Friday 18 January 2013

ஹிந்து மதத்தின் சிரஞ்சீவித்வம் 1

 பகுதி 1


எத்தனையோ மாறுதல்களையும் பார்த்துக் கொண்டு, வெளியிலிருந்தும் உள்ளேயிருந்துமே எண்ணி முடியாத தாக்குதல்களை தாங்கிக் கொண்டு நம் ஹிந்து மதம் மட்டும் "சாக மாட்டேன்" என்று சிரஞ்சீவித்வமாக இருந்து வருகிறது. என்ன காரணம்?

நம் மதத்தில் பிராம்மணர், க்ஷத்ரியர், வைச்யர், சூத்ரர் என்று நான்கு வர்ணங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இந்த வர்ணங்களை நாம் ஜாதி என்கிறோம்.

வாஸ்தவத்தில் ஜாதி வேறே, வர்ணம் வேறே. வர்ணங்கள் மேலே சொன்ன நாலுதான். இதற்குள்ளேயே ஒவ்வோன்றிலும் பல ஜாதிகள் இருக்கின்றன. நாலாம் வர்ணம் ஒன்றிலேயே முதலியார், பிள்ளை, ரெட்டி, நாயக்கர், நாயுடு, கவுண்டர், படையாட்சி என்கிற மாதிரி எத்தனையோ ஜாதிகள் இருக்கின்றன.

இருந்தாலும் பொது வழக்கில் வர்ணம் என்று சொல்லாமல் ஜாதி என்றே சொல்லுவதால், நானும் இந்த இரண்டிற்கும் வித்யாஸம் பார்க்காமல் வர்ணத்தையும் ஜாதி என்றே சொல்லிக்கொண்டு போகிறேன்.

நான்கு ஜாதிகளும் (அதாவது வர்ணங்களும்) சாஸ்திரங்களில் வெவ்வேறு விதமான கர்மாக்களையும் ஆசாரங்களையும் விதித்திருக்கிறது. இதனால் ஒரே மதஸ்தரிடையிலேயே ஏகப்பட்ட வித்தியாஸங்கள் உள்ளன. ஒருவர் சமைத்ததை இன்னோருத்தர் சாப்பிடக்கூடாது. ஒருத்தரோடு ஒருத்தர் கல்யாணம் பண்ணிக் கொள்ளக்கூடாது. ஒருவர் செய்யும் காரியத்தை மற்றொருவர் செய்யக்கூடாது என்று இப்படி எவ்வளவோ வித்தியாசங்கள் இருக்கின்றன.

நாலு வர்ணம் என்று பெயரளவில்தான் இருக்கின்றன. ஒவ்வொன்றிலும் ஆயிரக்கணக்கான பிரிவுகள் இருக்கின்றன. இன்னும் பல பிரிவுகள் உண்டாகிக் கொண்டே இருக்கின்றன. இப்படி, இந்த ஹிந்து மதமானது ஒரு விசித்ரமான மதமாக இருக்கிறது.

லோகம் முழுவதற்கும் பொதுவாக இருந்தது, இந்த ஒரே மதம் என்று அவ்வளவு பெருமைப்படும் படியான நம் மதத்தில் ஒன்றுக்கொன்று ஒரே வித்தியாசமாக இருப்பதைப் பார்த்தால் இந்தக் காலத்தவருக்கு ரொம்பச் சிறுமையாக, அவமானமாக இருக்கிறது. மற்ற மதங்களிலும் இத்தைச் செய்ய வேண்டும் என்ற விதிகளும், இத்தைச் செய்யக்கூடாது என்ற நிஷேதங்களும் உண்டு. ஆனால் அந்த மதங்களிலுள்ள எல்லோருக்கும் ஒரே விதமான விதிகள், ஒரே விதமான விலக்குகளே உண்டு. Ten Commandments [பத்துக் கட்டளைகள்] என்றால் அது கிறித்துவ மதத்தில் அத்தனை பேருக்கும்தான் பொது. சிலருக்கு அவை உண்டு, சிலருக்கு இல்லை என்று இல்லை. குரான் விதிகளும் இப்படியே. 

