக்னியிலிருந்தே புத்திரனின் விவாஹத்தில் அக்னி வளர்க்கப்படும். இதுவே அப்புறம் புத்திரனின் ஜீவ பரியந்தமும் அவனுக்கு ஒளபாஸனாக்னியாகிறது.

அந்த்யேஷ்டி (அந்திய இஷ்டி-கடைசி வேள்வி) என்பதாக வைதிக மந்திரங்களோடு செய்யப்பட வேண்டியதாகும். அதைச் செத்துப் போனவனே பண்ணிக் கொள்ள முடியாதல்லவா?புத்திரர் அல்லது தாயாதிதாமே பண்ணவேண்டும்.இவனுக்காகப் பிறர் பண்ணுவதான பித்ரு காரியங்களில் அது வந்து விடுகிறது. ஆஹிதாக்னியாக இருக்கப்பட்ட ஒருவனுக்கு அவன் ஆயுள் பூராவும் உபாஸித்த க்ருஹ்யாக்னி, த்ரேதாக்னி (முத்தீ) இரண்டையும் சேர்த்து இந்த நாலு அக்னிகளையுமே கொண்டு தஹன ஸம்ஸ்காரம் செய்யவேண்டும். 

இவன் ரக்ஷித்த அக்னியே இவன் சரீரத்தைப் போக்கி ஜீவனைப் புண்ய லோகத்தில் சேர்க்கிறது. த்ரேதாக்னி உபாஸிக்காமல், க்ருஹ்யமாக ஒளபாஸனம் மட்டும் பண்ணினவனுக்கு அந்த ஒளபாஸனாக்னியாலே தஹனம் செய்ய வேண்டும். 

இவன் ஸந்நியாஸம் வாங்கிக் கொள்ளாமலே செத்துப் போனால், இப்படி துறவியானால் தஹனமே இல்லையே! தஹன ஸம்ஸ்காரம் அந்த்யேஷ்டி என்றே யாகமாகச் சிறப்பிக்கப்படுவதால், மிகவும் பக்குவமானவர்கள் தவிர பாக்கிப் பேரெல்லாம் ஸந்நியாஸம் வாங்கிக் கொள்ளாமலே வாழ்க்கையை முடிப்பது சாஸ்திர ஸம்மதந்தான் என்று தெரிகிறது. எல்லா கிருஹஸ்தருக்கும் ஸந்நியாஸம் compulsory (கட்டாயம்) என்றால் இந்த தஹனகர்மா அவர்களுக்கு இராதே!இது இருப்பதாலேயே ஸந்நியாஸம் 'கம்பல்ஸரி' இல்லை என்றாகிறது.

விவாஹத்தின்போது ஒளபாஸனம் செய்யப்பட்ட அக்னியை இரண்டாகப் பிரிக்க வேண்டும். அதற்கென்று 'அக்னி ஆதானம்' என்று ஒரு சடங்கு உண்டு. இப்படிப் பிரித்ததில் ஒன்றே க்ருஹ்ய காரியங்களை செய்ய வேண்டிய க்ருஹ்யாக்னி (அல்லது ஸ்மார்த்தாக்னி) ஆகிறது. மற்றது ச்ரௌத காரியங்களைச் செய்வதற்கான ச்ரௌதாக்னியாகிறது. அதன் பின் இந்த இரண்டு அக்னிகளையும், தனித்தனியே ஒரு குண்டத்தில் சாச்வதமாக ரக்ஷித்து வரவேண்டும். அக்னி எப்போதும் அணையாமல் இருக்க, உமி போட்டு வரவேண்டும். இவற்றில் க்ருஹ்யாக்னிதான் ஒளபாஸனாக்னி என்றும் பெயர் பெற்று தினமும் அதில் ஒளபாஸனம் செய்யப்படுகிறது. இது ஒரே குண்டத்திலிருக்கிற அக்னிதான். அதனால் இதற்கு 'ஏகாக்னி'என்றும் பெயர். ஆபஸ்தம்ப ஸூத்ரத்தில் க்ருஹ்ய கர்ம விஷயங்களுக்கே 'ஏகாக்னி காண்டம்'என்று தான் பெயர். 

