Wednesday 2 January 2013

மொட்டை அடித்தல், கிராப் வைத்தல் பற்றி மஹா பெரியவா




குழந்தை பிறந்து ஆறாம் மாஸம் உணவூட்டுவதானது 'அன்னப்ராசன'ஸம்ஸ்காரம்.

கர்ப்பாதானம் முதல் நாமகரணம் வரை குழந்தையை முன்னிட்டு (on behalf ) பெற்றோரே பண்ணுவது. அன்ன ப்ராசனத்தில் தகப்பன் மந்திரம் சொன்னாலும் குழந்தையே சாப்பிடுகிறது.

தாயார் மருந்து சாப்பிட்டால் பால் குடிக்கிற குழந்தைக்கு தேஹபுஷ்டி ஏற்படுகிறதோ இல்லையோ?அதைப்போலவே மாதா பிதாக்களுடைய சித்தவிருத்தி எப்படி இருக்கிறதோ அப்படியே உள்ளே இருக்கும் ஜீவனும் ஸாத்விக ஸ்வபாவமோ, பாப பிரவிருத்தியோ உண்டாகும். மனது சாந்தமாக இருந்து ஒரு ஸமாசாரம் எழுதி அதைப் படித்துப் பார்த்தால் நன்றாயிருக்கும். கோபமாக இருக்கும் பொழுது எழுதி அப்புறம் பார்த்தால் நன்றாக இருப்பதில்லை. சரீரத்திலும் அப்படியே குணதோஷங்கள் ஏற்படுகின்றன. ஒரு தம்பதி உத்தம குணங்களோடு ஸங்கமித்தால்தான் நல்ல பிண்டம் ஏற்பட்டு உள்ளே இருக்கும் ஜீவனுக்கும் நல்ல சுபாவம் உண்டாகும். மந்திர பூர்வமாகப் பண்ணுவது இதற்காகத்தான்.

இத்தகைய கர்மாக்களை அடியோடு தள்ளாதவர்களும் உரிய காலத்தில் பண்ணாமல் சேர்த்துப் பண்ணி விடுகிறார்கள். இப்படியன்றி, அந்த அந்தக் காலத்தில் அந்த அந்த மந்திரத்தைச் சொல்லி அந்த அந்த மந்திரத்தைச் சொல்லி அந்த அந்த திரவியங்களைக் கொண்டு அந்த அந்த ஸம்ஸ்காரத்தைச் செய்யவேண்டும்.

நம்முடைய பெற்றோர்கள் ஸம்ஸ்காரம் பண்ணவில்லை;அதனால் நமக்கு நன்மை உண்டாகவில்லை என்ற குறை நமக்கு இருக்கலாம். அதைப்போல நம்முடைய குழந்தைகள் குறை கூறாமல் நாம் நல்ல ஸம்ஸ்காரங்களைப் பண்ணவேண்டும். அவர்களுக்கும் பண்ணி வைக்க வேண்டும்.

அன்னப் பிராசனத்துக்கப்புறம் 'சௌளம்' செய்ய வேண்டும். அதாவது சிகை (குடுமி) வைக்கிறது. ஸத் கர்மாவுக்கு உபயோகமாக இருக்க அது பண்ணவேண்டும். ஸந்நியாஸிக்கு சிகை இல்லை. மொட்டைத் தலையாக இருக்க வேண்டும். ஸந்நியாஸிகள் மந்திரபூர்வமாகத்தான் சிகையை எடுத்துக் கொள்ளவேண்டும். மந்திரபூர்வமாக வைத்துக் கொண்ட சிகையைப் பரமேச்வரனுக்கு முன்பு பண்ணின பிரதிக்ஞைக்கு விரோதமாக இஷ்டப்படி எடுத்து விடுவது தப்பு. சிகையை எடுப்பது ஒரு பெரிதா என்று கேட்கலாம். பொய் சொல்லுகிறது தப்பு அல்லவா?

அது எவ்வளவு தப்போ அவ்வளவு தப்பு இதுவும். 'பரமேசவர ப்ரீதியாக'என்று ஸங்கல்பம் பண்ணியே, சௌள ஸம்ஸ்காரத்தில் சிகை வைக்கப்படுகிறது. அப்படி வைத்துக் கொண்டதைக் கிள்ளுக்கீரையாக எண்ணி மனம் போனபடி எடுத்தால் அந்தப் பரமேச்வரனிடமே பொய் சொன்னதாக ஆகவில்லையா? சிவலிங்கப் பிரதிஷ்டை செய்கிறார்கள். வேல், ஸாளக்கிராமம் வைத்து பூஜை செய்கிறார்கள். பின்பு, கோபித்துக் கொண்டு எடுத்து எறிந்து விடலாமா?அகஸ்மாத்தாகப் போனால் - திருடன் கொண்டு போனால் பாதகம் இல்லை. நாமாக வைத்ததை நாமாக வேண்டுமென்று மாற்றுவது பெரிய தப்பு.

சௌளத்தை மட்டும் ஸங்கல்பத்தோடு பண்ணிக் கொண்டு அப்புறம் இஷ்டப்படி அதை எடுத்து விட்டு 'க்ராப்'பண்ணிக் கொள்வது தப்பு.

'.......ஏ போச்சு'என்று பேச்சு வழக்கிலே ரொம்ப அலக்ஷ்யமான ஸமாசாரமாகச் சொன்னாலும், வாஸ்தவத்தில் இது பெரிய ஸமாச்சாரம்தான். வேத அத்யயனம், வைதிக கர்மாநுஷ்டானம், தர்மப்படி இல்லறத்திலிருந்து கொண்டு பண்ணும் தாம்பத்தியம் இவற்றிலே சரீரத்துக்கும், சரீரத்தின் நாடி சலனங்கள் மூலம் சித்தத்துக்கும் ஏற்படவேண்டிய பலத்துக்குத் தலையில் பிரம்மரந்திரத்தில் சிகை என்ற ரக்ஷை இருப்பது பெரிய காப்பாகும். கூரைக்கு ஒடு போடுகிற மாதிரி அது!வேத கர்மாவும், தாம்பத்தியமும் நின்றுபோன ஸந்நியாஸ ஆச்ரமத்தில் தான் இந்த ரக்ஷை தேவையில்லாமல் போகிறது. ஆகையால் கிருஹஸ்தன் ஸந்நியாஸியாக ஆனாலன்றிக் குடுமியை எடுக்கக் கூடாது. தற்காலத்தில் பிரம்மச்சரிய, கிருஹஸ்தாச்ரம காலங்களிலும் வேத ஸம்பந்ததத்துக்கு முழுக்குப் போட்டு விட்டதால், சிகையும் இல்லாமலிருக்கிறோம்!

பாபம் பண்ணி நரகவாஸம் பண்ணுகிற ஜீவர்களின் பிரீதிக்காக, ஒரு கிருஹஸ்தன் ஸ்நானம் செய்யும்போது மந்திர பூர்வாக சிகோதகம் தரவேண்டும் ( குடுமியிலிருந்து ஜலத்தைப் பிழிந்து கொடுக்க வேண்டும்) என்று இருக்கிறது. சிகை இல்லாவிட்டால் இதை எப்படிப் பண்ணுவது?

No comments:

Post a Comment