நமக்குள்ளேயோ ஒரே மதமாக இருந்தாலும் விதிகளும் நிஷேதங்களும் பல வகைகளாக இருக்கின்றன. ஒரு காரியத்தை ஒருவன் செய்தால் தர்மமாகிறது. அதையே வேறோருவன் செய்தால் அதர்மம் என்கிறோம். ஒருத்தன் பூணுல் போட்டுக் கொண்டு வேதம் சொன்னால் தர்மம், இன்னொருத்தன் இதைப் பண்ணினால் அதர்மம். வேதம் சொல்கிறவன் ஸ்நானம் பண்ணி வயிற்றைக் காயப்போடாவிட்டால் அதர்மம். மற்றவன் ஸ்நானம் பண்ணவேண்டுமென்றில்லை. உபவாஸமிருக்க வேண்டும் என்றில்லை. இப்படி ஏகப்பட்ட வித்தியாசங்களோடும் நம் மதம் உயிரோடிருப்பதை பார்த்தால் ஒன்று தோன்றுகிறது. 

ஒரு பெரியவர் ஒரு பெரிய ஆச்சரியத்தை சொல்லுகிறார். நாமெல்லாம் மரணமடைவது ஆச்சரியமில்லை. இந்த உடம்பில் ஒன்பது ஓட்டைகள் இருந்த போதிலும் அவற்றின் வழியாக உயிரானது வெளியே போகாமல் நிற்கிறதே. அதுதான் பெரிய ஆச்சரியம். என்று அவர் சொல்லுகிறார்.

நவத்வாரே சரீரே (அ) ஸ்மீன் ஆயு : ஸ்ரவதி ஸ்ந்ததம் |
ஜீவதீத்யத்புதம் தத்ர கச்சதீதி கிம் அபுர்தம் ||

அதைப்போலப் பலவிதமான ஸந்தேஹங்களுக்கும் வித்தியாசங்களுக்கும் இடமான இந்த மதமானது எவ்வளவோ யுகங்களாக இன்னும் உயிருடன் இருக்கிறதே என்பதை நினைத்துதான் ஆச்சரியப்பட வேண்டியிருக்கிறது.

வேதத்தை விட்டால் சிலருக்குப் பாபம், வேதம் சொன்னால் சிலருக்குப் பாபம் என்பதைப் போல இவ்வளவு வித்தியாசங்களும் பக்ஷபாதங்களும் ஏன் நம் மதத்தில் மட்டும் இருக்கின்றன என்று தோன்றுகின்றன. இந்த விஷயங்களையெல்லாம் நாம் சொல்லிக் கொள்வது அவமானமாக இருக்கிறதென்று நாம் நினைக்கிறோம். இவை தொலைந்தால் நல்லதென்று நாம் நினைக்கிறோம். இந்த வித்தியாசங்கள், பல நல்ல அம்சங்களுடைய நமது மதத்துக்குக் களங்கமான இருக்கின்றன என்று பலர் சொல்லுகிறார்கள். இப்படிப் பலப்பேருக்கு இந்த விஷயங்கள் மனதில் உறுத்திக்கொண்டே இருக்கின்றன. சில பேர் ஏதாவது தெரிந்து சமாதானப் படுத்திக் கொள்கின்றார்கள். சில பேர் சில ஸமயங்களில் இந்த மாதிரி வித்தியாசங்களைப் பார்த்து ஆத்திரமடைந்து நாஸ்திகர்களாகி, இவற்றை எடுத்துக்காட்டி உறுத்தி, உறுத்தி சொல்கின்ற போது அப்படிப் போகாத நமக்கு மனஸ் ரொம்பவும் கஷ்டப்படுகிறது.