நான் (பெரியவா) இதுவரை சொல்லிவந்த ஸம்ஸ்கார ஸமாசாரங்கள், சாஸ்திரோக்த விதிகள் எல்லாமே பெரும்பாலும் ஆபஸ்தம்ப ஸூத்ரத்தை அநுஸரித்ததுதான். ஏனென்றால் அதை அநுஷ்டிக்கிற கிருஷ்ண யஜுர்வேதிகள்தான் தக்ஷிணத்தில் கணிசமான மெஜாரிட்டிக்காரர்கள். இங்கே மைனாரிடியாக உள்ள ரிக்வேதிகள் பின்பற்றுகிற ஆச்வலாயண ஸூத்ரத்திலும், ஸாம வேதிகள் அநுஸரிக்கிற கோபில ஸூத்ரத்திலும் சில விஷயங்கள் கொஞ்சம் மாறுபட்டிருக்கும். ஆனால், இந்த வித்யாசங்கள் க்ருஹ்ய கர்மாக்களில் தானேயன்றி ச்ரௌத கர்மாக்களில் வித்யாஸமே கிடையாது. ச்ரௌதம் எல்லோருக்கும் பொது. 

ச்ரௌத காரியங்களுக்கு முக்கியமாய் இருக்கிற ச்ரௌதாக்னி என்பது மூன்று அக்னிகளாக, மூன்று குண்டங்களில் இருப்பது. அதனால் 'த்ரேதாக்னி'என்று அதற்குப் பெயர். 'த்ரேதாக்னி காண்டம்'என்றே ஆபஸ்தம்ப ஸ¨த்ரத்தில் இந்தப் பகுதிக்குப் பேர். இப்படி ச்ரௌதாக்னியை உபாஸிக்கிறவரையே 'த்ரேதாக்னி'என்று சொல்வதுண்டு. 'ச்ரௌதி'என்றும் சொல்வார்கள். ச்ரௌத- க்ருஹ்ய அக்னிகளை உபாஸிக்கிறவருக்கு 'ஆஹிதாக்னி' என்று பெயர். இப்படியே விஸ்தாரமான ஸோமயாகம் முதலானதைப் பண்ணினவருக்கு யஜ்வா, தீக்ஷிதர், மகி என்ற பெயர்கள் ஏற்படுகின்றன. ஸோம யாகங்களுக்குள் விசேஷமான வாஜபேயம் பண்ணினவர் வாஜபேயி எனப்படுகிறார். யாகம் அல்லது யஜ்ஞம் என்பதற்கு க்ரது, மகம் (இதிலிருந்துதான் யஜமானனுக்கு 'மகி'என்று பெயர் உண்டாகிறது) , ஸவனம், இஷ்டி, ஸ்தோமம், ஸம்ஸ்தை என்ற பெயர்களும் உள்ளன. 

இவற்றில் சிலவற்றுக்கிடையே சில வித்யாசங்களும் உண்டு. 'முத்தீ', 'முத்தீ ஒம்புதல்'என்றெல்லாம் ரொம்பப் பழைய தமிழ் நூல்களில் சிறப்பித்துச் சொல்லியிருப்பது ச்ரௌதாக்னியைத்தான். மூன்று அக்னிகள் என்ன என்றால், ஒன்று 'கார்ஹபத்யம்'- அதாவது இல்லத்தின் அதிபதியான க்ருஹபதிக்கு உரியது. இந்த கார்ஹபத்ய குண்டத்திலேதான் அணையாமல் எப்போதும் ச்ரௌதாக்னி எரிந்து கொண்டிருக்க வேண்டும். இது முழுவட்ட வடிவமாக இருக்கும். இதிலே நேராக ஒரு ஹோமமும் கூடாது. 