இம்மாதிரி ஸமயங்களில் உள்ளூர மதாபிமானம் உள்ளவர்கள், இந்த வர்ண தர்மத்தை மட்டும் எடுத்துப் போட்டுவிட்டு, எல்லா ஜாதிகளையும் ஒன்றாக்கிவிட்டு, மற்ற மதஸ்தர்களைப் போலவே நாமும் ஆகிவிட்டால் நன்றாக ஆகிவிடும் என்கிறார்கள். வேதமோ, ஈச்வர ஆராதனமோ எல்லாவற்றையும் எல்லோருக்கும் ஒன்றாக்கி விடலாம். வெவ்வேறு ஆசாரம், அனுஷ்டானம் என்பதே வேண்டாம் என்கிறார்கள். இன்னும் கொஞ்சம் அதிகமாகப்போய் நம்முடைய பூர்விகர்கள் கொள்கையே இதுதான். ஜீவாத்மாவும் பரமாத்மாவுமே ஒன்று என்று சொன்ன நம் மூல புருஷர்கள் ஜீவர்களுக்குள்ளேயே இத்தனை பேதம் சொல்லியிருப்பார்களா. அவர்களும் சரி, கீதையில் கிருஷ்ண பரமாத்மாவும் ஸரி, ஜீவர்கள் தங்கள் தங்கள் குணத்துக்கு ஏற்றபடி தொழில்களை நாலுவர்ணமாகப் பிரித்துக்கொண்டு செய்வதைத்தான் சொன்னார்களை தவிர பிறப்புப்படி ஜாதித்தொழில் வருவதாகச் சொல்லவில்லை என்றெல்லாம் சொல்லி நம் மதத்தில் களங்கம் என்று இவர்களுக்குத் தோன்றுகின்ற பாரம்பரியமான ஜாதிமுறையை மூலத்தில் நம் மதத்தில் இல்லாமல், பிற்பாடு சேர்ந்து விட்ட தப்பான விஷயந்தான் என்கிறார்கள்.

வேதத்திலேயே பிறப்பால் ஜாதி என்பதில்லை என்கிற வாதத்தை முதலில் பார்த்து விடலாம். மூலம் வேதமாச்சே. அதனால் இவ்விஷயத்தை முதலில் தெளிவாக்கிக் கொண்டுவிட வேண்டும். இப்படி வாதம் பண்ணுவது, முன்னே ப்ரௌடா விவாஹந்தான் (பெண்கள் வயதுக்கு வந்த பிறகு விவாஹம் செய்வதுதான்) வேத ஸம்மந்தமானது என்று வாதத்தைப் பற்றி சொன்னேனே, அதே மாதிரியானது, அதாவது, Context - ம் Continuity- ம் (சந்தர்பத்தையும், தொடர்ச்சியையும்) பார்க்காமல் ஏதோ ஒரு பாகத்தை மட்டும் பார்த்து, அதுவே பொது விதி என்று விபரீதமாக அர்த்தம் பண்ணிக் கொள்வதைச் சேர்ந்ததுதான் இது.

பிறப்பைக் குறித்தே ஜாதி, குணத்தைக் குறித்ததல்ல என்பதற்கு அழுத்தமாக ஒரு Proof (நிரூபணம்) சொல்கிறேன். மூன்று வயசில் செய்கிற செளளம்(குடுமி வைத்தல்), ஐந்து அல்லது ஏழாம் வயதில் பண்ணுகிற உபநயனம் முதலானதுகளே ஜாதியைப் பார்த்து அதன்படி பண்ணுகிற ஸம்ஸ்காரங்கள்தான். இப்படி அதி பால்யத்திலேயே வெவ்வேறு ஜாதிகளுக்கான ஸம்ஸ்காரங்களில் வித்தியாசமிருப்பதால், குணத்தைப் பார்த்தே ஒருத்தனின் தொழில் நிர்ணயிக்கப்படுவதுதான் மூலசாஸ்திரங்களின் நோக்கம் என்பது அடியோடு அடிபட்டுப் போகிறது. அத்தனை சின்ன வயசுக்குள் ஒருத்தனின் குணத்தை நிர்ணயம் பண்ண முடியுமா?

கீதை விஷயத்தைப் பார்க்கலாம். ஸமதர்சனம் ( எல்லாவற்றையும் சமமாகப் பார்ப்பது) என்று கீதையில் சொல்லியிருப்பது வாஸ்தவம். இதனால் ஜாதி வித்யாசமில்லை என்று அர்த்தம் பண்ணுவது அனர்த்தம்தான்.

கிருஷ்ண பரமாத்மா எந்த நிலையில் இந்த ஸமத்துவம் வருகிறது என்கிறார். அந்த Context ஐப் பார்க்கவேண்டும். ஸகல கார்யங்களும், லோக ஸ்ருஷ்டியும், ஈஸ்வரன் ஸ்ருஷ்டிகர்த்தா என்பதுங்கூட அடிபட்டுப் போய் ஆத்ம நிஷ்டனாக இருக்கிற ஞானியின் நிலையே அது என்கிறார். கர்மாவைவிட்டு ஸந்நியாசியாகி ஒருவன் முடிவான நிலைக்குப் போகிறபோது அவனுக்கு எல்லாம் ஸமமாகி விடுகிறது என்றார். வேத உபநிஷதங்களும் இதையே சொல்கிறது. 

உச்சியான அந்த நிலையில்தான் ஸமம். காரிய லோகத்தில் இல்லை. காரியம் பண்ணுகிற நமக்கும் அல்ல. ஸம தரிசனம், ஸம சித்தம், ஸம புத்தியின்படி யோகியின் பார்வையில்தான் பகவான் ஸமத்துவத்தை சொன்னாரேயன்றி, அவனால் பார்க்கப்படுகின்ற இந்த லோகத்தில் ஸம காரியத்தவம் என்று அவர் தப்பித் தவறிக்கூட கூரியதில்லை.

ஜாதி வித்தியாசமே இல்லை என்று பகவான் சொல்லவில்லை. ஆனால் பிறப்பின்படியன்றி, குணத்தின்படி கர்மாவைப் பிரித்துத் தரும் சதுர்வர்ணத்தைத் தாம் ஸ்ருஷ்டித்ததாகத்தான் சொல்கிறார். "சாதுர்வர்ண்யம் மயாஸ்ருஷ்டம் குணகர்ம விபாகச:" (கீதை IV.13) என்றே சொல்லியிருக்கிறார் என்கிறார்கள்.

சரி, ஆனால் எத்தனை வயசுக்கு மேல் இப்படி குணத்தை அறிந்து அதை அநுசரித்து அதற்கான வித்யையைப் பயின்று அதற்கப்புறம் தொழிலை அப்பியாசம் பண்ணுவது. முக்கியமாக பிராம்மணர்களின் தொழிலை எடுத்துக்
கொண்டால், இவன் ஏழெட்டு வயஸுக்குள் குருகுலத்தில் சேர்ந்தால்தானே, அப்புறம் பன்னிரன்டு வருஷங்களில் தன் தொழிலுக்கானவற்றை படித்துவிட்டுப் பிறகு அவற்றில் தானே அநுஷ்டானம் பண்ண வேண்டியதைப் பண்ணவும், பிறருக்குப் போதிக்கவேண்டியதை போதிக்கவும் முடியும். 

குணம் form ஆன பிறகு (ஒர் அமைப்பில் உருவான பிறகு) தான் தொழிலை நிர்ணயிப்பது என்றால், கற்க வேண்டிய இள வயசு முழுதும் பலபேர் தொழிலை தெரிந்து கொள்ளாமல் வீணாவதாகவும், அப்புறம் சோம்பேறியாக ஒரு தொழிலுக்குப் போகப் பிடிக்காமல் இருப்பதாகவுமே ஆகும். அப்படியே கற்றுக் கொண்டு தொழிலுக்குப் போகும் போதும் ஸமூகத்திற்கு அவனால் கிடைக்கின்ற பிரயோஜனத்தில் வெகுவான காலம் நஷ்டமாகியிருக்கும். க்ஷணகாலம் கூட வீணாக்காமல் ஒழுங்காக, விதிப்படி கர்மாபண்ணிக்கொண்டே இருக்க வேண்டும் என்று திருப்பி திருப்பிச் சொல்லும் பகவான் இதை ஆதரித்துப் பேசியிருப்பாரா?