இதிலே இருக்கிற அக்னியை பித்ரு காரியம் (இது க்ருஹ்யமான சிராத்தம் இல்லை; இது ச்ரௌதமாக அமாவாஸ்யை தோறும் செய்யும் பிண்ட பித்ரு கர்மா) செய்வதற்காகவும், சில சில்லறை தேவதா ஹோமங்களுக்காகவும் இரண்டாவதான ஒரு குண்டத்தில் எடுத்து வைத்துப் பண்ண வேண்டும். இந்தக் குண்டம் தெற்கே இருப்பதால் இந்த அக்னிக்கு 'தக்ஷினாக்னி'என்று பெயர். இது அரை வட்டமாக இருக்கும். பொதுவாக மற்ற எல்லா தேவதைகளுக்கும் செய்கிற ஹோமங்களை மூன்றாவதான 'ஆஹவநீயம்'என்ற கிழக்குப் பக்கமுள்ள குண்டத்தில் பண்ண வேண்டும். கார்ஹபத்ய அக்னியிலிருந்தே கிழக்குக் குண்டத்தில் எடுத்து வைத்து ஆஹவநீய அக்னியை உண்டாக்க வேண்டும். ஹவன், ஹவன் என்றுதானே வடக்கே யாகத்தையே சொல்கிறார்கள்?அந்த ஹவனம் அல்லது ஆஹவனத்துக்கு ஆதாரமாக இருக்கப்பட்டதுதானஅ அஹவநீயம். இந்த ஆஹவநீய குண்டம் சதுரமாக இருக்கும். தேவதாப்ரீதியாகச் செய்யப்படும் ஸோம யாகம் முதலான எல்லாப் பெரிய வேள்விகளும் ஆஹவநீய அக்னியை க்ருஹத்திலிருந்து யாகசாலைக்கு கொண்டு போய் அங்கே அதில் செய்வதுதான். க்ருஹ்யத்தில் ஒளபாஸனம் போல, ச்ரௌத கர்மாக்களில் அன்றாடம் இரண்டு வேளையும் செய்ய வேண்டியது அக்னி ஹோத்ரம். முன்பு சொன்ன அக்னி ஆதானமும் அக்னி ஹோத்ரமும் ஏழு ஹவிர்யக்ஞங்களில் முதலிரண்டாகும். அக்னி ஹோத்ரம் செய்பவர்களையே அக்னி ஹோத்ரிகள் என்கிறோம்.(இக்காலத்தில் ஹாஸ்யம் என்று நினைத்து, ஸிகரெட் ஊதுவதை அக்னி ஹோத்ரம் என்றும், ரேஸுக்குப் போவதை அச்வமேதம் என்றும் சொல்வது அபசாரமாகும்.)

வஸந்த காலத்தில் (அதாவது ஏறக்குறைய நம் சித்திரை வைகாசி மாஸங்களில்) விவாஹம் செய்வதால், ஒளபாஸன ஸித்தியும், அக்னி ஆதானம் செய்வதால் அக்னி ஹோத்ர ஸித்தியும் உண்டாகின்றன. அக்னிஹோத்ர அக்னி எக்காரணத்திலாவது அணைந்து விட்டால் புணராதானம் என்பதாக மறுபடி ஆதானம் பண்ணி மீண்டும் ஆரம்பிக்கலாம். இப்படியே ஒளபாஸன அக்னி அணைந்தாலும், அக்னி ஸந்தானம் செய்து மறுபடி ஆரம்பிக்கலாம். தற்போது அநேகமாக அத்தனை பேர் வீட்டிலுமே ஒளபாஸன, அக்னி ஹோத்ர அக்னிகள் இல்லாததால் நான் இவற்றைச் செய்யச் சொல்லும்போது, "எப்படி முடியும்? விவாஹ காலத்திலிருந்து இந்த அக்னிகளை நாங்கள் ரக்ஷிக்காமல் விட்டு விட்டோமே!"என்று நீங்கள் கேட்டுவிடக்காமல் விட்டு விட்டோமே!"என்று நீங்கள் கேட்டுவிடக்கூடாது என்றே இதை - இப்போதுகூட இவற்றை ஆரம்பித்துக் கொள்ள இடமிருக்கிறது என்பதை - சொல்கிறேன்.

இப்படி அவிச்சின்னமாக (முறிவு படாமல்) தலைமுறை தலைமுறையாக அநேத அக்னி போகும். ஒரு தனி மனிதனையும், அவனுடைய ஒரு குடும்பத்தையும் மட்டுமே மையமாகக் கொண்டு அமைகிற - அதாவது ஒளபாஸன அக்னி உபயோகிக்கப்படுகிற - எல்லா கர்மங்களுக்கும் பலன் நேராக ஒரு குடும்பத்தை உத்தேசித்ததானாலும், அதில் பிரயோகமாகிற வேத மந்திர சப்தம் ஸகல ஜகத்துக்கும் நல்லது செய்யத்தான் செய்யும்.

No comments:

Post a Comment