அப்படியானால் அவர் தியரியில் (கொள்கையளவில்) குணப்படித் தொழில் என்றாலும், ப்ராக்டிஸில் (நடைமுறையில்) பிறப்பால் தொழில் என்பதைத்தான் ஆதரித்தாரா என்றால், பாலிடீஷியன்கள் (அரசியல்வாதிகள்) போல பகவான் கொள்கை ஒன்று, காரியம் இன்னோன்று என்று இருப்பவர் அல்ல. சரி, அவருடைய வாழ்க்கையில் நாம் என்ன பார்க்கிறோம்? நான் யுத்தம் பண்ண மாட்டேன். பத்து மித்ரர்களின் ரத்தத்தைத் சிந்தி ஸாம்ராஜ்யாபிஷேகம் பண்ணிக் கொள்வதைவிட, ஆண்டிப் பரதேசியாக பிக்ஷை எடுத்துச் சாப்பிடுவது எத்தனையோ மேல் என்று சொல்லிக்கொண்டு தேர்த்தட்டில் உட்கார்ந்து ஸத்யாக்ரஹம் பண்ணி விட்ட அர்ஜுன்னிடம் அவர் சொன்னார். நீ க்ஷத்ரிய ஜாதியில் பிறந்தவன். யுத்தம் பண்ணுவதுதான் உன் ஸ்வதர்மம். எடு வில்லை, போடு சண்டையை என்றுதான் அவனை விடப்பிடிவாதம் பிடித்து அவனை யுத்தம் பண்ண வைத்தார்.

இங்கேயாவது ஒரு மாதிரி ஸமாதானம் சொல்லலாம். அர்ஜுனன் மஹாரதன், மஹாவீரன். ஆனதால் அவனுக்கு பந்து மித்திரர்களைக் கொள்ள வேண்டியிருக்கிறதே என்ற பாசத்தால் Momentary -ஆக (தற்காலிகமாக) த்தான் யுத்தத்தில் வெறுப்பு உண்டாயிற்று. உள்ளூர அவனுடைய குணம், மனோபாவம், தன்னுடைய வீரத்தைக் காட்டுவதில்தான் இருந்தது. அதனால்தான் பகவான் யுத்தத்திலேயே தூண்டிவிட்டார். ஆனபடியால் அவர் ஸ்வதர்மம் என்று சொன்னது ஜாதி தர்மம் என்று ஆகாது. அவனுடைய சொந்த குணத்தை, இயற்கையான மனோபாவத்தைத்தான் ஸ்வதர்மம் என்று சொல்லி, அவனுக்கு எடுத்துக் காட்டினார் என்று சுற்றி வளைத்து அர்த்தம் பண்ணிக் கொள்ளலாம்.

அப்படியானால் தர்மபுத்ரர் விஷயம் என்ன? சண்டையே கூடாது. ஸமாதானமாகவே போய்விட வேண்டும் என்றுதானே அவர் ஆரம்ப காலத்திலிருந்து இருந்து வந்திருக்கிறார். தங்கள் ஐந்து பேருக்கும் ஐந்து வீடு கொடுத்து விட்டால் போதும், ராஜ்ஜியத்தில் பாதி தர வேண்டும் என்று இல்லை என்கிற அளவுக்கு ஒரேடியாக இறங்கிவந்து விட்டார் அல்லவா அவர். 

அவரையும், அவருக்கான தூது போன பகவானே யுத்தத்தில்தானே இழுத்து விட்டார். இதற்கு முந்தியும் தர்மபுத்திரரை எல்லா சிற்றரசர்களும் வென்று, ஸார்வபெளமராகும்படி பண்ணி, அவருடைய ராஜஸூய யாகத்தை பகவான்தானே முன் நின்று நடத்தி வைத்தார். தர்மபுத்ரர் இதற்கெல்லாமா ஆசைப்பட்டவர்? அவருடைய குணம், மனோபாவம் ஆகியன கொஞ்சங்கூட இந்த யுத்தம், ஸார்வபெளமப் பதவி இவற்றுக்கு ஆசைப்படாததுதானே. அவரையும் பரமாத்மா க்ஷத்ரிய தர்மத்தைத்தான் அநுஷ்டிக்கப் பண்ணினார் என்றால், அவர் ஸ்வதர்மம் என்கிற போது அவரவர் ஜாதி தர்மத்தைத்தான் சொன்னார் என்று அர்த்தமாகும்.  (தொடர்ச்சி 2 ல்)

No comments:

Post a Comment